Aug 15, 2012

சமூகத்தின் பாலியல் சிக்கல்கள்



அனிரூத் - ஆண்ட்ரியா முத்தக் காட்சிகளின் நிழற்படங்கள் ஆரம்பத்தில் அவ்வளவு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. சாதாரண படம் என்று நினைத்தது ஒரே நாளில் இண்டர்நெட் முழுவதையும் ஆக்கிரமிக்கும் மிகப்பெரிய செய்தியாக மாறிய போதுதான் குத்தியது. குத்தியது என்றால் உயிர்போவதெல்லாம் இல்லை. ஆனால் நாம் வாழும் காலத்தில் குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லை என்ற குத்தல்தான். காசுக்கு தன் உடலை விற்கும் பெண்மணி கூட அடுத்தவன் தன் அந்தரங்கத்தை எட்டிப்பார்ப்பதை விரும்பமாட்டாள். அப்படியிருக்கும் போது நமக்கு சம்பந்தமேயில்லாத பெண்ணை ஒருவன் முத்தமிடும் காட்சியை கொண்டாடும் மனநிலை நோய்மை பீடித்த மனநிலையாக இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

அடுத்தவர்களின் அந்தரங்கங்களில் தலையிடுவதோடு மட்டும் நாம் நிறுத்திக் கொள்வதில்லை. சர்வசாதாரணமாக அவை குறித்தான எள்ளலையும் பரிகாசத்தையும் வெளிப்படுத்துகிறோம். இந்த அந்தரங்கங்களை வைத்து காமெடி செய்யும் ஒவ்வொரு மனிதனும் வாய்ப்பு கிடைக்காதவனாகவும் அல்லது வாய்ப்பு கிடைத்த பட்சத்தில் வெளியுலகம் அறியாதபடிக்கு நடந்து கொண்டவனாகவும் இருக்கிறான் என்பதை எந்தக் கோயிலில் வைத்தும் சத்தியம் செய்யலாம். 

அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் அத்துமீறவதற்கான சுதந்திரங்களை உண்மையில் சுதந்திரம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஒழுக்கம் சார்ந்த சுயக்கட்டுப்பாடு சிதைந்து(Self discipline) போயிருப்பதும், கணினி யுகத்தில் யாராலும் நம்மை  ஒன்றும் செய்துவிட முடியாது ’விர்ச்சுவல்’பயமின்மையும்தான் அடிப்படை.

இத்தகைய கொண்டாட்டங்கள் பாலியல் வறட்சியின் வெளிப்பாடு என்பதும் கூட சரியாக இருக்கும். நமக்கு வாய்த்திருக்கும் சமூக வலைத்தளங்களும், ஊடகங்களும் உருவாக்கித்தரும் வாய்ப்புகள்(சாட்டிங் முதலானவை) எதிர்பாலினரை உடல் ரீதியாக அடைந்துவிடுவது மிக எளிதான காரியம் என்ற பிம்பத்தை உருவாக்குகின்றன. ஆனால் சிக்கல்களால் நிரம்பியிருக்கும் ரியாலிட்டியின் சிறைகளுக்குள் இருக்கும் ஒருவனால் அத்தனை சீக்கிரமாக தான் விரும்பும் உடலை அடைய முடிவதில்லை. 

உடல்குறித்தான ஏக்கமும், அடைந்துவிடுவதற்குரிய தூரத்தில் அந்த உடல் இருப்பதான பிம்பமும், உண்மையில் அதை அடைய முடியாத சிக்கல்களுமே நாம் வாழும் காலத்தில் உருவாகும் பாலியல் வறட்சிக்கு அடிப்படையான காரணமாகிறது. இங்கு நிலவும் பாலியல் வறட்சியும், பாலியல் சிக்கல்களும் சமூகத்தின் பெரும் பிரச்சினை. ஆனால் இவை வெறும் தனிமனித சிக்கல்களாக மட்டுமே நம்மால் பார்க்கப்படுவது துக்கம்தான். இந்த வறட்சியும் ஏக்கமும் அந்நிய பெண்ணொருத்தியின் அந்தரங்கத்தை கொண்டாடி திருப்திப்பட்டுக்கொள்ளும் மனநிலையை உருவாக்குகிறது. அப்படித்தான் இத்தகைய நிழற்படங்களை சுகித்துக் கொள்கிறோம் போலிருக்கிறது.
                                                    
                                                                   ***

கள்ள உறவுகளும், அது சார்ந்த கொலைகளும் இயல்பான நிகழ்வுகளாகியிருக்கின்றன. அதற்கான உளவியல் காரணங்கள் எதுவும் ஆராயப்படுவதாகத் தெரியவில்லை. கள்ள உறவுகளைப் பற்றி கிசு கிசு பாணியில் பேசுவதும், தன்னை ஒழுக்கவாதியாக காட்டிக் கொள்வதும் நம் பாரம்பரியமாக இருந்திருக்கிறது. அதே பாரம்பரியத்தை ‘ஹைடெக்’ ஆக நாம் முகநூலில் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

இத்தாலிய நண்பர் ஒருவர் திருமணத்திற்கு முன்பாக  தனக்கு பல பெண்களோடு தொடர்பு இருந்ததாகவும் திருமணத்திற்கு பிறகான பதினைந்து வருடங்களில் வேறு பெண்ணை நாடியதில்லை என்றார். தனது பெரும்பாலான ஐரோப்பிய நண்பர்களுக்கும் இது பொருந்தும் என்பது அவரின் நம்பிக்கை. ஆச்சரியமாக இருந்தது. இது இந்தியாவில் உல்டாவாக இருக்கிறது. திருமணம் வரைக்கும் வேறொரு பெண்ணுடனான தொடர்புக்கு வாய்ப்பில்லாதவன் திருமணத்திற்கு பிறகாக பல பெண்களை நாடுவது சாதாரணமாக இருக்கிறது. இதற்கு  காரணம் என்னவாக இருக்க முடியும்?

இவை போன்ற பாலியல் சிக்கல்கள் தனிமனித உளவியலை(Individual Psychology) சீராக்குவதன் மூலம் களையப்பட முடியும் என்று தோன்றவில்லை. இது சமூக உளவியலின்(social psychology) அங்கம்.
                                                                       ***

நடிகையின் முத்தம் ஒன்றை போட்டோவில் பார்ப்பதற்கு இத்தனை பெரிய பஞ்சாயத்தா? இதை கலாச்சாரம், ஒழுக்கவியல் என்பனவற்றுடன் எல்லாம் பொருத்தி பார்க்க வேண்டியதில்லை. மிக எளிமையாக,நம் குடும்பப் பெண்ணொருத்தியின் முத்தக்காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகும் போது நமக்கு உண்டாகும் அதிர்ச்சி மனநிலையை ஒரு கணம் யோசித்துப் பார்க்கும் தெளிவு இருந்தால் போதும் எனத் தோன்றுகிறது. அந்தப் பெண்ணின் வலியை போகிற போக்கில் உணர்ந்து கொண்டாலும் கூட போதும்.

அந்த தெளிவும், புரிதலும் இல்லாத வரையில் நயன்தாராவும், ரஞ்சிதாவும், ஆண்ட்ரியாவும் நமக்கு தீனியாகிக் கொண்டிருப்பார்கள். 

7 எதிர் சப்தங்கள்:

Unknown said...

குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லை //
அருமை நண்பா... நானும் ஆத்திரமடைந்தேன். இதை பதிவிட்டு ஹிட்ஸ் தேடும் வக்கிரம் வேறு!
இவர்களுக்கு வேலை இல்லை நண்பா...
இங்கே வந்து பார்த்து கருத்து சொல்லுங்க நண்பரே....
எனது தளம்..
http://varikudhirai.blogspot.com

Anonymous said...

// உடல்குறித்தான ஏக்கமும், அடைந்துவிடுவதற்குரிய தூரத்தில் அந்த உடல் இருப்பதான பிம்பமும், உண்மையில் அதை அடைய முடியாத சிக்கல்களுமே நாம் வாழும் காலத்தில் உருவாகும் பாலியல் வறட்சிக்கு அடிப்படையான காரணமாகிறது. //

அருமையான பதிவு சகோ. உங்களின் ஆழ்ந்த சிந்தனை வரவேற்கத் தக்கது ... பாலியல் வறட்சிக்கு நீங்கள் கூறும் காரணம் மிகச் சரியே !!!

