23.04.1983 இல் இறந்து போன ராயப்பனை
எடுத்து வந்த போது
இந்த மயானம் ஊருக்கு வெளிப்புறமாக இருந்தது
அன்று
சித்திரை மழையில் சிக்கிக் கொண்டவர்கள்
மழையோடு சேர்த்து ராயப்பனையும் சபித்தார்கள்
மயானத்தை அமானுஷ்யம் சுற்றி வருவதாகச் சொன்னவர்கள்
அருகில் வீடு கட்டிய ரவி
11.07.1989 இல் வாகனத்தில் நசுங்கியபோது
தங்களின் அனுமானத்தை நிச்சயமாக்கிக் கொண்டார்கள்
21.02.1991 இல் தூக்கிலிட்டுக்கொண்ட சங்கரியை
14.08.1985 இல் இறந்தவனுக்கும்
நாள் குறிக்காமல் புதைக்கப்பட்ட இன்னொருவளுக்கும் இடையில்
புதைத்தவர்கள்
அடுத்தநாள்
மயானத்தை விரிவுபடுத்தக் கோரி மனுவும் கொடுத்தார்கள்
மயானத்தை ஒட்டி
ஒரு தொழிற்சாலை வருவதான தகவலைப் பெற்றுக் கொண்டவர்கள்
வாடகைக்கு விடுபவர்களை பேய்கள் தாக்குவதில்லையென்றும்
குடியிருப்பவர்களையே குறி வைப்பதாகவும் உறுதிப் படுத்திக் கொண்டு
வீடு கட்டத் துவங்கினார்கள்
சில கட்டிடங்கள் முளைக்கத் துவங்கிய பகுதியில்
மழைக்கு ஒதுங்குவதிலும்
வெயிலுக்கு நிழல் சேர்வதிலும் பெரிய சிரமமிருக்கவில்லை
1998 இல் மாரடைப்பில் இறந்த ரகுபதியை
எண்பதுகளில் சாய்ந்த
எவனோ ஒருவன் மீதுதான் படுக்க வைத்துவிட்டு வந்தார்கள்
2000 ஆம் ஆண்டில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பிரம்மாண்ட நிழல்
புதைக்கப்பட்டவர்கள் மீது விழுந்த போது
மயானத்தின் சுவர்களையொட்டி
இளநீர் கடை
கேரள பேக்கரி
ஆந்திரா மெஸ்
லேடீஸ் டெய்லர்ஸ்
துவக்கியவர்கள்
இன்று பணக்காரர்களாகிவிட்டார்களாம்
17.05.2010 இல் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபாத்தை
ஓய்விக்க எடுத்து வந்த போது
மயானம் இந்த பெருநகரத்தின்
சிறு துரும்பாகிவிட்டது
இங்கு
ஏற்கனவே இடம்பிடித்த
நூற்றுக் கணக்கானவர்கள் மீதே
புதியவர்களை புதைக்கிறார்கள்
இந்தப் பகுதியின் வல்லவர்கள்
தங்களின் பிரியமானவர்களை புதைத்த இடத்தின் மீது
கான்கிரீட்டால் ஒரு சதுரக் கட்டடத்தை எழுப்புகிறார்கள்
சாமானியர்கள்
துலுக்கமல்லி பூவையோ செவ்வந்திப் பூவையோ தூவிவிட்டு
செல்கிறார்கள்
மயானத்தின் ஒற்றை மரத்தில்
தலையைச் சிலுப்பிக் கொண்டிருக்கும் குருவி
பறப்பதற்கு எத்தனிக்கையில்
இவன்
நெரிசலில் தொலைந்து போன
தன்
செல்போனைத் தேடிக் கொண்டிருக்கிறான்.
May 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 எதிர் சப்தங்கள்:
கொஞ்சம் வெட்டிருக்கலாம்! மற்றபடி அருமையான பிரதி! நல்ல பதிவு நன்றி நிசப்தம்
உங்களின் குறிப்புகள் ஒவ்வொன்றும் பல வார்த்தைகள் அற்ற வலியை உள்ளத்தில் ஏற்படுத்துகிறது . பகிர்வுக்கு நன்றி !
//23.04.1983 இல் இறந்து போன ராயப்பனை
எடுத்து வந்த போது
இந்த மயானம் ஊருக்கு வெளிப்புறமாக இருந்தது
அன்று
சித்திரை மழையில் சிக்கிக் கொண்டவர்கள்
மழையோடு சேர்த்து ராயப்பனையும் சபித்தார்கள்//
கொதிக்கும் கடுங்கோடை மதிய வெயிலில் வெறுங்காலோடு(சாஸ்திரமாம்) தார் ரோட்டில் நடந்து மயானம் வரை சென்ற தாத்தாவின் இறுதி ஊர்வலம் ஒருகணம் நிழலாடி போனது.
கவிதை [லேபிள் போடுங்கப்பா..மடக்கி மடக்கி எழுதியிருக்கீங்கன்ற நம்பிக்கையில-விளாட்டுக்கு :)] ரொம்ப நல்லாயிருக்கு நண்பா...
உங்களின் எழுத்து நடை அருமை..
அன்புடன்
www.narumugai.com
மிக அருமை
நண்பர்களுக்க்கு நன்றி.
Post a Comment