Feb 6, 2012

கவிதைxதகுதி


ஆ.கிருஷ்ணகுமாரின் கடிதம்:

வணக்கம் மணி,

தாங்கள் தெரிவித்த கவிதை நூல்களை வாங்கி விட்டேன். இன்னமும் அதை படித்துத் தெரிந்துகொள்வதற்கான கட்டத்திற்கு நான் தகுதி அடையவில்லை. ஏதோ ஆர்வத்தின் காரணம் எனலாம். இருந்தாலும் முயற்சிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

புதுக்கவிதைகள் பெரும்பான்மையினருக்கு சென்றுசேரும்.ஏனென்றால் அதில் காதலர்கள் காதலிகளை வர்ணனம் செய்ய இயற்கையை கையிலெடுத்துக்கொண்டு பூவே, கனியே, மலரே, நதியே, கடலே, நிலவே, இதயமே,... என்று கன்னா பின்னா-வென எழுதி வைப்பார்கள்.இத்தகைய நுட்பமான கவிதை வரிகளே(?) நம்மவர்களுக்கு அதிகம் பிடிக்கும். ஏனென்றால் அது நமது உள்ளூர் தனியார் பேருந்துகளில் ஒலிபரப்பப்படும் சினிமாப்பாடல் போன்றது. அதை சீக்கிரம் மனம் பெற்றுக்கொள்ளும். (நானும் இதுபோன்று கிறுக்கியிருக்கிறேன், மன்னித்துக்கொள்ளவும்)

என்னைப் பொருத்தவரை கவிதைகள் என்பது மேலே குறிப்பிட்ட வரையரைகளுக்குள் மட்டுமே இருந்தது.

தங்களுடைய வலைதளம் எனக்கு அறிமுகமான பின் கிட்டத்தட்ட இந்த இரண்டு வருடங்களில் பற்பல தகவல்களைத் தெரிந்துகொண்டேன். ஏறக்குறைய அனைத்து கவிதைகளையும் வாசித்திருக்கிறேன். (குறிப்பாக "இந்த நூற்றாண்டின் முதல் தற்கொலை" என்கிற கவிதை என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று)

சமீபத்தில் தங்களுடைய "நவீன கவிதையும் புதுக்கவிதையும் ஒன்றா?" என்கிற விளக்கக்கட்டுரையை படித்தேன்.மிகவும் முக்கியமான ஒரு பதிவென்று தோன்றுகிறது.

இதற்கு முன்பாக நவீன கவிதை பற்றிய தங்களது கட்டுரைகளையும்,பிறருடைய கவிதைகளைப் பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். இருந்தாலும் இந்த கட்டுரை சற்று எளிமையாக இருப்பதாக நினைக்கிறேன்.

நவீன கவிதையைப் படிக்க ஆரம்பிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இக்கட்டுரை அக்கவிதைகளைப் பற்றி அறிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, இப்பதிப்பினை முகப்புத்தகத்தில் வலையேற்ற தாங்கள் அனுமதியை நாடுகிறேன்.

அக்கட்டுரையில் எனக்கு மிகவும் பிடித்த சில வரிகள்:

"புதுக்கவிதை என்ற சொல் வாரமலரின் கடைசிப்பக்கத்தில் வரும் கவிதைக்கும், திரைக்கவிஞர்களின் கவிதைகளுக்கும், மேடைக் கவிதைகளுக்கும் பொதுவானவையாக இருக்கின்றன".

"நவீன கவிதைகளில் கவிஞன் துருத்திக் கொண்டிருப்பதில்லை. பிரச்சார நோக்கத்திற்காகவும் கவிதை பயன்படுவதில்லை.இங்கு கவிதை வாசகனுடன் நேரடியாக உரையாடுகிறது. நவீன கவிதையில் வாசகனுக்கும் கவிதைக்கும் இடையில் கவிஞன் என்பவன் வெறும் கருவி மட்டுமே".

"இவை மனித மனதின் மேல்மட்ட உணர்ச்சிகளை எளிதில் தூண்டக்கூடியவை. ஆனால் ஆழ்மனதில் உருவாக்கும் சலனம் என்பது எதுவுமில்லை".

பற்பல நூல்களை எனக்கு அறிமுகம் செய்தமைக்கும்,பரிந்துரை செய்தமைக்கும் தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,
ஆ.கிருஷ்ணகுமார்.

    ***
அன்புள்ள கிருஷ்ணகுமார்,

வணக்கம்.

