Jan 21, 2013

வைரமுத்து, பணத்தாசை, கற்பிதம்


எல்லாவற்றையும் கற்பிதம் செய்து கொள்வது துக்கமானது. ஆனால் அதுதான் என் மனோபாவம். கற்பிதம் என்றால் ‘இது இப்படித்தான்’ என்று முடிவு செய்துகொள்வது. முன்முடிவுகளில் நம்மை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்ற குத்துமதிப்பான நம்பிக்கையில் எடுக்கும் முடிவு அது. ஆனால் இந்த நம்பிக்கைகள் பெரும்பாலான நேரங்களில் தவிடுபொடியாகிவிடும். சாதகமானவர்கள் என்று நினைத்தவர்கள் பல நேரங்களில் காலை வாரிவிடுவார்கள். வெற்றி கிடைக்கும் என நினைத்த நிகழ்வுகளில் குப்புற விழுந்து இரண்டு பற்கள் நொறுங்கிவிடும். ஆனாலும் கற்பிதம் செய்துகொள்வதை மட்டும் கைவிடுவதில்லை. 

இந்த கற்பிதங்கள் எனக்கான பிரச்சினை இல்லை. பெரும்பாலானவர்களின் பிரச்சினை. குழந்தைகளிடம் இருந்தே நம் தில்லாலங்கடி வேலைகளைத் தொடங்கிவிடுகிறோம். மண்ணில் விளையாடுவது குழந்தைகளின் உரிமை. ஆனால் அதை லாவகமாக பறித்துக் கொள்கிறோம். நீரில் விளையாடுவதும் அவர்களின் உரிமைதான். அதையும் தடுத்துவிடுகிறோம். இப்படி அவர்களின் உரிமையை பறிப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் வைத்திருப்போம். வயிற்றில் பூச்சி வரும், சளி பிடித்துக் கொள்ளும் - இப்படி எதையாவது சொல்லி நம்மை நாமே Justify செய்து கொள்வதும் கற்பிதம்தான். கற்பிதம் என்ற சொல்லை திரும்பத் திரும்ப ஜல்லியடித்தால் போரடித்துவிடும் என்பதால் இந்த இடத்தில் நிறுத்திக் கொள்ளலாம்.

நேற்று ஈரோடுகதிர் பெங்களூர் வந்திருந்தார். ஃபேஸ்புக்கில் அவருக்கு ரசிகர்கள் அதிகம். ரசிகைகளும்தான். நமக்கு கிடைக்காதது அடுத்தவருக்கு கிடைத்தால் பொறாமைப்படுவதுதானே மனித இயல்பு. கதிர் மீது பொறாமை உண்டு. கப்பன் பார்க்கில் நடந்து கொண்டிருக்கும் போது கீழே ஓடும் பெரிய கால்வாயில் தள்ளிவிட்டுவிடலாம் என்றுதான் முடிவு செய்திருந்தேன். அருளினியன், ராமலக்‌ஷ்மி போன்றவர்கள் உடன் இருந்து திட்டத்தில் மண் அள்ளி போட்டுவிட்டார்கள். கதிர் நிறையப் பேசினார். ஈரோட்டில் சங்கமம் நடத்தியது, ஃபேஸ்புக் என சகட்டு மேனிக்கு அடித்துக் கொண்டிருந்தார். இப்படி யாராவது புது மனிதர்களை பேசவிட்டு வேடிக்கை பார்ப்பதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது நமக்குள் அவர்களைப் பற்றிய ஒரு பிம்பம் உருவாகும். அந்த பிம்பம் அத்தனை துல்லியமானதாக இருக்க வேண்டியதில்லை. நாம் உருவாக்கிக் கொள்ளும் பிம்பத்தோடு அந்த மனிதரின் செயல்பாடுகள் ஒத்துப்போகும் போது அந்த மனிதரைப் பிடித்துப் போகிறது. பிம்பத்திலிருந்து செயல்பாடுகள் முரண்படும்போது அந்த மனிதரையும் வெறுக்கத் துவங்குகிறோம். கதிரைப் பற்றிய பிம்பத்தையும் உருவாக்கிக் கொண்டேன். இதுவும் கற்பிதம்தான்.

இந்த இடத்தில் மீண்டும் ‘கற்பிதம்’ தலையை நீட்டிவிட்டது பாருங்கள். இந்த கற்பிதங்களை முன்னோர்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்கிறோம். அவர்கள் ஏற்கனவே  ‘பலவற்றை’ சொல்லி வைத்திருக்கிறார்கள். அதை இம்மிபிசகாமல் Follow செய்கிறோம். நாம் பின்பற்றும் கற்பிதங்களில் ஏகப்பட்ட கற்பிதங்களை உடைக்கலாம் என்று தோன்றுகிறது. சிவப்பாக இருப்பவனெல்லாம் நல்லவன் என்பதில் ஆரம்பித்து ஆனந்த விகடனில் கவிதை எழுதுபவனை கவிஞன் என்று சொல்வது வரை கண்டதையும் அடித்து தூள் கிளப்பிவிடலாம்.

கோபிச்செட்டிபாளையத்தில் தாய்த்தமிழ் பள்ளி நடந்து கொண்டிருக்கிறது. பள்ளியின் பெயரே தாய்த்தமிழ் பள்ளிதான். குமணன் என்பவர்தான் முன்னின்று நடத்துகிறார். பள்ளி நடத்துகிறவர் என்பதால் பி.எம்.டபிள்யூ காரில் வந்து போவார் என்று முடிவு செய்து கொள்ள வேண்டியதில்லை. ஹீரோ ஹோண்டா இருசக்கர வண்டிதான். குமணனுடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. அவரது தம்பி நடத்தும் டீக்கடைக்கு பின்புறமாக ஒரு சிறு அலுவலகம் இருக்கிறது. குமணன் தனது எல்.ஐ.சி ஏஜெண்ட் பணியை செய்வதற்கான அலுவலகம் அது. ஊருக்கு போகும் போதெல்லாம் அங்கு அவருடன் பேசிக் கொண்டிருப்பது வழக்கம். குமணனின் தம்பி நடத்தும் டீக்கடையை தொடங்கியது அவரது அப்பா. வயதாகிவிட்டதால் தனது இளைய மகனுக்கு டீக்கடையை கொடுத்துவிட்டார். இப்பொழுதும் அவரது அப்பாவை டீக்கடையில் பார்க்க முடியும். ஒரு மனிதர் டீக்கடையில் இருப்பது பெரிய அதிசயம் இல்லை. ஆனால் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ டீக்கடையில் இருப்பதுதான் ஆச்சரியம்தான். குமணனின் அப்பா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

கொங்கு மண்டலத்தில் முக்கியமான அரசியல்வாதியான கே.ஏ.செங்கோட்டையன் தனது நாற்பதாண்டு கால தேர்தல் அரசியலில் ஒரே ஒரு முறைதான் தோல்வியடைந்திருக்கிறார். அது 1996 ஆம் ஆண்டு. அந்த முறை கே.ஏ.எஸ்ஸை தோற்கடித்தவர்தான் டீக்கடையில் இருக்கும் ஜி.பி.வெங்கிடு. பொருளாதார ரீதியாக எந்த பலத்தையும் சேர்த்துக் கொள்ளாத இந்த முன்னாள் எம்.எல்.ஏவின் மகனான குமணன் நடத்தும் தாய்மொழி வழியிலான பள்ளி சார்பில் பொங்கல் விழாவை இந்த மாதம் நடத்தியிருக்கிறார்கள். விழாவின் பகுதியாக வைரமுத்துவின் “மூன்றாம் உலகப்போர்” நூல் திறனாய்வு விழாவையும் நடத்தியிருக்கிறார்கள். கூட்டத்தில் வைரமுத்துவும் கலந்து கொண்டிருக்கிறார்.

முந்நூறு, ஆயிரம், பத்தாயிரம் ரூபாய் என்று டிக்கெட் விற்பனையும் நடந்தது. டிக்கெட் வாங்குபவர்களுக்கு புத்தகத்தின் ஒரு பிரதியை கொடுத்துவிட்டார்கள். ஆயிரக்கணக்கில் டிக்கெட்டும் அதன் வழியாக புத்தகமும் விற்றிருக்கிறது. விழாவில் கட்டுக்கடங்காத கூட்டம் என்று நண்பர் ஒருவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்காக வந்து போவதற்கு வைரமுத்துவுக்கு பல ஆயிரங்களை கொடுத்திருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிடுவதில்லை. போக்குவரத்து செலவில் ஆரம்பித்து தங்கும் வசதி வரைக்கும் அத்தனையையும் சொந்த செலவில் செய்து கொண்டிருக்கிறார் வைரமுத்து. அதுமட்டுமில்லாமல் இந்த விழாவிற்காக நடத்தப்பட்ட புத்தக விற்பனையில் வந்த இலாபம் முழுவதையும் பள்ளி வளர்ச்சிக்கு என்று கொடுத்திருக்கிறார்.

