Apr 7, 2010

குட்டிப் பழங்கதை: ப்ரான்ஸ் காப்ஃகா

"அய்யோ" என்றது எலி, "ஒட்டு மொத்த உலகமும் ஒவ்வொரு நாளும் சிறியதாகி வருகிறது. தொடக்கத்தில் இது மிகப் பெரியதாக இருந்தது, அது எனக்கு பயமாகவும் இருந்தது. நான் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருந்தேன், தூரத்தில் வலது மற்றும் இடது புறங்களில் சுவர்களை பார்க்கும் போது மகிழ்ச்சியடைந்தேன், ஆனால் இந்த நீளமான சுவர்கள் மிக விரைவாக நெருங்குகின்றன. நான் ஏற்கனவே இறுதி அறைக்கு வந்துவிட்டேன், அந்த மூலையில் பொறி இருக்கிறது நான் ஓட வேண்டும்." "நீ உன் திசையை மட்டும் மாற்றியிருக்க வேண்டும்" என்று சொன்ன பூனை, அதனை தின்று முடித்தது.

A Little Fable
"Alas," said the mouse, "the whole world is growing smaller every day. At the beginning it was so big that I was afraid, I kept running and running, and I was glad when I saw walls far away to the right and left, but these long walls have narrowed so quickly that I am in the last chamber already, and there in the corner stands the trap that I must run into." "You only need to change your direction," said the cat, and ate it up

*இந்தக் கதை ப்ரான்ஸ் காப்ஃகாவின் வாழ்நாளில் வெளிவராமல் பின்னர் பிரசுரமானது.

=====
எனக்கு மொழிபெயர்ப்பில் அவ்வளவாக பயிற்சி இல்லை. முன்னர் இரண்டு கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். ஆனால் அத்தனை திருப்தி இல்லை. இன்னும் நேர்த்தியாக செய்யும் வரைக்கும்-பின்னரும் கூட மூலத்தை தருவதுதான் நல்லது என்று நினைக்கிறேன்.

14 எதிர் சப்தங்கள்:

Athisha said...

ஆங்கிலத்தில் படித்தால்தான் கொஞ்சூண்டு புரிகிற மாதிரி இருக்கு

Athisha said...

கோனார் நோட்ஸ்லாம் கிடையாதா இந்த கதைக்கு?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஐயையோ, இப்படியெல்லாமா மொழிபெயர்ப்பார்கள் :(

மூலையில் பொறி இருக்கிறது, அதற்குள் நான் செல்ல வேண்டும். ’நீ திசையை மட்டும் மாற்றினால் போதும்’ என்ற பூனை எலிக்குஞ்சைத் தின்று முடித்தது.

கதையையே மாத்திட்டீங்களே!

அப்புறம் mouseம் ratம் ஒன்றா?

Vaa.Manikandan said...

நன்றி.

கதையை மாற்றிவிட்டதாக நினைக்கவில்லை.

மொழிபெயர்ப்பும் பயிற்சிதானே. எனக்கு அந்த பயிற்சி இல்லை. அதற்காகவே மூலத்தை இணைத்தேன்.இன்னும் இரண்டு மூன்று முறை மொழிபெயர்ப்பை முயன்று பார்க்க உத்தேசம். தொடர்ச்சியாக அடி வாங்கினால் சரிப்பட்டு வராத விஷயம் என்று விட்டுவிடுவதாக இருக்கிறேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கதையைச் சொல்லிவிடுகிறேன். உலகம் பெரிதாக இருக்கிறது. எலிக்குட்டிக்கு பயமாக இருக்கிறது. ஓடுகிறது. இப்போது உலகம் சுருங்கிக் கொண்டே வருகிறது. அப்போது இரு பக்கமும் சுவர்கள் நெருங்குகின்றன. அதைப் பார்த்தததும் அந்த எலிக்குட்டி மகிழ்ச்சியடைகிறது. இதோ ஓரத்தில் இருக்கும் அந்தப் பொறிக்குள் போய்விட்டால் போதும் என நினைக்கிறது (அதற்குப் பெரிதென்றால் பயம், மிகச் சிறிய பொறிக்குள் போய்விடலாமென்று நினைக்கிறது).

பூனை, நீ பொறிக்குப் போவதும் ஒன்றுதான் நான் தின்பதும் ஒன்றுதான் எனத் தின்றுவிடுகிறது.

