Jan 29, 2013

செத்துடுவேன்கடந்த சனிக்கிழமை பாண்டிச்சேரியில் சுற்றிக் கொண்டிருந்தேன். தனியாக இல்லை. கூடவே ஒரு டீம். புதிய தலைமுறை சார்பில் வெளிவரவிருக்கும் புதிய சேனலுக்காக ‘வீடியோ ப்லாகிங்’ செய்கிறார்கள். நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் நிசப்தம் தளத்தை வாசிப்பவர். எங்களுக்காக கதை சொல்ல முடியுமா என்றார். முடியாது என்று ஏன் சொல்லப் போகிறேன்? கதை சொல்வதை பதிவு செய்து தங்களின் நிகழ்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.

“பாண்டிச்சேரியில் நல்ல லொகேஷன்கள் இருக்கின்றன. வந்துவிடுங்கள்” என்று சொல்லியிருந்தார். ஆறு கதைகளுடன் தயாராகியிருந்தேன்.

ரிசர்வ் செய்யாத பேருந்துகளில் பயணிப்பதுதான் பிடித்தமானதாக இருக்கிறது என்பதால் இந்த முறையும் ரிசர்வ் செய்யவில்லை. பதிவு செய்யப்பட்ட பிரையாணங்கள் கிட்டத்தட்ட நகரத்தின் ப்ளாட் வாழ்க்கைக்கு இணையானது. பக்கத்தில் இருப்பவர்களிடம் கூட பேசிக் கொள்ளாத அந்நியமான தருணங்களால் நிரம்பியிருக்கும். நசுங்கினாலும் பிழியப்பட்டாலும் பதிவு செய்யப்படாத சாதாரண பயணங்களில்தான் அனுபவங்கள் கிடைக்கின்றன. குறைந்தபட்சம் ஒரு சண்டையாவது நடக்கும். 

பெங்களூரில் பேருந்து கிடைக்காததால் ஓசூர் பேருந்து நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அப்பொழுது இரவு பதினொன்றாகியிருந்தது. பாண்டிச்சேரிக்கான ஒற்றைப் பேருந்து நின்றிருந்தது. அதுதான் கடைசிப் பேருந்து என்றார்கள். அதையும் அடைத்துக் கொண்டு இருந்தார்கள். அருகிலிருந்த டீக்கடையில் தினத்தந்தி பேப்பரை வாங்கி பைக்குள் செருகிக் கொண்டு கடும் போராட்டத்திற்கு பிறகு பேருந்துக்குள் நுழைந்துவிட்டேன். பேருந்தின் நடுவில் கொஞ்சம் காலி இடம் இருந்தது. அந்த காலி இடத்திற்காகத்தான் தினத்தந்தி பேப்பரை வாங்கியிருதேன். விரித்து அதன் மீது அமர்ந்து கொள்ளலாம். திருவண்ணாமலை வரைக்கும் இதுதான் என்னுடைய இடமாக இருக்கப் போகிறது. பக்கத்தில் இன்னொரு திருவண்ணாமலைக்காரர் அமர்ந்திருந்தார். மீதமிருந்த ஒரு பேப்பரை அவருக்கும் கொடுத்த போது சில விநாடிகளில் நண்பர்கள் ஆகிவிட்டோம். 

நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்த கண்டக்டர் “ஏம்ப்பா இப்பவே உக்காரணுமா? எந்திரிங்க” என்றார். 

எழுந்திருக்க முயன்ற போது “நீ உக்காரு தம்பி” என்ற திருவண்ணாமலைக்காரர் கண்டக்டரிடம் எகிறினார். “வெள்ளிக்கெழம ஸ்பெஷல் பஸ் போட்டா என்னவாம்?” என்றார். அவர் எகிறுவதை கண்டக்டர் கண்டு கொள்ளவே இல்லை. நாங்களும் எழவே இல்லை. அவர் டிக்கெட் கொடுத்துச் சென்ற பிறகு ஆளாளுக்கு கதைகளை பேசத் துவங்கினார்கள். பேருந்தில் முன்புறமாக ஒரு சண்டை உருவாகியிருந்தது. தனது காலை மிதித்துவிட்டதாக நடுத்தரப் பெண்மணி ஒரு ஆணின் மீது குற்றச்சாட்டை சுமத்தினார். கேட்டு புளித்து போன டயலாக்தான் அந்த ஆணிடமிருந்து வந்தது. “மிதிபடாம போகணும்ன்னா கார்ல போ”. இதற்கு மேல் இந்தச் சண்டையின் போக்கு பற்றி ஓரளவு கணிக்க முடிந்ததால் அதன் மீதான ஆர்வம் குறைந்துவிட்டது. இப்பொழுது கொஞ்சம் பேர் தூங்க ஆரம்பித்திருந்தார்கள்.

