பெங்களூரில் கோரமங்களா சிக்னலுக்கு முன்பாக இடது புறமாக திரும்பும் சாலை ஒன்று இருக்கிறது. இரவு நேரத்தில் விளக்கு வெளிச்சம் போதுமானதாக இருக்காது. ஆள் நடமாட்டமும் குறைவாகத்தான் இருக்கும். நேற்றிரவு பத்து மணிக்கு மேலாக பைக்கில் வந்து கொண்டிருந்த போது ஒருவர் லிஃப்ட் கேட்டார். ஊனமான தனது கால்களுக்கு உதவியாக தாங்குகோல்களை பிடித்துக் கொண்டு நின்றார். முஸ்லீம் குல்லாவும் தாடியுமாக இருந்த அவருக்காக வண்டியை நிறுத்த தயக்கமாக இருந்தது. சற்று தூரம் தள்ளிச் சென்று யாராவது அவருக்கு உதவுகிறார்களா என பார்த்துக் கொண்டிருந்தேன். சுமார் பத்துக்கும் மேற்பட்ட பைக்காரர்கள் நிற்காமல் சென்றார்கள். நான் உட்பட ஏன் யாருமே அவருக்கு உதவவில்லை என்ற யோசிக்கத் தோன்றியது. அறியாத மனிதருக்கு உதவச் சென்று வேறு ஏதேனும் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளக் கூடும் என்ற பயமா அல்லது இசுலாமியர் என்பதால் எழும் தயக்கமா என்று வெகு நேரம் குழப்பமாக இருந்தது.
இதே போன்ற வேறொரு நிகழ்வை சில நாட்களுக்கு முன்பாக பொம்மனஹள்ளியில் பார்த்திருக்கிறேன். அதுவும் இரவு நேரம்தான். ஒரு இசுலாமியர் பேருந்து நிறுத்தத்தில் நின்று டாக்ஸிக்காரர்களிடம் லிஃப்ட் கேட்டுக் கொண்டிருந்தார். யாருமே அவருக்கு அருகில் நிறுத்தவில்லை. ஆனால் அவரைத் தாண்டி நின்றவர்களை ஏற்றிச் சென்றார்கள். அந்த இசுலாமியர் மனதுக்குள் என்ன நினைத்துக் கொண்டார் எனத் தெரியவில்லை. ஆனால் கடைசியில் பேருந்துதான் அவருக்கு வாய்த்தது.
இப்படி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இசுலாமியர்களுக்கு மறுக்கப்படும் உதவிகளையும், உரிமைகளையும் நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்களும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. ‘இதெல்லாம் பழகிப் போய்விட்டது’ என்று சிம்பிளாக முடித்துக் கொள்ளலாம்.
இசுலாமியர் என்பதற்காக வாடகைக்கு வீடு தர மறுக்கும் ஓனர்களால் நிரம்பியதுதான் இந்தச் சமூகம். ‘துலுக்கனை இந்த நாட்டைவிட்டு துரத்தணும்’ என்று பேசுபவர்கள் இந்த நாடு முழுவதுமே உண்டு. இசுலாமியர்கள் சுத்தமாக இருக்க மாட்டார்கள் என்ற பிம்பம் மிகச் சாதாரணமானது. அவர்கள் முரட்டுத் தனமானவர்கள் என்று பொதுப்புத்தியில் பதிந்து கிடக்கிறது. இசுலாமியர்கள் கடத்தல் தொழில் செய்பவர்கள் என்று ஆரம்பித்து தீவிரவாதிகள் என்பது வரைக்கும் அவர்களுக்கான முத்திரைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
எங்கள் வீட்டில் கட்டட வேலைக்கு வந்திருந்தவர் சர்வ சாதாரணமாக ஒரு விஷயத்தைச் சொன்னார்.
“என் ப்ரெண்ட் பன்னிக்கறி தின்பான் சார்” என்றார்.
“எதனால தெரியுமா சார்?” இதுவும் அவரேதான்.
