Jun 14, 2012

தூங்கான் (எ) சொக்கநாதன்

சொக்கநாதன் என்று பெயர் வைத்ததற்கு பதிலாக தூக்கநாதன் என்று  வைத்திருக்கலாம். அரசு அலுவலர்களே கூட அவ்வப்போது வந்து டிப்ஸ் கேட்டுச் செல்லலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு சொக்கநாதன் தூக்கத்தில் நிபுணராக ஆகியிருந்தான். படுத்தால் தூக்கம், படித்தால் தூக்கம் என்றிருந்தால் பிரச்சினையில்லை. நின்று கொண்டிருந்தாலும் சரி தின்று கொண்டிருந்தாலும் சரி சொக்கனுக்கு தூக்கம் வந்துவிடுகிறது. 

எட்டாம் வகுப்பு வரை ஒழுங்காக இருந்தவன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் இப்படி நேரம் கெட்ட நேரம் தூங்க ஆரம்பித்தான். கணக்கு வாத்தியார் கந்தசாமிதான் அவனது வகுப்பிற்கும் பொறுப்பாசிரியர். சொக்கன் தூங்கும் போதெல்லாம் அருகில் இருக்கும் வேறொரு மாணவனை அழைத்து கொட்டு வைக்கச் சொல்வார். கொட்டு வாங்கிய சொக்கன் கொஞ்ச நேரம் தலையை தேய்த்துவிட்டு தூங்கிவிடுவான். பிறகு மாணவர்களின் கொட்டுக்கள் மட்டுமே சொக்கனை எழுப்ப போதுமானவை இல்லை என்று கந்தசாமி வாத்தியாரே களத்தில் இறங்கினார். சொக்கன் வகுப்பில் தூங்கும் போதெல்லாம் அடித்தார். பிறகு மிதித்தார். ம்ஹூம். எதுவும் பயன் தரவில்லை. இதெல்லாம் சரிப்பட்டு வராது என வெயிலில் முழங்காலிடச் சொன்னார். அசராத சொக்கன் முழங்காலிட்டவாறே தூங்கி வழிந்தான். 

கந்தசாமி வாத்தியார் சலித்துப்போனவராக சொக்கனை ஹெட்மாஸ்டரிடம் அனுப்பி வைத்தார். வேலியில் போகும் ஓணானை வேட்டிக்குள் எடுத்துவிடுவதுதானே பெரும்பாலான ஹெட்மாஸ்டர்களுக்கு விருப்பமான செயல். அடுத்த நாள் ப்யூனை அனுப்பி சொக்கனின் பெற்றோரை அழைத்து வரச் சொன்னார். வந்தவர்களிடம் வேறு ஏதேனும் பேச்சை ஆரம்பித்திருக்கலாம். ஆனால் ஹெச்.எம்மின் நாக்கில் சனி வாடகைக்கு இருப்பார் போலிருக்கிறது. உங்கள் பையன் வகுப்புகளில் அதிகமாக தூங்கி வழிகிறான் என்ற கம்ப்ளெய்ண்ட் வந்திருக்கிறது என்று தொடங்கினார்.

வெறுத்துப்போன சொக்கனின் அப்பா ”இதையேதான் நாங்க அவன்கிட்ட சொல்லிச் சொல்லி சடஞ்சு கிடக்கிறோம் நீங்களும் இதைச் சொல்லத்தான் கூப்ட்டீங்களா? அவன் தூங்குனா நாலு சாத்து சாத்துங்க இல்லைன்னா துரத்திவிடுங்க. நாலு கழுதை வாங்கித் தர்றேன் மேய்ச்சு பொழைக்கட்டும் “ என்று ஹெச்.எம் ஐ தாளித்துவிட்டு போனார். இவர் எரிந்து விழுவதை சமாளிப்பதற்கு பதில் அவன் தூங்கியே வழியட்டும் என்று அவனைக் கண்டுகொள்ளாமல் விட்டுவட ஆசிரியர்களிடம் சொல்லிவிட்டார். அதன் பிறாக அவனுக்கு கடைசி வரிசையில் ஒரு இடம் ஒதுக்கி விட்டார்கள். தூக்குமூஞ்சி என்றும் தூங்கான் என்றும் உடன் படித்த பையன்களிடம் பட்டப்பெயரையும் பெற்றுக் கொண்டான்.

