Oct 16, 2012

வெர்ச்சுவல் காமம்



எங்கள் டீமில் பணிபுரியும் பெண் நேற்று ட்ரீட் கொடுத்தாள். சிக்கன் பீஸ்களை தட்டத்தில் அடுக்கி கொண்டிருந்த போது அருகில் வந்தாள். ’எதற்காக ட்ரீட்’ என்றேன். ஏற்கனவே காரணம் தெரியும் என்றாலும் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகக் கேட்கப்பட்ட கேள்வி அது. சென்ற வாரத்தில் அவளுக்கு விவாகரத்து வழங்கி கோர்ட் தீர்ப்பளித்துவிட்டது. இனி தான் சுதந்திரமாவள் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டாள். அதற்கு பிறகு அவளிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. தட்டில் இருக்கும் சிக்கனுடனான எனது உரையாடலை ஆரம்பித்தேன்.

2012 ஆம் ஆண்டில் எனக்குத் தெரிந்த நண்பர்களில் மூன்றாவது விவாகரத்து இது. மற்ற இரண்டு விவாகரத்துகளுக்கான அடிப்படைக் காரணம்-வெர்ச்சுவல் செக்ஸ். மனைவிக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டு தொடர்ந்த சாட்டிங் விவகாரம் ஒரு கட்டத்தில் மனைவி தெரிந்து கொள்ள அதில் இருந்து கணவன் மனைவிக்கு இடையேயான விரிசல் வேறு பல காரணங்களின் மூலமாக அதிகரித்து இறுதியில் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

இவள் மஹாராஷ்டிராக்காரப் பெண். என்ன காரணத்திற்காக விவாகரத்து பெற்றுக் கொண்டாள் என்று முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் சில மாதங்களுக்கு முன்பாக தான் இணையத்தில் சாட்டிங் செய்வதை கணவன் அனுமதிப்பதில்லை என்றும் தனக்கு வரும் எஸ்.எம்.எஸ்களை அவன் கண்காணிக்கிறான் என்றும் சொல்லியிருந்தாள். இதையும் ஒரு காரணமாக எடுத்துக் கொண்டால் மூன்று விவாகரத்துக்களிலும் ’வெர்ச்சுவல் உலகம்’ முக்கிய பங்காற்றியிருக்கிறது.

பதினைந்து வருடங்களுக்கு முன்பாக இப்படி ஒரு சமூகச் சிக்கல் வரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. இந்தத் தலைமுறையில் தம்பதிகளுக்கிடையே விரிசலை உருவாக்கும் விஸ்வரூப பகைவனாக வெர்ச்சுவல் உலகம் அவதாரம் எடுத்திருக்கிறது. சாட்டிங், எஸ்.எம்.எஸ்களில் ஒபாமாவின் அரசியல் பிரச்சினைகளையும், மேட்டூரின் நீர் மட்ட அளவையுமா பேசுகிறார்கள்? பெரும்பாலானாவை பாலியல் சார்ந்த உரையாடல்கள்தான். தனிமை தரும் விரக்தியும், டெக்னாலஜி தரும் செளகரியங்களும் ஒருவனை எளிதாக ‘வெர்ச்சுவல் உலகத்தின்’ பக்கமாக தள்ளிவிடுகிறது. 

தனது சிக்கல்களை பகிர்ந்துகொள்ள நல்ல நண்பர்கள் இல்லை என்பதால் இணையத்தை நாடுகிறார்கள் என்று ஐந்து வருடங்களுக்கு முன்பாகச் சொன்னார்கள். இப்பொழுது உல்டாவாகியிருக்கிறது. இணையத்திலேயே அதிக நேரம் செலவழிப்பதால் நல்ல நண்பர்கள் இல்லை என்கிறார்கள். இணையத்தில் உருவாகும் நண்பர்களிடையே பகிர்ந்துகொள்ளப்படும் தகவல்களில் எண்பது சதவீதம் பொய்யானவை என்கிறார்கள். தொடர்ந்து பொய்யை உருவாக்குவதற்கான முயற்சிகளைச் செய்யும் போது மனிதன் மிகுந்த சிக்கல்கள் நிறைந்தவனாக மாறி விடுகிறான். 