“தெரியாது சொல்லுங்க” என்றான்.
“நமக்கு ஆகுற பசுமாட்டை துலுக்கன் திங்குறான். பழிக்கு பழியாக அவனுக்கு ஆகாத பன்னியை நாம திங்கலாம்ன்னு சொல்லிட்டு தின்னுறான்” - சொல்லிவிட்டு கெக்கேபிக்கே என்று சிரித்தார்.
இசுலாமிய வெறுப்பை துல்லியமாக வெளிப்படுத்தும் டயலாக் இது. ஆனால் இத்தகைய டயலாக்குகள் யாருக்கும் எந்தச் சலனத்தையும் உருவாக்குவதில்லை. இங்கு இசுலாமிய வெறுப்பு என்பது சர்வசாதாரணமான விஷயம். இந்த வெறுப்பு ஆண்டாண்டு காலமாக புரையோடிக் கிடக்கிறது. வெறுப்பையும், ஒரு இனத்தின் மீதான தவறான பிம்பத்தையும் போலி மதச்சார்பின்மை கொள்கைகளும், வாக்கு அரசியலும் மேலும் சிக்கலாக்கி சீழ் பிடிக்க வைத்திருக்கின்றன.
தேசியவாதம், ஒருமைப்பாடு என வறட்டு டயலாக் அடிக்கும் அத்தனை தேசபக்தர்களுக்கும் முன்னால் முக்கியமான பிரச்சினை ஒன்றிருக்கிறது. அது இசுலாம் மற்றும் இசுலாமியர் குறித்தான புரையோடிய பிம்பங்களையும், புரிதல்களையும் உடனடியாகக் களைவது. ஆனால் எந்த அரசியல் கட்சியும் சரி அல்லது எந்த சமூக அமைப்பும் சரி- இத்தகைய சிக்கல்களின் அடிப்படையைக் கூட கவனிப்பதில்லை.
கணிசமான ஓட்டு வங்கி உடைய சமூகம் என்பதைத் தவிர இசுலாமியர் மீதான துளியளவு அக்கறை கூட அரசியல் கட்சிகளுக்குக் கிடையாது. காங்கிரஸ், திமுக, அதிமுக என்ற எந்த ஓட்டுப்பொறுக்கி அமைப்புகளும் இதில் விதிவிலக்கல்ல. இப்தார் விருந்தில் முக்காடும் குல்லாவும் அணிந்து கொண்டு கஞ்சி குடித்து போட்டோவுக்கு ஃபோஸ் கொடுப்பதைத் தவிர்த்து எளிய இசுலாமியனுக்கான சிக்கல்களை நீக்க இவர்கள் யாருமே துணியப்போவதில்லை.
மிகச் சாதாரணமான ஒரு சினிமாப் பட விவகாரத்திற்காக இரண்டு மதத்தைச் சார்ந்தவர்களும் முரட்டுத்தனமாக மோதத் தயாராவதை புன்முறுவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகளும், சமுதாயத் தலைவர்களும். முகநூல் போன்ற சமூகத் தளங்களில் இனத்துவேஷங்களும் வசவுகளும் எந்த கீழ் மட்டத்திற்கும் போய்க் கொண்டிருப்பதை கவனித்துப் பார்க்கலாம். இந்த வெறுப்புகளும், துவேஷங்களும் மனதுக்குள் புதைந்து கிடந்தவை. இப்பொழுது கிடைத்திருக்கும் சில்லரைத்தனமான காரணத்திற்காக வெளியே எட்டிப்பார்க்கின்றன.
அரசியல்வாதிகள்தான் இப்படியென்றால் இசுலாமியர்களின் தலைவர்கள் என தங்களை அறிவித்துக் கொள்பவர்கள் தங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்வதற்காக சினிமாக்காரர்களை எதிர்த்து ஜிம்மிக் நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடகங்களால் சாமானிய இசுலாமியர்களுக்கு ஒரு பைசா பிரையோஜனம் இல்லை என்பது நாடகக் காரர்களுக்கும் தெரியும். ஆனால் தேர்தல் நேரத்தில் ‘கல்லா’ கட்ட So Called தலைவர்களுக்கு இத்தகைய நாடகங்கள் உதவக் கூடும்.
