Jan 20, 2013

ஓடும் ரயிலில் கையசைத்துச் சென்றவள்


பெரும்பாலான ஞாயிற்றுக்கிழமைகள் ஒரே மாதிரி அமைந்துவிடுகின்றன. உணவும் மதியத் தூக்கமும் ஒரு தினத்தை ஒட்டுமொத்தமாக கொன்றுவிடுகின்றன. இந்த ஞாயிற்றுக்கிழமை அப்படி இல்லை. எழும் போதே மணி ஒன்பது. அதற்கு காரணம் நேற்று தூங்கும் போது அதிகாலை மூன்று மணி. அதுவரைக்கும் கோபிகிருஷ்ணனின் சிறுகதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். புத்தகத்தில் இல்லை- இணையத்தில்தான். அவரது சிறுகதைகள் இப்பொழுது கைவசம் இல்லை.  அழியாச்சுடர்கள் தளம் ஆபத்பாந்தவனாக இருக்கிறது. தமிழின் அத்தனை முக்கியமான சிறுகதைகளையும், கதாசிரியர்களையும் இணையத்தில் சேகரிக்கும் மிக முக்கியமான பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நன்றியை தெரிவித்துவிட்டு வாசிக்கத் துவங்கினேன். கோபிகிருஷ்ணன் தன் எழுத்துக்குள் இழுத்து போட்டுக் கொண்டார். 

இவ்வளவு எளிமையாக, எள்ளலுடன் கூடிய எழுத்தை வாசிப்பதற்கு உற்சாகமாக இருக்கிறது. இத்தனை உற்சாகமான எழுத்துக்குச் சொந்தக்கார மனிதன்தான் வாழ்வின் வறுமைப்பிடி காரணமாகவும் மனச்சோர்வின் காரணமாகவும் மாத்திரைகளின் பிடிகளுக்குள் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார் என்பது நம்ப முடியாத துக்கம். ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். அதுதான் நடந்தது. எழுத்து மட்டுமே எந்த மனிதனையும் காப்பாற்றாது என்பதற்கு கோபிகிருஷ்ணன் உதாரணம். நேரம் கிடைக்கும் போது கோபிகிருஷ்ணனின் எழுத்தை வாசித்துவிடுங்கள். 

மூன்று மணிக்கு எழுந்து வந்த அப்பா அதிர்ச்சியடைந்தவராய் தூங்கச் சொல்லி பற்களைக் கடித்தார். லேப்டாப்பை மூடிவைத்து தூங்கி எழுந்தால் மணி ஒன்பதாகியிருந்தது. தந்தியின் தலைப்புச் செய்தியில் ராகுல் காந்தி சிரித்துக் கொண்டிருந்தார். கட்சியின் துணைத்தலைவர் ஆகிவிட்டாராம்.  இது எதிர்பார்த்ததுதான். காங்கிரஸ் அடுத்த ஆட்சியையும் பிடித்துவிடலாம் என்று நம்புகிறது. அதன் நம்பிக்கைக்கு காரணம் - கட்சிக்குள் இருக்கும் மூளைக்காரர்கள். எந்த கோதாவில் வேண்டுமானாலும் இறங்குவார்கள். காங்கிரஸின் அரசியல் கணக்குகள் எதிரிகளை துவம்சம் செய்துவிடக் கூடியவை. கடைசி நேரம் வரைக்கும் ஆட்சியை பிடிப்பதற்கான அத்தனை முஸ்தீபுகளிலும் ஈடுபடும் அந்தக் கட்சிக்கு குழி தோண்ட கடப்பாரையை தூக்கிக் கொண்டு நிற்கிறார் மோடி. குழி தோண்டும் மனிதர் என்ற நம்பிக்கையாலேயே மோடி மீது எனக்கு மரியாதை உண்டு. பாருங்கள்! கோபிகிருஷ்ணனில் ஆரம்பித்து காங்கிரஸ் கட்சிக்கும் மோடிக்கும் வருவது மடத்தனமான செயல். 

பதினோரு மணிக்கு அபி மதியழகனும், கோபாலும் வந்திருந்தார்கள். ஓசூரில் வசிக்கிறார்கள். மதியின் “நினைவுகள் சுமந்தலையும் யாத்ரீகன்” என்ற தொகுப்பு அகநாழிகை வெளியீடாக வந்திருக்கிறது. அதன் பிரதியைக் கொண்டு வந்திருந்தார். வீட்டிற்கு அருகில் இருக்கும் ஏரிக்கரையில் அமர்வதற்கு இடம் தேடினோம். வெயிலில் இருந்து தப்பிக்க இடம் கிடைக்காமல் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். வெறும் தரை. குளிர்ந்த காற்று. நிறைய பேசினோம். ஆரம்பத்தில் எழுத்தைப் பற்றி பேசாமல் இலக்கியத்தில் அரசியல் செய்யும் மனிதர்களைப் பற்றி பேச நேர்ந்தது  அலுப்பைத் தந்தது. இவ்வளவு தூரம் தேடி வந்திருக்கும் நண்பர்களிடம் வேறு ஏதேனும் உருப்படியாக பேசலாம் என்று மனம் உறுத்தியது.

