Aug 16, 2012

கண்ணாடி மீன் கோமாளிகளுக்குச் சொன்ன கதைகள்


சம்பான் என்னும் மாட்டுக்காரச் சிறுவன் வெள்ளந்தி ஆற்றின் அருகே தனது மாடுகளை மேய விட்டுவிட்டு ஆற்றுக்குள் குரவை மீன்களைத் தேடிக் கொண்டிருக்கிறான். அப்பொழுது ஆலான் என்ற பசுமாட்டுக் கன்று ஆற்றில் நீந்திக் கொண்டிருக்கும் உளுவை மீன்களை பார்க்கிறது. அதில் விமாசு என்ற உளுவை மீன் ஒன்று ஆலானிடம் பேசுகிறது. 

ஆலானை தனது கூட்டாளியாக ஏற்றுக்கொள்ளும் விமாசு உவர்மண் நாட்டு வீரன் ஐராபாசீயின் மாளிகையை பற்றி புளாங்கிதம் அடைகிறது. தான் அந்த மாளிகைய பார்க்கப் போவதாகவும் ஆலானும் உடன் வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறது. ஆனால் மாட்டுக்காரச் சிறுவன் சம்பான் தன்னை தேடக் கூடும் என்பதால் இன்று வேண்டாம் என்றும் நாளை மாளிகையை பார்க்கச் செல்லலாம் என்று சொல்லிவிட்டு ஆலான் வீடு திரும்புகிறது.

மறுநாள் ஆலானும் விமாசுவும் ஐராபாசீயின் மாளிகையை நோக்கிய தங்களது பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். வழியில் விதவிதமான உயிரினங்களைச் சந்திக்கிறார்கள். உலகில் யாருமே செய்ய முடியாத மணி மாலைகளை செய்யும் செரலி என்னும் செம்புகப் பறவையை முதலில் பார்த்து அதன் கதையை கேட்கிறார்கள். முப்பத்தி ஆறு நாட்களின் உழைப்பிற்கு பிறகாக அதி அற்புதமான மணிமாலை ஒன்றை பஞ்சவர்ணக்கிளிகளுக்காக செய்த விதத்தை செரலி விளக்குகிறது. ஆலானுக்கு அது பேரதிசயமாக இருக்கிறது.

அடுத்து துபரி என்னும் எலியை பார்க்கிறார்கள். கடும் வெள்ள காலத்தில் துபரியும் நூற்றியறுபது இளம் எலிகளும் சேர்ந்து சுரங்கம் அமைக்கின்றன. அது முக்கடலும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் பவளப்பாறை குகைகளை அடைவதற்கான சுரங்கம்.வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பிற உயிர்களை இந்தச் சுரங்கம் வழியாக அழைத்துச் சென்று காப்பாற்றியது குறித்து துபரி விவரிக்கிறது. ஆலான் பிரமித்துப்போகிறது.

இப்படியாகவே தங்களின் பயணம் முழுவதும் அதாளி-சேக்கு என்னும் முயல்கள், சிரேசா என்னும் தூதுப்புறா, பாமனி என்ற கானாங்கோழி, குலாடன் என்ற காடை என இன்னும் பலரையும்  வரிசையாக சந்தித்து அவர்கள் ஒவ்வொருவரின் கதையையும் விமாசுவும் ஆலானும் கேட்டுக் கொண்டே ஐராபாசீயின் மாளிகையை அடைகிறார்கள். 

அது நீருக்குள் கட்டப்பட்ட மாளிகை. ஏகப்பட்ட அறைகளும்,மண்டபங்களும்,குளங்களும் மாளிகைக்குள் இருக்கிறது. நீரிலும் நிலத்திலும் வாழும் அத்தனை உயிரினங்களும் அந்த மாளிகையில் தங்கிவிட முடியும் என்ற அளவிற்கு வசதிகள் நிரம்பியது. காட்டுப்புலி ஒன்று அந்த மாளிகைக்கு காவலனாக இருந்தது. இப்படியொரு அதி அற்புதமான மாளிகையை கட்டிய ஐராபாசீக்கு தனிமை ஒரு பெருந்துக்கமாக இருந்திருக்கிறது. 

துக்கத்துக்கும் காரணம் இருக்கிறது. இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் தனது மூதாதையரை ஒத்திருக்கின்றன. சிங்கக்குட்டி சிங்கத்தை போலிருக்கிறது. யானைக்குட்டி யானையை போலிருக்கிறது. ஆனால் ஐராபாசீ யாரைப் போலவும் இல்லை. ஐராபாசீக்கு இறக்கையும் வாலும் உண்டு. என்றாலும் அவன் மனிதன் தான். ஆனால் தன்னை மனிதன் என்று உணராத மனிதன். தான் யாரைப்போலவும் இல்லாததால் தனிமையை உணர்ந்த ஐராபாசீ பிற உயிர்களை தனது துணையாக கருதிக் கொள்கிறான். இயற்கைச் சீற்றங்களிலும் மனிதர்களிடம் இருந்து பிற உயிரினங்களை காப்பாற்ற இந்த அற்புத மாளிகையை கட்டியிருக்கிறான். 

இது ஐராபாசீ என்னும் சிறார் நாவலின் சாராம்சம்.
                                    
***

கதைகள் தீர்ந்துவிட்ட இரவில் மகனுக்குச் சொல்வதற்காக கதைகளைத் தேடிக் கொண்டிருந்தேன். குழந்தைகளுக்கான கதைகளைச் சொல்லும் போது நாம் தொலைத்துவிட்ட பால்யத்தை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அந்த பால்யத்தில் நாம் தவறுவிட்டுவிட்ட சிங்கத்தின் குகைகளும், பூச்சாண்டிகளின் பெரு விழிகளும், ஏழு கடல் தாண்டிய சுரங்கங்களும் இப்பொழுது மன இடுக்கின் ஏதோ ஒரு மூலையில் கைவிடப்பட்ட துக்கங்களாக ஒண்டிக் கிடக்கின்றன. அவற்றை கண்டுபிடிப்பது பெரிய சிரமம் இல்லை. ஆனால் நமக்குதான்  அதற்கான பொறுமையும் அவகாசமும் இல்லை.

காணாமல் போன பால்யத்தை கண்டுபிடிப்பதற்கான எளிய சூத்திரமாக வேலு சரவணன் எழுதிய ஐராபாசீ என்னும் சிறார் நாவல் அமைந்துவிட்டது வரம்தான். நாம் மறந்து போன, தற்பொழுது எளிதில் கற்பனை செய்யமுடியாத சிறுவர்களின் உலகத்தை மிக இயல்பாக காட்டிவிடுகிறார் வேலு சரவணன். ஆற்றங்கரை, சதுப்புநிலங்கள், கடற்கரை என விரியும் காட்சிகளின் வழியாக நாவலில் ஒவ்வொரு உயிரினமும் தனது கதையை விவரிக்கும் போது பரவசமான பால்ய மனதினை நம்மால் கண்டு கொள்ள முடிகிறது என்பது இந்த நாவலின் சிறப்பாகத் தோன்றுகிறது.

ஆலானும் விமாசுவும் தங்களின் பாதை முழுவதும் ஒவ்வொரு உயிரினத்தை பார்ப்பதும் ஒரு சிறுகதையாக இருக்கிறது. ஒவ்வொரு சிறுகதையும் நெருங்கி பிணைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சிறுகதைகளின் தொகுப்புதான் ஐராபாசீ என்னும் நாவல். நாவலில் வில்லன் இல்லை, மிரட்டும் பூதம் இல்லை, பேய்கள் இல்லை. மாறாக நாவலில் வரும் ஒவ்வொருவருமே விற்பன்னர்கள். ஏதாவது சாதனையைச் செய்தவர்கள்.மென்மையான வருடலாக  நமக்குள் மகிழ்ச்சியை உருவாக்குபவர்கள்.  

குழந்தைகளுக்கான புத்தகங்கள் தமிழில் மிகக் குறைவு. இந்தச் சூழலில் குழந்தைகளுக்கான நாடகம், அவர்கள் சார்ந்த செயல்பாடுகள் மட்டுமே தனது உலகம் என்று அமைத்துக் கொண்ட வேலு சரவணின் இந்தப் புத்தகம் மிக முக்கியமானது.

வெளியீடு: உயிர்மை பதிப்பகம்.

4 எதிர் சப்தங்கள்:

Yaathoramani.blogspot.com said...

அருமையாக கதைச் சுருக்கம் கொடுத்ததுடன்
நம் சந்ததிகள் இழந்து கொண்டிருக்கிற
ஈடு செய்ய முடியாத இழப்பினைப் பகிர்ந்தவிதம்
மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

பல உண்மை கருத்துக்கள்...

பல பேர் குழந்தைகளோடு நேரம் ஒதுக்குவதே இல்லை...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 2)

Vaa.Manikandan said...

நன்றி ரமணி, திண்டுக்கல் தனபாலன்.

Php Mute said...

சிறு வயது கவலைகளையும் நிறைவேறா கற்பனைகளையும் எட்டி பார்க்க வைத்து விட்டது உங்கள் கவிதை !