Dec 13, 2012

ஆட்டம் ஆரம்பம்: ராகுல் Vs மோடி2014 ஆம் ஆண்டு வரவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கான வாசலைத் திறந்துவிடப் போகும் குஜராத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு யாருமே லோக்சபா தேர்தலில் ஹாட்ரிக் அடித்ததில்லையாம். மன்மோகன் சிங் மட்டும் அடித்துவிடுவாரா என்ன? சிங்குக்கு பதிலாக சிதம்பரம் களம் இறங்குவார் என்று வரும் செய்திகளை பார்க்கும் போது சிரிப்பு வருகிறது. சிங் அளவிற்கு சிதம்பரம் அடங்கமாட்டார் என்பது சோனியாவுக்கு தெரியும். அதுமட்டுமில்லாமல் “ஏற்கனவே பத்து வருடங்களை மூன்றாவது மனிதனுக்கு தாரை வார்த்துவிட்டீர்கள் இந்த முறை எனக்கு வாய்ப்புத்தாருங்கள்” என ராகுல் பாப்பா அடம்பிடிப்பார் என்பதையும் எதிர்பார்க்கலாம். தேர்தலுக்குப் பிறகுதான் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்வோம் என்று காங்கிரஸ் வெளியில் டபாய்த்துக் கொண்டிருந்தாலும் காங்கிரஸின் வேட்பாளர் கிட்டத்தட்ட ராகுல்தான். 

பா.ஜ.க பக்கம் சுஷ்மாவிலிருந்து அருண்ஜேட்லி, நிதின் கட்காரி, அத்வானி என ஒவ்வொருவருமே பிரதமர் நாற்காலி பற்றிய கனவிலிருந்தவர்கள்தான். ஆனால் அத்தனை பேரின் கனவுகளையும் கடந்த பத்து வருடங்களாக மெல்ல மெல்ல அடித்து இப்பொழுது தவிடுபொடியாக்கிக் கொண்டிருக்கிறார் நரேந்திர மோடி. 182 தொகுதிகளையுடைய குஜராத் சட்டமன்றத்தில் கடந்த இரண்டு முறைகளும் மூன்றில் இரண்டு பங்குக்கு மேலான வெற்றிகளைப் பெற்றவர் இந்த முறை 125 தொகுதிகளை வென்றுவிட்டால் பா.ஜ.க வில் தனக்கு எதிராக இருக்கும் கொஞ்சநஞ்ச முணுமுணுப்புகளும் அடங்கிவிடும் என நம்புகிறார்.

மோடி நினைப்பது நடந்துவிட்டால் போட்டி தெளிவாகிவிடும். ராகுல் காந்தி Vs நரேந்திர மோடி.

பா.ஜ.கவோ அல்லது காங்கிரஸோ லோக்சபா தேர்தலில் 272 தொகுதிகளை வென்று அறுதிப்பெரும்பான்மையை பெற்றுவிடலாம் என்று மடத்தனமாக யோசிக்க மாட்டார்கள் என நம்பலாம். இரண்டு பேரில் 180 தொகுதிகளைத் தாண்டுபவர்கள் ஆட்சியமைத்துக் கொள்ளலாம். பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு மாயாவதியிலிருந்து கருணாநிதி வரை இரண்டு குதிரை சவாரிக்காரர்கள் தயாராக இருப்பார்கள். அவர்களுக்கு தேவையானவை எல்லாம் எம்.பிக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பசையுள்ள இலாக்காக்களுடன் கூடிய அமைச்சர் பதவி அல்லது சிபிஐ வழக்குகளிலிருந்து தப்பிப்பு அவ்வளவுதான். இந்த கணக்கு வழக்குகளை வெல்லும் கட்சிகளின் கார்பொரேட் நிர்வாகிகள் பார்த்துக் கொள்வார்கள். நீரா ராடியா, பர்கா தத் மாதிரியான ஆட்கள் குதிரைகளை பிடித்து வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சுற்ற ஆரம்பிப்பார்கள். இதெல்லாம் அடுத்த கட்டங்கள். அதற்கு முன்பாக ஒரு கேள்வி எழுகிறது.

