Oct 18, 2012

ப்ராய்டின் பாலியல்சனிக்கிழமை இரவு. சாலைகளில் மழை நசநசத்துக் கொண்டிருக்கிறது. நனைந்து கொண்டே வேகமாக நடக்கிறேன். சாலையின் மறுமுனையிலிருந்து பாம்பு ஒன்று என்னை நோக்கி வேகமாக வருகிறது. திரும்பி ஓட எத்தனிக்கும் போது காலில் ஒரு போடு போட்டுவிடுகிறது. முடிந்தேன் என நினைத்து  கதறிக் கொண்டு விழித்துப்பார்த்தால் அத்தனையும் கனவு. கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டு பயம் முழுவதுமாக நீங்காமலேயே டிவியை பார்க்கத்துவங்கினேன். பல்லி விழுந்த பலனைத் தெரிந்துகொள்வதற்காக பஞ்சாங்கம் பார்ப்பதைவிடவும் கனவுகளின் பலன்களை தெரிந்துகொள்ள சிக்மண்ட் ப்ராய்டின்(Sigmund Freud) புத்தகத்தை புரட்டுவது சுவாரசியமானது.

மனுஷன் எதை எடுத்தாலும் செக்ஸில் கொண்டு போய்த்தான் நிறுத்துவார். கனவில் நீங்கள் கீழே விழுந்தாலும் பாலியல்தான் அல்லது உங்கள் பல் உடைந்து விழுந்தாலும் பாலியல்தான். அவர் சொல்வதை நம்பவும் முடியவில்லை நம்பாலும் இருக்க முடிவதில்லை. நம் வாழ்வின் அத்தனை சிந்தனைகளும் பாலியலோடு தொடர்புடையவைதான் என்பதை ப்ராய்ட் நம்புகிறார்.

ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது சற்று போர்வை நழுவினால் நிர்வாணமாக நடப்பது போல கனவு வருமாம். முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

ப்ராய்டின் பெரும்பாலான முடிவுகளும் Sexuality இல் முடிகின்றன என்பதுதான் அவரது ஆய்வு முடிவுகளை விமர்சிப்பவர்கள் முன் வைக்கும் எதிர்மறையான விமர்சனம். விமர்சனங்கள் ஒரு புறம் இருக்கட்டும். நான் ப்ராய்டை நம்புகிறேன். ஏன் நம்புகிறேன் என்பது அப்புறம். அதற்கு முன்பாக-


Oppan Gagnam Style பாடலை ஒரு முறை கேட்டுவிட்டேன். பிரம்மஹத்தி தோஷம் போல பிடித்துக் கொண்டது. அதையே உச்சரித்துக் கொண்டிருக்கிறேன்.

பெங்களூரில் ஒரு ஐ.டி நிறுவனத்தின் குடும்ப விழாவில்தான் முதன் முறையாக  கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. விழாவுக்காக கிட்டத்தட்ட இருபது இலட்சம் ரூபாயை அந்த ஒரு மாலைப்பொழுதில் செலவு செய்திருந்தார்கள். சாலை முழுவதும் பிரகாசித்த லைட்களும், பஃபே உணவும், ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுமாக தூள் கிளப்பியது. அதே ஐடி நிறுவனத்து பைங்கிளிகள்தான் இந்தப்பாடலுக்கு நடனமாடினார்கள். கூடவே சில ஆண்களும் ஆடினார்கள். ஆனால் நான் ஆண்களை கவனிக்கவில்லை. ஏதோ ஹிந்திப்பாடல் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டிருந்தேன்.

வீட்டிற்கு திரும்பிய பிறகு யூடியூப்பில் தேடிய போதுதான் கொரியப்பாடல் என்று தெரிந்தது. கிட்டத்தட்ட நாற்பத்தெட்டு கோடிமுறை பார்த்திருக்கிறார்கள். அதில் நானும் சில நூறு முறை பார்த்துவிட்டேன். இந்த வீடியோவில் பாடகர் சையை விடவும், அவரோடு ஆடும் பெண்ணை விடவும், பாடலின் தொடக்கத்தில் ஆடும் குட்டிப்பையன் கண்ணிற்குள்ளேயே நிற்கிறான். வீடியோவை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டு தூங்கிப்போன இரவில்தான் பாம்பு கொத்திய கனவு வந்தது. ஏன் பாம்பு கொத்திய கனவு வந்தது என்பதை கண்டுபிடிக்கத்தான் ப்ராய்ட் உதவிக் கொண்டிருக்கிறார்.

விலங்குகளின் வழியாக மனிதனை புரிந்து கொள்ள முயன்றால் ப்ராய்டை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடும். விலங்குகளுக்கு உணவு, இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் தவிர வேறு ஏதேனும் தேவைகள் இருக்கின்றனவா?  இந்த கேள்விக்கு ‘இல்லை’ என்பதுதான் பதில். அவை மட்டும்தான் விலங்குகளுக்கு அடிப்படையான தேவைகள் என்பதால்  உணவுக்கான தேவையும், இனப்பெருக்கமும் விலங்குகளின் Conscious Mind இல் இருக்கின்றன.  Conscious Mind இல் இருப்பவை பற்றிய சிந்தனைதான் எப்பொழுதும் ஓடிக் கொண்டிருக்கும். அடுத்ததாக எதைத் தின்னலாம்? எங்கு தேடலாம்? எந்த ‘பார்ட்னரை’ பிக்கப் செய்யலாம்  என்று அவை யோசித்துக் கொண்டிருக்கும்.  conscious mind தான் நமது தினசரி நடவடிக்கைள் அடுத்து செய்ய வேண்டியது என்ன போன்றவற்றை முடிவு செய்கிறது.

மனிதர்களுக்கும் முன்பொரு காலத்தில் உணவும், இனப்பெருக்கமுதான் அடிப்படையாக இருந்தது. முன்பொரு காலம் என்பது ஆடையில்லாமல் குகைகளில் வாழ்ந்த காலம். வசதி வாய்ப்புகள் பெருகத் தொடங்கியவுடன், நாகரீகத்தின் பெயரால் உணவும், இனப்பெருக்கமும் Conscious Mind லிருந்து unconscious mind க்கு நகரத்துவங்கின. conscious mind இல் அழகாக இருக்க வேண்டும், அடுத்தவருடன் சரியாக பேச வேண்டும், ஸ்டைலாக நடக்க வேண்டும் போன்ற எண்ணங்கள் இடம்பிடித்துக் கொண்டன. 

மனிதனாக இருந்தாலும் விலங்காக இருந்தாலும் unconscious mind தான் ஒட்டுமொத்த ‘கேரக்டர்’ செயல்பாட்டுக்கும் அடிப்படை. இந்த நனவிலி அறிவுதான் மனிதனை வழிநடத்துகிறது. அவனின் குணத்தை நிர்ணயம் செய்கிறது. மனிதனின் நனவிலி அறிவில் பசியும் காமமும்தானே இருக்கின்றன. அப்படியானால் அவைதானே மனிதனை வழிநடத்துகின்றன? அதைத்தான் சிக்மண்ட் ப்ராய்டும் சொல்கிறார்.