Oct 29, 2011

18வது அட்சக்கோடு: ஏரிக்கரையில் அலைந்து கொண்டிருக்கிறது குளிர்காற்று
ஹைதராபாத்/செகந்திராபாத் இரட்டை நகரங்களுக்கும் எனக்குமான உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்ல முடியாவிட்டாலும் மறந்துவிட முடியாதது. படிப்பிற்கு பிறகாக முதலில் வேலை கிடைத்த இடம் என்ற மகிழ்ச்சியிருந்தாலும் அந்நகரம் அளித்த தனிமையும், வாழ்க்கையின் வெறுமையான கணங்கள் உருவாக்கிய விரக்தியும், அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்கிற புரட்டல்களும் முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கு வதக்கிக்கொண்ருந்தன. அந்தச் சமயத்தில் வாசிப்பு மட்டுமே எனக்கான ஆசுவாசமாக இருந்தது. அத்தருணத்தில் செகந்திராபாத் நகரத்தை கதைக்களமாகக் கொண்டு அசோகமித்திரன் எழுதியது என்று “18 வது அட்சக்கோடு” நாவலை நண்பர் வெங்கடாசலம் அளித்தது நினைவில் இருக்கிறது.

18வது அட்சக்கோடு வரலாற்று நாவல்- சுதந்திரத்துக்கு பிறகான நிஜாம் அரசாங்கத்தில் நிகழ்ந்த வரலாற்று பதிவுகளை எளிய இளைஞனை சுற்றியதான நிகழ்வுகளின் கோர்வைகளாக பதிவு செய்கிறது. பெரும்பாலான வரலாறுகள் அமைப்பின்/நிறுவனத்தின் உச்சியில் இருந்தே பதிவு செய்யப்பட்டிருகின்றன. ஒரு தேசத்தை மையமாக வைத்து அதன் மன்னர்கள், மாகாணங்கள், குடிகள் என்று கீழ் நோக்கி வருதல் அல்லது தேசத்தின் பொருளியத்தை உச்சியில் வைத்து அதன் குடிமக்களின் வாழ்வாதார நிலைகளை நோக்கி இறங்குவரிசையில் பதிவு செய்தல் அல்லது தேசத்தின் அரசியலை மையமாகக் கொண்டு அதன் மக்களின் அரசியல் செயல்பாடுகள் பற்றி பேசுதல் என ’மேக்ரோ’வரலாறுகள்தான் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. 18வது அட்சக்கோடு தனிமனிதனில் இருந்து தேசம் நோக்கி பார்க்கும் ‘மைக்ரோ’ வரலாறு. இதில் தனிமனிதர்களின் அரசியல் கோட்பாடுகள் பதிவு செய்யப்படுகிறது, அவர்களின் பொருளாதார நிலை பேசப்படுகிறது, தனிமனித பார்வையில் நிஜாமினுடைய காரியதரிசிகளின் செயல்பாடுகள் அலசப்படுகிறது. ‘மைக்ரோ’ வரலாறுகள் காலத்தின் ஓட்டத்தில் மறுவாசிப்புகளிலும், மறு ஆய்வுகளிலும் மாற்றம் பெறுவதில்லை. அவை தனிமனிதனின் பார்வையில் இருந்து எழுதப்படும் எளிய சாட்சிகளாக படிமங்களாகின்றன.

வாசிப்பு என்பது பல படிநிலைகளைக் கடந்துவருவதான இயக்கம். தனது ஒவ்வொரு வாசக நிலையிலும் வாசகன் ‘நல்ல படைப்பிற்கான விதிகளை’ தானாகவே தன் வாசிப்பனுவத்தின் மூலமாக வகுத்துக் கொள்கிறான். பிறகு தன் விதிகளுக்கு முரணான படைப்பை எதிர்கொள்ள நேரும் போது ஒன்று படைப்பை நிராகரிக்கிறான் அல்லது படைப்பு வீரியமிக்கதாக இருப்பின் தன் விதிகளை மாற்றியமைத்துக் கொள்கிறான்.  

நாவல் வாசிப்பது என்பது ஒரு கதையை அறிந்துகொள்ளுதல் என்பதான எனது சித்தாந்தம் காலாவதியாகிவிட்ட ஒன்று என்பதனை உணர்ந்த தருணம் அது. நாவல் நேர்கோட்டில் பயணிக்கக்கூடாது; தர்க்கரீதியான வினாக்களை தன் ஓட்டம் முழுவதுமாக தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருக்க வேண்டும் போன்ற விதிகளை உருவாக்கி வைத்திருந்தேன். ஆனால் நாவலுக்கு இத்தகைய விதிகள் அவசியமில்லை என பொய்யாக்கியது 18வது அட்சக்கோடு. சந்திரசேகரனின் அத்தனை பதட்டங்களும் என் விரல்களுக்குள் பரவிக்கொண்டன. அவனது ஓட்டங்கள் என்னை திகிலடையச் செய்தன. அந்த நாவலுக்குள் என்னை புதைத்துக் கொண்டிருந்தேன். எந்தவிதமான உணர்ச்சி துருத்தல்களும், அலங்காரங்களுமின்றி சந்திரசேகரனின் பாத்திரமும் அவனைச் சுற்றிலுமான நிகழ்வுகளும் வாசகனை இந்திய யூனியன் சுதந்திரம் அடைவதற்கும் முன்பாகவும் சுதந்திரத்திற்கு பிறகு ஹைதராபாத் சமஸ்தானம் இந்திய யூனியனுடன் இணைக்கப்படும் வரைக்குமான குறுகிய காலகட்டத்துக்குள் கொண்டு சேர்க்கின்றன. அசோகமித்திரனின் கதைசொல்லும் பாங்கும், நாவல் ,முழுவதும் இழையோடும் நகைச்சுவையுணர்வும் காட்சிகளின் துல்லியத்தன்மையும் இந்நாவலின் மிகப்பெரிய பலங்களாக தோன்றுகிறது.

நாவல் பதிவு செய்யப்படும் காலகட்டத்தில் இந்நாவலின் களமான ஹைதராபாத்தும் செகந்திராபாத்தும் நாவலின் கதாபாத்திரங்களுக்கு வேறொரு நாட்டின் இரட்டை நகரங்கள். அங்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சந்திரசேகரனும் அவனது மத்தியதர தமிழ்க் குடும்பமும் தங்களைச் சுற்றி உருவாகி வளரும் மதம்,தேசம்,மொழி, பயங்கரவாதம் என்ற வலைப்பின்னல்களின் காரணமாக இனம்புரியாத பயத்தில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த மென்பதட்டத்திலேயே நாவல் முழுவதுமாக நகர்கிறது. தன் வீட்டு மாடு அடுத்தவர்களின் தோட்டத்தில் மேய்வதால் அந்நியரிடம் தான் எதிர்கொள்ள வேண்டிய சண்டைகளில் இருந்து, வேற்று ஆடவனிடம் இருந்து தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காக தன் ஆடைகளை துறக்கத் துணியும் பெண்ணிடம் இருந்து தப்பியோடுவது வரையிலும் என இளம்பிராய அதிர்ச்சிகளால் சந்திரசேகரன் பின்னப்படுகிறான்.

அரசியல் கோட்பாடுகளின் புரிதலற்ற, மதம் பற்றிய ஆழ்சிந்தனைகள் அற்றவனாக தனது பருவத்திற்குரிய குறுகுறுப்புகளுடனும், கிரிகெட் விளையாடிக் கொண்டும், தன் வீட்டு குடும்ப பொறுப்புகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் கல்லூரி மாணவனை அரசியல் சமூக நிகழ்வுகள் தன் முரட்டுபிடிகளுக்குள் இழுத்துக் கொள்கின்றன. வரலாற்றின் பிடிகளுக்குள் சிக்கிக்கொள்ளும் சந்துரு சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவெடுக்கவியலாதவனாக தத்தளிக்கிறான். திடீரென அழைத்து மேடையில் பாடச் சொல்லும் ஆசிரியரிடம் மறுப்பு தெரிவிக்க முடியாதவனாகவும், போராட்டக்களத்தில் இருந்து தப்பிக்கொள்ள முடியாதவனாகவும் தொடர்ந்து சூழல்களின் கைதியாகிறான்.

வரலாறு யாரையும் விட்டுவைப்பதில்லை- வரலாற்றுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் வரலாற்றின் மெளனசாட்சிகள் என்று யாரும் இருப்பதில்லை. வரலாற்றின் ஏதாவது ஒரு பகுதியாக ஒவ்வொருவரும் உறைந்துவிடுகிறார்கள். இப்படி உறையும் கதாபாத்திரமாகத்தான் சந்திரசேகரனையும் பிற நாவல் பாத்திரங்களையும் அணுக முடிகிறது. காந்தி இறந்த தினத்தை இன்னொரு ’தேசத்தில்’ இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சந்துருவும் அவனது குடும்பத்தாரும். மொத்த இந்திய தேசமும் பெரும்பதட்டத்தில் சிக்குண்ட அந்த நாள் நிஜாமின் தேசத்தில் சற்றே பரபரப்பான சாதாரண நிகழ்வாகவே இருக்கிறது. அதே சமயத்தில் இந்திய ராணுவம் சமஸ்தானத்திற்குள் நுழைவது மிகப்பெரிய பரபரப்பான நிகழ்வாக இருக்கிறது.

இந்த நாவலை வாசித்துவிட்டு அதன் இடங்களை ஹைதராபாத்திலும், செகந்திராபாத்திலும் தேடியலைந்த ஞாயிறுகள் நினைவில் வந்து போகின்றன. நகரப்பேருந்துகளின் வெக்கையில் வியர்வை கசகசப்பில் ரஜாக்கர்கள் வாழ்ந்த இடங்களுக்கும், செகந்திராபாத் ரயில்வே குடியிருப்புக்கும், டேங்க் பண்ட் சாலைக்கும், ராணிகஞ்ச்க்கும் என சந்திரசேகரன் அலைந்த இடங்களில் ஒரு இடத்தையாவது அதே அடையாளத்துடன் பார்த்துவிட முயன்றிருக்கிறேன்.நிஜாம் கல்லூரியும் சாலர்ஜங் மியூசியமும் மட்டுமே நாவலின் தொடர்ச்சியாக தங்களின் அடையாளத்தை பெரிதும் மாற்றிக்கொள்ளாமல் இருக்கின்றன என்று நம்பினேன்.அது என் தனிப்பட்ட நம்பிக்கை மட்டுமே. உண்மை வேறாகவும் இருக்கலாம். ஹைதராபாத்தும் செகந்திராபாத்தும் தங்களின் பெரிய ஆலமரங்களை தொலைத்துவிட்டு அதற்கு ஈடாக பிற நகரங்களைப் போலவே வணிகவளாகங்களைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

அசோகமித்திரனை ஒரு முறை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஹைதராபாத் வந்திருந்த போது அவரும் மறைந்த எழுத்தாளர் எஸ்.வி.ராமகிருஷ்ணனும் காரின் பின்புறமாக அமர்ந்துகொள்ள நான் முன்புறத்தில் அமர்ந்திருந்தேன். அவருடன் பேசுவதற்கு எனக்கு கிடைத்த ஐந்து நிமிடங்களில் 18வது அட்சக்கோடு பற்றி சில வினாக்களை எழுப்பினேன். அப்போதைய செகந்திராபாத்தும் ஹைதராபாத்தும் இப்பொழுது தேடினாலும் கிடைப்பதில்லை என்றார். அதைச் சொல்லி முடித்த போது அவரது முகத்தில் புன்னகையும் இல்லாத வருத்தமும் இல்லாத வெறுமையை உணர முடிந்தது. 

இந்நாவலை வாசித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில் நாவல் பற்றி உரையாடும் போது சில நண்பர்கள், நாவலில் பிற இன(இஸ்லாம்) வெறுப்பு தென்படுவதாகவும், மாற்று இனத்தவரின் உணவுகளையும் பழக்கவழக்கங்களையும் எள்ளுவதாகவும் விமர்சித்தார்கள். என் வாசிப்பில் இந்த எதிர்மறை கருத்துக்களை உணர முடிந்ததில்லை. அதனால் வாசித்த பகுதிகளை மறுவாசிப்பு செய்ய வேண்டியிருந்தது. சந்திரசேகரன் என்ற பாத்திரத்தின் வழியாகவும் அவன் பிறப்பு மற்றும் வளர்ப்புச்சூழலிருந்து வாசிக்கும் போதும் இவை யதார்த்தமான காட்சிகளாகவேபடுகிறது. 

1940களின் நிகழ்வுகள் 1970களில் நாவலாக பதிவு செய்யப்பட்டு 2010களில் வாசிக்கும் இன்றைய தலைமுறை வாசகனையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு இந்நாவல் பயணப்படுகிறது. Freshness இந்த நாவலில் மிக முக்கியமான அம்சம். அது இன்னும் பல வருடங்களுக்கும் இருக்கக்கூடும்.