கவிதை நூல்களை வாசிப்பதற்கான ’தகுதி’ என்பது தொடர்ச்சியான வாசிப்பினால் வாசகன் தனக்குத் தானே உருவாக்கிக் கொள்வதுதான். இதற்கு ஆர்வம்தான் அடிப்படை.உங்களிடம் ஆர்வம் இருக்கும்பட்சத்தில் வாசிக்கத் தொடங்குவதே நல்லதுதான். கடினமான கவிதைகளை எதிர்கொள்ள நேர்ந்தால் அவற்றை ஒரு முறை வாசித்துவிட்டு சிறிது நேரம் கழித்தோ அல்லது மறுநாளோ இன்னொரு முறை வாசிக்கலாம். திரும்பத் திரும்ப கவிதையை வாசிப்பது என்பது கவிதையை அணுகுவதற்கு எளிமையான வழிமுறை.  இதை அறிவுரை என எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை- கவிதையோடான என் அனுபவத்தில் தெரிந்து கொண்டது.

தொடர்ந்து கவிதைகளை வாசிப்பதும் அவற்றைப் பற்றி விவாதிப்பதும் கவிதையின் புரிதலையும், வாசிப்பின் அடுத்த கட்ட நகர்வையும் வாசகருக்கு துரிதப்படுத்தும். வாசிப்பின் அடுத்த கட்டம் என்பதை இன்னும் சற்று தெளிவாகவே பேசலாம்.

கவிதை எப்பொழுதும் ஒரே பரிமாணத்தைக் கொண்டிருப்பதில்லை- உங்களால் புரிந்துகொள்ள முடியும் அதே கவிதையை நான் இன்னொரு பரிமாணத்தில் புரிந்துகொண்டிருக்கக் கூடும். நீங்களும் நானும் குறிப்பிட்ட கவிதையைப் பற்றி உரையாடும் போது நம் இருவருக்குமே அந்தக் கவிதையின் வேறொரு புதிய பரிமாணம் கிடைக்கிறது. பிறகு இன்னொரு கவிதையை வாசிக்கும் போது முதல் வாசிப்பில் புரிந்து கொள்ளும் பரிமாணத்தோடு அந்தக் கவிதையின் வேறு பரிமாணங்கள் குறித்து யோசிக்கத் துவங்குகிறோம். 

புரிதல் என்பது கவிதை வாசித்தலின் மிக அடிப்படையான கூறு. இதுதான் சற்று கடினமான படி. பெரும்பாலான வாசகர்கள் கவிதை தமக்கு புரிவதில்லை என்று கவிதையை விட்டு நகர்ந்துவிடுவதும் கூட இந்தச் சிக்கலால்தான் என்று நம்புகிறேன். இந்தப்படியை(புரிந்துகொள்ளுதல்) தாண்டிவிடும்பட்சத்தில் கவிதையின் இன்னபிற கூறுகளை - உதாரணமாக: கவிதை மொழி, அதன் கட்டமைப்பு, ஒப்பீடுகள் போன்றவற்றை நோக்கி கவிதை வாசகனால் நகரமுடியும். இது போன்ற கூறுகளை Elements of Poetics எனக் குறிப்பிடுகிறார்கள். கவிதைக் கூறுகளை அறிந்துகொள்ளுதலும் கண்டறியாத புதிய கூறுகளை நோக்கி நகர்தலுமே கவிதை வாசித்தலின் அடுத்த கட்ட நகர்வுகள் என்று குறிப்பிடுகிறேன்.

கவிதைகளை கூர்ந்து கவனித்தால் அவை தம்மை தொடர்ந்து புதுப்பித்தும் உருமாறியும் வருவதை புரிந்துகொள்ள முடியும். இந்த புதுப்பித்தலும் உருமாற்றமும் இனியும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதால் தன்னை ’கவிதையியலின் பண்டிதன்’ என உளமார ஒருவராலும் சொல்லிக் கொள்ள முடியாது. இப்படி இலக்கிய ஆணவத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்வதே கூட கவிதையின் தனிச்சிறப்புதான். யாராவது கவிதையை முன்னிறுத்தி பிறரை ‘பயமுறுத்தினால்’ கவிதை அவர்களைப் பார்த்து ‘ஈ’ என பல்லிளித்து ஏளனம் செய்துவிடும்.

கவிதையை வாசித்தல் ஒரு சூத்திரம். வாசிப்பின் பலனாக வாசகன் கண்டறியும் சூத்திரம். சூத்திரத்தைத் தெரிந்துகொண்டால் கவிதையின் சிண்டுகளை அவிழ்ப்பது மிக எளிது.

கவிதை வாசிப்பதில் விருப்பமுடைய ஒருவருக்கு எனக்கு முக்கியமான புத்தகங்களாகத் தோன்றுவதை சுட்டிக் காட்டுவது என்பது மகிழ்ச்சியான செயல்பாடுதான். அந்த மகிழ்ச்சியை உங்களுக்கு பரிந்துரைத்ததன் மூலம் பெற்றுக் கொண்டேன். நீங்கள் முகநூலில் எனது கட்டுரையை பகிர்ந்துகொள்வதில் எனக்கு எந்த நஷ்டமும் வரப்போவதில்லை :)

நன்றி,

அன்புடன்,
வா.மணிகண்டன்

1 எதிர் சப்தங்கள்: