Jan 22, 2013

திமுக எம்.எல்.ஏ, அதிகாரம், கவுன்சிலர்


டீக்கடையில் அமர்ந்திருக்கும் முன்னாள் எம்.எல்.ஏவைத் தெரியும். அதே அளவுக்கு எளிமையான எம்.எல்.ஏ இந்தக்காலத்திலும் இருக்கிறாராம். அவரை நான் நேரில் பார்த்ததில்லை. யுவகிருஷ்ணா எழுதியிருந்ததாக நினைவு. அவர் எழுதும் மற்ற விஷயங்களை நம்பினாலும் திமுக பற்றிய விவகாரங்கள் மீது கொஞ்சூண்டு சந்தேகமாகத்தான் இருக்கும். அவர் பக்கா திமுகக்காரர் என்பதால் எழும் இயல்பான சந்தேகம் அது. யுவகிருஷ்ணா குறிப்பிட்டிருந்தது குன்னம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கரைப் பற்றி. ஏதோவொரு திரையரங்கில் மிக இயல்பாக சிவசங்கர் வந்திருந்ததாகத் எழுதியிருந்தார். அவர் குறிப்பிடும் அளவுக்கு எளிமையானவராக இல்லாவிட்டாலும் கவுன்சிலர்களை விட சிம்பிளானவராக இருப்பார் என நம்பினேன்.

கவுன்சிலர்கள் செய்யும் அழிச்சாட்டியம் இருக்கிறதே. டூ மச். சென்றவாரத்தில் ஒரு கடைக்குச் சென்றிருந்தோம். அந்தக் கடையும் அதோடு ஒட்டிய இன்னும் சில கடைகளும் ஒரு கவுன்சிலருடையது. வாடகைக்கு விட்டிருக்கிறார். இவர் பெங்களூர் கார்பொரேஷனில் கவுன்சிலர். அந்த கடைகளுக்கு பின்னால் ஒரு பிரமாண்டமான பங்களா. அந்த பங்களாவில்தான் கவுன்சிலர் வசிக்கிறார். பைக்கை ஓரமாக நிறுத்திக் கொண்டிருந்த போது ஒரு வெள்ளை நிற ஆடி கார் ‘ஹார்ன்’ எழுப்பியபடி இருந்தது. அந்த காருக்கு முன்பாக ஒரு டாக்ஸி நின்றிருந்தது . வழியை மறைத்தபடி டாக்ஸியை நிறுத்திவிட்டு டிரைவர் டீ குடிக்க போயிருந்தார். ஆடி காரிலிருந்து இறங்கிய கவுன்சிலர் “யாருடைய கார்” என்று சத்தம் போட்டார். பதறியபடி ஓடி வந்த டிரைவருக்கு கண் இமைக்கும் நேரத்தில் அறை விழுந்தது. எந்த மறுப்பும் சொல்லாமல் கதவைத் திறந்து டாக்ஸியை எடுக்க முயன்றார். அவர் ‘ஸ்டார்ட்’ செய்வதற்கு எத்தனித்துக் கொண்டிருந்தார். காரின் ஜன்னல் வழியாக கையை உள்ளேவிட்டு ஓரிரு குத்துக்களை டிரைவர் முகத்தில் இறக்கினார் கவுன்சிலர் பயில்வான். டாக்ஸிக்காரர் சில கணங்களில் அந்த இடத்திலிருந்து காணாமல் போய்விட்டார். கவுன்சிலர் அங்கிருந்த மொத்த பேருக்கும் ஆணையிட்டார் “இனி யாராவது வழியை மறித்தால் கொன்றுவிடுவேன்”. தலை வணங்கி ஏற்றுக் கொண்டார்கள். அந்த இடத்தில் Power தனது கொடியை நட்டுவிட்டு போனது.

அதிகாரங்கள் மனிதர்களை புரட்டி போட்டுவிடுகிறது. அப்படிப் புரட்டிப் போடப்பட்ட மனிதர்களை பார்த்து நமக்கு பழகிப்போயிருக்கிறது. கிடைக்கும் மிகச் சிறிய அதிகாரங்களைக் கூட எந்தவிதமான Extreme க்கும் பயன்படுத்தும் அதிகாரவர்க்கத்திற்குள்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதிகாரவர்க்கம் என்பது அரசியல்வாதிகள், அதிகாரிகள் மட்டும் இல்லை. ஒவ்வொரு சாமானிய மனிதனும் தனக்கு ஏதாவதொரு வகையில் அதிகாரம் கிடைக்கும்படி பார்த்துக் கொள்கிறான். கிடைக்கும் அதிகாரத்தை சாத்தியப்படும் இடங்களில் எல்லாம் செலுத்துகிறான். வீட்டில் தன் மனைவி மக்களில் ஆரம்பித்து கட்டடவேலை செய்பவனிடம் மேஸ்திரி செலுத்தும் அதிகாரம், ஐடி நிறுவனத்தில் ப்ராஜக்ட் மேனேஜர் செலுத்தும் அதிகாரம் வரைக்கும் அத்தனை இடங்களிலும் அதிகாரத்தின் ஊசிகள் கீழே இருப்பவர்களின் கண்களுக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை அருளினியனியனை கப்பன் பார்க்கில் சந்திக்க முடிந்தது. இவர் சாத்தப்பன் என்ற நண்பர் மூலமாக அறிமுகமானவர். அருளினியனும் சூப்பரான கேரக்டர். ஈழத்துக்காரர். அருள் கிட்டத்தட்ட பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால் ஈழத்தமிழ் நாக்கில் அப்படியே ஒட்டியிருக்கிறது. பல சமயங்களில் நீண்ட கூந்தலுடன் ஜெர்க் கொடுப்பார். இந்த முறை ஒட்ட வெட்டி இயல்பாக சிரித்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். கல்லூரியில் படிக்கிறேன் என்று சொல்வது டகால்ட்டியாக இருக்கக் கூடும் என நினைக்கிறேன். அதற்கு காரணமிருக்கிறது. எப்பொழுது அழைத்தாலும் “அண்ணா ஒரு இண்டர்வியூக்கு வந்திருக்கன்” என்பார். இண்டர்வியூ என்பது நேர்காணல். விகடனில் பத்திரிக்கையாளராக இருக்கிறார். எப்பொழுதும் விகடனுக்காக அலைந்து கொண்டு டைம்பாஸூக்காக கல்லூரிக்கு போகிறார் என நினைக்கிறேன். அருளினியன் பற்றிய தெளிவான அடையாளம் சொல்ல வேண்டுமானால் சமீபத்தில் விகடனில் வந்த “நான் பாலியல் தொழிலாளி” என்ற நேர்காணலை நடத்தியவர்.

அருளினியனை குறிப்பிடக் காரணம், அவரும் சிவசங்கர் பற்றி பேசினார். சிவசங்கர் பெங்களூர் வந்திருக்கிறார். அவரைச் சந்திக்க வேண்டும் என அருளினியன் கேட்டிருக்கிறார். நீங்கள் வர வேண்டாம் நானே வந்துவிடுகிறேன் என்று அருளினியன் தங்கியிருக்கும் அறைக்கே போய்விட்டாராம். சிவசங்கர் இணையத்திலும் எழுதுகிறார். இது அவரது தளம்

“எம்.எல்.ஏ எண்டு சொன்னால் நம்ப முடியாது” என்றார் அருளினியன்.

“உண்மையிலேயே வந்திருந்தது எம்.எல்.ஏ சிவசங்கர்தானா?” என்றேன். 

சிரித்துக் கொண்டு “ஓம் அண்ணா” என்றார்.

அதிகாரம் கிடைத்தும் அமைதியாக இருப்பவர்களை பார்ப்பது ஆறுதலான விஷயம். அடுத்தவர்களை வெல்வதற்காக நடத்தும் ‘கேம்’கள், எதிரிகளை பந்தாட கிடைக்கும் வாய்ப்புகளுக்காக காத்திருத்தல் என சகலமும் அதிகாரத்தின் மீதான தமது பசிக்கு உணவு தேடும் செயல்பாடுகள்தான். கடும் பிரயத்தனங்களினூடாக கிடைக்கும் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு  ‘சும்மா’ இருக்க பலராலும் முடிவதில்லை. கவுனசிலரில் ஆரம்பித்து ஜனாதிபதியின் மகன் வரை சகலரும் ஆடுகிறார்கள். தண்டல்காரனில் ஆரம்பித்து தலைமைச் செயலாளர் வரை ஒவ்வொருவரும் மிரட்டுகிறார்கள். இந்த அதிகார வலைக்குக் கீழாக அதிகாரம் கிடைத்தும் எளிமையானவர்களாக இருப்பவர்களை பற்றி அறிந்து கொள்ளும் போது ஆறுதலாக இருக்கிறது. 

2 எதிர் சப்தங்கள்:

தமிழ் உதயன் said...

http://www.nisaptham.com/2013/01/blog-post_22.html

நண்பர் திரு மணிகண்டன் அருள் இனியன் பற்றி சிலாகித்து எழுதியுள்ளார். அவர் பற்றிய ஒரு பதிவை இங்கு சுட்டிகாட்ட விரும்புகிறேன்.

http://kalakakkural.blogspot.in/2012/11/blog-post_4.html
Inside Sri Lanka's killing fields ~ I WITNESSED GENOCIDE [FULL]

http://kalakakkural.blogspot.in/2012/11/blog-post_8.html

என்னுடைய நோக்கம் அருள் இனியனை சிறுமைபடுத்த வேண்டும் என்பது அல்ல. அவர் பற்றி மணிகண்டனும், மணிகண்டனின் எழுத்துக்களை படிப்பவர்களூம் தெரிந்து கொள்ளவே......

சின்ன பையன் தெரியாமல் தவறு செய்துவிட்டார் என்றுதான் இதை பார்க்கவேண்டும்.

Anonymous said...

இங்கு மணிகண்டன் அருளிழினியனை நல்லவர்/மோசம் என்று சொல்லவில்லை..அவருடைய ப்ளாக் இணைப்பை கொடுத்து தெரிந்து கொள்ளுமாறு கூறியுள்ளார் .. எப்படி புரிந்து கொண்டாலும் சரி.........