மிகச் சமீபத்தில் ஹைதராபாத் சென்றிருந்தபோது டேங்க் பண்ட் சாலையில் வாகனங்கள் நெருக்கிக் கொண்டிருந்தன. ஏரிக்காற்றோடு பேசுவதற்காக நான் ’இரும்பு பெஞ்ச்’ மீது அமர்ந்தேன். அப்பொழுது ஒடிசலான தேகத்தில் கிரிக்கெட் உடையுடன் ஒருவன் மிதிவண்டியை அழுத்திக் கொண்டிருந்தான். “சந்துரு” என்று எனக்கு மட்டுமே கேட்குமளவுக்கு அழைத்துக்கொண்டேன். அவன் திரும்பிப்பார்க்கவில்லை. அநேகமாக என் அழைப்பு வேளச்சேரியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் அசோகமித்திரனுக்கு கேட்டிருக்கலாம்.

வா.மணிகண்டன்
=========
(எழுத்தாளர் அசோகமித்திரனின் "18வது அட்சக்கோடு" நாவல் செம்பதிப்பாக(Classic Series)காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் வெளிவருகிறது. இந்தப் பதிப்புக்கு நான் எழுதிய முன்னுரை இது)

4 எதிர் சப்தங்கள்:

ஜீவ கரிகாலன் said...

நண்பரே , தங்களின் முன்னுரை அந்த பதிப்பினை வாங்கத் தூண்டுகிறது, வாங்கிய பின் உங்களுக்கு தெரிவிக்கிறேன்..

ஜீவ கரிகாலன் said...

நண்பரே , தங்களின் முன்னுரை அந்த பதிப்பினை வாங்கத் தூண்டுகிறது, வாங்கிய பின் உங்களுக்கு தெரிவிக்கிறேன்..

துரோணா said...

அருமையான கட்டுரை மணிகண்டன் சார்.அசோகமித்ரன் எழுத்துக்களை வரையறை செய்வது மிகவும் சிரமமான காரியம்.நவீனத்துவத்தின் உச்சங்களை சாத்தியமாக்கிய பல சிறந்த சிறுகதைகளை அவர் இயற்றியிருக்கிறார்.அதே சமயம் "மானசரோவர்" நாவலில் பின்நவீனத்துவத்தின் சாயலையும் காண முடியும்.நவீனத்துவத்தின் வரையறைகளை தனது படைப்பாற்றலின் வீச்சினால் கடந்தவர் அசோகமித்ரன். அசோகமித்ரன் குறித்த கட்டுரை என்றவுடனே என் மனதில் முதலில் தோன்றியது,கதையின் களங்களையும் பாத்திரங்களையும் மிகவும் துல்லியமாக காட்சிபடுத்தும் அசோகமித்ரனின் மொழி ஆளுமை. \\அசோகமித்திரனின் கதைசொல்லும் பாங்கும், நாவல் ,முழுவதும் இழையோடும் நகைச்சுவையுணர்வும் காட்சிகளின் துல்லியத்தன்மையும் இந்நாவலின் மிகப்பெரிய பலங்களாக தோன்றுகிறது.\\
சரியான அசலான மதிப்பீடு.விமர்சகனாக அல்லாது அசோகமித்ரனின் வாசகனாக இந்தக் கட்டுரை எழுதியிருக்கிறீர்கள்.அதனாலேயே கட்டுரை இன்னும் அதிகமாக ஈர்க்கிறது.நான் 18வது அச்சக்கோடு நாவலை வாசித்ததில்லை. கூடிய விரைவில் வாசிக்க வேண்டும். அசோகமித்ரன் பற்றி பேசும்போது அவரது "தண்ணீர்" நாவலை குறிப்பிடாமல் இருக்க முடியாது. அதில் ஒரு கட்டம். "தன் வார்த்தைகள் ஒரு நிகழ்ச்சியின் பயங்கரத்தை சிறிதளவு கூடை பிரதிபலிக்காது என்று ஜமுனாவிற்கு தோன்றியது".எப்பொழுதும் என் நினைவில் படரும் வாக்கியம் இது. கவித்துவமும் யதார்த்தமும் இணைகிற புள்ளியை மிகவும் எளிமையான வார்த்தைகளால் கட்டமைக்க கூடியவர் அசோகமித்ரன்.
மிகவும் தெளிவான வார்த்தைகளால் அசோகமித்ரனின் 18வது அட்சக்கோட்டினை முன் வைத்திருக்கிறீர்கள் சார். வாழ்த்துக்கள்

Unknown said...

நல்லா எழுதியிருக்கீங்க மணிகண்டன்.
எனக்குப் பிடித்த அசோகமித்திரன் நோவேல் "கரைந்த நிழல்கள்"