இசுலாமியர்கள் போராட வேண்டியது விஸ்வரூபத்தையும், துப்பாக்கியையும் எதிர்த்து இல்லை என்பதை தைரியமாகச் சொல்லலாம். ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளையும், போலியான சமுதாயத் தலைவர்களையும், தங்களின் மீது குத்தப்படும் சமூகத்தின் முத்திரைகளையும் எதிர்த்துத்தான் போராட வேண்டும். ஆனால் அவர்கள் வலுவான எதிரிகளை விடுத்து வேலைக்காகாத பூச்சிகளை நசுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
17 எதிர் சப்தங்கள்:
மிகச்சரியான வாதம்.
ஆனால் இன்றைய அமைப்பில் இது எடுபடாது.
சரியான தலைமை உருவாக வேண்டும்.
அது வரை இந்த ஸ்டண்ட் காட்சிகள் தொடரும்.
நல்ல கருத்து. பகிர்ந்துகொண்டேன். நன்றி.
Edited: மணி, முஸ்லிம்களுக்காக என்று நீங்கள் உள்பட நிறைய பேர், ரொம்பவே சப்போர்ட் பண்ணியாகிவிட்டது என்றே நம்புகிறேன். அனேகமாக, இப்படி அவர்களின் (அவர்களில் ஒருசிலரின் என்றும் வைத்துக்கொள்வோம்) எல்லா விஷமத்தனங்களையும் கவனத்துக்கே கொண்டுவராமல், அவர்களுக்கு ஆதராவாக பேசுவது மட்டுமே தான் செய்யவேண்டியது என்பது போல வாய் வலிக்க பேசித்தள்ளுகிறவர்களில் நீங்களும் ஒருவராயிருக்கிறீர்கள், நல்லது. முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் துரோகம், முஸ்லிம்கள் வஞ்சிக்கபடுகிறார்கள், முஸ்லிம்களுக்கு உதவிகள் மறுக்கப்படுகின்றன (இப்படியெல்லாம் எழுதுகிறபோதுகூட வரிகளுக்கு ஒரு தனி கவர்ச்சி உண்டாகிறது நண்பா!) என்றெல்லாம் எழுதியெழுதி கை நோகிற ஒரு இந்துவுக்கு கொஞ்சமேனும் கள்ளமில்லாத நேர்மையான கரிசனம் கிட்டினால் மகிழ்ச்சிதான் நண்பா. இப்படி நான் சொல்ல காரணமுண்டு. பல அனுபவங்களில் ஒரு அனுபவத்தை சொல்கிறேன்.
ஒரு வருடமிருக்கும், கோவையின் மத்தியப்பகுதியில் வீடு ஒன்றை வாங்கவிருந்த முஸ்லிம் ஒருவர் அதை அளந்து பரப்பளவு விபரங்கள் தருமாறு கேட்டுக்கொண்டதன் பேரில் நான் அவருடன் சென்றிருந்தேன். அடுத்த 15 நிமிடங்களில் கட்டிடத்தை விற்கிறவரும் (அவரும் ஒரு முஸ்லிம்) வந்து எங்களோடு இணைந்துகொண்டார். மூவருமாக வீட்டிற்குள் நுழைகையில் வரவேற்பறையில், வீட்டுப்பொருட்களை வாசலிலிருந்த டெம்போவுக்கு கடத்திக்கொண்டிருந்த அந்த வீட்டிலேயே பணிபுரியும் இரண்டு இந்துப் பெண்மணிகளில் ஒருத்தி, காலையிலிருந்து தேனீர் அருந்தவும் அகல முடியாத வேலைப்பளுவை சொல்லி, வெய்யில் என்பதால் (வீட்டின் எதிர்ப்பக்கமிருக்கும் சர்பத் கடையில்) சர்பத் குடிக்கவேண்டும்போலிருப்பதை யதார்த்தமாக சொன்னார். அந்த வீட்டுக்கார மனிதரும் ‘இதையெல்லாம் கேக்கணுமா, சரி கொஞ்சம் பொறு, பையன் (அவனும் பணியாள்) வந்திரட்டும் வாங்கிட்டு வரச் சொல்றேன்’ என்றுவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்தோம். திரும்பி இந்த முஸ்லிமை பார்த்து, சர்பத் வேணுமாம் எப்படி, ஒண்ணுக்கு அடிச்சு குடுக்கணும் இவளுங்களுக்கு’ என்பதை தொடர்ந்து ரொம்பவும் மோசமான ஒரு வார்த்தையை சொல்லி ஏசினார். என்ன நினைத்தாரோ, அடுத்து அவர் என் பெயரை கேட்டு, நான் சொல்லவும் முகத்தை பார்க்கவேண்டும், வேறெதிலோ உரசிக்கொண்டமாதிரி ஆகிவிட்டது அவருக்கு.
வரவேற்பறையில் நல்லவராயிருந்தவர் அடுத்த அறையில் தன் சுயரூபத்தை காட்டுகிறார். வரவேற்பறையோடு திரும்பிவிடுகிற உங்களுக்கும் அந்த பெண்மணிகளுக்கெல்லாம்தான், அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக தரிசனம் தருகிறார்கள்!
யாதார்த்தம். இவர்கள் மதவெறியால் மூடப்பட்ட போலி முகங்கள். நலலதாகக் கதைப்பார்கள் ஆனால் செய்வதெல்லாம் வெறித்தனமான செயல்.
இசுலாமியர்களின் தலைவர்கள் என தங்களை அறிவித்துக் கொள்பவர்கள் தங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்வதற்காக சினிமாக்காரர்களை எதிர்த்து ஜிம்மிக் நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடகங்களால் சாமானிய இசுலாமியர்களுக்கு ஒரு பைசா பிரையோஜனம் இல்லை என்பது நாடகக் காரர்களுக்கும் தெரியும். ஆனால் தேர்தல் நேரத்தில் ‘கல்லா’ கட்ட So Called தலைவர்களுக்கு இத்தகைய நாடகங்கள் உதவக் கூடும்.// இதன் உள்ளர்த்தம் நான் கண்டுகொண்டேன் இக்பால். எவ்வளவு கோபமாக இருந்தாலும், பொது மேடையில் முழங்கும்போது மனைவி மகள் என்று குடும்பங்களை தெருவிற்கு இழுக்கும் வேலைகளை நம்மவர்கள் செய்துள்ளார்களா என்று தெரியவில்லை... நான் கேட்டவரையில், இது மகா மட்டகரமான செய்கை. சிறுபான்மை மக்கள் மதம் என்கிற பெயரில் கீழ்மை படுத்தப்படுவதை தடுக்கத் துப்பில்லாமல் பொது மேடைகளில் சினிமா காரர்களை விமர்சிக்கிறேன் பேர்வழி என்று மிக மோசமாக பெண்களையும் குழந்தைகளையும் விமர்சிப்பதால் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது.. அடக்கடவுளே.!! அதிர்ந்துபோனேன் அந்த வீடியோவைப்பார்த்து.. இரண்டு மணி நேரம் அராஜகம்.. என்ன புண்ணியம், படமும் ரிலீஸ்தானே.கொடுமை...
//வரவேற்பறையில் நல்லவராயிருந்தவர் அடுத்த அறையில் தன் சுயரூபத்தை காட்டுகிறார். வரவேற்பறையோடு திரும்பிவிடுகிற உங்களுக்கும் அந்த பெண்மணிகளுக்கெல்லாம்தான், அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக தரிசனம் தருகிறார்கள்//
same applies 2 all, more over we cant generalise our view on the basis of individuals faults.
one more point indian muslims(99%) r converted all belong to the same race not came 4m another country, so the common thinking will apply.
islam is perfect way of life, but not muslims.
a decent post.
