Jan 25, 2013

விஸ்வரூபம்: சில்லியான கேள்விகள் மற்றும் சில்லியான எலக்கியவாதிகள்


நேற்று யாரோ என் ஹெல்மெட்டை திருடிக் கொண்டு போய்விட்டார்கள். பழைய ஹெல்மெட்தான். அலுவலகத்தின் பார்க்கிங் ஏரியாவில் பைக்கை நிறுத்தி அதன் மீது வைத்திருந்தேன். கடந்த நான்கு வருடங்களாக இதே  இடம். இதே பைக். இதே ஹெல்மெட். இதே மெத்தேட்தான். நேற்றுதான் ஏமாந்துவிட்டது. எழுநூறு ரூபாய்க்கு வாங்கிய ஹெல்மெட் அது. இப்பொழுது கீறலும் குதறலுமாய் நாறிக் கிடந்தது. சில மாதங்களாக அதன் நிலைமையை பார்க்க பரிதாபமாக இருந்தது. பொது இடங்களில் வைத்துவிட்டு போனாலும் கூட யாரும் எடுத்து போகமாட்டார்கள் என்ற சூழல் நிலவியது. அதனால் அதை இப்பொழுதெல்லாம் பூட்டுவதேயில்லை. 

சுதந்திரமாகக் கிடந்த அந்த ஹெல்மெட்டைக் கூட  துணிந்து திருடிய நல்ல மனசுக்காரன் எங்கிருந்தாலும் வாழட்டும். கிழிந்த கோவணத்துணியைக் கூட உருவிக் கொண்டு ஓடும் நல்லவர்கள் வாழும் காலத்தில் ஹெல்மெட்டை பூட்டாமல் விட்டுப்போனது என் தவறுதான்.

கவனித்தீர்களா? வெறும் எழுநூறு ரூபாய்க்குக் கூட புலம்பல் வந்துவிடுகிறது. கமல்ஹாசனை நினைத்தால் பாவமாக இருக்கிறது. படம் விஸ்வரூபம் எடுக்கிறதோ இல்லையோ பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன. விஸ்வரூபம் நூறு கோடி ரூபாய் பட்ஜெட் படம். மென்று தண்ணீர் குடிக்கிறது. கருத்துச் சுதந்திரத்தை மதிப்போம், படைப்பாளியின் உரிமை ஓங்குக என்று பேசும் அத்தனை சினிமா மற்றும் கமல் ரசிகர்களின் வாதங்களையும் இம்மிபிசகாமல் ஏற்றுக் கொள்ளலாம். 

சில கேள்விகள் மட்டும் நிற்கின்றன. 
  • விஜயகாந்த் ஆனாலும் சரி, கமலஹாசன் ஆனாலும் ஏன் இசுலாமிய தீவிரவாதிகளை மட்டும் ‘அட்டாக்’ செய்கிறார்கள்? ஒருவர் பின்னங்காலால் உதைத்தால் இன்னொருவர் ஏ.கே.47 ஆல் சுடுகிறார்.
  • கமல் போன்ற அறிவுஜீவி நடிகர்களுக்கு பாபர் மசூதி இடிப்போ, குஜராத் மதக் கலவரமோ ஏன் கண்ணுக்குத் தெரிவதில்லை? 
  • சென்சார் போர்ட் சர்டிபிகேட் கொடுத்த பிறகு ஏன் இசுலாமிய அமைப்புகளுக்கு திரையிட்டுக் காட்டினார்? இலவச விளம்பரம் கிடைக்கும் என்பதாலா?
  • தியேட்டருக்கு முன்பே டி.டி.ஹெச்சில் வீட்டிற்கு வந்துவிடும் என்று சொல்லி வசூல் செய்த பணத்தை திருப்பி கொடுத்தாகிவிட்டதா?
  • சென்சார் செய்யப்பட்ட படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டிய அவசியம் என்ன? 

இதில் ஏதாவது Immature கேள்வி இருக்கிறதா? இருந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். சினிமாவுக்கும் இந்த எளியவனுக்கும் காத தூரம்.  

