Jun 3, 2010

உதிரிகள் 04-06-2010: பதிவுலகம், கவிதை, செம்மொழி

ரு வாரமாக திரும்பிய பக்கமெல்லாம் ஆணாதிக்கம், பெண்ணியம், பார்ப்பனீயம், துரோகம் என்றெல்லாம் திரும்பத் திரும்ப எழுதுகிறார்கள். சலிப்பாக இருக்கிறது. தொடக்கம் தெரியாமல் புதிதாக படிப்பவர்கள் மண்டை காய்ந்து விடுவார்கள். தொடக்கம் தெரிந்திருந்தாலும் கூட இடையில் ஓரிரண்டு கட்டுரைகளை விட்டவர்களின் திண்டாட்டமும் கிட்டத்தட்ட அதுவேதான்.

இணையத்தில் உலவும் பெரும்பான்மையோரினால் இந்த விஷயம் கவனிக்கப்படுவதாக இருப்பதால் தன் மீது வெளிச்சம் விழுவதற்காக துள்ளிக் கொண்டிருக்கும் சிலரையும் பார்க்க முடிகிறது. தனிமனிதர்களின் புகழ் போதைகளை நிராகரித்துவிட்டு, இந்தப் பிரச்சினையை கருத்துருவாக்கங்களின் அடிப்படையில் மட்டுமே நகர்த்த முடியும் என்று துளியும் நம்பிக்கையில்லை.

இந்தச் சிக்கலில் உருளும் தலைகளின் எண்ணிக்கையை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. எந்தக் கருத்தைச் சொன்னாலும் ஏதாவது ஒரு தரப்பினரால் உருட்டப்படும் தலைகளின் எண்ணிக்கையில் ஒன்று அதிகமாகிவிடும். இந்தப் பிரச்சினையில் நடுநிலை என்றெல்லாம் எதுவும் இருக்க முடியாது. மழுப்பலாக வேண்டுமானால் எதையாவது சொல்லிச் செல்லலாம். ஆனால் அதற்கு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துவிடுவது உத்தமம்.

வினவின் பதிவில் எழுதிய பின்னூட்டம்தான் என் மனநிலையின் சாராம்சம்.

பூக்காரி கட்டுரைக்கு எனது மிகக் கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

பைத்தியகாரன் தடுமாறியிருக்கிறார்.அவர் தனது கருத்துக்களை எந்தவிதமான மறைவும் இல்லாமல் தனித்தே தெரியப்படுத்தியிருக்கலாம். அவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள மேற்கொண்ட முயற்சிகளுக்கு எனது வருத்தங்களும்,கண்டனமும்.

தொடர்ந்து பூனைக்குட்டிகளும் பெருச்சாளிகளும் வெளியில் வந்து கொண்டேயிருக்கின்றன. எப்பொழுது நிற்கும்?
=====
உப்புக் கவிச்சையில் மிதந்து கொண்டிருந்த ஆணுறை
நடத்துனரின் எச்சில் ஈரத்தோடு
கையில் சேர்ந்த
பத்து ரூபாயில்
லோகுவுக்கான
சங்கேத குறியீட்டை
இந்து
எழுதியிருந்தாள்

சிவப்பு மையில்
பிரியம் நடுங்கிய
காதல் கடிதத்தை
தவறுதலாக பெற்றுக் கொண்ட
10.40 லிருந்து
விரல்கள் வியர்க்கத் துவங்கின

இந்துவுக்கு ஒரு முகமும்
லோகுவுக்கு இன்னொரு முகமும்
பின் வரிசையில் அமர்ந்திருந்த
காதலர்களிடம் இருந்து உருவான
11.32க்கு தான்
மகுடஞ்சாவடி நிறுத்தம் வந்தது

11.33 க்கு
DTS ல் சல்லாபித்திருந்த
நாயகனும் நாயகியும்
இறங்கி
மெளனம் விரவிய
இருளுக்குள் சென்றுவிட்டார்கள்

அந்திப் பெருமழையில் பாதை தொலைந்ததாகவும்
தீராத துக்கத்தோடு யாரோ துரத்துவதாகவும்
உறக்கத்தில்
கண்கள் சுழன்றபோது
சேலம் வந்திருந்தது

12.07 க்கு
முழுவதும் விரியாத கண்களோடு
குளிர்பானம் குடித்து
சிறுநீரோடையில் பங்களிக்கையில்
யதேச்சையாக துழாவிய
விரல்களில் காதல் கடிதம் கிடைக்கவில்லை

அப்பொழுது
உப்புக் கவிச்சையில் மிதந்து கொண்டிருந்த
ஆணுறையொன்றை வாஞ்சையோடு
பார்த்துவிட்டு
அடுத்த பேருந்துக்கு நகர்ந்துவிடுவதைத் தவிர
எனக்கு
இலக்கு எதுவும் இருக்கவில்லை
===========
ரோடு மாவட்ட திமுக இலக்கிய அணித் தலைவர் குமணன் கோபிச் செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர்.