//இந்த வறட்சியும் ஏக்கமும் அந்நிய பெண்ணொருத்தியின் அந்தரங்கத்தை கொண்டாடி திருப்திப்பட்டுக்கொள்ளும் மனநிலையை உருவாக்குகிறது. அப்படித்தான் இத்தகைய நிழற்படங்களை சுகித்துக் கொள்கிறோம் போலிருக்கிறது.//

மிகச் சரியாக சொன்னீர்கள் .. பாலியல் சுகிப்பில் ஈடுபடத் துடிக்கும் நாம், சராசரி நாகரிகங்களைக் கூட பொருட்படுத்துவதில்லை. குறிப்பாக அசாமில் பாரில் இருந்து வெளியேறிய ஒரு பெண்ணை இருபது ஆண்கள் நிர்வாணப்படுத்தி, முலைகளைக் கசக்கி தமது வெறியினைத் தீர்த்துக் கொண்டதும் இவ்வாறே.. அந்த ஒரு இடத்தில் தமது நாகரிகம் தூக்கி எறியப்பட்டுவிடுகின்றது ..

//கள்ள உறவுகளைப் பற்றி கிசு கிசு பாணியில் பேசுவதும், தன்னை ஒழுக்கவாதியாக காட்டிக் கொள்வதும் நம் பாரம்பரியமாக இருந்திருக்கிறது.//

மணம் மீறிய உறவுகளைப் பேசி நாம் ஒழுக்கவாதியென நிலைநாட்டிக் கொள்கின்றோம் .. மிகச் சரியாக சொன்னீர்கள் ..

//இது இந்தியாவில் உல்டாவாக இருக்கிறது. திருமணம் வரைக்கும் வேறொரு பெண்ணுடனான தொடர்புக்கு வாய்ப்பில்லாதவன் திருமணத்திற்கு பிறகாக பல பெண்களை நாடுவது சாதாரணமாக இருக்கிறது. இதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும்?//

பாலியல் வறட்சித் தான் காரணம் ... !!! இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும் ...

//இதை கலாச்சாரம், ஒழுக்கவியல் என்பனவற்றுடன் எல்லாம் பொருத்தி பார்க்க வேண்டியதில்லை. மிக எளிமையாக,நம் குடும்பப் பெண்ணொருத்தியின் முத்தக்காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகும் போது நமக்கு உண்டாகும் அதிர்ச்சி மனநிலையை ஒரு கணம் யோசித்துப் பார்க்கும் தெளிவு இருந்தால் போதும் எனத் தோன்றுகிறது. அந்தப் பெண்ணின் வலியை போகிற போக்கில் உணர்ந்து கொண்டாலும் கூட போதும்.//

சரியாக சொன்னீர்கள் .. ஒழுக்கம் பேசுவோர் அனைவரும் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுத்ததே இல்லையா என்ன. அப்படி அவரவரின் வீட்டுப் பெண்களின் புகைப்படம் இணையத்தில் உலவினால் அடையும் துக்கத்தை அல்லவா பெற வேண்டும், மாறாக மனதில் குதூகலித்துக் கொண்டு, வெளியில் அவள் மோசம் என பேசித் திரிகின்றோம் ..

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இந்தப் பதிவு முழுக்க முழுக்க ஒத்துக் கொள்ளப் படவேண்டிய ஒன்று..அந்த நபரும்,பெண்ணும் சமூகத்திற்கும் ஊடகத்திற்கும் தொடர்பில்லாதவர்களாக இருந்தால்...

நமது வாழும் சூழலே ஊடகதாரிகளின் வழி நிர்ணயிக்கப்படுகிறது.விடிந்து விழிப்பது முதல் தூங்குவது வரை நமக்கு ஊடக தாரிகள்தான் அனைத்திற்கும் வழிகாட்டிகளாகவும்,தலைவர்களாகவும்,மகிழ்வூட்டும் கோமாளிகளாகவும் இருக்கிறார்கள்..ஊடகமும் ஊடகதாரிகளும் இல்லாவிட்டால், இன்றைய தமிழகம் ஸ்தம்பித்துச் செயலிழந்து விடும்..

அதன் வெளிப்பாடுதான் ஊடக தாரிகளின் மீதான எந்த செய்திக்கும் கிடைக்கும் முக்கியத்துவம். அது பாலியல் சார்ந்ததாக இருக்கும் போது, ஆதி மனித உணர்ச்சிகளின் கூடுதல் அனுகூலம் சேரும் போது அது கொண்டாடக் கூடிய அளவுக்குச் செல்கிறது..

