ஆறு வருடங்களுக்கு பிறகாக இந்த வருட இறுதியில் எனது இரண்டாவது கவிதைத்தொகுப்பு காலச்சுவடு பிரசுரமாக வெளிவருகிறது. அநேகமாக “என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி” என்பது தலைப்பாக இருக்க்கூடும்.
காலச்சுவடு பதிப்பகத்தில் இருந்து பின் அட்டைக்கு ஒரு நிழற்படம் வேண்டும் என்றார்கள். இதுதான் சிக்கலாகிப்போனது. பெங்களூரில் எந்த ஃபோட்டோ ஸ்டுடியோவிற்கு போனாலும் ”பல்லைக்காட்டுங்க பல்லைக்காட்டுங்க” என்று ஒரு வழி செய்துவிடுகிறார்கள் அல்லது படத்திற்கான தேவையைச் சொன்னதும் தாவாக்கொட்டையில் பேனாவை வைத்து விட்டத்தை முறைக்கச் சொல்கிறார்கள் அதைவிடக் கொடுமையாக கையில் ஒரு பூவை வைத்துக் கொண்டு ரொமாண்டிக் லுக் விடச் சொல்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பாகி ஜீவ்ஸிடம் புலம்பினேன். ஜீவ்ஸ் பெங்களூரில் பதினாறு வருடங்களாக இருக்கிறார். நிழற்படக்கலையின் விற்பன்னர். என்னை அவரே படமாக எடுத்துத் தருவதாகச் சொன்னார்.
இன்றைக்கு காலையில் தலைக்கு குளித்து “ஒரு நாயகன் உதயமாகிறான்” ஸ்டைலில் அவரின் வீட்டிற்கு போய் இருந்தேன். நான் குளித்த குளியலில் அனேகமாக சோப் இந்த முறை குறைவான நாட்களுக்குத்தான் வரும்.
ஜீவ்ஸ் தெரிந்து வைத்திருக்கும் நிழற்படக்கலையில் எனக்கு ஒரு சதவீதம் கூடத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் முகத்தைக் கழுவி, ஒன்றரை இஞ்ச்க்கு பவுடர் அப்பிக் கொண்டு கேமராவிற்கு முன் நிற்க வேண்டும் என்பதுதான். மனுஷன் சூரியன் அதிகம் இருந்தால் கண்ணுக்கு கீழே நிழல் அடிக்கும் என்கிறார், ஜன்னலைத் திறக்காமல் இருந்தால் முகத்தில் இருட்டடிக்கும் என்கிறார். தூரமாக நின்று படம் எடுத்தால் ஒரு லென்ஸ், பக்கமாக என்றால் ஒரு லென்ஸ், நடுவால என்றால் இன்னொரு லென்ஸ். ஸ்ஸ்ப்பா!!!
படம் எடுத்து முடித்த பிறகு போட்டோவிற்கு ஏதோ ஒரு சாப்ட்வேரை பயன்படுத்தி பவுடர் அடிக்கிறார், கண்ணைக் கூர்மையாக்குகிறார், முகப்பருவை நீக்குகிறார். விட்டால் ஃபர்யூம் கூட போட்டுவிடுவார்கள் போலிருக்கிறது. ரஜினி எப்படி ரோபோ ஆனார் என்பதன் தொடக்கப்புள்ளி இங்கு இருக்கும் போலிருக்கிறது.
மணி மூன்றாகியிருந்தது. பசி என்னை தன் பிடிக்குள் இறுக்க ஆரம்பித்திருந்தது. எனக்கு பொறுமையும் இல்லை, இதில் திறமையும் இல்லை என்பதால் “முடிச்ச வரைக்கும் போதும். கொடுங்க சாப்பிடப்போலாம்” என்று ஓடி வருவதிலேயே குறியாக இருந்தேன்.
வீட்டிற்கு திரும்பும் போது இந்தக் கலையின் நுணுக்கங்கள்தான் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது. மற்ற கலை வடிவங்களைக்காட்டிலும் நிழற்படக்கலை மிக அதிகமான மக்களிடம் தாக்கத்தை உருவாக்குவதன் அடிப்படையான காரணத்தை இன்று ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment