ஜூன்,ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் தென்மேற்கு பருவமழைக்கான காலம். ஜூனில் ஒரு துளி கூட நிலத்தை தொடவில்லை. ஜுலை இறுதியில் மூன்று நாட்கள் வானம் தூவானம் போட்டது. ஆகஸ்ட் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை.
நீலகிரி மலையிலிருந்து இறங்கும் பவானி ஆற்றுக்கு மேட்டுப்பாளையம்தான் சமவெளியின் தொடக்கப்புள்ளி. இந்த முறை மேட்டுப்பாளையம் சென்றிருந்த போது சிற்றோடையை விடவும் குறைவான அளவில் நீர் ஆற்றில் ஓடிக்கொண்டிருந்தது.
முப்பது வருடத்தில் இவ்வளவு குறைவான தண்ணீரை பவானியில் பார்த்ததில்லை என நினைத்துக் கொண்டேன். அறுபத்தைந்து வருடத்தில் இவ்வளவு குறைவான தண்ணீரை நான் பார்த்ததில்லை என அப்பா சொன்னார். தாத்தா இருந்திருப்பின் அவரும் இதையே சொல்லியிருக்கக் கூடும் ஆனால் தொண்ணூறு வருடங்கள் என்று வருடத்தின் எண்ணிக்கை மட்டும் மாறியிருக்கும்.
வருணபகவானுக்கு ஸ்தோத்திரம்.
இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு குடிநீர் தேவையை நிலத்தடி நீர்தான் பூர்த்தி செய்கிறதாம். உலக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு முதலிடம்.
பெங்களூரில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் கிடக்கிறது. பெங்களூரில் மட்டும் இல்லை ஒட்டுமொத்த இந்தியாவிலும் தான். மெட்ரோ சிட்டிகளில் ஆறு இஞ்ச் போர்வெல் போட்டு இருபத்தி நான்கு மணிநேரமும் நீரை உறிஞ்சி கோடிகளில் புரள்கிறார்கள் ‘வாட்டர் மாஃபியா’க்கள். இது ஒரு வெளிப்படையான அண்டர்வேல்ட் உலகம்.
பெங்களூரில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் கிடக்கிறது. பெங்களூரில் மட்டும் இல்லை ஒட்டுமொத்த இந்தியாவிலும் தான். மெட்ரோ சிட்டிகளில் ஆறு இஞ்ச் போர்வெல் போட்டு இருபத்தி நான்கு மணிநேரமும் நீரை உறிஞ்சி கோடிகளில் புரள்கிறார்கள் ‘வாட்டர் மாஃபியா’க்கள். இது ஒரு வெளிப்படையான அண்டர்வேல்ட் உலகம்.
இந்தியா முழுவதும் நிலத்தடி நீரை பொதுச்சொத்தாக அறிவித்துவிடலாம் என மத்திய அரசு பரிசீலித்துக் கொண்டிருக்கிறதாம்.
எல்லோரு பாடிய பல்லவிதான் “மரங்களை வெட்டுகிறோம், ப்ளாஸ்டிக்கால பூமியை நிரப்புகிறோம், இயற்கையை சுரண்டுகிறோம்”
ஆமென்!.
***
குதிரை முட்டை என்ற ஒரு புத்தகம் வெளி வந்திருக்கிறது. வீரமாமுனிவரின் ’பரமார்த்த குரு கதை’களைத் தழுவிய ‘குதிரை முட்டை’ என்ற நாடகம் பற்றிய புத்தகம் இது. நாடகத்தின் பிரதி, நாடகத்தை பற்றிய இருபது கட்டுரைகள் மற்றும் நாடக இயக்குனர் சண்முகராஜாவுடன் ஒரு நேர்காணல் என ஒரு நாடகத்தை பற்றிய விரிவான பதிவு. ஆவண முயற்சி என்பதும் பொருந்தக் கூடும்.
’குதிரை முட்டை’ஐ பற்றிய ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொருவரால் எழுதப்பட்டிருக்கிறது. நாடகப்பிரதியை வாசித்துவிட்டு கட்டுரைகளை வாசிக்கும் போது ஒரே நாடகத்தை வெவ்வேறு கோணங்களில் வாசகனால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நாடகத்தை எப்படி இருபது முறைகளில் புரிந்து கொள்ளலாம் என்பதற்கான முயற்சி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
புரிதல் தவிர்த்து நாடகத்தின் தொழில்நுட்பம், காட்சியமைவுகள், குறைகள் என விரிவான தளத்திற்கு நாடக வாசகனை நகர்த்துகிறது. அவ்வகையில் ஒரு நாடகம் பற்றிய முழுமையான புத்தகம் இது.
தமிழில் இத்தகைய முயற்சிக்கு முன் மாதிரிகள் எதுவும் இல்லை என நினைக்கிறேன்.
இந்த நூல் ஒரு புது முயற்சி. முக்கியமான முயற்சியும் கூட.
தொகுப்பாசிரியர்கள் : நெய்தல் கிருஷ்ணன், சதீஸ்வரன்
வெளியீடு: நிகழ் நாடக மய்யம், மதுரை.
***
ஜூலை 29 ஆம் தேதி சேலத்தில் ’தக்கை’ சார்பில் புத்தக வெளியீடு நிகழ்கிறது. அகச்சேரன், தூரன் குணா மற்றும் வே.பாபு ஆகியோரினது கவிதை நூல்கள் வெளியிடப்படுகின்றன. மூவருமே வெளியுலக வெளிச்சத்தை தவிர்த்து ஒதுங்கியிருக்கும் கவிஞர்கள்.
குணா மற்றும் பாபு ஆகியோரது தொகுப்புகளின் அட்டைப்படங்களை மயூரா ரத்தினசாமி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
பார்த்தவுடன்‘க்ளாசிக்’ என்ற வார்த்தைதான் தோன்றியது.
***
ஆகஸ்ட் 5 ஆம் தேதியிலிருந்து கல்கி வார இதழில் ரோபோக்களைப் பற்றிய ஒரு தொடர் எழுதவிருக்கிறேன். ‘ரோபோ ஜாலம்’ என்ற தலைப்பில். இந்த வார கல்கியில் தொடர் பற்றிய அறிவிப்பு வெளி வந்திருக்கிறது.
எம்.டெக்கில் படித்தது ரோபோட்டிக்ஸ் சார்ந்த படிப்புதான் என்றாலும் அது மட்டுமே ரோபோக்கள் பற்றிய கட்டுரைகள் எழுதுவதற்கு போதுமானதில்லை என்பதை முதல் கட்டுரை எழுதும் போதே உணர முடிந்தது. கல்கி இதழில் எழுதவிருப்பது மகிழ்ச்சியாக இருப்பினும் எதிர்கொள்ளவிருக்கும் பெரும் பொறுப்பும், கட்டுரைகளுக்கு தேவைப்படவிருக்கும் உழைப்பும் ஒரு வித பதட்டத்தை உண்டாக்குகின்றன.
3 எதிர் சப்தங்கள்:
நல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி... வாழ்த்துக்கள்... (த.ம. 1)
ஆகஸ்ட் 5 ஆம் தேதியிலிருந்து கல்கி வார இதழில் ரோபோக்களைப் பற்றிய ஒரு தொடர் எழுதவிருக்கிறேன்.
வாழ்த்துக்கள் மணி! பெருமை அடைகிறேன்!
வாழ்த்துக்கள்
Post a Comment