இலக்கியத்தில் கொஞ்சம் பரிச்சயம் உண்டு. அதனால் ஒரு நபர் எழுதிய விமர்சனத்தை படித்து தொலைத்துவிட்டேன். யார் அந்த நபர் என்றெல்லாம் சொல்லி அந்த திலுப்பாமாரிக்கு வெட்டி விளம்பரம் செய்ய வேண்டியதில்லை.

கவிதையோ, கட்டுரையோ, கதையோ- அதைப் பற்றி விமர்சனம் எழுதும் நபருக்கு குறைந்தபட்ச Credibility தேவை என்று நினைக்கிறேன்.  ஆனால் தனக்கு தேவையானவனை சொறிந்து விடுவதற்கும், பிடிக்காதவனை அடித்துப் பார்ப்பதற்கும் விமர்சனம் என்பதை கையில் எடுத்துக் கொண்டு தடித்தனம் செய்பவர்கள் சுற்றித் திரிகிறார்கள். 

தங்களின் கிறுக்கல்களை பிரசுரம் செய்வது மட்டுமே தமது இலக்கிய வாழ்வின் குறிக்கோள் என்று திரியும் இந்தப் போலிகள் ஊற்றிக் கொடுப்பதில் ஆரம்பித்து கூட்டிக் கொடுப்பது வரை எந்த Extreme க்கும் போகும் சூழல் தமிழ் இலக்கியத்தில்தான் இருக்கிறது. உங்களிடம் என்னைப் பற்றியும் என்னிடம் உங்களைப் பற்றியும் இல்லாததும் பொல்லாததுமாக சொல்லித் திரியும் நோய்க்கூறுகளும் இவர்கள்தான்.  “புழுத்த நாய் கூட இவர்கள் எழுதுவதன் குறுக்காக போகாவிட்டாலும்” கூட இந்தத் தடியர்கள் தம்மை அடுத்த இலக்கிய பிதாமகன்கள் என்று நினைத்துக் கொள்ளும் காமெடியை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த போலிகளுக்கு பின்னால் இருக்கும் குண்டாஸ் வேறொரு ரகம். கையில் இலக்கிய அதிகாரத்தை வைத்துக் கொண்டு சுள்ளான்களை தூண்டிவிட்டு ‘என்ஜாய்’ செய்து கொண்டிருக்கிறார்கள். தாம் இருப்பதால்தான் இந்த உலகமே சுழல்கிறது என்ற நம்பிக்கையுடைய காமெடி பீஸூகள். 

ஒரு விமர்சனத்தைக் கூட எதிர்கொள்ள முடியாமல் குதிக்கிறான் என்ற அஸ்திரத்தை கையில் எடுப்பார்கள். எடுத்துவிட்டு போகட்டும். இவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை- இருந்தாலும் சொல்லிவிடலாம்.

எழுதுவதன் நுட்பத்தை மனப்பூர்வமாகத் தேடிக் கொண்டிருப்பவனுக்கு இந்த உட்டாலக்கடி வேலைகள் எல்லாம் ***ருக்குச் சமானம். அவன் தன் இடத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்யப்போகிறான். அவனை காலி செய்ய வேண்டுமானால் அவனது மூச்சை அடக்கினால் மட்டும்தான் உண்டு. மற்றபடி வேறு எந்த பருப்பும் வேலைக்கு ஆகாது. 

No Tension...No Tension - இந்த ஒன்றரையணா பசங்களுக்காக நிசப்தம் வாசிக்கும் உங்களை கிசுகிசுவால் வதைத்துக் கொண்டிருக்கிறேன். யாரைக் காய்ச்சுகிறேன் என்று புரிந்திருந்தால் சந்தோஷம். இல்லையென்றால் பெரிதாக குழப்பிக் கொள்ள வேண்டாம். அது வேறு ஒரு டீலிங்.

