காலச்சுவடு நூலகங்களில் வாங்கப்படக்கூடாது என விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இதழியலின் சுதந்திரத்திற்கு ஆதரவாக முடிவுக்கு வந்தது குறித்து மகிழ்ச்சி. எனது வாழ்த்துக்களும்.
இந்த வழக்கின் வெற்றிச் செய்தி சில ஆண்டுகளுக்கு முன்னதாக நான் எதிர்கொண்ட ஒரு சம்பவத்தை நினைவுபடுத்துகிறது.
காலச்சுவடு இதழ் நூலகங்களில் வாங்கப்பட்டு கடந்த ஆட்சியில் திடீரென நிறுத்தப்பட்டபோது பலரது எதிர்வினையையும் காலச்சுவடு கோரியிருந்தது. பல நண்பர்கள் 'கருத்து' அமைப்புக்கு தங்களது எண்ணங்களை மின்னஞ்சல் மூலமாகவும், அறிக்கைகள் வாயிலாகவும் தெரியப்படுத்தினார்கள். அந்தச சமயத்தில் அரசின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வதற்கு குரல்கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை 'கருத்து' அமைப்பின் நிறுவனர்களான கனிமொழிக்கும், கார்த்திக் சிதம்பரத்திற்கும் ஒரு மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தேன். இது குறித்து தனக்கு வந்த மின்னஞ்சல்களுக்கும், வேண்டுகோள்களுக்குமான பதிலை ஒரு பொதுவான அறிக்கை மூலமாக கார்த்திக் சிதம்பரம் பத்திரிக்கைகளில் வெளியிட்டிருந்தார். கனிமொழி எந்த பதிலும் வெளியிட்டதாக எனக்கு நினைவில் இல்லை.
காலச்சுவடுக்கு ஆதரவான மின்னஞ்சல்கள், அறிக்கைகள் ஆகியவை அதற்கடுத்த மாதத்தின் காலச்சுவடு இதழில் பிரசுரமாகியது. அந்த மாதத்தில் பணி நிமித்தமாக நான் மலேசியாவின் பினாங்கு நகரத்தில் இருந்தேன். சில நண்பர்கள் இந்த கடிதத்தின் பிரசுரம் பற்றி தெரிவித்திருந்தார்கள். அப்பொழுது விசா புதுப்பிப்பிற்காக இரண்டு நாட்கள் மட்டும் இந்தியா வந்து திரும்ப வேண்டியிருந்தது. அப்பொழுது ஹைதராபாத்தில் என்னுடன் தங்கியிருந்த நண்பரும் வேறொரு தேசத்திற்கு சென்றிருந்ததால், அந்த பத்துக்கு பதினொன்று அறையில் நிரம்பிக்கிடந்த தூசிகளின் மீதாக பாய் விரித்து அழுக்கடைந்த தலையணையில் தலை வைக்க விருப்பமில்லாமல் கைகளை தலைக்கு அணைத்துக் கொண்டு படுத்திருந்தேன்.
அந்த இரவில் வந்த அநாமதேய அழைப்பின் வசவுகளும் மிரட்டல்களும் இன்னமும் என் நினைவில் சாரலாக இருக்கின்றன. வெளியில் கசகசவென மழை பெய்து கொண்டிருந்தது. என் இலக்கிய செயல்பாடுகள் அத்தனையும் அந்த கடிதத்தோடு முடிவுக்கு வந்துவிடும் எனவும் எனது மீது முத்திரை குத்தப்பட்டுவிட்டதாகவும் பேசத் துவங்கியவர், நான் ஏதோ பதில் சொல்லத் துவங்க வேறொரு தொனியில் எனக்கான அர்ச்சனைகளை ஆரம்பித்தார். அந்த மனிதர் உதிர்த்த சொற்களில் பெரும்பாலானவை 'வக்கிரம்' அல்லது 'குரூர வன்மம்' குறித்தான ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படுமாயின் அதில் சேர்க்கத்தக்கவை. பாதியில் இணைப்பைத் துண்டித்துவிட்டு, இந்தியாவில் இருந்த இரண்டு நாட்களும் எனது அலைபேசியை 'சுவிட்ச் ஆஃப்' செய்துவிட்டு சுற்றிக் கொண்டிருந்தேன்.
