நேற்றிரவு முகநூலில் ஒரு பெண்ணிடமிருந்து நட்பிற்கான வேண்டுகோள் வந்திருந்தது. வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட இரண்டாம் நிமிடத்தில் சாட்டில் வந்து “ஹாய்” என்றார். அப்பொழுது நள்ளிரவு தாண்டி ஒரு மணியை நெருங்கியிருந்தது. இரவு என்ன ஆனாலும் காலையில் ஆறரை மணிக்கு நான் எழுந்துவிட வேண்டும் என்பதால் ஒரு மணி ஆனால் தூங்கியே தீர வேண்டும் என்ற பதட்டம் வந்துவிடும். அதற்கு பிறகும் தூங்காமல் இருந்தால் அடுத்த நாள் அலுவலகத்தில் தூக்கம் பிதுங்கிக் கொண்டிருக்கும்.
எங்கள் வீட்டில் ஒரு ஒப்பந்தம் அமலில் இருக்கிறது. குழந்தையை ஒரு மணி வரைக்கும் நான் பார்த்துக் கொள்ள வேண்டும்- ச்சூச்சூ போனால் துணி மாற்றுவது, இடையில் அழுதால் தொட்டிலை ஆட்டிவிடுவது, பாலைக் காய்ச்சி குடிக்க வைப்பது போன்ற பணிகளுக்கிடையில் ஃபேஸ்புக், ஜிமெயில், ஏதாச்சும் வாசிப்பது என்று கழிந்து கொண்டிருக்கும். ஒரு மணிக்கு மேலாக விடியும் வரைக்கும் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு என் மனைவிக்கு. நான் தூங்கிக் கொள்ளலாம்.
முகநூலில் நேற்று அறிமுகமான இந்தப் பெண் ஒரு மணியளவில் தொடர்ச்சியாக ஒரு எழுத்தாளரைக் குறிப்பிட்டு அவரைப் பற்றிய கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார். என்னிடம் இதுவரையில் யாரும் அடுத்தவரைப் பற்றி இத்தனை கேள்விகளைக் கேட்டதாக ஞாபமில்லை. அதுவும் அறிமுகமான மூன்றாவது நிமிடத்திலிருந்து. இது அந்தப் பெண்ணின் நம்பகத்தன்மை குறித்தான சந்தேகத்தை உருவாக்கியது.
சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள அவரின் முகநூல் சாட்டில் கண்டறிந்த ஐ.பி முகவரியையும், எனக்கு சந்தேகமான “எழுத்தாளரிடமிருந்து” வந்திருந்த மின்னஞ்சலின் ஐபியையும் ஒப்பிட்டால் இரண்டும் ஒன்றாக இருந்தது. இதுதான் பஞ்சாயத்து.
‘என்னை பார்த்து ஏண்டா அந்தக் கேள்வியைக் கேட்ட?’ என்று கவுண்டமணி செந்திலிடம் கேட்பது போல் ’என்கிட்ட ஏன்யா இந்த தில்லாலங்கடி வேலையைச் செய்தாய்’ என்ற கேள்வி விடியும் வரை மண்டைக்குள் ரிங் அடித்துக் கொண்டிருந்தது. இதோ இதைத் தட்டச்சிக் கொண்டிருக்கும் இப்பொழுது வரையிலும் கூட.
இந்த பஞ்சாயத்திற்குள் போவதற்கு முன்பாக இதன் நுட்பத்தை சொல்லிவிடுகிறேன். முகநூலில் சாட் செய்பவரின் ஐபியைக் கண்டறிய மற்ற அனைத்து வலைப்பக்கங்களையும் மூடிவிட்டு Cache ஐ சுத்தம் செய்துவிட வேண்டும். இப்பொழுது எதிராளியிடம் பேச்சு கொடுக்க வேண்டும்- அதாவது முகநூலும், முகநூலில் எதிராளியுடனான சாட் பெட்டி மட்டும் திறந்திருக்க வேண்டும். Start->Run இல் cmd என்று தட்டச்சினால் வரும் பெட்டியில் Netstat -an என்று தட்டச்சி ‘எண்டர்’ அழுத்தினால் எதிராளியின் ஐ.பி முகவரியை எடுத்துவிடலாம். மின்னஞ்சலின் ஐபி ஐ கண்டறிவது மிகச் சுலபம். Header பகுதியிலேயே ஐ.பி இருக்கும்.
கோபத்தின் உச்சியில் ”என்னிடம் இந்தச் சில்லரைத்தனத்தை காட்டிக் கொண்டிருக்காதீர்கள்” என்றதற்கு மீண்டும் கேள்விகளை அடுக்கினார். உங்களின் ஐ.பி தெரியும் நண்பரே விரிவாக நீங்கள் யாரென்று நாளை பதிவிடட்டுமா என்ற வினாவிற்கு ”மிரட்டுகிறாயா” என்றார். நுட்பத்தைச் சொன்னவுடன், “வேண்டாம்..இத்தோட நிறுத்திக்குவோம்” என்று சொல்லிவிட்டு மாயமாகிப்போனார். இடையில் நடந்த சாட் வெறும் அக்கப்போர்.
***
எழுத்து சார்ந்து விவாதிக்கலாம், இலக்கிய அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் மாற்றுக் கருத்துகள் இருப்பின் முகத்துக்கு நேராக பேசலாம். அதைவிட்டு எதற்கான இந்த கையலாகத்தனமான செயல்பாடுகள் என்றுதான் வருத்தமாக இருக்கிறது. முளைத்து மூன்று இலைவிட்டு பிறகு அரசியல் பற்றி யோசிப்பதுதான் உசிதம். முளைப்பதற்கும் மூன்று இலை விடுவதற்குமே அரசியல் தேவைப்பட்டால் முருடு பாய்ந்து குழியோடு நின்றுவிட வேண்டியிருக்கும்.
நிறுவன பலத்துடன் அடுத்தவர்களுடன் மோதுவது, இரைச்சலாக கத்திக் கொண்டிருப்பது என்று எப்படி வேண்டுமானாலும் Publicity Stunt செய்ய முடியும். மூன்றே மாதத்தில் ஃபேமஸ் ஆகிவிடலாம். எதையோ செய்து கொள்ளுங்கள் ஆனால் அடுத்தவனைக் கிள்ளிவிடாமல் அதைச் செய்து கொண்டிருங்கள். தெரிந்து கொண்டவன் சத்தமில்லாமல் விலகிச் சென்றுவிடுவான் அதே சமயம் பெருகும் ரசிகக் குஞ்சுகள் உங்களுக்கு விசிலடித்துக் கொண்டிருப்பார்கள்.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment