(1)
அன்பின் மணி,
அருமையாக போகிறது கதையின் நடை. மிக நன்றாக இருக்கிறது.
சமீபத்திய கதைகளின் ஜாதிய, மத உரையாடல்கள் சற்றே மனதை என்னவோ செய்தது..அவை உண்மையாக நடக்கும் பட்சத்தில் கூட.எனது மனதில் பட்டது.சொல்லி விட்டேன்..தவறு இருந்தால் மன்னிக்கவும்.
தொடர்ந்து கதைகள் எழுதுவது தொடரட்டும்.தங்களின் திறன் மிக அற்புதமாக வெளிப்படுகிறது.
நன்றி,
அன்புடன்,
Swami
மலேசியா.
(2)
அன்புள்ள மணிகண்டன்,
உங்கள் மின்னல் கதைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். வாசிக்க வைத்துவிடுகிறீர்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அத்தனை சுவாரசியம். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தளம்.
ஜாதீயம் கலந்த சில கதைகளை வாசித்த போது எனக்கு ஒரு கேள்வி தோன்றியது. பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன்.
பெரியாரியம் என்ற கோட்பாட்டில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? தற்காலத்தில் அதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
தொடர்ந்து எழுதுங்கள். என் நண்பர்களும் உங்களுக்கு வாசகர்கள் ஆகியிருக்கிறார்கள்.
நட்புடன்,
ரவீந்திரன்
அகமதாபாத்.
******
வணக்கம்.
1) சாதீயக் கதைகளை எழுதியே தீர வேண்டும் என்ற நோக்கம் எதுவும் இல்லை. சுவாரசியம் என்பதனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுதான் மின்னல்கதைகளை எழுத ஆரம்பித்தேன் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.
கதைககளின் வழியாக கிடைக்கப்பெற்ற புதிய வாசகர்களும், கதைகளுக்கான எதிர்வினைகளும் மற்றும் விமர்சனங்களும் சுவாரசியம் என்ற ஒற்றை அம்சம் மட்டுமே கதைகளை நகர்த்த போதுமானதில்லை என்பதை உணர்த்தின. இந்த ஒற்றை அம்சத்தைத் தாண்டி வேறு எதையாவது பற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. பால்யத்தில் கேட்ட கதைகளும், அப்பொழுது எதிர்கொண்ட சம்பவங்களும் கை கொடுக்கத் துவங்கின. அப்படியாகத்தான் கொங்குப்பகுதியில் நிலவும் வெளித் தெரியாத ஜாதீய அடக்குமுறைகளை கதைகளாக்க முயற்சித்தேன்.
2) பெரியாரியம் என்ற கோட்பாட்டில் எனக்கு நம்பிக்கை உண்டு. தமிழகத்தில் நிலவிய சமூக ஏற்றத்தாழ்வுகளை முற்றிலுமாக நீக்கவில்லையென்றாலும், அந்தக் குறைபாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஓரளவுக்கு மரியாதையான இடத்தை சமூகத்தில் பெறுவதற்கும் பெரியார் பெரும் காரணமாக இருந்திருக்கிறார் என நம்புகிறேன்.
பெரும் இயக்கமாக எழும்பிய பெரியாரியம் தொடர்ந்து காலத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளவில்லை என்று சொல்வதைவிடவும், பெரியாரியம் தொடர்ந்து சமூக இயக்கமாக நிலைபெறுவதை பிற இயக்கங்கள் தடுத்து நிறுத்தியிருக்கின்றன என்பது பொருத்தமாக இருக்கக் கூடும்.
1970களுக்கு பிறகாக சமூகத்தின் சீரமைப்பு என்பதனையும் விடவும் தங்களின் பிழைப்புவாதமே அரசியல்கட்சிகளுக்கு அவசியமானதாகிப்போனதன் பிறகாக பெரியாரிய கோட்பாடுகள் இயக்கமாக பரவுவது தடுத்து நிறுத்தப்பட்டது. கடவுள் மறுப்பை வெளிப்படுத்தவும், ஆதிக்கசாதியினரின் எதிர்ப்புணர்வை எதிர்கொள்ளவும் அரசியல் தலைவர்கள் தயங்கினார்கள்.
பகுத்தறிவு பேசிய அரசியல்வாதிகள் பெரியாரியத்தை மெல்லக் கைவிடத் துவங்கினார்கள். இந்தக் காலகட்டத்திலேயே பெரியாரியம் வழிபாட்டுக்குரியதாகவும் மாற்றப்பட்டது. பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுகிறார்களோ இல்லையோ தங்களின் போஸ்டர்களில் பெரியாரின் படத்தை பயன்படுத்தத் துவங்கினார்கள். இத்தகைய போலி ‘பெரியாரிஸ்ட்’கள் பெரியாரின் கோட்பாடுகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை என்ற பிம்பத்தை உருவாக்கினார்கள்.
எந்த ஒரு தத்துவக் கோட்பாடும் தொடர்ச்சியான விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். எதிர்மறையான விமர்சனங்களுக்கான இடம் அனுமதிக்கப்பட்டு விவாதம் நிகழும் போதுதான் கோட்பாடுகள் தம் இருப்பை மேலும் நிலைப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் இங்கு பெரியாரியத்தை வழிபாட்டுக்குரியதாக மாற்றி அதனைச் சுற்றிலும் இரும்பு வேலியும் அமைத்துவிட்டார்கள்.
