Oct 2, 2012

குற்றவுணர்ச்சி வதைத்துக் கொண்டிருக்கிறதுவீட்டிற்கு பக்கத்தில் பழைய பேப்பர் கடை ஒன்றிருக்கிறது. அதில் எந்நேரமும் ஒரு வயதான மனிதர் அமர்ந்திருப்பார். அவரின் கலைந்த கேசமும், பல நாட்களாக சவரம் செய்யப்படாத தாடியும், அவ்வப்போது அவர் உறிஞ்சும் பீடியும் அவரோடு பேசுவதிலிருந்து என்னை தடுத்திருந்தன. குறைந்தபட்சம் அவரைப்பார்த்து சிரிக்கக் கூட அவசியம் இல்லை என்று மனதிற்குள் கட்டுப்பாடு விழுந்திருந்தது. அவரும் என்னை சட்டை செய்ததில்லை. இந்த வீட்டிற்கு நாங்கள்  புதிதாக குடி வந்திருந்த போது இருவரின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்திருக்கின்றன. அதோடு சரி.

பழைய பேப்பர் கடையில் ஆட்கள் இருந்து எப்பொழுதுமே பார்த்ததில்லை. வெறும் பத்துக்கு எட்டு உள்ள கடையில் அவர் மட்டும்தான் அமர்ந்திருப்பார். சில பேப்பர் கட்டுக்கள் இடத்தை அடைத்துக் கிடக்கும். கடைக்கு வெளியில் சில பழைய ப்ளாஸ்டிக் சாமான்கள் இறைந்திருக்கும்.  மூலையில் இலவச தொலைக்காட்சி அவ்வப்பொழுது ஓடிக் கொண்டிருக்கும். பெரும்பாலும் பழைய செய்தித்தாள்களை புரட்டிக் கொண்டிருப்பார். 

இரு வாரங்களுக்கு முன்பாக வீடு சுத்தம் செய்த போது பழைய பேப்பர் சில கிலோக்கள் தேறியிருந்தது. பேப்பர் கடையில் இருந்த அவரிடம் அப்பொழுதுதான் முதன் முதலாக பேசினேன். வீட்டிற்கு வந்து எடுத்துக் கொள்ளும் படி சொன்னபோது "இல்லைங்க, கடையை விட்டுட்டு வர முடியாது" என்றார். இந்தக் கடையில் திருடிச் செல்வதற்கு என்ன இருக்கிறது என்று நினைத்துக் கொண்டே வீடு திரும்பினேன். மதிய உணவிற்கு பிறகாக பேப்பர் கட்டுக்களை தூக்கிக் கொண்டு சென்றேன். பதினைந்து கிலோவுக்கும் அதிகமாக இருக்கக் கூடும். கை வலித்தது.

இப்பொழுதும் அவர் மட்டும்தான் இருந்தார். ஆ.மாதவனின் 'கிருஷ்ண பருந்து' வாசித்துக் கொண்டிருந்தார். அவரது உருவத்துக்கும் அந்த புத்தகத்தும் சம்பந்தமேயில்லாதது போல உணர்ந்தேன். வாசிப்பதற்கும் உருவத்துக்கும் என்ன உறவு இருக்க வேண்டும் என்று ஒரு குழப்பம் வந்து போனது. "சாப்பிட்டீங்களா?" என்றுதான் ஆரம்பித்தேன். "மதியம் எப்பொழுதுமே சாப்பிடுவதில்லை" என்றார். 

"ஆ.மாதவன் நாவல் நல்லா இருக்கா?" என்று அடுத்த கேள்வியை வீசினேன். 

ஒரு கணம் நிதானித்தவர் அவரோட "புனலும் மணலும்" "தூவானம்" எல்லாம் வாசிச்சிருக்கீங்களா? என்றார். 

"தூவானம் வாசிச்சிருக்கேன்" என்றேன். 

"இன்னொன்னையும் முடிங்க. அப்புறம் பேசலாம்" என்று சிரித்தார். பற்களில் கறை தெரிந்தது. அவரைப்பற்றிய நான் கட்டி வைத்திருந்த பிம்பம் சிதைந்து கொண்டிருந்தது. வேறொரு மனிதராக உருவமெடுத்திருந்தார். நான் ஏதாவது கேள்வி கேட்டால் மட்டுமே பதில் சொன்னார். கொஞ்ச நேரத்திற்கு பிறகாக அவராகவே பேசினார். இப்பொழுது என்னையும் அறியாமல் எனது ஒவ்வொரு வாக்கியத்திலும் "சார்" பின்னொட்டாக சேர்ந்திருந்தது.