அரசியல்வாதிக்கான எந்த அடையாளமுமில்லாத அரசியல்வாதி என்பதாலேயே அவரோடு பழகும் போது இதமான சிநேகம் இருக்கும். அவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது தனக்கு 'செம்மொழி' என்பதன் அடிப்படைத் தகவல்களை ஈரோடு மாவட்டத்தில் பரப்புவதற்கான விருப்பம் இருப்பதாக் தெரிவித்தார்.

ஒரு பக்க துண்டறிக்கையில் செம்மொழி என்பதற்கான கூறுகளை தெளிவாக்க முடியுமா எனக் கண்டறிய அதற்கான தகவல்களை சேகரித்தேன். இணையத்தில் அதிகத் தகவல்கள் இல்லை.

செம்மொழி என்பது என்ன?

செம்மொழி (Classical language)என்பது ஒரு மொழியை அதன் தொன்மை, இலக்கிய வளம் ஆகிய அடிப்படையிலும் இன்ன பிற தகுதிகளையும் கொண்டு செய்யப்படும் வகைப்பாடு ஆகும்.

  • செம்மொழி என்று கருதப்படுவதற்கு அந்த மொழியானது மிகத் தொன்மையானதாக இருக்க வேண்டும்.
  • மொழியின் தோன்றல் ஏனைய மொழிகளைச் சாராமல் நிகழ்ந்திருக்க வேண்டும்.
  • மொழியானது பிறமொழிகளைச் சார்ந்து இராமல் தனித்து இயங்குதல் வேண்டும்.
  • தனக்கென சுயதன்மையுள்ள பாரம்பரியத்தை கொண்டிருக்க வேண்டும்,மொழியின் பாரம்பரியமானது பிற இனம் அல்லது மொழியின் பாரம்பரியத்தைச் சார்ந்திருக்காமல் சுயமாக உருவாகி வளர்ந்திருக்க வேண்டும்.
  • மொழியில் வளமான பழங்கால இலக்கியங்கள் இருக்க வேண்டும்.

உலகின் செம்மொழிகள் :

  • தமிழ்
  • கிரேக்க மொழி
  • சமஸ்கிருதம்
  • இலத்தீன்
  • பாரசீக மொழி
  • அரபு மொழி
  • எபிரேயம்
  • சீன மொழி

தமிழ் ஏன் செம்மொழி?

  1. திராவிட மொழிகளில் முதலாவதான தமிழ் 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இலக்கியப் பழமை வாய்ந்த மிகத் தொன்மையான மொழி. இந்தியாவில் உருவான பிற மொழி இலக்கியங்கள் யாவும் தமிழில் உருவாகிய தொல்காப்பியத்திற்கு பிறகாகவே தோன்றின.
  2. தமிழ் எந்த மொழியையும் சார்ந்திருக்கவில்லை.தமிழின் யாப்புகள், இலக்கண வரையறைகள் யாவும் சுயசார்புத் தன்மையுடன் உருவானவை. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழின் இலக்கியங்கள் பிற எந்த மொழி இலக்கியத்தின் சாயலுமற்ற தனித்தன்மையானவை.
  3. தமிழ் மொழியின் இலக்கியங்கள் உலகின் செம்மொழிகளின் இலக்கியங்களோடு இடம்பெறுவதற்கான தகுதிகளில் எந்த விதத்திலும் தாழ்ந்தவையன்று. தமிழின் செம்மொழித் தகுதிக்கு சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள், மணிமேகலை, முத்தொள்ளாயிரம் போன்றவை உள்ளன.
  4. தமிழ் நவீன இந்தியாவின் பண்பாட்டிற்கும் பாரம்பரியத்திற்கும் தேவையான அடிப்படையை வழங்கிய தனித்து இயங்கும் மொழி. ஐரோப்பிய நாகரீகத்தை அறிந்து கொள்ள கிரேக்கம், இலத்தீன் மொழிகள் உதவுதது போல் இந்திய வரலாற்றை அறிய தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் தேவையாக உள்ளன.