எப்பொழுது ஒரு கோட்பாடு வழிபாடுக்குரியதாக மாறிப்போகிறதோ அப்பொழுது ’நமக்கேன் வம்பு’ என அதனை விமர்சிப்பதும் குறைந்து போகிறது. விமர்சிக்கப்படாத கோட்பாடுகள் அதன் பிறகாக உருவாகும் தலைமுறையினரிடத்தில் பெரும் தாக்கம் எதையும் உருவாக்குவதில்லை. அந்தக் கணத்திலிருந்து கோட்பாடு தனக்கான சரிவான பாதையை எடுத்துக் கொள்கிறது.
பெரியாரியத்தை முன்வைத்து சமூக அளவிலான எந்தப் பெரிய விவாதமும் பல ஆண்டுகளாக நடைபெறவில்லை என்பதும், மீறி பெரியாரை விவாதித்தாலும் கூட பின்னணியில் அரசியல் சுயநலம் பல்லிளிக்கிறது என்பதும்தான் நிதர்சனம்.
இன்னமும் மேட்டூரிலும், சத்தியமங்கலத்திலும், கோயமுத்தூரிலும் இன்னும் பல ஊர்களிலும் பெரியாரியத்தைக் கைக்கொண்டிருக்கும் மரியாதைக்குரிய களப்பணியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் கார்பொரேட் சாமியார்களையும் பார்ப்பனீய ஊடகத்தையும் எந்தவிதத்திலும் எதிர்க்க முடியாது.
3) ’பெரியாரிஸ்ட்’ ஆக இருக்க வேண்டும் என்று நான் விரும்பியிருக்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரிக்காலங்களில் இறையுணர்வு இல்லாதவனாக இருந்தேன். ஆனால் அந்தச் சமயத்தில் சாதீய உணர்வுகள் மனதிற்குள் இருந்தன. பிறகு சாதீயம் பற்றிய தெளிவு பிறந்த போது கடவுள் நம்பிக்கை உள்ளவனாக மாறியிருந்தேன். பெண்ணிய சுதந்திரத்தில் மற்றவர்களுக்கு நான் காட்டிக் கொண்டிருக்கும் எனது முகம் நேர்மையானதுதானா என்ற சந்தேகம் இருந்து கொண்டேயிருக்கிறது. ஆகவே எந்தக் காலத்திலும் ’பெரியாரிஸ்ட்’ என்று என்னை நான் சொல்லிக் கொண்டதில்லை.
***
மின்னல்கதைகளை வாசிப்பதற்கும் சிரத்தையெடுத்து மின்னஞ்சல் அனுப்பியமைக்கும் எனது நன்றிகள். இத்தகைய கடிதங்கள் தொடர்ந்து எழுதுவதற்கான உற்சாகத்தை அளிக்கின்றன.
5 எதிர் சப்தங்கள்:
தீர்க்கமான அலசல்
பெரியாரியம் செத்துப்போகும்ன்னு சொல்லுறியாப்பா? உன்னை மாதிரி எத்தனை பார்ப்பான் வந்தாலும் பெரியாரும் பெரியாரியமும் இருக்கும்.
சின்னப்பெரியார் அண்ணே, நான் பார்ப்பான்னு எப்படிண்ணே கண்டுபிடிச்சீங்க? செம அறிவுண்ணே உங்களுக்கு. சின்ன வயசுல இருந்தே இம்புட்டு அறிவா?? :)))
உங்களின் இந்த தொனி இருக்கிறதல்லவா? அடுத்தவனை பேசவிடாமல் அமுக்கிவிடும் தொனி- இதைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன். பெரியாரைச் சுற்றிலும் இரும்புவேலி அமைத்திருக்கிறீர்கள் என.
உண்மையை உரக்க சொல்லியிருக்கிறீர்கள் அண்ணன். அருமையான அலசல். பெரியாரிஸ்ட் கள் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள், இதனால் கொஞ்சம் திருந்தினால், இன்றைய இளையர்களால் பெரியார் இன்னும் கவனிக்கப்படுவார்.
". பள்ளி மற்றும் கல்லூரிக்காலங்களில் இறையுணர்வு இல்லாதவனாக இருந்தேன். ஆனால் அந்தச் சமயத்தில் சாதீய உணர்வுகள் மனதிற்குள் இருந்தன. பிறகு சாதீயம் பற்றிய தெளிவு பிறந்த போது கடவுள் நம்பிக்கை உள்ளவனாக மாறியிருந்தேன். பெண்ணிய சுதந்திரத்தில் மற்றவர்களுக்கு நான் காட்டிக் கொண்டிருக்கும் எனது முகம் நேர்மையானதுதானா என்ற சந்தேகம் இருந்து கொண்டேயிருக்கிறது. ஆகவே எந்தக் காலத்திலும் ’பெரியாரிஸ்ட்’ என்று என்னை நான் சொல்லிக் கொண்டதில்லை."
Claps from me பெரியார் இன்றிருந்தால் நிச்சயம் உங்களை பாராட்டியிருப்பார்.உள்ளதை உள்ளபடி பேசும் முகமூடி அணயாதவர்கள் மிக மிக குறைவு
Post a Comment