கிடக்கட்டும் விடுங்கள். இந்த பத்தியை லைட்டாக முடித்துவிடலாம். பெரும்பாலான இலக்கியவாதிகளிடம் “என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றால் கூச்சநாச்சமே இல்லாமல் “நாவல்” என்று சொல்லிவிடுவார்கள். எழுதிக் கொண்டிருக்கிறார்களோ இல்லையோ, அப்படி சொல்வதில் ஒரு ‘கெத்து’ இருக்கிறது. ஏழெட்டு வருடங்களாக ஒரே நாவலை எழுதும் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் இன்னமும் சில வருடங்கள் ஆகும் என்பார்கள். நாவல் என்றால் சும்மாவா? முன்பின் ஆகத்தான் செய்யும் என்று அமைதியாகிவிட வேண்டும்.

நேற்று ஒரு நண்பர் என்னிடம் வந்து என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்றார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் படம் காட்டி விடுவதுதான் உசிதம் என்பதால் “நாவல்” என்று சொல்லிவிட்டேன். “வாவ், சொல்லவே இல்லை?” என்றார். எனக்கே இப்பொழுதுதான் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அடுத்ததால டைட்டில் என்னவென்று கேட்டால் என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நல்லவேளையாக அவர் கேட்கவில்லை. ஆனால் மனதுக்குள் உதித்த தலைப்பு “பந்தயம்”.

8 எதிர் சப்தங்கள்:

4பெண்கள் said...

//பெரும்பாலான இலக்கியவாதிகளிடம் “என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றால் கூச்சநாச்சமே இல்லாமல் “நாவல்” என்று சொல்லிவிடுவார்கள்.//

அந்தக் கொடுமையை நாங்களும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். :)

Unknown said...

அது சரி!அந்த பந்தயத்தில் எத்தனைப் பேர் கலந்து கொள்கிறார்கள்?!!...

Anonymous said...

ஹா.ஹா...

சேக்காளி said...

// இப்பொழுது கீறலும் குதறலுமாய் நாறிக் கிடந்தது. சில மாதங்களாக அதன் நிலைமையை பார்க்க பரிதாபமாக இருந்தது//
யாரோ நல்லெண்ணத்தில் செய்ததாகவே எனக்குப் படுகிறது.புது ஹெல்மெட் வாங்கியவுடன் திரும்பவும் கொண்டு வைத்து விடுவார்கள் என்கிறேன் நான்.இல்லை என்று உங்களால் "பந்தயம்" கட்ட முடியுமா?

சிராஜ் said...

// சென்சார் போர்ட் சர்டிபிகேட் கொடுத்த பிறகு ஏன் இசுலாமிய அமைப்புகளுக்கு திரையிட்டுக் காட்டினார்? //

இதற்கு மட்டும் விளக்கம்... கமல் தானாக காட்டவில்லை... இஸ்லாமிய அமைப்புகள் தலைமைச் செயலறை அணுகி தங்கள் ஆட்சேபங்களை தெரிவித்தனர்... அதன் பின் அரசு தரப்பில் இருந்து படத்தை போட்டுக்காட்டச் சொல்லியது... (சன் நியூஸ் சேனலில் விநியோகஸ்தர் சங்க தலைவர் சொன்னது)

SUMAZLA/சுமஜ்லா said...

What is it all about? Express your free opinion here and let the world take a look at it: http://www.describia.com/Vishwaroopam

உதயம் said...

பாரம்பரிய தமிழ் கலாச்சாரம், தமிழார்வம், தமிழிலக்கிய தொண்டு, தனித்தன்மையான வட்டார மொழி வழக்குகள், என்றெல்லாம் தமிழக முஸ்லிம்களுக்கென்று வரலாறுகள் இருந்தாலும், தமிழ் சினிமா இன்னும் " நம்பள்கி, நிம்பள்கி" என்று தமிழை தப்புத்தவறாய் பேசும் அந்நியர்களாகத்தான் முஸ்லிம்களை பதிந்து வருகிறது. ஏன் இந்த சித்தரிப்பு?

முஸ்லிம்களை நல்லவர்களாகவும் அல்லது வில்லன்களாகவும், நண்பர்களாகவும் காட்டிய காலம் போய், தீவிரவாதிகளாகவும் காட்டினார்கள். முஸ்லிம்களில் தீவிரவாதிக்கா பஞ்சம்? பொறுத்துக்கொண்டோம். ஒரு தனிப்பட்ட மனிதனை எப்படி வேண்டுமானாலும் காட்டலாம். அதெல்லாம் கருத்துச்சுதந்திரம்.