தூங்கக் கூடாது என சொக்கன் நினைத்தாலும் தூங்காமல் இருக்க முடிந்ததில்லை. தூக்கம் என்றால் மணிக்கணக்கான தூக்கம் இல்லை ஐந்து அல்லது பத்து நிமிடங்கள்தான். தூங்கிக் கொண்டிருப்பவன் தலையில் இடி விழுந்ததைப்போல திடீரென எழுவான் கொஞ்ச நேரத்திலேயே அவனையுமறியாமல் மீண்டும் சாய்ந்துவிடுவான். அடுத்த ஒரு வருடம் மட்டும் எப்படியோ வகுப்புகளையும் தேர்வுகளையும் சமாளித்து பத்தாம் வகுப்பை முடித்துவிட்டான். 

படிப்பிற்கு பிறகாக திருப்பூரில் மில் வேலைக்கு போனவனை ஓரிரு மாதங்களிலேயே துரத்திவிட்டுவிட்டார்கள். பிறகு யாரோ ஒரு அரசியல்வாதியின் சிபாரிசில் தொழிற்சாலை ஒன்றில் சேர்ந்தவனுக்கு கம்பி வெட்டும் வேலை கொடுத்திருந்தார்கள். மெஷினில் கம்பி வெட்டிக் கொண்டிருந்த போது தூங்கித் தொலைந்துவிட்டான். கம்பிக்கு பதிலாக விரலை மெஷினுக்குள் விட்டுவிட்டான். கத்தரித்துவிழுந்த ஆள்காட்டி விரலை பாலித்தீன் கவரில் போட்டு மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். சொக்கனை தூக்கிக் கொண்டு போனவர்கள் வலியால் மயங்கிவிட்டான் என நினைத்துக் கொண்டார்கள். ஆனால் உண்மையில் சொக்கன் அப்பொழுதும் தூங்கிக் கொண்டிருந்தான்.

இப்படியாக தூங்கிக் கொண்டிருந்த சொக்கனுக்கு திருமணத்தை செய்து வைத்தால் அவனுக்கு பொறுப்பு வந்துவிடும் என நினைத்தவர்கள் ஏமாளிகளைத் தேடத் துவங்கினார்கள். 

சொக்கனுக்கு திருமணம் ஆன கதையை சொல்ல வேண்டுமா? அது கதையில்லை. வரலாறு. பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்த போதே ஒரு சிறுவனை ‘செட்’ செய்திருந்தார்கள். எப்பொழுதெல்லாம் சொக்கன் தூங்குகிறானோ அப்பொழுதெல்லாம் அவனைத் தொடையில் கிள்ள வேண்டும் என்பதுதான் ’செட்டப்’. சொக்கனும் இந்த ‘செட்டப்’பிற்கு சம்மதித்திருந்தான். பெண் வீட்டிற்கு கிளம்பிய கணத்திலிருந்தே அந்தப் பொடியன் கிள்ளுவதை ஆரம்பித்திருந்தான். அந்த நாள் முழுவதும் வகை தொகையில்லாமல் கிள்ளி சொக்கனை விழிப்பிலேயே வைத்திருந்தான் பொடியன். அடுத்த நாள் காலையில் சொக்கனின் தொடை வீங்கி ஏதோ திரவம் வடிந்து கொண்டிருந்தது. 

திருமண நாள் அன்றும் அதே செட்டப் தான். பொடியனைத்தான் துணை மாப்பிள்ளையாக அமர வைத்திருந்தார்கள். பொடியனின் சீரிய பணியையும் மீறி தாலி கட்டும் நேரத்திற்கு சில வினாடிகள் முன்பாக சொக்கன் தூங்க ஆரம்பித்திருந்தான். சுதாரித்த பொடியன் ஒரு ‘நறுக்’கை போட்டான். இப்படியாக திருமணம் கிள்ளலும் வீங்கலுமாக முடிந்தது. மனைவியாக வந்தவள் பெரும் சொத்தோடு வந்து சேர்ந்தாள். சொக்கன் இனி இரண்டு மூன்று தலைமுறைக்கு கால் நீட்டி தூங்கலாம் என்று பேசிக் கொண்டார்கள்.