இப்போது நீங்கள் மொழிபெயர்த்திருக்கும் கதை இதுதானா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

சில விஷயங்கள் - whole world என்பதை மொத்த உலகம் என்று எழுதலாம் - ஒட்டு மொத்த உலகம் எனும்போது அழுத்தம் வேறு இடத்திற்குச் சென்று விடும். smaller என்பதை நேரடியாக சிறியதாகி என்பதைவிட சுருங்கி என்பதே பொருத்தமாக இருக்கும் (narrowed என்று பின்னர் வருவதால்).

Vaa.Manikandan said...

நன்றி சுந்தர்.

இதே கதையை இப்படி வாசிக்கலாமா?

இந்த உலகத்தை எலிக்குஞ்சு தன் பார்வையில் இருந்து மட்டுமே பார்க்கிறது. தனது திசை மட்டுமே சரியென நினைத்து ஓடிக் கொண்டிருக்கிறது. உலகின் பரப்பில் தப்பிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் நிராகரித்துவிட்டு ஒரு சுவர்களால் சூழப்பட்ட அறைக்குள் சிக்கிக் கொள்கிறது. நீ திசையை மாற்றியிருந்தால் நீ தப்பித்திருக்கலாம் என்று சொல்லியபடி பூனை தின்று முடிக்கிறது.

இந்த புரிதலில்தான் மொழிபெயர்த்தேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அப்ப அந்தச் சுண்டெலி (அல்லது எலிக்குட்டி அல்லது எலிக்குஞ்சு), உலகம் பெரிசா இருக்கறதப் பார்த்து பயந்திருக்க வேண்டாமே...

i must run into the trap என்று வருகிறது. அதை மூலையில் பொறி இருக்கிறது, நான் ஓட வேண்டும் என மொழிபெயர்த்தால், தப்பி ஓட வேண்டுமென்றுதானே பொருள் வரும்.

You only need to change the direction என்பதை நீ உன் திசையை மட்டும் மாற்றியிருக்க வேண்டும் என்பதைவிட நீ திசையை மட்டும் மாற்றியிருந்தால் போதும் என்பதுதான் நெருக்கமாக வருகிறது என நினைக்கிறேன்.

அப்புறம், A Little Fable என்பதை குட்டிப் பழங்கதை என்பதைவிட குட்டி நீதிக்கதை என்பது சரியாயிருக்குமென நினைக்கிறேன்.

Vaa.Manikandan said...

"நான் ஓட வேண்டும்" என்பது "நான் அதற்குள் ஓட வேண்டும்" என்றிருந்திருக்க வேண்டும். இது என் பிழை.

உங்களின் //பூனை, நீ பொறிக்குப் போவதும் ஒன்றுதான் நான் தின்பதும் ஒன்றுதான் எனத் தின்றுவிடுகிறது// இந்த வரிகள் என்னை குழப்பமடையச் செய்கிறது.

லெக்ஸிகன் Fable என்பதற்கு கட்டுக்கதை என்று சொல்கிறது.

சுண்டெலி பயந்திருக்க வேண்டாமே என்பது பற்றி....

அவரவரின் சுய பார்வையில் பார்க்கும் போதும் உலகம் பயங்கரமானதாகவும் பயமூட்டக் கூடியதாகவுமே இருக்கிறது. மற்ற வாய்ப்புகளை நிராகரித்துவிட்டு ஓடுதலும் கூட அந்த மற்ற வாய்ப்புகள் உருவாக்கும் பயமூட்டக்கூடிய பிம்பங்களால்தானே? :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/இந்த வரிகள் என்னை குழப்பமடையச் செய்கிறது./

பூனை அதைச் சொல்லவில்லை. ஆனால் அதுதான் கதையிலுள்ள நீதி :)பொறிக்குள் சென்றால் பாதுகாப்பு என நினைக்கிறாய் - ஆனால் அதுவும் நான் தின்பதும் ஒன்றுதான்.

எல்லாக் கதைகளுமே கட்டுக்கதைகள்தாமே. நீதிக்கதை என்றும் பொருள் உண்டே fableக்கு.

Vaa.Manikandan said...

இதுதான் நீதி என்பதை நான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை :)

நாம் உலகை வேறு மாதிரி பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மைத் தன்மை என்பது வேறானது என்பதை வேண்டுமானாலும் இந்தக் கதையின் உணர்த்துதல் என்று சொல்வேன்.

மறுபடியும் சொல்ல வேண்டியிருக்கிறது: உங்களின் பின்னூட்டங்கள் அனைத்துக்குமான என் மறுமொழிகளின் நோக்கம், நான் மொழிபெயர்த்தது முற்றிலும் சரி என்று நிரூபிக்க முயலும் முரட்டுவாதத்தில் அன்று. எந்தப் புரிதலின் அடிப்படையில் இதை நான் செய்தேன் என்பதை தெளிவாக்குவதற்கே.