இவை போன்ற இன்னும் பல தனித்துவமும் பெருமையும் மிக்க பண்புகளால் தமிழ் மொழியானது இந்திய நடுவண் அரசால் செம்மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 12.10.2004 இல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

====================

சந்தேகம்:

நடுவண் அரசு மட்டும் தமிழை செம்மொழி என அறிவித்தால் போதுமா என்றும் சர்வேதச அமைப்பு எதுவும் தமிழை செம்மொழி என்று அறிவிக்கத் தேவையில்லையா என்றும் ஒரு வினா இருக்கிறது. அப்படி எந்தவிதமான அதிகாரப்பூர்வ சர்வேதச அங்கீகாரத்தையும் இணையத்தில் கண்டறிய முடியவில்லை.
====================
நச் கமெண்ட்: (நண்பரொருவர் தனது ஆர்குட் பக்கத்தில் எழுதியிருந்தது)

நாட்டை பிரித்து குடும்பத்தாருக்கும் வீட்டை மக்களுக்கும் கொடுத்த நம் முதல்வர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

8 எதிர் சப்தங்கள்:

பிச்சைப்பாத்திரம் said...

நல்ல பதிவு மணிகண்டன். குறிப்பாக இறுதி வரிகள் நிஜமாகவே 'நச்'. :)

gulf-tamilan said...

/நாட்டை பிரித்து குடும்பத்தாருக்கும் வீட்டை மக்களுக்கும் கொடுத்த நம் முதல்வர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்/
:)))

உண்மைத்தமிழன் said...

இறுதி வரிகள் நச்..!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நாட்டை பிரித்து குடும்பத்தாருக்கும் வீட்டை மக்களுக்கும் கொடுத்த நம் முதல்வர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
//

நூத்துல ஒரு சொல்!

எது வெலை அதிகம்னு(வீடா, நாடா?) தெரியாம இருக்கிறவங்க இருக்கிற வரைக்கும் அவங்க ராசா தான்!

வாழ்க பகுத்தறிவு!

சென்ஷி said...

இறுதிவரிகள் அருமை..

கவிதை பரவால்ல.. :))

//
சிவப்பு மையில்
பிரியம் நடுங்கிய
காதல் கடிதத்தை
தவறுதலாக பெற்றுக் கொண்ட
10.40 லிருந்து
விரல்கள் வியர்க்கத் துவங்கின//

கவிஞர்களுக்கு, கவிதைகள்ல வார்த்தைகள் தேர்ந்தெடுத்து சேர்க்கறது பெரும்பாடா இருக்கும் போல..

//உப்புக் கவிச்சையில் மிதந்து கொண்டிருந்த ஆணுறை//

மிதத்தல் அப்படிங்கற வார்த்தைகள் கொடுக்கும் உணர்வு கவிதை முழுக்க வரலைன்னு தோணுது.


(கமெண்ட்ல வெர்ட் வெரிஃபிகேசன் எடுத்துடுங்க)

Anonymous said...

தொல்காப்பியம் என்பது 5000 ஆண்டுகளுக்கு முன் வந்த அகராதி என்று நினைக்கிறேன். ரொம்ப சின்ன வயதில் படித்து.

எங்கள் தமிழ் பாட புத்தகத்தில், உலகின் தொன்மையான நான்கு மொழிகளில் தமிழ், வடமொழி(சமஸ்கிருத), லத்தீன் மொழி மற்றும் கிரேக்க மொழி உண்டு என்று படித்தோம். ஏன் அவர்கள் சீன் மொழியைச் சொல்லவில்லை என்று தெரியவில்லை. சீன நாகரிகம், எகிப்திய நாகரிகம் எல்லாம் பழமையான நாகரிகங்கள் என்றால் அவற்றின் மொழியுன் தொன்மையான மொழிகளில் வந்திருக்கவேண்டும். ஏன் வரவில்லை என்று தெரியவில்லை.

அருமையான எழுத்து.

Please remove the word verification.

ILA (a) இளா said...

செம்மொழிப் பற்றி தனிப்பதிவாகவே போட்டிருக்கலாம். சேர்த்து வைப்பதற்கு வசதியாக இருந்திருக்கும்

Anonymous said...

Do you know that Chinese lang. does not have alphabets. Please REMOVE the word verifications. Its kind of annoying. Thanks