திருவண்ணாமலைக்காரர் தனது செல்போனில் சார்ஜ் இல்லையென்றும் ஒரு கால் செய்து கொள்ள வேண்டும் என்றார். வேண்டாவெறுப்பாக எனது அலைபேசியைக் கொடுத்தேன். “வந்துட்டு இருக்கேன். இன்னும் மூன்றரை மணி நேரத்தில் வந்துவிடுவேன்” என்று சொல்லிவிட்டு என்னிடம் கொடுத்துவிட்டார். இருபத்தைந்து ரூபாய்க்குத்தான் அந்த மொபைலில் பணம் இருந்தது. ரோமிங் வேறு. ஒரு ரூபாய் ஐம்பது காசு அளவுக்கு மட்டுமே பேசிவிட்டு ‘கட்’ செய்துவிட்டதால் அவர் மீது மரியாதை உருவாகியிருந்தது. அவரிடம் ஏதாவது பேச வேண்டும் என விரும்பினேன்.

நான் தான் பேச ஆரம்பித்தேன். அவர் பெயர் சுந்தர்ராஜன். நாற்பத்தைந்து வயது இருக்கும். பெங்களூரில் கட்டவேலை செய்கிறாராம். பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டியில் தான் வேலை செய்யும் அதே கட்டடத்திலேயே தங்கிக் கொள்கிறார். குடும்பம் திருவண்ணாமலையில் இருக்கிறது. இன்று இரவு ஊரிலிருந்து அவசரமாக அழைப்பு வந்ததால் கிளம்பிவிட்டேன் என்றார். “என்ன அவசர அழைப்பு” என்று கேட்கத் தோன்றினாலும் கேட்கவில்லை. 

ஊருக்கு அவசரமாகச் செல்ல வேண்டும் என்று ஓனரிடம் பணம் கேட்டிருக்கிறார். அவர் பணம் இல்லை என்று சொல்லிவிட்டதாக தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தார். அந்த ஓனரிடமிருந்து தனக்கு வரவேண்டிய பாக்கித் தொகை கிட்டத்தட்ட ஆறாயிரம் ரூபாய் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது என் கண்களைப் பார்த்தார். அவருக்கு ஆறுதலாக தலையாட்டினேன். அந்த ஆறுதல் அவருக்கு பிடித்திருக்க வேண்டும். அதன் பிறகு என் கண்களைப் பார்த்துதான் பேசினார். கிட்டத்தட்ட எல்லாமே புலம்பல்தான்.

அவருக்கு மூன்று குழந்தைகள். மூன்றுமே பெண்கள். முதல் பெண்ணை தனது அக்கா மகனுக்கு நிச்சயம் செய்து வைத்திருக்கிறார்.  தனது அக்கா மகன் வசதியாக இருக்கிறான் என்றார். ஒரு பொட்டு  நகை கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டானாம். திருமணச் செலவையும் அவனே ஏற்றுக் கொள்வதாகச் சொல்லிவிட்டான் என்பதால் தனக்கு பெரிய பாரம் குறைந்துவிட்டது போலிருந்தது என்றார். ஆனால் நிச்சயம் முடிந்த இரண்டாவது நாளில் தனக்கு அத்தை மகன் மீது விருப்பம் இல்லை என்று அந்தப் பெண் சொல்லிவிட்டாளாம். 

“வேறு யாரையாவது விரும்புகிறாரா?” என்றேன். 

“தெரியவில்லை” என்றார். இரண்டு நாட்களுக்கு முன்பாக அவளை ஃபோனில் அழைத்து தனது நிலைமையை விளக்கியதோடு நில்லாமல் அவளை திட்டியும் இருக்கிறார். 

“அந்த விஷயமாகத்தான் ஊருக்குப் போகிறீர்களா?” என்று கேட்டேன்.

“ஆமாம்” என்றார். 

“என்ன செய்யப் போறீங்க?” என்றேன்.

“அடக்கம் செய்யப் போகிறேன்” என்றார். அவர் கோபத்தில் சொல்கிறார் என நினைத்தேன். ஆனால் அந்த பேருந்து விளக்கின் வெளிச்சத்தில் அழுது கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.

சற்று அமைதிக்குப் பிறகு “ஏங்க அழறீங்க?” என்றேன். இந்தக் கேள்வி அவரைக் கலவரப்படுத்திவிட்டது.