ஒரு இதழுக்கு ஆதரவாக அனுப்பியிருந்த நான்குவரி மின்னஞ்சல் இத்தனை கீழ்த்தரமான எதிர்வினையை பெற்றுத்தரும் என்பது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. இலக்கிய உலகத்தைச் சுற்றி பின்னியிருக்கும் மட்டரகமான அரசியலின் ஒரு முகத்தை உணர்ந்த தருணம் அது.உலகின் சிதைவுகளுக்குள் எனது இருப்பை வெளிப்படுத்துவதை தவிர வேறு எந்தவிதமான நோக்கமும் இல்லாமல் மழுங்கலான மனநிலையில் இருந்த எனக்கு அது அயற்சியை மட்டுமே தந்தது.
இந்தியா திரும்பிய பிறகு தொடர்ச்சியாக இலக்கிய கூட்டங்களில் பங்கெடுப்பதும் புதிய நண்பர்களைச் சந்திப்பதும் கொஞ்சம் எழுதுவதும் நிறைய வாசிப்பதும் என இலக்கியத்தில் இயங்கும் மனநிலையிலேயே இருந்தேன். ஒவ்வொரு ஆண்டும் சென்னை சங்கமத்தில் தொடர்ந்து கலந்து கொண்டு கவிதையும் வாசித்து வந்தேன். இந்தச் சூழலில்தான் கடந்த ஆண்டு சென்னை சங்கமத்தில் கலந்து கொள்ள வேண்டுமென அழைத்தபோது ஒத்துக் கொண்டேன்.
தொடர்ச்சியாக சங்கமம் குறித்தான செய்திகளும் அதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டவர்களும் பற்றிய எதிர்மறையான எண்ணம் உருவானபோது கவிதைச் சங்கமத்தில் கவிதை வாசிக்காமல் புறக்கணிக்கிறேன் என ஒரு மின்னஞ்சலை நண்பர்கள் பலருக்கும் அனுப்பியிருந்தேன். இந்த மின்னஞ்சல் சவுக்கு இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டது. ஞாநி அவர்கள் கல்கியிலும், டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் என்னைப் பற்றிய குறிப்பினை எழுதியிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து இணையத்தளங்களில் உருவான எதிர்வினைகள் எனக்குள் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. சில தனிமனித வசைகளைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து எதிர்வினைகளும் கருத்தியல் ரீதியான மோதல்களாகவே இருந்தன. இவை முன்னரே செய்திருக்க வேண்டிய சில முடிவுகளை எனக்குத் உணர்த்தினவே தவிர, வருத்தமளிக்கவில்லை.
சங்கமத்தில் கலந்து கொள்வதாகச் சொல்லிவிட்டு இடையில் கலந்து கொள்ளப்போவதில்லை என்றால் என்னை அழைத்த நண்பர்களுக்கு சங்கடம் வரலாம் என்று அவர்களை தொடர்புகொள்ள முயன்றபோது எந்த பதிலையும் பெற முடியவில்லை.
அதே நேரத்தில் தொலைபேசி வாயிலாக நான் எதிர்கொண்ட மிரட்டல்கள் வகைவகையானவை. ஒருவர் புறக்கணிப்பு என்னும் எனது செயலை பாராட்டுவதாகக் கூறி தனது உரையாடலை தொடங்கி மிரட்டும் தொனியில் எனது நிறுவனத்தின் பெயர், நிறுவனத்தில் வகிக்கும் பதவி,மேலாளரின் பெயர் போன்ற விவரங்களைக் கேட்கத் துவங்கினார். பிறகு தான் மத்திய அரசில் மிகப்பெரிய பதவியில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். இதன் பிறகாக அவர் பேசியது எதுவும் நினைவில் பதியவில்லை.