//நமக்கு ஆகுற பசுமாட்டை துலுக்கன் திங்குறான். பழிக்கு பழியாக அவனுக்கு ஆகாத பன்னியை நாம திங்கலாம்ன்னு சொல்லிட்டு தின்னுறான்//
//முஸ்லிமை பார்த்து, சர்பத் வேணுமாம் எப்படி, ஒண்ணுக்கு அடிச்சு குடுக்கணும் இவளுங்களுக்கு’ என்பதை தொடர்ந்து ரொம்பவும் மோசமான ஒரு வார்த்தையை சொல்லி ஏசினார்//
இரண்டையும் விடுத்து எந்த இடத்திலிருந்து நல்லதை தொடங்குவது?."அவனை விடச் சொல் நான் விட்டு விடுகிறேன்" என்று எத்தனை நாட்களுக்கு சொல்லிக்கொண்டு இருப்பது?.பாதிப்புகள் அதிகமாக இல்லாத பட்சத்திலோ அல்லது தாங்கிக் கொள்ள கூடிய அளவிலோ இருந்தால் இதை படிக்கும் நாமே அந்த புள்ளியை இட்டு ஆரம்பித்து வைக்கலாமே.இயலாமையில் சபிப்பை வெளிப்படுத்தி இழப்பது எத்தனையெத்தனை என யோசிப்போம்
அப்பாவி முஸ்லிம்களுக்காக நான் வருந்துகின்றேன், இந்த இஸ்லாமியச்சம், இஸ்லாமிய வெறுப்பு என்பது உலகம் முழுவதும் வந்துவிட்டது.. அதற்கு முழுப் பொறுப்பும் அவர்களையே சாரும், மிதவாத முற்போக்கு வழிக்காட்டிகளை புறந்தள்ளிவிட்டதும், அல்லது தீவிரவாத தலைவர்களை எதிர்க்காமல் மவுனித்துக் கிடப்பதுமே ஆகும் .. மதங்களை இறுகப்பற்றாமல் நாம் அனைவரும் மனிதராக, பொது அடையாளங்களை ஏற்றாலே சமத்துவம் நோக்கி பயணிக்கலாம் .. நல்லதொரு ஆக்கம் இப்பதிவு .
அனைத்து இன மக்களையும் நீதியோடு பார்க்க சொல்லும் வாழ்வியலை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ளார். அண்டை வீட்டுக் காரரிடம் சிறந்த பெயர் எடுப்பது முஸ்லிமின் மார்க்க கடமையாகும். சாலையில் கிடக்கும் சிறு கல்லோ , முள்ளோ அதனை அப்புறப்படுத்துவது கடவுள் நம்பிக்கையின் ஒரு சிறு பகுதி என இஸ்லாம் கூறுகிறது. அந்நிய பெண்களை கண்களால் இச்சையுடன் நோக்குவதை இஸ்லாம் தடை செய்கிறது. உலகம் முழுமையும் சகோதரத்துவமாக இருக்க ஒரே கடவுள் கொள்கையை போதிக்கின்றது. மதத்தை எதிர்க்கிறது. மனித நேயத்தை வளர்க்க சொல்கிறது. ஏழை எளியவர்களுக்கு பொருளதவி செய்வதை இறைவனை நம்புவதன் அடையாளம் என்று இஸ்லாமிய வாழ்வியல் கூறுகிறது..Illegal Sex தவறு என்றும் Legal Sex மட்டுமே சரி என்றும் வழிகாட்டுவது இஸ்லாம். நன்மையை ஏவி தீமைகளை தடுத்த வண்ணம் வாழ்வதை நடை முறை வாழ்வியலாக இஸ்லாம் கூறுகிறது......( ஆகவே முஸ்லிம்கள் தங்களை தாங்களே சீர்திருத்தி வாழ்ந்து, பிறருக்கும் எடுத்துக் காட்டாய் வாழ வேண்டும்-----இது தான் எமது வாழ்வு எனவும் மற்ற சகோதர்கள் புரிந்து கொள்ளுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன் )
ஒரு சிறு உதாரணம் திருமண தளங்களில் துணையைத் தேடுவோரில் எம்மதமும் சம்மதம் சொல்வோரில் பலர் கூட இஸ்லாமை இணைப்பதில்லை .. சிக்கல் எங்குள்ளது என சிந்திக்க !
தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி இஸ்லாமியர்கள் தங்கள் பெயரை கெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் .
இவர்கள் கமலஹாசனை எதிர்த்து போராடுவதற்கு பதில் தீவிரவாதிகளை எதிர்த்து போராடி இருந்தால் இவர்கள் மேலே உள்ள மதிப்பு கூடி இருக்கும் .
//வரவேற்பறையில் நல்லவராயிருந்தவர் அடுத்த அறையில் தன் சுயரூபத்தை காட்டுகிறார். வரவேற்பறையோடு திரும்பிவிடுகிற உங்களுக்கும் அந்த பெண்மணிகளுக்கெல்லாம்தான், அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக தரிசனம் தருகிறார்கள்!//
முகத்துக்கு நேரே ஒரு மாதிரி பேசுவது, இல்லாதபோது வேறுமாதிரி பேசுவது எல்லா மதத்தைச் சேர்ந்த மனிதர்களும் செய்வதுதான். மதத்துக்கும் மனித இயல்புக்கும் முடிச்சு போடுகிறீர்கள். இது உங்களுடைய அறியாமையைத்தான் காட்டுகிறது நண்பரே..
தியாகு, இசுலாமியர்கள் அத்தனை பேரும் நல்லவர்கள் என்று ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை. இங்கு அதிகமாக நசுக்கப்படும், பழிக்கப்படும் இனமாக இசுலாமிய சமூகம் இருக்கிறது என்பதும் அதைப் பற்றிய கவனம் இல்லாமல் வெறும் வெறுப்பையும் கோபத்தையும் மட்டுமே தூபம் போடும் சமுதாயத் தலைவர்களை நம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இந்தப் பதிவின் சாரம்.
அதே சமயம் இசுலாமியர்களை தனிமைப்படுத்துவதையும், அவர்களின் மீதான வெறுப்பை வளர்ப்பதையும்தான் நாம் செய்துவருகிறோமே தவிர அவர்களை நம் சமூகத்தின் அங்கமாக பார்க்க தயாராக இருப்பதில்லை. இதை வாய் வலிக்கும் வரைக்கும் அல்லது கை வலிக்கும் வரைக்கும் எழுதுவதில் எனக்கு எந்தச் சங்கடமும் இல்லை :)
முஸ்லிம்கள் என்றைக்காவது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார்களா என்றால் அது கிடையாது..! பிறகு எப்படி ஒரு சாதாரண முஸ்லிம் மீது நம்பிக்கை வரும்..!
எனக்கு ஒண்ணு மட்டும் புரியவே இல்ல. மேஜர் ரவியின் "கீர்த்தி சக்ரா", மணிரத்ணத்தின் "ரோஜா" இதிலெல்லாம் காட்டப்படாத எதை கமல் மட்டும் காட்டிட்டார்னு இந்த குதி குதிக்கிறாங்க.
ஒருவன் தலித் என்று தெரிந்த பிறகு தான், சாதியப் பார்வைக்கு ஆளாகிறான்; ஆனால் முஸ்லிம் முதல் பார்வையிலேயே மன தீண்டாமைக்கு ஆளாக்கப்படுகிறான்.
என் மீதான வெறுப்புப் பார்வைக்கு எனது புற அடையாளங்களையே தீவிரவாதி என சித்தரித்து தொடர்ச்சியாக பொது புத்திக்கு கல்வெட்டாய் பதிய வைத்த சினிமாவை கேள்வி கேட்கவும், அதற்கு எதிராக என் அடிப்படை உரிமையை நிலைநாட்டவும் எனக்கு மனிதன் என்ற முறையில் கூட உரிமையில்லையா?
