Jan 21, 2011

காலச்சுவடு கவிதைகள்

தொலைக்கப்பட்ட குண்டுகள்

ஆலிலைகள் நிறைந்திருக்கும் பள்ளிக்குள்
வெடித்திருக்க வேண்டிய குண்டு ஒன்றை
வைத்த இடம் தெரியாமல் தேடுகிறார்கள்

9:17க்கு வெடிக்கும் என்ற
தொலைபேசிக் குரலில்
உருவமெடுத்தவனின் சொற்களிலிருந்து
தேட ஆரம்பித்தவர்கள்
முதலில்
குட்டிச் சூரியன்கள் உள்ளிறங்கும்
வகுப்பறைகளை அலசினார்கள்
பின்னர்
நூற்றாண்டு பாசி படிந்த
தண்ணீர்த் தொட்டிக்குள் நுழைந்தவர்கள்
குண்டுகளை விடுத்து
ஊறிக்கிடந்த
கதைகளை எடுத்துவந்தார்கள்

துரை வாத்தியாரையும்
லாவண்யா டீச்சரையும்
இணைத்து வரையப்பட்ட
படங்களாலான கழிவறையிலோ
புன்னகையோடு வெளியேற்றப்பட்ட
சிறுவர்களின் புத்தகப் பைகளிலோ
குண்டு கிடைக்கவில்லை

தேடிச் சலித்தவர்கள்
ஓய்வெடுக்க விரும்புகிறார்கள்

வெளிச்சத்தின் செதில்கள்
உதிரத் துவங்கிய மாலையில்
தோல்வியை
ஏற்றுக்கொள்ள விரும்பாமல்
கிடைத்த தகவல்
வெறும் வதந்தி என்று
அறிவிக்கிறார்கள்
சத்யன் நம்புகிறான்-
கிடைக்காத குண்டு
அசைவுறாத காலத்தின்
ஒரு கணத்தில்
வெடிக்கக்கூடியது என்றும்
தான்
புரட்டிப் படுக்கும் இந்தத் தலை
சிதறியிருக்க வேண்டியது-
கொஞ்சம் இடம் மாறியதில்
தப்பித்துக்கொண்டது என்றும்.

==============

கருணையின் கடவுள்

மரணத்திற்கும்
உடல் சிதறலுக்குமான
இடைவெளியில்
நிகழ்ந்த விபத்தொன்றில்
சிவப்புச்சாயத்தில் விழுந்த
துணியெனக் கிடந்தவனை
நிலம் உரச வெளியில் இழுத்தார்கள்

அனிச்சையாக நகரும்
கரங்களின் சிவப்புப்பட்டையைப்
புதிரான ஓவியமாக்கியவன்
சில பெண்களின்
கருணையைப் பெற்றுக்கொண்டான்

நினைவு வந்த கருநாளில்
அவனிடம்
தண்டுவடம் முறிந்துபோனதென
சொன்னபோது
இடுப்புக் கீழ் செயல்படாதென்ற
துக்கத்தின் கண்ணீர்
ஈரமாக்கிய தலையணையிலிருந்து
கருணையின் கடவுள் தோன்றினார்
மது அருந்துவதிலும்
சிகரெட் உறிஞ்சுவதிலும்
தடையில்லை என்றதில்
சற்று ஆசுவாசமடைந்த
மெலிபவனின் பொழுதுகள்
காற்றில் அலையும்
டிஜிட்டல் உருவங்களால்
வடிவமைக்கப்படலாயிற்று

சலனமில்லாத வெறும் பகலில்
ஒரு தலைவன் மார்க்ஸியம் பேசிக்கொண்டிருக்கிறான்
பழைய கிரிக்கெட் போட்டியில் ஒருவன் பந்தை விரட்டிக்கொண்டிருந்தான்
கவிஞன் என்று சொல்லிக்கொண்டவன் தன் பிரதாபங்களை அடுக்குகிறான்
பெட்ரோல் விலை பற்றி வட்டமாக அமர்ந்த நால்வர் அரிதாரங்களுடன் பேசுகிறார்கள்
காட்டெருமைகளால் நிரம்பிய வனத்தில் ஒரு யானை தனித்து அலைகிறது

சலித்து
சேனலை மாற்றியவன்
உந்திச் சுழி தெரிய
நடந்துகொண்டிருந்த
நெடுந்தொடர் நாயகியை அழைக்கிறான்

யாரும் இல்லாத தனிமையில்
அவள்
டிவியில் இருந்து இறங்கி வருகிறாள்
கண்களை மூடிக்கொண்டவனுடன்
சல்லாபித்துத் திரும்பியவள்
இனிமேல்
வரப்போவதில்லை எனச்
சொல்லிச் செல்கிறாள்

அதிர்ந்தவன்
காரணம் அறிய
எத்தனிக்கும் கணத்தில்
வேறொரு விளம்பரப் பெண்
ஆட
வந்துவிடுகிறாள்.

============

குரூரத்தின் ஊசி

குரூரத்தின் கிளைகளுடைய
மரத்தில் வசித்துவரும்
உங்களிடம்
பனி ஊசி ஒன்றிருக்கிறது.

வெளிக்காற்றில் உருகிவிடாத
அதை
உங்களிடம் அகப்படுபவர்களிடம் எல்லாம்
பரிசோதிக்கிறீர்கள்.
அது உருகுவதில்லை
என்னும் ஆணவத்தோடு.

முன்னொரு நாள்
ஒருவனின் நகக்கண்ணில் நுழைத்தீர்கள்
பிறகு
அவளது நுண்ணிய விழி மைய வெண்பரப்பில்
இன்று
கிடைத்தவனின் குரல்வளையிலும் முயன்று பார்த்தீர்கள்.

உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை-
மூன்று இரவுகளாக
உறக்கம் விழித்தவனின்
சிவந்த கண்களை
நீங்கள்
பாக்கிவைத்திருக்கும் வரைதான்
அந்த ஊசிக்கு
ஆயுள் என்று.

வா. மணிகண்டன்

http://www.kalachuvadu.com/issue-133/page96.asp


4 எதிர் சப்தங்கள்:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்விற்கு நன்றிகள்

kishan said...

arumaiyana kavidhaigal

சிவகுமாரன் said...

நிறைய யோசிக்க வைக்கும் கவிதைகள்.

மதுரை சரவணன் said...

அருமை.வாழ்த்துக்கள்