இந்நிலையில், தொடர்ந்து ஒரே மாதிரியாக விஜயகாந்தும், அர்ஜுனும் இன்ன பிற...ரது படங்களிலும், தீவிரவாதி என்றால் முஸ்லிம்கள் என்று பொதுப்புத்தியில் ஆணி அடிப்பது போல திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வந்தது. சங்கடமாக இருந்தாலும் எதிர்க்கும் அளவு சூழ்நிலை இல்லை. குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்டதெல்லாம் முஸ்லிம்களே. ( நன்றாக அவதானிக்கவும் "கைது செய்யப்பட்டது" என்று தான் குறிப்பிட்டிருக்கேன்)

சமீப காலமாக, குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் எல்லாம் அப்பாவிகள் என்று நீதி மன்றத்தால் பல ஆண்டுகளை சிறையில் இழந்து விட்டு நிரபராதியாக வெளியே வருகிறார்கள். இவர்கள் நிரபராதி என்றால் யார் குற்றவாளி?? என்று ஆராயும் போது, அதே குண்டு வெடிப்புகளுக்கு "இந்துத்துவ தீவிரவாதிகள்" கைது செய்யப்பட்டு வருவதும், முன்னாள் உள்துறை அமைச்சர் "காவி தீவிரவாதம்" என்று ஒன்று இருப்பதாக நாடாளுமன்றத்திலே ஒத்துக்கொண்டதும், அதனை தொடர்ந்து தற்போதைய அமைச்சர் ஷிண்டே வும் பிஜேபியும், ஆர்.எஸ்.எஸும் பயங்கரவாத பயிற்சி முகாமே நடத்துகின்றன என்கிறார்.

இந்த சூழ்நிலையில் தான் "துப்பாக்கி" திரைப்படம் தனது வழமையான "முஸ்லிம் தீவிரவாதி" என்ற லேபிளுடன் வருகிறது. அதில் உச்சக்கட்ட அதிர்ச்சி. அதில் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமூகத்தையே சந்தேகப்படுத்தும் வகையில் "ஸ்லீப்பர் செல்" என்ற புதுவகையான உத்தி கையாளப்படுகிறது. தீவிரவாதி ஒரு சாதுவாக மக்களோடு மக்களாக கலந்தே இருப்பான், ராணுவத்திலும் உயர்பதவிகளிலும் கூட கலந்திருக்கலாம் என்ற விஷ விதையை தூவி விடுகிறார்கள். இது ஒரு அப்பட்டமான முஸ்லிம் எதிர்ப்புப்படம் என்று முஸ்லிம்கள் உணருகிறார்கள். ஏற்கனவே இந்துத்துவாவின் குண்டு வெடிப்புகளுக்கு தாங்கள் தீவிரவாத பட்டமும் பழியை சுமக்க நேரிட்டு வருகிறதே என்ற இயலாமையும், ஒவ்வொரு குண்டு வெடிப்பு வழக்குகளிலும் காவி தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையிலும், மேலும் மேலும் எங்களையே இந்த சினிமாவினர் குற்றம் சுமத்தி வருவது யாரை திருப்தி படுத்த என்று ஒரு இயல்பான கொந்தளிப்பு முஸ்லிம்களிடையே உருவாகிறது. அதனால் துப்பாக்கியை எதிர்க்க துவங்குகிறார்கள்.

பொதுவாக ஒரு சமூகத்திற்கு எதிராக இது மாதிரி ஆபத்து வரும் போது எல்லோரும் ஒன்றிணைவது இயல்பே. சண்டையிட்டு பிரிந்து கிடந்தவர்களெல்லாம் ஒரு கருத்திற்காக (துப்பாக்கியை எதிர்ப்பது) ஒன்றிணைகிறார்கள்.எதிர்ப்பு தமிழ் முஸ்லிம் சமூகம் காணாதது. அந்தக் கொதிப்பு அடங்கும் முன்னே (இதில் நீர்பறவையில் சமுத்ரகனியின் பேச்சு முஸ்லிம்களுக்கு பெரிய ஆறுதல்) விஸ்வரரூபமும் தீவிரவாதத்தை கதைக்கருவாகக் கொண்டு வரவே, சொல்ல வேண்டுமா எதிர்ப்புக்கு!!