எந்த நோக்கத்தில் செய்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் எந்த நோக்கத்தில் செய்தாலும் தமிழ் வழிக்கல்வியை உற்சாகமாக முன்னெடுக்கும் ஒரு பள்ளிக்காகத்தான் செய்திருக்கிறார். கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. வைரமுத்து என்ற ஆளுமை குறித்தான என் கற்பிதத்தில் கல்லை வீசியிருக்கிறார்கள். தவறான கற்பிதங்கள் நொறுங்குவதில் தவறு எதுவும் இல்லை.

10 எதிர் சப்தங்கள்:

Kodees said...

தலைப்பு தவறாகத்தெரிவது எனது கற்பிதம் போல!

Er.Rajkumar P.P said...

என்னிலும் இதே கற்பிதம் இருந்தது. உண்மை தெரியாமல் மற்றவர் சொல்வதையெல்லாம் கேட்பது எவ்வளவு தவறு என்பதை அழகாக விளக்கியமைக்கு நன்றிகள் நம்ம ஊர்க்காரரே!

ஜீவன் சுப்பு said...

## இப்படி யாராவது புது மனிதர்களை பேசவிட்டு வேடிக்கை பார்ப்பதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது நமக்குள் அவர்களைப் பற்றிய ஒரு பிம்பம் உருவாகும். அந்த பிம்பம் அத்தனை துல்லியமானதாக இருக்க வேண்டியதில்லை. நாம் உருவாக்கிக் கொள்ளும் பிம்பத்தோடு அந்த மனிதரின் செயல்பாடுகள் ஒத்துப்போகும் போது அந்த மனிதரைப் பிடித்துப் போகிறது. பிம்பத்திலிருந்து செயல்பாடுகள் முரண்படும்போது அந்த மனிதரையும் வெறுக்கத் துவங்குகிறோம்.##

** நிஜம் தான் ...! **

திருப்பூரில் நடந்த பதிவர் சந்திப்பில் "தாய் தமிழ் பள்ளி" மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரெம்பவே ரசித்தேன் .

இயக்குனர் பாலா மிகச்சிறந்த வலி கடத்தி ன்னு ஒரு முறை நாஞ்சில்நாடன் சொன்னாரு ...
அதைப்போல "தாய் தமிழ் பள்ளி" மாணவர்கள் ஆகச்சிறந்த தமிழ் உணர்வை கடத்துபவர்கள் ன்னு சொல்லலாம் .

துளசி கோபால் said...

நல்ல சமாச்சாரம்தான்!!!!

Vaa.Manikandan said...

நன்றி கோடீஸ்வரன், ஜீவன் சுப்பு, துளசி கோபால்.

ஜீவன் சுப்பு,

தாய்த்தமிழ் பள்ளியில் பறையாட்டம் முதலான தமிழர்களின் பண்பாடு சார்ந்த கலைகளை தொடர்ந்து ஊக்குவிக்கிறார்கள்.

ராஜ்குமார்,

நீங்கள் கோபியா?

Anonymous said...

அட்டகாசம் சார்!

Shankari said...

Hello Manikandan,

Through Idlyvadai I came to know about ur blog. [Ur Bangalore event] from that time I'm visiting daily.

Ur posts and thinking are different. Keep it up!

While reading, I was tensed about what you are going to tell about Vairamuthu... but good to know about his generosity.

[Dont have tamil typing facility in office]

Keep blogging.
Shankari

Vaa.Manikandan said...

நீங்கள் டென்ஷனாக விரும்பினால் வைரமுத்து பற்றி நான் முன்பு எழுதியவற்றை வாசிக்கலாம் :)

Anonymous said...

அசத்தலான மொழிநடை வாய்த்திருக்கிறது உங்களுக்கு. வாழ்த்துக்கள் தம்பி.

ராமநாதன்,
கோவை.

manjoorraja said...

வைரமுத்துவை ஒரு முறை சந்தித்து பேசியிருக்கிறேன் என்றாலும் மற்றவர்களின் தொடர்ந்த குற்றச்சாட்டுகள் அவர் மீதான ஒரு தவறான கற்பிதத்தையே என்னுள் விதைத்திருந்தது. உங்களின் இப்பதிவின் மூலம் வேறொரு முகம் கண்டேன்.

தாய்வழி கல்வி பள்ளி சிறப்பாக நீண்ட காலம் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என விரும்புகிறேன்