Sep 30, 2010

மரணம் தின்னும் காமம்


காமத்தால் நிரம்பியிருக்கும்
தன்
குளிர்ந்த இரவொன்றில்
இவன்
மரணத்தை நினைக்கத் துவங்குகிறான்

மரணத்தின் நிறமென
அடித்து இழுக்கப்பட்ட
பிணத்தின்
அடர் சிவப்பு குருதிப் பட்டை
கொன்று
எரிக்கப்பட்ட உடற்கருமை
பீய்ச்சிய
விந்தின் வெண்மை
எதுவும் பொருந்தவில்லை

சாவின் உருவமென
ஓடிய நீரின் ஒழுங்கீனம்
நடுங்கும் நெருப்பின் நடனம்
முலைகளில் பதிந்த விரல்வரிகள்
எதுவும் ஒப்புதலில்லை

மரணத்தின் குரலென
குரல்வளையில் துளையிடப்பட்ட
குழந்தையின் வீறிடல்
நொறுங்கும் கண்ணாடியின் ஒசை
கலவியின் உச்சத்தில் முனகும்
பெண்ணின் குரல்
எதுவும் பொருத்தமில்லை

சாவின் வடிவமென
விஷமேற்றப்பட்ட ஊசி
விட்டத்தில் அசையும் நைலான் கயிறு
தரை தெரியாத மலையுச்சி
எதுவும் அமையவில்லை

நள்ளிரவு தாண்டிய
நடுங்குதலில்
மரணம் பிடிபடாத
துக்கத்தில்
இவன்
இப்பொழுது
மரணத்தை விடுத்து
காமத்தின் நுனியை தொட
முயல்கிறான்

உதிர்ந்து கொண்டிருக்கின்றன
காமமும்
மரணமும்
பந்தலிருந்து
நழுவிச் சொட்டும்
நீர்த்திவலைகளென.

4 எதிர் சப்தங்கள்:

R. Gopi said...

\\தரை தெரியாத மலையுச்சி\\

சாவிற்குப் பின்னால் ஒருவேளை அதைக் காணும் வாய்ப்பு வரலாம்.

அல்லது அங்குப் போவது நிச்சயம் என்றால் அதற்காகவே சாகலாம்.

நல்ல கவிதை.

VELU.G said...

ரொம்ப நல்லாயிருக்குங்க

புபேஷ் said...

உதிர்ந்து கொண்டிருக்கின்றன
காமமும்
மரணமும்
பந்தலிருந்து
நழுவிச் சொட்டும்
நீர்த்திவலைகளென.

arumai arumai...

Muthasen Kanna said...

nalla irukku