இந்துத்துவாவினர்களின் குண்டு வெடிப்புகளுக்கும் சேர்த்தே தீவிரவாதி பட்டம் சுமந்தாகி விட்டது. இந்த சமூகத்தின் வலியையும் வேதனையும் புரிந்து கொள்ள முயலுங்கள். கமல் எங்களுக்கு எதிரியல்ல; துரதிஷ்டவசமாக விஸ்வரூபத்தின் கதைக்களம் ஆப்கனில் நடப்பதால் கமலுக்கும் வேறு வழியில்லை. இது தொடராமல் இருக்க வேண்டுமானால், எங்களுக்கும் இதற்கு வேறு வழியில்லை.

Kodees said...

//
விஜயகாந்த் ஆனாலும் சரி, கமலஹாசன் ஆனாலும் ஏன் இசுலாமிய தீவிரவாதிகளை மட்டும் ‘அட்டாக்’ செய்கிறார்கள்? ஒருவர் பின்னங்காலால் உதைத்தால் இன்னொருவர் ஏ.கே.47 ஆல் சுடுகிறார்.
//

இந்தப் படம் ஆப்கான் தீவிரவாதிகளைப் பற்றியது, எனவே முஸ்லிம்களைப் பற்றிக் குறிப்பிடாமல் படம் எடுக்கமுடியாது!

// கமல் போன்ற அறிவுஜீவி நடிகர்களுக்கு பாபர் மசூதி இடிப்போ, குஜராத் மதக் கலவரமோ ஏன் கண்ணுக்குத் தெரிவதில்லை?
//

ஒரு நடிகனிடம் இப்படியெல்லாம் எதிர்பார்க்கும் நாம்தான் இந்தக் குற்றத்துக்கெல்லாம் காரணம்

// சென்சார் போர்ட் சர்டிபிகேட் கொடுத்த பிறகு ஏன் இசுலாமிய அமைப்புகளுக்கு திரையிட்டுக் காட்டினார்? இலவச விளம்பரம் கிடைக்கும் என்பதாலா? //

காலக்கொடுமை, இனி சாதி வாரியாக எல்லாருக்கும் எல்லாப் படமும் ரிலீஸுக்கு முன்பே காட்டி சர்டிபிகேட் வாங்க வேண்டியதுதான்.


// தியேட்டருக்கு முன்பே டி.டி.ஹெச்சில் வீட்டிற்கு வந்துவிடும் என்று சொல்லி வசூல் செய்த பணத்தை திருப்பி கொடுத்தாகிவிட்டதா?
//

ங்கே!!

// சென்சார் செய்யப்பட்ட படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டிய அவசியம் என்ன?
//

ஓட்டுப்பொறுக்கி அரசியல்? / ப்ளாக்மெயில் அரசியல்? உ.த. அண்ணனைக் கேட்டால் விபரம் கிடைக்கலாம்.

சோ ஒருமுறை அளித்த பதில். (அவரது ஏதோ ஒரு நாடகத்தில் அவர் சினிமாக்காரங்களைப் பற்றி செமயா கிண்டல் செய்திருப்பார், அதற்கு பலரும் சினிமாவில் இருந்துகொண்டே சினிமாக்காரங்களை கிண்டல் செய்யலாமா? என்று கேட்டார்கள்)

சினிமாக்காரனா இருந்துகொண்டே சினிமாக்காரங்களை கிண்டல் செய்யலாமா? என்று கேட்பவர்கள் நாளை மனிதாக இருந்துகொண்டே மனிதனை கிண்டல் செய்யலாமா? என்றும் கேட்பார்கள்.

-- இதுதான் இத்தனை அமளிகளைப் பார்த்ததும் எனது நினைவிற்கு வந்தது!