ராகுல் அபாயகரமானவரா அல்லது மோடி அபாயகரமானவரா? இந்த கேள்விக்கு கண்ணை மூடிக் கொண்டு பதில் சொல்லிவிடலாம். ராகுல் காந்திதான். இவர்கள் இரண்டு பேரையும் விட இன்னமும் அபாயகரமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு கம்யூனிஸ்ட்கள், மதச்சார்பற்றவர்கள் என்றெல்லாம் பெயர் இருக்கிறது. மதச்சார்பற்றவர்கள் என்ற ஏரியாவில் கருணாநிதி, முலாயம்சிங் யாதவ், தேவே கவுடா, லாலுபிரசாத் யாதவ் போன்றவர்கள் கர்சீப் போட்டு இடம் பிடித்து வைத்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து இன்னொரு குரூப்பும் இருக்கிறது. அது மாயாவதி, மம்தா பானர்ஜி, ஜெயலலிதா என்ற லிஸ்ட்டை கொண்டிருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போது பிரதமர் ஆகிவிடலாம் என்று கோட்டை கட்டிக் கொண்டிருப்பவர்கள். இவர்களில் யாராவது ‘மூன்றாவது அணி’ என்ற பெயரில் காமெடியை ஆரம்பித்துவிடாமல் இருக்க வேண்டும் என மனம் விரும்புகிறது. இவர்களைத் தவிர்த்து நிதீஷ் குமார். இவரை எந்த டீமில் சேர்த்தால் சரியாக வரும் என்று தெரியவில்லை.

‘யோக்கியன்’ ‘சமரசவாதி’ போன்ற பிம்பங்கள் தானாக உருவாகி வர வேண்டும். ஆனால் இவர்கள் யாருக்குமே அந்த யோக்கிதை இல்லை. தமக்குத் தாமே பில்ட் அப் செய்து கொள்பவர்கள். அதனால்தான் இவர்களிடம் ஆபத்து அதிகம். அசால்ட்டாக இருக்கும் சமயத்தில் கழுத்தில் கத்தியை வைத்துவிடுவார்கள். கடந்த ஐந்து வருடங்களில் சாமானிய மனிதனுக்கு எதிராக எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளையும் அதில் இவர்களின் நிலைப்பாட்டையும் கணக்கிட்டால் கூட இவர்களின் ஆபத்தை புரிந்து கொள்ளலாம். 

இணையத்தில் மோடியை எதிர்த்து எழுதப்படும் கட்டுரைகளுக்கு வரும் எதிர்வினைகள் அதிர்ச்சியூட்டுகின்றன. பல கட்டுரையாளர்கள் கடும் வசவுகளைச் சந்திக்கிறார்கள். உண்மையிலேயே மோடிக்கு மக்கள் செல்வாக்கு பெருகிக் கொண்டிருக்கிறதா என்பது கவனிக்கப்பட வேண்டிய அம்சம். நடுத்தர மக்கள் மற்றும் மேல்குடி மக்கள் ‘மோடி’ என்ற பெயரால் மெஸ்மெரிசம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த மெஸ்மெரிசம் மோடியால் நேரடியாக செய்யப்பட்டதில்லை. மன்மோகன் சிங் தலைமையிலான மக்கள் விரோத கொள்கை முடிவுகளும், பூதாகரமாக வெளிப்படும் ஊழல்களும் மக்களை வேறொரு தலைமையை நோக்கி திரும்பச் செய்கின்றன. மக்களின் பார்வை படும் இடத்திற்கு மோடி லாவகமாக நகர்ந்து கொண்டிருக்கிறார்.

தனது தோற்றத்திலிருந்து, பாடி லேங்குவேஜ் வரைக்கும் அனைத்திலும் தன்னை இரும்பு மனிதனாக காட்டிக் கொள்வதில் மோடி வெற்றியடைந்து கொண்டிருக்கிறார். இணையதளங்களின் மூலம் இளைஞர்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் மோடி ஈர்த்த அளவிற்கு இந்தியாவில் வேறு எந்த அரசியல்வாதியும் ஈர்க்கவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. மோடி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளான மதக்கலவரம், போலி என்கவுண்ட்டர் ஆகியன குஜராத் தவிர வெளியே இருக்கும் மக்களை நேரடியாக பாதிக்காத நிகழ்வுகள். பாதிக்கப்பட்ட குஜராத் மக்களே மோடியை இரண்டு முறை தொடர்ந்து முதல்வராக்கும் போது வெளியிலிருந்து பார்க்கும் மக்கள் இந்த குற்றச்சாட்டுகளின் மீதான நம்பகத்தன்மை குறித்து கேள்வி கேட்கிறார்கள். மீடியாக்களும் கொஞ்சம் கொஞ்சமாக மோடியை ‘பரிசுத்தமானவராக’ மாற்றிக் கொண்டிருப்பதையும் கவனிக்கலாம்.