ஓரளவு தெளிவாக்கியிருக்கிறேன் என்று தோன்றுகிறது. இனி யாராவது வாசித்தால் அவர் சரி செய்து கொள்ளட்டும்- அவருக்கு ஏற்றபடி :)

யுவகிருஷ்ணா said...

டியர் ஜெண்டில்மென்ஸ்!

ரெண்டு பேரும் சாட்டிங் பண்ணிக்கறதே இல்லையா? இது கமெண்ட்ஸ் செக்‌ஷன்!

அருண் said...

நான் அந்தப் பொறிக்குள் செல்ல வேண்டும் என்பதில் சுண்டெலியின் சிற்றறிவு தெரிகிறது. எதுவும் நம் வசத்தில் இல்லை, எல்லாம் விதி என்ற மனப்பான்மை.அதை எந்த விலங்கோ அல்லது மனிதனோ சுலபமாக ஏமாற்றிட முடியும். அந்தச் சிற்றறிவை பயன்படுத்தி பூனை - "கொஞ்சம் திரும்பினா போதுமடா ராசா பொறிக்கேல்லாம் போக வேண்டாம்!" என்று அதை சாப்பிட்டு விடுகிறது.
இதில் நாம் ஒரு parallel வரைய முடிகிறது.
மனிதர்களிலும் இப்படித்தான். உலகம் பெரிது, எல்லைகள் அற்றது, எனக்கு நான் செய்யும் சிறு சிறு வேலைகளில் சந்தோஷம். அதில் சாதனை புரிந்து விட்டால் அடுத்து தெரியாத, புதிரான, பயப்படத்தக்க விஷயங்கள் வந்து விடுமோ என்ற பயம் கவ்வுகிறது. அந்த பயத்திற்காகவே laboratory mice போல வளையத்தில் சுற்றி சுற்றி வருகிறார்கள்.
அதை பயன்படுத்திக் கொள்ளும் சர்வாதிகாரிகளோ, முதலாளிகளோ அல்லது ஆதிக்கவாதிகளோ நம்மை சுண்டெலி போல விழுங்கி விடுகிறார்கள். In Short - Exploitation , Capitalization , DictatorShip , Hierarchy .

ஆர். அபிலாஷ் said...

ஐயோவ்ராம் சுந்தர் சொல்வது அனைத்தும் சுத்த அபத்தம், நீதிக் கதை என்பதைத் தவிர. மொழிபெயர்ப்புகள் மொழிபெயர்ப்பவனின் மொழியிலேயே அமையும். மூலத்தோடு ஒப்பிட்டு பிழை தேடுவது மொழிபெயர்ப்பின் நோக்கத்தையே தோற்கடிப்பது. முக்கிய தகவல் பிழைகள் இல்லாத பட்சத்தில் சரளமான மொழிபெயர்ப்புகளை ஏற்றுக் கொள்வது தான் நலம். மணியின் மொழிபெயர்ப்பு நன்றாகவே உள்ளது. குழந்தைகளை மண்ணில் வெளிக்கிட வைத்தால் குச்சியால் பீயை நோண்டி விளையாடும். சுந்தரின் இதுவரையிலான விமர்சனங்களும், பிழைகாட்டல்களும் இதையே நினைவுபடுத்தின.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/சரளமான மொழிபெயர்ப்புகளை/

இங்க என்ன பத்து பக்கத்தையா மொழிபெயர்த்திருக்காங்க, சரளமான மொழி அது இதுன்னு ஜல்லி அடிக்க? இருக்கறதே மூணு வரி :)

/மூலத்தோடு ஒப்பிட்டு பிழை தேடுவது மொழிபெயர்ப்பின் நோக்கத்தையே தோற்கடிப்பது/

என்ன எழவு இது? மூலத்தோடு ஒப்பிடாமல் வேறு எதனுடன் ஒப்பிட முடியும். அதில் பிழை எனத் தோன்றுவதைச் சொல்லி, பேச ஆரம்பித்தேன். மணிகண்டனும் பதில் சொன்னார். நான் பிழையைச் சொன்னது பீயை நோண்டுவது மாதிரி இருந்தால் நான் என்ன செய்ய?

/மொழிபெயர்ப்பவனின் மொழியிலேயே மொழிபெயர்ப்புகள் அமையும்/

ஆஹா.. தூள்!. இப்படித்தான் இருக்கவேண்டும் :) இதற்குமேல் பேச என்ன இருக்கிறது?