அப்படியும் தவிர்க்க முடியாமல் எனது முந்தைய கவிதைத் தொகுப்பும், கட்டுரைத் தொகுப்பும் எத்தனை பிரதிகள் விற்றன என்ற கணக்கைக் கூட பதிப்பாளர் தரவில்லை என்ற குற்றப்பத்திரிக்கையை வாசித்தேன். அதை தவிர்த்திருக்கலாம். ஆனால் என்னையுமறியாமல் வந்துவிட்டது. மூன்று முறை மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். எனக்கு ராயல்டியெல்லாம் வேண்டாம், குறைந்தபட்சம் எத்தனை பிரதிகள் விற்றன என்று மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறேன். ஆனால் எந்த பதிலும் வந்ததில்லை. அதைவிடுங்கள்.

மதி, கோபாலிடம் கவிதைகள் பற்றி, விமர்சனங்கள் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். அவர்களை வழியனுப்ப பேருந்து நிறுத்தம் வரை வந்துவிட்டு திரும்பிய போது மதியின் தொகுப்பை புரட்டினேன். அப்பொழுது வாசித்த கவிதை ஒன்று-

ஓடும் ரயிலில் இருந்து 
புன்னகைத்து கையசைத்துச்
செல்லும் இளம்பெண்ணொருத்தி
சில மணித்துளிகளில்
மறந்துவிடலாம் இவனை
அன்றைய நாளுக்கான அலைகழிப்பைத் 
தந்துவிட்டு.

எனக்கு இன்றைய தினத்துக்கான அலைகழிப்பைத் தரும் இளம் பெண்ணொருத்தி ஏதேனும் பேருந்தில் அமர்ந்திருக்கக் கூடும் என்று போகிற பேருந்துகளை நோட்டம் விட்டேன். நல்லவேளையாக யாரும் கையசைக்கவில்லை. தப்பித்துக் கொண்டேன்.

7 எதிர் சப்தங்கள்:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எழுத்தை நம்பி பிழைப்பது எளிதல்ல.வறுமையை வெல்லும் அளவுக்கு எழுத்து வாரிக் கொடுக்காது என்பது யதார்த்தம்.சுஜாதா போன்றவர்கள் கூட கடைசிவரை எழுத்தை மட்டும் நம்பி இருக்கவில்லை.
கோபி கிருஷ்ணனை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

manjoorraja said...

அழியாச்சுடர்கள் ஒரு போக்கிஷம்.

மதியின் முழுதொகுப்பைப் பற்றிய உங்களின் பார்வையை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்

Unknown said...

நீங்கள் கையில் குழந்தையோடு நின்றிருந்த போது உங்கள் மகனுக்கு டாட்டா சொன்ன அந்த இளம் பெண்ணை நீங்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம்.

Seeni said...

pala visayangal therinthen....

nantri....

Shankari said...

Thanks for introducing Gopikrishnan

mathiyazhagan said...

அன்பு மணிகண்டன்,

வணக்கம். எல்லோரும் காணும் வண்ணம் கவிதையை அறிமுகம் செய்தமைக்கு மகிழ்ச்சியும் நன்றியும். பேசியவை எல்லாமே உருப்படியாத விஷயங்கள்தாம். எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள விழைகிறதுதானே? எல்லா அனுபவங்களும் தனி ஒருவருக்கு மட்டுமே அமையக்கூடியதா என்ன! இப்படி ஒவ்வொரு இடத்திலும் பகிரப்படுகின்றவைதான் மற்றவர்களுக்கும் உதவக் கூடியதாக அமையும். பயனுள்ளதாகவும் அமைந்தது. உங்களைச் சந்தித்ததும், கலந்துரையாடியதுமான மகிழ்ச்சியோடு ஊர் திரும்பினோம். நன்றி.

- அபி மதியழகன்

mathiyazhagan said...

அன்பு மணிகண்டன்,

வணக்கம். எல்லோரும் காணும் வண்ணம் கவிதையை அறிமுகம் செய்தமைக்கு மகிழ்ச்சியும் நன்றியும். பேசியவை எல்லாமே உருப்படியாத விஷயங்கள்தாம். எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள விழைகிறதுதானே? எல்லா அனுபவங்களும் தனி ஒருவருக்கு மட்டுமே அமையக்கூடியதா என்ன! இப்படி ஒவ்வொரு இடத்திலும் பகிரப்படுகின்றவைதான் மற்றவர்களுக்கும் உதவக் கூடியதாக அமையும். பயனுள்ளதாகவும் அமைந்தது. உங்களைச் சந்தித்ததும், கலந்துரையாடியதுமான மகிழ்ச்சியோடு ஊர் திரும்பினோம். நன்றி.

- அபி மதியழகன்