சொக்கனின் முதலிரவில் நடந்ததெல்லாம் வேறொரு எபிசோட். எப்படியோ ஒரு வருடத்தில் குழந்தையும் பிறந்துவிட்டது. இந்தச் சமயத்தில் சொக்கனின் மனைவி இவனது தூக்கம் பற்றி தெரிந்து கொண்டு நிறைய புலம்பி கொஞ்சம் அழுது ஒருவாறாக மனதை தேற்றியிருந்தாள். மருத்துவரிடம் போயே தீர வேண்டும் என்ற அவளது வற்புறுத்தலில் சில பரிசோதனைகளையும் செய்தார்கள். கடைசியாக நார்கோலெப்ஸி என்ற தூங்கும் வியாதி இருப்பதாகக் கண்டுபிடித்து இந்நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்ற ஒரு வெடிகுண்டுக்கும் சேர்த்து பில் போட்டு அனுப்பி வைத்தார்கள்.

அதன் பிறகாக இருபது வருடங்களாக சொக்கன் தனியாக எதைச் செய்யவும் அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு வேலையையும் அவனது மனைவியோ அல்லது மகனோ செய்யத்துவங்கினார்கள். சொக்கன் வெளியே போவதும் தடை செய்யப்பட்டது. கழிவறைக்கு கூட தாழ்ப்பாள் போடாமல் போக வேண்டும் என்பது விதியாக மாற்றப்பட்டது. தான் ஒரு நோயாளி என்பதை அவனை முழுமையாக உணரச் செய்தார்கள். சொக்கன் பெரும்பாலான நாட்களில் யாருக்கும் தெரியாமல் அழத் துவங்கினான். 

கடந்த ஓரிரு வாரங்களாக ஒரு அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தான் தூங்கி விழுவதில்லை என்று சொக்கன் உணரத்துவங்கினான். இதை அவனது மனைவியிடமும் மகனிடமும் சொன்ன போது அவர்கள் நம்பத் தயாரில்லை. கண்காணிக்கத்துவங்கினார்கள். கண்காணிப்பின் போதும் அனைத்து தடைகளும் அமலில் இருந்தன. ஒரே ஒரு முறை தனியாக வெளியே செல்ல வேண்டும் என சில வருடங்களாக சொக்கன் விரும்பியிருந்தான். இப்பொழுது மனைவியிடம் தனது ஆசையை வெளிப்படுத்தினான். அனுமதி கிடைக்கவில்லை. நேற்று மதியம் மகன் தூங்கிக் கொண்டிருந்த போது பைக்கை எடுத்து ஓட்டத்துவங்கினான். இருபது வருடங்களுக்கு முன்பாக பைக் ஓட்டிய கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன என்றாலும் ஓட்ட முடிந்தது. 

அடுத்த அரை மணி நேரத்திற்குள் சொக்கன் திருட்டுத்தனமாக வெளியே சென்றிருக்கிறான் என்பதை கண்டுபிடித்துவிட்டார்கள். அவனது மனைவி கடுங்கோபம் அடைந்திருந்தாள். இரண்டு மணி நேரம் ஆகியும் சொக்கன் வீடு திரும்பவில்லை. கோபம் பதட்டமாக மாறத் துவங்கியது. மூன்று மணி நேரங்களுக்கு பிறகாக காணாமல் போனவனை தேடத்துவங்கினார்கள். உதவிக்கு பலரையும் அழைத்துக் கொண்டார்கள்.

யாரோ ஒருவன் மிக வேகமாக ஓடி வந்து ரெயில்வே ட்ராக்கில் பைக்கில் வந்த யாரோ ஒருவர் அடிபட்டுக்கிடப்பதாகக் கூறினான். சொக்கனின் மனைவி பெருங்குரலெடுத்து அழத்துவங்கினாள். மற்ற சில பெண்களும் அழத் துவங்கினார்கள். ஆனால் கதை இங்கு முடியவில்லை.

பீரோவில் வைத்திருந்த ஒரு இலட்சம் ரூபாய் காணாமல் போய் இருந்தால் இறந்து கிடப்பவன் சொக்கனாக இருக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் பீரோவில் பணம் இருக்கிறதா என்றுதான் தெரியவில்லை. சொக்கனின் மனைவி பீரோவை பார்த்தால் இறந்தது சொக்கனா வேறு யாரேனுமா என்று தெரிந்துவிடும். ஆனால் அவள் ரெயில்வே ட்ராக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறாள்.