இன்னொருவர் எனது அறிக்கையினால் உளவுத்துறையின் கழுகுப்பார்வைக்குள் நான் வந்துவிட்டதாகவும், இதிலிருந்து தப்பிக்க அந்த அறிக்கையை ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக நகைச்சுவையாக வெளியிட்டுவிட்டேன் என்று ஒரு பதிவு எழுதினால் விளைவுகள் எதுவும் வராமல் பார்த்துக் கொள்ள தான் முயல்வதாகச் சொன்னார். இன்னொரு நண்பர் என்னைப்பற்றிய விவரங்களை 'மேலிடத்தில்' கேட்பதாக தெரிவித்தார். இப்படியான மிரட்டல்கள் ஒரு புறமும் , அச்சில் வர முடியாத வசவுகளின் தனிப்பட்டியல் ஒரு புறமும் அடுத்து வந்த சில நாட்களுக்கு மன உளைச்சலைத் தரத்துவங்கின.
நான் எதிர்கொண்ட இந்த எதிர்வினைகள் குறித்து எனக்கு எந்தவிதமான புகாரும் இல்லை இதைப்பற்றி எந்த இடத்திலும் குறிப்பிட்டதுமில்லை. மிக அரிதாக சில நண்பர்களிடம் பேசியிருக்கிறேன். அதே சமயத்தில் இந்த பதிவு அரசியல் ரீதியாக தோற்றவர்களின் மீது புகார் அளிக்கத்துவங்கும் காலகட்டத்தின் நீட்சியும் அன்று.
எழுத்து, சொல்,செயல் என யாவும் நுண்ணரசியலால் பின்னப்பட்ட இலக்கியச்சூழல்தானே இது. இதை தெரிந்தும் விரும்பியுமே இருந்து கொண்டிருக்கிறேன். அதே சமயத்தில் அறிவுஜீவிகளாலும், சிந்தனையாளர்களாலும் நிரம்பியிருப்பதான சித்திரத்தில் அருவருப்பான நிகழ்வுகளை பதிவு செய்யவே இந்தக் கடிதம்.
[இந்தக் கடிதம் இம்மாத(ஆகஸ்ட் 2011) காலச்சுவடில் பிரசுரமாகியிருக்கிறது]
2 எதிர் சப்தங்கள்:
நம் உணர்வுகளை காண்பிக்க கூட நமக்கு உரிமையில்லை..
இந்த மிரட்டல்களை பற்றி வாசிக்கையில் பிரமிளின் சாசனம் கவிதையின் முடிவு வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன...
காலச்சுவடு நீராராடியா உடனான தொலைபேசி உரையாடல்கள் முதற்கொண்டு பலவற்றை வெளியிட்டபடியால் இந்த மறைமுக மிரட்டல் அவர்களுக்கு..
கவிஞர்களை புகழ்பாட மட்டுமே ஆட்சியாளர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்...
வழக்கில் வெற்றி கண்ட காலச்சுவடுக்கு வாழ்த்துக்கள்
அன்பு மணிகண்டன்,
உங்களை மிரட்டியவர்களின் பெயர், முகவரி, ஆதி அந்தம் உட்பட அனைத்தையும் நீங்கள் ஏதோரு தயவுமின்றி இந்தத் தருணத்திலாவது வெளியிட வேண்டும். நீங்கள் என்னென்ன மன உளைச்சலுக்கு, அவதிக்கு ஆளானீர்கள் என்பதையும் இந்த உலகிற்குத் தெரிவித்துவிடவேண்டும். எவனையும் கண்டு அஞ்சும் வரையே அவன் உறுமல் கேட்டுக்கொண்டிருக்கும். நமது அச்சமே அவனை இயக்கும் விசை. அந்தத் தருணத்தில் உங்கள் கைப்பேசியை அணைத்ததைவிட அவற்றைப் பதிவுசெய்திருக்க வேண்டும். இனி எதுவும் அநாமதேய மிரட்டல்கள் எனில் கைப்பேசியிலேயே குரல்பதிவு செய்யுங்கள். அடுத்த நொடியிலேயே அதை இணையத்தில் ஏற்றுங்கள். எவனுக்குக் கூப்பிட்டு மிரட்டும் தைரியம் வரும் என்று பார்க்கலாம் !
Post a Comment