இணையத்தில் இன்னொரு வசதியும் இருக்கிறது. ஒருவரால் ஒரே நேரத்தில் பத்து பேருடன் உறவுகளை தொடர முடிகிறது. அது எத்தனை அந்தரங்கமான உறவாக இருந்தாலும் அது பற்றி மற்ற ஒன்பது பேருக்கும் துளியும் தெரியாமல் பாதுகாத்துவிட முடியும். அந்தரங்கமான உறவும் உரையாடலும் தரக்கூடிய ’த்ரில்’ ஒருவனை தொடர்ந்து அடிமையாக்கி தன்னுடனேயே வைத்துக் கொள்கிறது. ஒரு அந்தரங்க உறவு கசக்கும் போது இன்னொரு உறவை ’வெர்ச்சுவல் உலகத்தில்’ தொடங்குவது என்பது மிக எளிதான காரியமாகியிருக்கிறது. உறவுகளை உருவாக்குவது, அந்த உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது, போர் அடிக்காமல் பாலியல் உரையாடல்களை தொடர்வது, அடுத்தவர்களுக்குத் தெரியாமல் அவற்றை பாதுகாப்பது போன்றவற்றிற்காக ஒரு இளைஞனும், இளைஞியும் தங்களின் சிந்தனையில் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள் என ஆய்வு ஒன்றை படிக்க நேர்ந்தது. இளைஞனும், இளைஞியும் மட்டும்தானா? என்று ஆய்வை நடத்தியவர்களுக்கு ஒரு கேள்வியை மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறேன்.

எதனால் பாலியல் சார்ந்த ’வெர்ச்சுவல்’ உரையாடல்கள் சமூகத்தில் மிக முக்கியமான இடத்தை ஆக்கிரமிக்கத் துவங்கியிருக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம். இந்திய சமூகத்தில் மட்டும் இது பிரதான பிரச்சினையில்லை. உலகம் முழுவதுமே இது வளர்ந்துவரும் பிரச்சினைதான் என்றாலும் காலங்காலமாக ‘பண்பாடு/கலாச்சாரம்’ என்ற பெயரில் பாலியல் இச்சைகள், அது சார்ந்த உரையாடல்களை தடை செய்து வைத்திருந்த ஆசிய நாடுகளில் பூதாகரமானதாக மாறியிருக்கிறது. 

பாலியல் சம்பந்தமாக வெளிப்படையாக பேசுவது குற்றச்செயல் என்ற பிம்பம் நம் அறிவுகளில் ஏற்றப்பட்டிருக்கிறது. நமது அபிலாஷைகளை கணவனிடமோ அல்லது மனைவியிடமோ கூட பேசாமல் தன்னை ‘புனிதராக’ கட்டமைத்துக் கொள்ளும் பாவனையைச் செய்வது நமக்கு பழக்கமானதாகியிருக்கிறது. இத்தகைய மனநிலையில் இருப்பவர்களுக்கு பாலியல் சம்பந்தமான உரையாடல்களை நிகழ்த்துவதற்கான கட்டடற்ற வெளியை ‘வெர்ச்சுவல்’ உலகம் உருவாக்கித் தந்துவிடுகிறது.

இணையத்தில் உருவாகும் நட்புகளில் தன்னை ‘புனிதராக’ மெய்ண்டெய்ன் செய்ய வேண்டிய அவசியம் இல்லாதிருப்பதால் எதைப்பற்றி வேண்டுமானாலும் துணிச்சலாக பேசி, எந்த Extremeக்கு வேண்டுமானாலும் செல்வது சாதாரணமாகியிருக்கிறது. இது நகர்ப்புறம் சார்ந்த பிரச்சினை மட்டுமில்லை. கிராமப்புறத்தில் நிகழும் கள்ள உறவுகள் சார்ந்த  பிரச்சினைகளின் பிண்ணனியிலும் எஸ்.எம்.எஸ்கள் மூலமாக உருவாகும் ‘வெர்ச்சுவல் உலகம்’ மிக முக்கியமான இடம் பெறத்துவங்கியிருக்கிறது. இந்தப்பிரச்சினைகளிலிருந்து சமூகம் தப்பிக்க கண்ணுக்குத்தெரிந்த தூரத்தில் எந்தத் தீர்வும் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

13 எதிர் சப்தங்கள்:

அகல்விளக்கு said...