தனது தோளில் கிடந்த துண்டை எடுத்து வாயில் திணித்துக் கொண்டு அழுகையைக் கட்டுப்படுத்த முயன்றார். ஸீட்டில் அமர்ந்து கொண்டிருந்தவர் எங்களை திரும்பிப்பார்த்தார். நின்று கொண்டிருந்தவர்களும் எங்கள் பக்கமாக கவனிக்கத் துவங்கினார்கள்.  

அழுகையை ஓரளவுக்கு கட்டுப்படுத்திக் கொண்டவர்  “இன்னைக்கு சாயந்திரம் வீட்டில் யாரும் இல்லாதப்போ தூக்கில் தொங்கிட்டா” என்றார். தனது பாக்கெட்டில் வைத்திருந்த அந்தப் பெண்ணின் நிழற்படத்தைக் காட்டினார். அதை பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். தனது நெற்றியில் அறைந்து கொண்டார். அவருக்கு என்ன ஆறுதல் சொல்ல வேண்டும் என்று புரியவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு அவசர அவசரமாக முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவர் “நீங்க தூங்குங்க தம்பி” என்றார். 

“தூக்கம் வரவில்லை” என்றேன். மிகப்பெரிய துக்கத்தைச் சுமந்து கொண்டிருக்கும் மனிதனுடன் அடுத்த சில மணிநேரங்களை கடக்க வேண்டும் என்பது திகில் ஊட்டுவதாக இருந்தது. இந்த இடத்தில்  நான் என்ன செய்ய வேண்டும் என்பதை கணிக்க முடியவில்லை. நகர்ந்து போவதோ அல்லது தூங்குவதோ எனக்கு மிகுந்த குற்றவுணர்ச்சியைக் கொடுத்துவிடும் என பயந்தேன். அது ஒரு குழப்பமான மனநிலையாக இருந்தது. அவர் ஒரு ஸீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். நான் அவருக்கு சற்று தள்ளி அமர்ந்திருந்தேன். பேருந்தில் மற்றவர்கள் தூங்கத் துவங்கியிருந்தார்கள். எங்கள் இருவருக்குமே தூக்கம் வரவில்லை. அவர் எங்கேயோ பார்த்தவாறு சத்தமில்லாமல் அழுது கொண்டிருந்தார். எனக்கு அவர் முகத்தை பார்ப்பதைத் தவிர என்ன செய்வது என்று தெரியவில்லை. 

4 எதிர் சப்தங்கள்:

ஜீவன் சுப்பு said...

## பதிவு செய்யப்பட்ட பிரையாணங்கள் கிட்டத்தட்ட நகரத்தின் ப்ளாட் வாழ்க்கைக்கு இணையானது. பக்கத்தில் இருப்பவர்களிடம் கூட பேசிக் கொள்ளாத அந்நியமான தருணங்களால் நிரம்பியிருக்கும். நசுங்கினாலும் பிழியப்பட்டாலும் பதிவு செய்யப்படாத சாதாரண பயணங்களில்தான் அனுபவங்கள் கிடைக்கின்றன. குறைந்தபட்சம் ஒரு சண்டையாவது நடக்கும்.##

** பதிவை முழுமையாகவே படித்து முடிக்கவில்லை , உடனே கமெண்ட் போட தோன்றியது இந்த வரிகள் . உப்பு சப்பு இல்லாத முன் பதிவு பயணத்தின் தன்மையை அடிக்கடி நண்பர்களுடன் விவாதிப்பது உண்டு . அடடா நம்மைபோல ஒருவர் இருக்கிறார் என்பதே அருமை, சுகம் ....!

ஒரு மனிதன் எப்பொழுது முழுமையடைகிறான் ,எங்கேயோ படித்த வரிகள் ....
ஆயிரக்கணக்கான புத்தகங்களை வாசிக்கும் போதும் , ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணிக்கும் போதும் தான் .
அந்த பயணம் முன்பதிவு செய்யபடாத பயணமாகத்தான் இருக்கும் என்று முழுமையாக நம்புகிறேன் . **

manjoorraja said...

படித்து முடித்ததும் ஒரு மாபெரும் கனம் மனதில் வந்து அமர்ந்துவிட்டது.

சேக்காளி said...

//தனக்கு பெரிய பாரம் குறைந்துவிட்டது//
என்று கூறி நம்மிடம் பெரிய பாரத்தை ஏற்றி விட்டாரே.ரிசர்வ் செய்யப் பயணங்கள் தவிர்த்து (வலைப்பூ)வாசிப்பு கூட சில சமயம் மனதை நசுக்கி பிழிந்து விடுகிறது.

லிவிங்ஸ்டன் said...

very very nice thliva வாசிப்பு கூட சில சமயம் மனதை நசுக்கி பிழிந்து விடுகிறது.true true