மோடி இந்த தேசத்தின் அடுத்த தலைவனாக உருவாகிக் கொண்டிருக்கிறார் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. அவரை எதிர்த்து எழுதப்படும் கட்டுரைகளை தேடி வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எந்தக் கட்டுரையாளருமே மோடிக்கு மாற்றானவர் என்று யாரையுமே முன் நிறுத்தவில்லை என்பதுதான் பிரச்சினை.

3 எதிர் சப்தங்கள்:

Vaa.Manikandan said...

ஃபேஸ்புக்கில் ஷாஜகான் என்ற நண்பர் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார், அது முக்கியமான கேள்வி என்பதால் இங்கேயும் பதிக்கிறேன்.

*****

மேலே இருக்கும் கமென்ட்டுக்கும் பதிவில் இருக்கும் இருக்கும் விஷயத்திற்கும் பெரிய முரண்பாடு இருக்கிறது. மோடியால் ஈர்க்கப்பட யாருக்கும் உரிமை உண்டுதான். உடனே காக்கி டவுசர் என்றெல்லாம் கூவமாட்டேன். ஆனால் புரிதலில் கோளாறு துவக்கம் முதலே இருக்கிறது. ராகுல் தொடங்கி. நடுத்தரவர்க்கம் கொஞ்ச நாள் முன்னால் அன்னா அன்னா என்று கூவியது. இப்போது அன்னாவின் உளறல்கள் பற்றி விவாதமே இல்லை. நடுத்தர வர்க்கம் எப்போதுமே அபப்டித்தான். அந்த நடுத்தரவர்க்கம் தேர்தல் முடிவுகளை முடிவு செய்வதில்லை என்பதுதான் எதார்த்தம். நீங்களும் நானும் மோடி இருக்கும் இடத்திலிருந்து வெகுதூரத்தில் இருப்பவர்கள். உணமை நிலவரம் அறியாமல் இணையக் கருத்துகளை மட்டுமே வைத்து மதிப்பீடுகளை செய்துகொள்கிறவர்கள். இருப்பினும் இந்துவில் வரும் கட்டுரைகளைப் படிக்கலாம். மோடி அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி இணையத்தில் விவாதங்கள் பெரிதும் இல்லை. இருப்பினும் தெஹல்கா பார்க்கலாம். கம்யூனிஸ்டுகள் அபாயமானவர்கள் என்று போகிற போக்கில் ஒரு வீச்சு வேறு. லீட் வரிகள் வலைப்பூவுக்கு ஹிட் குறைந்துவிடாமல் இருப்பதற்காக எழுதப்பட்டவை என்றால், அது மிக மோசமான உத்தி. //சாமானிய மனிதனுக்கு எதிராக எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளில்// கம்யூனிஸ்டுகளின் எந்த நிலைப்பாடு //ஆபத்தானது// என்று நீங்கள் கூறவில்லை என்றால் மற்றவர்கள் திட்டுகிறார்கள் என்று தானும் திட்டிவிட்டுச் செல்பவர்களுக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

****

semmalai akash said...

ஒரு முழுநீள அலசல் அருமை.

உதயம் said...

//குஜராத்தில் பாரபட்சமான வளர்ச்சியை காண விரும்பினால் நீங்கள் கோத்ராவிற்கு செல்லலாம்.

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிரை பலிவாங்கிய ஹிந்துத்துவா பயங்கரவாதம் நிகழ்த்திக்காட்டிய இந்திய வரலாறு காணாத இனப்படுகொலைக்கு துவக்கம் குறித்த மண்ணில் வளர்ச்சியில் கூட பாரபட்சம் காட்டப்படுகிறது.

