Jan 31, 2013

யசோதரையின் தகித்த இரவுகளை என்ன செய்தான் புத்தன்?


காலச்சுவடு பதிப்பகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக பேசினேன். சோழியன் குடுமி சும்மாவா ஆடும்? காரணமாகத்தான். முடிந்துவிட்ட சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’ எத்தனை பிரதிகள் விற்றிருக்கின்றன என்று விசாரிக்கத்தான் அழைத்திருந்தேன். முப்பத்தி சொச்சம் புண்ணியவான்கள் வாங்கியிருக்கிறார்கள். அத்தனை பேர் வீட்டிலும் ஆண்டவன் கூரையை பிய்த்து சுபிட்சத்தைக் கொட்டட்டும் என்று ஒரு கணம் நினைத்துக் கொண்டேன்.

இருந்தாலும் ஒரு சந்தேகம். “வெறும் முப்பத்தி சொச்சமா அல்லது முந்நூற்று முப்பது சொச்சமா” என்றேன். மறுமுனையில் கனத்த அமைதி நிலவியது. என் கேள்வியில் ஜெர்க் ஆகியிருக்கக் கூடும் என்பதால் “ஹலோ” என்றேன். 

சுதாரித்துக் கொண்டு “வெறும் முப்பத்து சொச்சம்தான்” என்றார். 

“உங்க ரேஞ்சுக்கு இதே பெரிய எண்ணிக்கை” என்று நினைத்தாரா என்று தெரியவில்லை.  

“ரொம்ப நன்றிங்க” என்று கட் செய்துவிட்டேன். 

இத்தினியூண்டு பேர்தான் வாங்கியிருக்கிறார்கள் என்று ஃபீலிங்க்ஸ் விடுவதைவிட ‘இத்தனை பேர் வாங்கியிருக்காங்க தெரியுமா’ என்று பீலா விடுவதுதான் ட்ரெண்ட் என்பதால் இதோடு முடித்துக் கொள்ளலாம். 

புத்தகத்தை பற்றி  சொல்வதற்கு இன்னொரு விஷயமும் இருக்கிறது.  ஆனால் என்னுடைய புத்தகத்தைப் பற்றி இல்லை. 

“ஒரு டீ சொல்லுங்கள்” என்ற புத்தகம் கூரியரில் வந்திருக்கிறது- கவிதைத் தொகுப்புதான். கவின் அனுப்பி வைத்திருக்கிறார். அவரைப் பற்றிய அறிமுகம் எதுவும் இதுவரை இல்லை. முகவரியில் கோடம்பாக்கம் என்றிருக்கிறது. அனேகமாக உதவி இயக்குனராக இருக்கக் கூடும் என்று சிற்றறிவுக்குப் படுகிறது. நல்ல Creativity உள்ள மனிதர் போலிருக்கிறது.


முதல் பக்கத்தில் பின்வருமாறு அச்சிட்டிருக்கிறார்கள்:

No Rights Reserved. All part of this publication may be reproduced, stored in a retreival system or transmitted, in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise without the prior written permissoon of the publisher.

இந்த பத்தியே தொகுப்பு எப்படி இருக்கும் என்பதை காட்டிவிடுகிறது. இதுதான் இப்படியென்றால் சமர்ப்பணம் கவுண்டமணிக்கு என்று ரவுண்டு கட்டியிருக்கிறார்.

தொகுப்பு கச்சிதமான வடிவமைப்புடன் கையடக்கமாக இருக்கிறது. தொகுப்பு முழுவதும் சென்ரியூ கவிதைகள். சென்ரியூ கவிதைகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நான் கேள்விப்பட்டதில்லை. இப்பொழுதுதான் விக்கிப்பீடியாவை துணைக்கு அழைத்துக் கொண்டேன். ஹைக்கூவும் சென்ரியூவும் கிட்டத்தட்ட நங்கைxகொழுந்தியா உறவு போலிருக்கிறது. நங்கையாளை கொண்டாடிய அளவுக்கு கொழுந்தியாளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம்.

ஹைக்கூ கொஞ்சம் சீரியஸ் டைப். தத்துவம், இயற்கை, பருவம் என்று வேறொரு தளத்தில் இயங்குகிறது. சென்ரியூ கவிதைகள் சத்யராஜ்-மணிவண்ணன் டைப். நக்கல், நையாண்டி நிறைந்தது. சென்ரியூ கவிதைகளும் மூன்று வரிகள்தான். தினமும் நேரடியாக பார்க்கும் மனிதர்களை கலாய்க்கிறது. அரசியல்வாதிகளை நக்கல் அடிக்கிறது. 

தொகுப்பில் இருக்கும் அத்தனை கவிதைகளிலும் கவித்துவம் இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை.   சில தட்டையாக இருக்கின்றன. சில வெறும் குறிப்புகளாக இருக்கின்றன. ஆனால் பொதுவாகச் சொன்னால் வாசிப்பதற்கு ஜாலியான கவிதைகள்.

ட்ரெய்லர் பாருங்கள். பிடித்திருந்தால் கவினிடம் மெயின் பிக்சரை அனுப்பி வைக்கச் சொல்லுங்கள்.
                                       
(1)
உலகின் துன்பம் கிடக்கட்டும்
புத்தனே என்ன செய்தாய்
தகித்த யசோதரையின் இரவுகளை

(2)
பேச்சு மூச்சு
எல்லாம் தமிழ்நாடுதான்
சிகிச்சை மட்டும்தான் சிங்கப்பூரில்

(3)
சோனியாவும் மன்மோகனும்
சும்மா பேருக்குத்தான்
அம்பானிதான் ஆள்கிறான்

(4)
கம்ப்யூட்டர் வந்த பிறகு
எளிமையாய் போயிற்று
ஞானிகளின் ஒளிவட்டம்

(5)
மாதாமாதம் பத்துப் பக்கங்களுக்கு
ஆசிரியரின் கவிதைகளே அச்சேறுகின்றன
ரொம்பத்தீவிர இலக்கிய இதழ்.

1 எதிர் சப்தங்கள்:

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

ஒரு எழுத்து இன்னொரு எழுதுகோளை மதிப்பது சந்தோசம்.