பெங்களூரில் கடுங்குளிர். கடும் என்ற சொல்லுக்கு பதிலாக ‘பயங்கர’ என்றும் வாசிக்கலாம். இரண்டு நாட்களாக சிலுசிலுத்துக் கொண்டிருந்த மழையால் ஈரமேறிய சுவர்களும், பதமாகிப்போன தரையும் பெரும்பாலானவர்களை வீட்டிற்குள் முடக்கிப் போட்டிருந்தது.
நேற்று விடுமுறை வேறு. கம்பளியை போர்த்திக் கொண்டு பகலில் தூங்குவது கூட அத்தனை சுகமானதாக இருந்தது. கனவுகள் தூக்கத்தை கலைத்த போதெல்லாம் ஜன்னல் திரையை விலக்கினேன். வெளிச்சம் சுண்டெலியைப் போல பதுங்கியிருந்தது.
இதை விடக் கொடுமையான குளிரை சீனா சென்றிருந்த போது எதிர்கொண்டிருக்கிறேன். அது வடகிழக்கு சீனாவில் இருக்கும் டாலியன் துறைமுக நகரம். அப்பொழுது குளிர்காலம். சாலைகள், நின்றிருந்த வாகனங்கள் என அத்தனையும் பனியால் போர்த்தப்பட்டு வெண்மையாக இருந்தன. ஏர்போர்ட்டிலிருந்து ஹோட்டலுக்குச் செல்லும் போதே மிகுந்த உற்சாகமாக இருந்தது. பனிப்பொழிவை என் வாழ்நாளில் முதன்முதலாகப் பார்க்கிறேன்.
ஹோட்டல் அறையில் பெட்டி படுக்கையை வைத்தவுடன் பனியை அனுபவித்து வரலாம் என வெளியே வந்தேன். ஸ்வெட்டர் கூட அணியாமல் கதவைத் திறக்கும் போதே ஹோட்டல் செக்யூரிட்டி எச்சரித்தான். அது சைனீஸ் மொழி. எதுவும் புரியவில்லை. நான் வேண்டுமென்றேதான் வெறும் சட்டை பேண்ட்டுடன் வெளியே வந்தேன். பனியை அடைந்த இரண்டு நிமிடங்களில் தொண்டை கமறியது. அவ்வளவுதான். அடுத்த பத்து நாட்களுக்கும் தொண்டைக்கட்டும், சளியுமாக அந்த ஊரில் அலைந்து கொண்டிருந்தேன்.
டாலியனில் இருந்த அத்தனை நாட்களும் அலுவலகத்திற்கும் ஹோட்டலுக்கும் இடையில் கம்பெனியின் பஸ் ஒன்றை இயக்கினார்கள். அதில் சென்றுவர எனக்கு விருப்பம் இல்லை. ஊரைச் சுற்றிப்பார்க்க வேண்டுமானால் தனியாகச் சுற்ற வேண்டும் என முடிவு செய்து ஒரு நாள் மதியமே அலுவலகத்தை விட்டு கிளம்பிவிட்டேன். சில கடைவீதிகள், ஒரு பூங்கா, கடைசியாக கடல் என சுற்றி முடித்திருந்த போது நேரம் ஐந்து மணி ஆகியிருந்தது. அப்பொழுதே இருட்டத் தொடங்கிவிட்டது. திரும்பச் சென்றுவிடலாம் என்று நினைத்தபோது டாக்ஸியில் கிளம்புவதுதான் சரி என்று பட்டது. டாக்ஸியை அழைத்து தங்கியிருந்த ஹோட்டல் பெயரைச் சொன்னபோது அவனுக்கு புரியவில்லை. சீனாவில் தனியாகச் சுற்ற வேண்டுமானால் நாம் போக வேண்டிய இடத்தின் பெயரை சைனீஸ் மொழியில் எழுதி உடன் வைத்திருப்பது அவசியம்.
ஆங்கிலத்தில் எழுதிக்காட்டினாலும் கூட பிரயோஜனமில்லை. இந்தியா என்பதைக் கூட ‘இண்டி’ என உச்சரிக்கும் அவர்களிடத்தில் எப்படிச் சொன்னாலும் நம் தகவலை அவர்களிடம் பரிமாற முடியாது. என்னிடம் ஹோட்டலின் பெயர் சைனீஸ் மொழியில் இல்லை. அந்த டாக்ஸிவாலா சிரித்துக் கொண்டே நகர்ந்துவிட்டான்.
இப்படியே மூன்று டாக்ஸிகள் நகர்ந்த பிறகு பதட்டமடையத் துவங்கினேன். அத்தனை பெரிய நகரத்தில் எப்படி ஹோட்டலையோ அல்லது அலுவலகத்தையோ கண்டுபிடிப்பது எனத் தெரியவில்லை. ஆங்கிலம் தெரியாத ஒரு அந்நிய நகரம் எனக்கு முன்பாக பூதம் என எழுந்து நின்றது. போகிற வருகிறவர்களிடம் கேட்டுப்பார்த்தேன். ஒன்றும் நடப்பதாகத் தெரியவில்லை. மணி ஏழு ஆகியிருந்தது. தொலைபேசி எண் கூட தெரியாமல் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட பைத்தியம் ஆகியிருந்தேன். குளிரின் காரணமாகவும், அலைந்ததாலும் பசியாக இருந்தது. கையில் கொஞ்சம் காசு வைத்திருந்தே. பசியோடு அலைவதை விடவும் எதையாவது சாப்பிட்டுவிடலாம் என்று ஒரு கடைக்குள் நுழைந்த போது மெனு கார்ட் சைனீஸில் எழுதப்பட்டிருந்தது. சர்வர் பெண்மணியிடம் ரைஸ் என்றேன். அவள் சிரித்துக் கொண்டு சென்றாள். அவள்தான் ஓனரும் போலிருந்தது. கடையில் வேறு யாரும் இல்லை.
திரும்ப வரும் போது வெந்தும் வேகாத கறியோடு வந்தாள். அந்த வாசமே குமட்டியது. அழுகை முட்டிக் கொண்டு வந்தது. காசு கொடுப்பதற்காக எழுந்தேன். அவள் ஏதோ கேட்டாள். ‘ஏன் சாப்பிடவில்லை?’ என்றுதான் கேட்டிருக்க வேண்டும். பதில் சொல்லவில்லை. காசு கொடுத்த போது வாங்கிக் கொள்ளவில்லை. நான் வலுக்கட்டாயமாக கொடுத்துவிட்டு அந்தக்கடையின் முன்பாக இருக்கும் பெஞ்சில் அமர்ந்திருந்தேன். யாராவது வெளிநாட்டினர் வரக்கூடும் என்ற நம்பிக்கை கரைந்து கொண்டிருந்தது.
பத்து மணி ஆகியிருந்தது. குளிரில் உதடுகள் வெடிக்கத் துவங்கியிருந்தன. இன்றிரவு அவளிடம் அனுமதி கேட்டுக் கடைக்குள் உறங்கிவிடலாம் என யோசித்திருந்தேன். ஆனால் அதை அவளுக்கு எப்படிப் புரியவைப்பது எனத் தெரியவில்லை. பத்தரை மணிக்கு கடையின் கதவை அடைத்தாள். அப்பொழுதும் நான் அந்த இடத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்தவள் எதையோ கேட்க முயன்றாள். எனக்குப் புரியவில்லை. உடனடியாக கடையைத் திறந்து யாருக்கோ போன் செய்தாள். எனக்கு திகிலாகியது. போலீஸாக இருக்கும் என பயந்தேன். என்னை அருகில் வருமாறு சைகை காட்டி ரிசீவரைக் கொடுத்தாள். அந்த முனையில் ஆங்கிலத்தில் யாரோ ஒரு பெண் பேசினாள். அது அப்போதைக்கு தெய்வீகக் குரல். நிலைமையை விளக்கினேன். ‘டோண்ட் வொர்ரி’ என்று முடித்தாள். பிறகு கடைக்காரி போனில் பேசினாள். முடித்துவிட்டு என்னைப்பார்த்து சிரித்தாள்.
வெளியே வரச்சொல்லி கடையைப் பூட்டினாள். அவள் தனது காரை ஸ்டார்ட் செய்யும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளுடைய காரில் ஏறிக்கொள்ளும் படி கதவைத் திறந்துவிட்டாள். எதுவும் பேசாமல் ஏறிக் கொண்டேன். கார் புதிய பாதை ஒன்றில் நகர்ந்து கொண்டிருந்தது. அவள் எங்கே செல்கிறாள் என்று தெரியவில்லை. கடத்திச் சென்றாலும் கூட எதுவும் செய்ய முடியாது என்று தெரியும். அரை மணி நேரப்பயணத்திற்கு பிறகு ஹோட்டலின் பின்புற கேட்டில் காரை நிறுத்தினாள். உயிர் திரும்ப வந்தது. இறங்கி கைகளைக் கூப்பினேன். அவள் புன்னகைத்தவாறே கார் கண்ணாடியை ஏற்றிக் கொண்டாள். அப்பொழுது முகத்தில் விழுந்த பனி அத்தனை சுகமானதாக இருந்தது.
7 எதிர் சப்தங்கள்:
திகிலான பயணம் !
சிலுசிலுவென்று ஆரம்பித்து திகுலுடன் முடிந்தது...
இதுதான் பிரச்சனை..ஆங்கிலம் எவ்வளவு முக்கியம். ஜப்பான் காரர்களும் இப்போது நன்கு ஆங்கிலம் பேசத்துவங்கிவிட்டார்கள் ஆனால் சீனர் இன்னமும்... இண்டி - இந்தியர்கள். இங்கே எங்களின் ஊரில் தமிழர்களை சீனர்கள் இன்னமும் களிங்க். (களிங்கர்) என்றுதான் அழைப்பார்கள்
சுவாரிஸ்யமாகவே இருக்கிறது இன்னமும் தொடரலாமே...
Interesting experience.
YOu did not have your hotel phone number with you? Is it not a must when you travel??
நன்றி ராஜேஸ்வரி,தனபாலன்,ஸ்ரீவிஜி.
மோகன் - இல்லை.ஹோட்டலின் எண்ணை எடுக்காமல் சென்றிருந்தேன் :)
கதையோடு என்னையும் சைனா அழைத்துச் சென்றுவிட்டீர்!!!
குளிர் பயங்கரமோ இல்லையோ உங்க அனுபவம் பயங்கரம்தான்!
Post a Comment