சாலைகள் உடைந்து, கழிவு நீர் நிரம்பி, குடிநீர் கூட இல்லாத பகுதியாக இருந்தால் நீங்கள் உறுதியாக நம்பலாம்-அது முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்று.

கோத்ரா ரெயில் தீ விபத்து சம்பவத்திற்கு பிறகு வளர்ச்சி என்பதே முஸ்லிம்கள் வாழும் பகுதிக்கு எட்டவேயில்லை.

மின்சாரம் மட்டுமே இங்குள்ள ஒரே ஆடம்பரம். தெருவிளக்கு, கழிப்பறை, மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.

முஸ்லிம்கள் வாழும் பகுதியில் உள்ள சாலைகள் உடைந்து சிதறிப்போய் கிடக்கின்றன. மழைக்காலங்களில் போக்குவரத்து முடங்கும். மாற்று சாலைக்கான கோரிக்கையும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.

ஆனால், ஹிந்துக்கள் வாழும் பகுதிகளில் நிலைமையே வேறு. நல்ல சாலை, குடிநீர், பள்ளிக்கூடம், அரசு திட்டங்கள் ஆகியவை அனைத்தும் ஹிந்துக்கள் வாழும் பகுதிகளுக்கு மட்டுமே.

2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த முஸ்லிம் இனப்படுகொலைக்கு பிறகு இங்கு முஸ்லிம்களும், ஹிந்துக்களும் தனித்தனியாக வாழ்கின்றார்கள்.

இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லையான வாகா பார்டர் போல மூன்று பிரதேசங்கள் கோத்ரா நகரில் உள்ளன.

முஸ்லிம் பகுதிக்கு அருகில் உள்ள ஹிந்து காலனியின் கேட் காலை ஆறரை மணிக்கு திறக்கும். இரவு எட்டரை மணிக்கு மூடப்படும். எல்லைகளில் இப்பொழுதும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோத்ரா ரெயில்வே நிலையத்திற்கு அருகே வாகனங்களை கூட முஸ்லிம்களும், ஹிந்துக்களும் தனித் தனியே 2 இடங்களில் பார்க் செய்கின்றனர்.

முஸ்லிம்கள் வாழும் போலன் பஜார், ஓல்ட் வெஜல்பூர் ரோடு, ஓஹ்வாட், கோண்டா, குயா ஆகியன ஹிந்துக்கள் வாழும் பகுதிகளை விட வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியுள்ளன.

ஹிந்துக்கள் வாழும் பகுதிகளான கோத்ரா கிராமீயபகுதி, லுனாவாலா சாலை, தாஹோத் சாலை, பரோலி சாலை ஆகிய இடங்களில் பயணிக்கும் பொழுது மாற்றத்தை நேரடியாக காண முடியும். தார் போடப்பட்டு சீராக்கப்பட்ட சாலைகளும், அடிப்படை வசதிகளும் இப்பகுதிகளில் ஏராளம். அரசு திட்டங்களுடன், பா.ஜ.க எம்.பியின் வளர்ச்சி நிதியும் இப்பகுதிகளுக்கு மட்டுமே செலவிடப்படுகின்றன.

முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் புதிய வீடுகளை கட்டவோ, கட்டிடங்களை கட்டவோ நகராட்சி அனுமதி வழங்குவதில்லை. அனுமதி கிடைக்க வேண்டுமென்றால் பல்வேறு அரசு அலுவலகங்களின் படிகளில் ஏறி இறங்க வேண்டும்.

ஆனால்,ஹிந்துக்கள் பகுதிகளில் கட்டிடங்களை கட்ட எவ்வித தடைகளும் இல்லை. விண்ணப்பித்தால் உடனே அனுமதி கிடைத்துவிடும். இனப்படுகொலையால் வாழ்விழந்த மக்களுக்கு வளர்ச்சியை கூட கண்ணில் காண்பிக்காமல் துரோகமிழைத்து வருகிறது மோடி அரசு.//

http://www.thoothuonline.com/


ஒரு மாநில முதல்வராக இருக்கும் போதே இந்திய இறையாண்மையை இப்படி காக்கிறாரே இந்தியாவின் பிரதமரானால்... நினைக்கவே பயமாக இருக்கிறது. மோடியை ஆதரிப்பவர்கள் அனைவரும் இதே போல குரூரம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதை நான் நம்பவில்லை.