இதுவே, ஒரு தனி மனிதன் ஒரு பெண்ணை முத்தமிடும் காட்சி என்றால், பார்த்து மறக்கப்பட்டிருக்கும் அல்லது ஏதாவது காமக் கதைப் பக்கங்களில் சேர்ந்து கரைந்திருக்கும்..

தமிழனின் ஊடகதாரி மனநோய்தான் இதற்குக் காரணம். வேறு எதுவும் அல்ல..

காமத்தின் மீதான பார்வைப்புலங்களின் வேறுபாடு எதுவும் இதில் வரவில்லை.

|| இத்தாலிய நண்பர் ஒருவர் திருமணத்திற்கு முன்பாக தனக்கு பல பெண்களோடு தொடர்பு இருந்ததாகவும் திருமணத்திற்கு பிறகான பதினைந்து வருடங்களில் வேறு பெண்ணை நாடியதில்லை என்றார். தனது பெரும்பாலான ஐரோப்பிய நண்பர்களுக்கும் இது பொருந்தும் என்பது அவரின் நம்பிக்கை. ||

:)) இது ஊகம் மட்டுமே..
இதற்கான புள்ளி விவர சான்றுகள் கிடையாது..மேலும் பொதுவான பார்வையில்,கீழை நாடுகள் எப்படி உடல் சார்ந்த நாகரிகங்களில் மேலை நாடுகளைக் காப்பி அடித்தோமோ, அதே போல் சோரம் போவதிலும் காப்பி அடிக்கத் துவங்கியிருக்கிறோம்..

பின்வரும் புள்ளி விவரங்கள் இதிலும் மேற்குலமே நமது இளையர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கிறது. மேற்குலகத்திலிருந்து, உடலியல் சுதந்திரம், காமத்தில் கட்டற்ற சுதந்திரம், பந்தமின்றிச் சேர்ந்து வாழ்தல் என அனைத்தையும் வரவேற்ற நாம், வரைமுறையற்ற காமத்தையும் வரவேற்போம் !

http://www.ucg.org/doctrinal-beliefs/world-news-and-trends-extramarital-affairs-becoming-more-commonplace/

http://en.wikipedia.org/wiki/Adultery

:(((

சிவக்குமார் said...

சரியான கருத்து. இங்கு தனிப்பட்ட மனிதர்களையும் குமுதம், நக்கீரன், சன், தினமலர், தினத் தந்தி பாணியிலான ஊடக வணிகத்தனம் அது கற்பித்த மனநிலை அதிகமாகத் தாக்கியிருக்கிறது என்பது தெரிகிறது.

பாலியல் வறட்சி + வக்கிரம் = போலித்தனம் என்று சுருக்கமாகச் சொல்லலாம்

சேக்காளி said...

ஒத்துழைப்பவளிடம் முடியாவிட்டாலும் மற்றவர்களிடம் "ஆம்பள" என்று நிரூபிக்க இதையெல்லாம் செய்து தொலைத்து தானே ஆக வேண்டியிருக்கு.

Anonymous said...

Good write up Manikandan!

// அதே போல் சோரம் போவதிலும் காப்பி அடிக்கத் துவங்கியிருக்கிறோம்..//

என்னவோ அதுக்கு முன்ன கீழை நாட்டுக்காரனுங்க எவனும் குனிந்த தலையே நிமிராத மாதிரி. கோமணம் பியிந்து அம்மணமாக நின்னாலும் தன்னைத் தூக்கி வச்சு மெச்சிக்கறதுல மட்டும் குறைச்சலே இல்ல.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

|| கோமணம் பியிந்து அம்மணமாக நின்னாலும் தன்னைத் தூக்கி வச்சு மெச்சிக்கறதுல மட்டும் குறைச்சலே இல்ல.||

அனானி,

கோமணம் பியிந்து(தமிழு..தமிழு..) அம்மணமாக நிற்பதிலும், அந்த பியிந்த(!) கோமணத்தினாலேயே முகத்தை வேறு மறைத்துக் கொண்டிக்கும் நிலை மிகவம் பாவமானது..

த்சொ..த்சொ..