சொந்த ஊர் திருவண்ணாமலை பக்கம் செங்கம். இந்தக்கடையில் வேலைக்கு இருக்கிறார். மாதம் ஆயிரத்தி ஐந்தூறு சம்பளமாக தருகிறார்கள். இங்கேயே தங்கிக் கொள்கிறார். சொற்ப பணம் போதுமானதாக இருக்கிறதா என்று கேட்டேன். "குடும்பம் இல்லையா? என்பதுதானே இதில் மறைந்திருக்கும் கேள்வி" என்று சிரித்தார். அந்தச்சிரிப்புக்கு நிறைய அர்த்தங்கள். அதற்குமேல் அவரிடம் பேசவில்லை. வீட்டிற்கு கிளம்பிவிட்டேன்.

அதன் பிறகாக அவரைப் பார்க்கும் போது சிரித்துக் கொள்வோம். இந்த வாரம் சனிக்கிழமை அவரோடுதான் பொழுது கழிந்தது. பேச்சில் சுவாரசியம் கூடிக் கொண்டிருந்தது. "வாசிப்பதற்காகவே வாழ்வது சந்தோஷமில்லையா" என்றேன். மனிதர் உடைந்து போனார். வாசிப்பினால் தனது வாழ்க்கை சிதைந்து போனதாகச் சொன்னார். சோற்றுக்கில்லாமலேயே தனது குழந்தை இறந்து போனதாகவும், தனது வாசிப்பின் பித்து நிலையால் மனைவி பிரிந்தது போனதாகவும் அவர் தனது கடந்த காலத்துக்கு பயணித்துக் கொண்டிருந்தார். அவரையும் அறியாமல் அழுது கொண்டிருந்த அவரை எப்படி திசை மாற்றுவது எனத் தெரியவில்லை. 

அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதுவரை பகிர்ந்துகொள்ளப்படாத தனது அத்தனை துக்கத்தையும் அவர் கொட்டிக் கொண்டிருந்தார். வாசிப்பது மீதான அவரது வெறி பிரமிப்பூட்டிக் கொண்டிருந்தது. ஒரு கணத்தில் வெடித்து அழுதார். இத்தனை வாசித்திருக்கும் மனிதர் பெருங்குரலெடுத்து அழுவது என்னை சங்கடப்படுத்திக் கொண்டிருந்தது. எப்படியாவது அவர் அழுவதை நிறுத்திவிட வேண்டும் அல்லது அந்த இடத்தை விட்டு விலகிவிட வேண்டும் என்று தோன்றியது. அவர் நிறுத்தவதாகத் தெரியவில்லை. வீட்டில் இருந்து போன் வருவதாக பாவ்லா செய்ய வேண்டியிருந்தது. உடனே வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு கிளம்பினேன். அவர் தலையசைத்தார். துக்கத்திலிருந்து தப்பித்துவிட்டதாகத் தோன்றியது. ஆனால் தனது துக்கங்களை மறந்துவிட்ட ஒரு மனிதனை மீண்டும் கிளறிவிட்டு விட்டதான குற்றவுணர்ச்சி வதைத்துக் கொண்டிருக்கிறது. 

6 எதிர் சப்தங்கள்:

Unknown said...நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது சகோ! யாரோ முகம் தெரியாத மனிதர் என் கண்முன்னே நிற்கிறார்!

ப.கந்தசாமி said...

உருக்கமான பதிவு.

உங்கள் பதிவு லோட் ஆக அதிக நேரக் எடுத்துக்கொள்கிறது. ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

No ,you need not feel guilty.Because that sharing would have given him such a great relief.At least for an hour.All people who have lost their son ,like me are crying all the time.As charlie chaplin said 'i like rain, because no one can see me crying '',we cry and hide it all the time.so feel happy to have helped a sad lonely soul unburden his burden.
karthik amma [karthik@ ponniyinselvan amma

Uma said...

நெகிழ்ந்துவிட்டேன் உள்ளூக்குள்! குற்ற உணர்ச்சி தேவையில்லை.அவரது மன அழுத்தத்தை பாதியாக குறைத்திருக்கிறீர்கள்.

ஜீவ கரிகாலன் said...

மனிதர்களின் பிம்பம் நமக்கு சரியாக ஸ்தூலமாகவில்லை...... நானும் இப்படி எத்தனையோமுறை வருந்தியிருக்கிறேன்

Anonymous said...

அருமை...