"தங்கள் உடம்பைக் காண்பிக்க வேண்டும் என்று ஏன் பெண்களுக்கு மட்டும் தோன்றுகிறது?” இப்படி ஒரு கேள்வியை என்விகடன் கட்டுரையில் சாருநிவேதிதா கேட்டிருக்கிறார். சாருவுக்கு மட்டும் இப்படியான ‘இண்டரஸ்டிங்’ கேள்விகள் அவ்வப்பொழுது உதித்துவிடுகிறது.
அவர் கேள்வி சரியானதாகப்படுகிறது. அழகு சார்ந்த விஷயங்களில் ஆண்கள் பெரும்பாலும் அக்கறை காட்டுவதில்லை. பெண்குழந்தைகள் நேர்மாறு. ஆறு வயதிலிருந்தே அவர்களுக்கு தங்களின் அழகு மீது அதீத ஆர்வம் வந்துவிடுகிறது. நல்ல துணியை தேர்ந்தெடுப்பதிலிருந்து நகப்பூச்சு வரைக்கும் ஏகப்பட்ட நகாசு வேலைகளை ஆரம்பித்துவிடுகிறார்கள். பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் கையுறை போடாமல் தலையையும் முகத்தையும் எக்ஸ்ட்ரா துணி கொண்டு மூடாமல் இரு சக்கர வாகனம் ஓட்டும் பெண்களை பார்த்தால் ஜென்மசாபல்யம் அடைந்துவிடலாம். கேட்டால் Health Conscious என்பார்கள். ஆனால் அடிப்படையான காரணம் Beauty conscious.
தங்களை கவர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என பெண்களை எது தூண்டுகிறது என்பதைத் தேடிப்போனால் பெண்களின் உடல் அமைப்பு ஏன் சதைத் திரட்டுடன் இருக்கிறது என்று முதல் கேள்வி எழலாம். அந்தத் சதைத் திரட்டுகளின் மீது ஆண்களுக்கு ஏன் மோகம் வருகிறது என்ற அடுத்த கேள்வியும் எழலாம். இப்படியே கேட்டுக் கொண்டு போனால் ஏதாவதொரு Feminist அடிக்கக் கூட வரலாம்.
மனிதன் காலங்காலமாக எதையெல்லாம் பயன்படுத்துகிறானோ அந்தத் திறமை அதிகமாகிக் கொண்டே வந்திருக்கிறது. இதற்கு உதாரணமாக அறிவைச் சொல்லலாம். போன தலைமுறைக் குழந்தைகளை விடவும் இந்தத் தலைமுறைக் குழந்தைகள் அறிவாளிகள். இவர்களை விடவும் அடுத்த தலைமுறைக் குழந்தைகள் அறிவாளிகளாக இருப்பார்கள்.
அதேபோல மனிதன் எதையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டானோ அது அவனைவிட்டு விலகிக் கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் மனிதனுக்கு மோப்ப சக்தி எக்கச்சக்கமாக இருந்திருக்கிறது. தனது மோப்ப சக்தியை பயன்படுத்துவதை மனிதன் குறைத்துக் கொண்டே வர அதுவும் அவனைவிட்டு விலகிவிட்டது. இப்பொழுது வாசம் பிடிக்க வேண்டுமானால் சட்டிக்குள் மூக்கைவிட்டு தாறுமாறாக உறிஞ்ச வேண்டியிருக்கிறது. வாலும் கூட அப்படி பயன்படுத்தாமல் விட்டதால் காணாமல் போன உறுப்பு என்கிறார்கள்.
சரி சாருவின் கேள்விக்கு என்ன பதில்? ஒரு காலத்தில் ஆண்கள் வேட்டைக்கு போவது, உணவு சேகரிப்பது என்று இருக்க பெண்களுக்கு இனப்பெருக்கம் என்ற டிபார்ட்மெண்ட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வேட்டை, அலைச்சல் என்றிருந்தனால் ஆண்களுக்கு உடல் வலிமை என்பது இயல்பாகவே இருக்கிறது. பெண்களுக்கு தகுதி வாய்ந்த ஆண்களை ஈர்க்க வேண்டியிருந்ததால் கவர்ச்சியின் மீது கவனம் செலுத்தினார்கள். அதற்காக தங்கள் உடலின் சிறப்பு வாய்ந்த சதைப்பிடிப்பான பகுதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அதைப் பார்த்து ஜொள்ளுவிட்ட ஆண்கள் அதையேதான் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இது போன்ற Behaviorகள் ஜீன்களில் பதிந்துவிடுகிறது. ஜீன்களில் பதிந்தது ஒருபக்கம் என்றால் அமத்தா, அம்மா என தலைமுறைதாண்டி குழந்தைகள் கற்றுக் கொள்வது இன்னொரு காரணம். தனது அம்மா தலை வாரி, பூச்சூடி, பொட்டு வைத்துக் கொள்வதை பார்க்கும் பெண் குழந்தை தானும் அதைச் செய்ய விரும்புகிறது. தனது தாத்தா, தந்தை தன் வீட்டுப் பெண்களை அடக்கி ஒடுக்குவதை பார்க்கும் ஆண் குழந்தை தானும் அதையே செய்ய விரும்புகிறது.
இத்தகைய ’வீக்னெஸ்’ஸை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் வணிக நிறுவனங்கள் முகப்பூச்சு க்ரீம்மில் ஆரம்பித்து, ஷாம்பூ, பவுடர் என சகல விளம்பரங்களிலும் பெண்கள் அழகாக இருக்க வேண்டும், சிவப்பாக இருக்க வேண்டும், கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை உருவாக்குகிறார்கள். சினிமாக்காரர்களாகட்டும், வணிக இதழ்களாகட்டும் அச்சுபிசகாமல் பெண்களை கவர்ச்சி பொம்மைகளாக நிறுவுவதில் குறியாக இருக்கின்றனர். இந்தக் கவர்ச்சி பொம்மைகளை பணம் காய்ச்சி மரங்களாகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். பெரும்பாலான பெண்களுக்கு இது அவர்களையும் அறியாமல் மனதில் பதிந்துவிடுகிறது.
என்னதான் இருந்தாலும் பெண்கள் கவர்ச்சி காட்டுவதோடு நிறுத்திக் கொள்வார்கள். கவர்ச்சி என்றால் உடலை காட்டுவது மட்டுமேயில்லை-அது ஒரு பகுதி அவ்வளவுதான். பிக்கப் செய்ய வேண்டியது ஆண்களின் வேலைதான். காலங்காலமாக இதுதான் தொடர்ந்து இப்பொழுது சாரு நிவேதிதாவின் கேள்வியில் வந்து நின்றிருக்கிறது.