முஸ்லிம்களின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் நுனிப்புல் மேய்வதைப் போல மேய்ந்து விட்டு, " ஆமா.. இவனுங்களுக்கு வேற வேலயே இல்ல" என்று அலட்சியப்படுத்துபவனுக்கு தெரியுமா? என் சமூகத்தின் வலியும் வேதனையும்.
இது வெறும் சினிமாவுக்கான போராட்டம் மட்டுமல்ல; ஒரு சமூக புறக்கணிப்பின் ஆழத்திலிருந்து பீறிட்டு எழும் மக்களின் சக்தி. இது என் மண். என் மண்ணிலேயே நான், என்னுடைய காலங்காலமாக பின்பற்றி வந்த புற அடையாளங்களோடு தனிமைப் படுத்தப்படுகிறேன். இது ஏன்? எப்படி விதைக்கப்பட்டது? என ஆராயும் போது, அதற்கு மிகப்பெரிய காரணமாக தெரிவது சினிமா.
புத்தகம் கூட பாரிய விளைவுகளை உடனடியாக சிந்தனை ரீதியாக ஆக்கிரமித்து விடாது. புத்தகத்தை ஒரே நேரத்தில் ஊரில் உள்ள அனைத்து நூலகங்களிலும் ஒரே நேரத்தில் படிப்பது கிடையாது. புத்தகத்தின் தாக்கத்தை விட சினிமாவின் வீச்சு அதிகம். சினிமா ஒரே நேரத்தில் 500 தியேட்டர்களில் ஒவ்வொன்றிலும் சுமார் 300 மக்களை கட்டிப் போட்டாற்போல சிந்தனையில் காட்சி அறையப்படுகிறது.
அதனால் சினிமா ஊடகத்தின் தாக்கம் சமூகத்தில் பல அடுக்குகளில் அலைகளையும் கொந்தளிப்புகளையும் ஏற்படுத்த வல்லமைக்கொண்டது.
நேற்று வரை என் உரிமைக்கும் சமூக அங்கீகாரத்திற்கும் வழிபாட்டு உரிமைக்கும் புற மத அடையாளத்திற்கும் பங்கமில்லாமல் வாழ்ந்து, இந்நாட்டில் சம உரிமைக்கும் சமத்துவத்திற்கு என் மார்க்கம் மூலம் மக்களை வென்று எடுத்து உயர்ந்த அந்தஸ்த்தில் இருந்த என்னைப் பார்த்து, நீ தீவிரவாதி என்றால் இது யாருடைய சூழ்ச்சி?
"தவித்து அழும் பிள்ளை தாயைக் கண்டவுடன் தாவி அணைத்துக்கொள்ளுமே" அப்படி தமிழர்களை அணைத்துக்கொண்டது இஸ்லாம்- என்றார் அண்ணாதுரை.
ஆமாம் என் முன்னோர்கள் தாவி அணைத்துக் கொண்டார்கள். அண்ணன் தம்பியாக மாமன் மச்சானாக முஸ்லிம்களும் இந்துக்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்பது வெறும் வாய் பேச்சு அல்ல. அண்ணன் இந்துவாக இருக்க, தம்பி முஸ்லிமானான். மாமன் இந்துவாக இருக்க மச்சான் முஸ்லிமானான். இது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே இருக்கும் ரத்த பந்தத்தையும் பாசப்பிணைப்பையும் சொல்கிறது.
தமிழ் நாட்டில் ஒரு இனம் சுய அடையாளத்தைக் காக்க போராடுகிறது என்றும் மத அடையாளங்களோடு தவறாக சித்தரிக்கப்படும் தங்களை காத்துக் கொள்ள வீதிக்கு வந்து உரக்க கத்துகிறது. காதில் வாங்காமல் போனாலும் பரவாயில்லை; கொச்சைப் படுத்தாதீர்கள்.
Post a Comment