Right article at the Right Time...

Now trying to spread this... :-)))

ALHABSHIEST said...

யோசிக்க வேண்டிய விசயத்தை பற்றி பதிவிட்டிருக்கிறீர்கள்.

kk said...

இது கவனிக்கவேண்டிய விடயம்தான்...பேஸ்புக்காதலர்களின் போக்கு இதுதான் லவ் என்றவுடன் பாஸ்வேர்ட் மெயில் அட்ரெஸ் போன்றவற்றைக்கொடுப்பது....முறிந்ததும் அவற்றைமாற்றிவிட்டு புளொக் செய்வது....

Ananth Sozhan said...

Yes friend, Ur right. Internet is heavily impacting human life's now the days. I really dn't whr is going to end ;-(

Anonymous said...

well said

ILA (a) இளா said...

இன்னும் பல காரணங்கள் இருந்தாலும் பட்டும் படாமலும் எழுதியிருப்பதை ரசிக்க முடிகிறது

anandrajah said...

அட.. ரொம்ப சீரியஸ் ஆனா விஷயத்தை சிம்ப்ளா நெடுடல் இல்லாம எழுதிட்டீங்களே..!! ஆனா ஒண்ணு.............,, இப்ப ..... வளரும் இளந்தாரிகளுக்கு புரிய வைக்க முடியாத ஒண்ணு..!! :-(

வருண் said...

சுதந்திரப்பறவை? நல்ல விசயம்தான்!

எல்லாம் சரிதான். வெர்ச்சுவல் உலகில் கண்டு ரசித்த "பார்ட்னருடன்" இவள்/இவன் உண்மையில் இணையப் போவதுமில்லை! அப்படியே இணைந்தாலும் "வெர்ச்சுவலாக" இருந்து இப்போது "நிஜமான" இவனும்/இவளும் படுக்கையில் "போர்" என்று ஆகி, புதிதாக இன்னொரு (#2) "வெர்ச்சுவல்" பார்ட்னருடன் இந்த சுதந்திரப்பறவை உறவு வைத்தாலும் அதிசயப்பட ஒண்ணுமில்லை!

இது ஒரு தொடர்கதை என்பதே பிரச்சினை!

எதுக்குக் கல்யாணம் செய்றாங்க?

எதுக்காக சுதந்திரத்தை பறிகொடுக்கனும்?

இப்படியே வெர்ச்சுவலா சுதந்திரமா ஊர் மேய வேண்டியதுதானே?

Tharun said...

இந்தப்பிரச்சினைகளிலிருந்து சமூகம் தப்பிக்க கண்ணுக்குத்தெரிந்த தூரத்தில் எந்தத் தீர்வும் இல்லை என்பதுதான் நிதர்சனம்// Correct,, Well said Nanba..

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

வர்ச்சுவல் காமம்:ஒரு நொண்டிச் சாக்கு.

Vaa.Manikandan said...

நன்றி நண்பர்களே.

அறிவன்,

உங்களின் பதிவையும் வாசித்தேன். நன்றி.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நன்றி மணிகண்டன்..

மறுத்துப் பேசுவதற்காக எழுதவில்லை;இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கூடக் கெடும் போது,இளைய தலைமுறையினருக்கு நறுக்கென்று சொல்ல வேண்டியதிருக்கிறது. :))

சித்திரவீதிக்காரன் said...

இந்தப்பிரச்சினைகளிலிருந்து சமூகம் தப்பிக்க கண்ணுக்குத்தெரிந்த தூரத்தில் எந்தத் தீர்வும் இல்லை என்பதுதான் நிதர்சனம்\\
கானல்நதியிலிருந்து கரையேறிவிட்டால் போதும்.

இன்றும் தேனீர்கடைகளில் நின்று மணிக்கணக்காக பேசுபவர்கள், திண்ணைகளில் அமர்ந்து கதைப்பவர்களிடம் எல்லாம் இந்த பிரச்சனை இருக்காது என எண்ணுகிறேன்.

நல்ல பதிவு. நன்றி.