Feb 22, 2010

தொலைக்கப்பட்ட குண்டுகள்


ஆலிலைகள் நிறைந்திருக்கும்
பள்ளிக்குள்
வெடித்திருக்க வேண்டிய குண்டு
ஒன்றை
வைத்த இடம் தெரியாமல்
தேடுகிறார்கள்.

9.17க்கு வெடிக்கும்
என்ற
தொலைபேசிக் குரலில்
உருவமெடுத்தவனின்
சொற்களிலிருந்து
தேட ஆரம்பித்தவர்கள்
முதலில்
குட்டிச் சூரியன்கள்
உள்ளிறங்கும்
வகுப்பறைகளை அலசினார்கள்
பின்னர்
நூற்றாண்டு பாசி படிந்த
தண்ணீர்த் தொட்டிக்குள்
நுழைந்தவர்கள்
குண்டுகளை விடுத்து
ஊறிக் கிடந்த கதைகளை
எடுத்து வந்தார்கள்.

துரை வாத்தியாரையும்
லாவண்யா டீச்சரையும்
இணைத்து வரையப்பட்ட
படங்களாலான
கழிவறையிலோ
புன்னகையோடு வெளியேற்றப்பட்ட
சிறுவர்களின் புத்தகப் பைகளிலோ
குண்டு கிடைக்கவில்லை.

தேடிச் சலித்தவர்கள்
ஓய்வெடுக்க விரும்புகிறார்கள்
வெளிச்சத்தின் செதில்கள்
உதிரத் துவங்கிய மாலையில்
தோல்வியை ஏற்றுக் கொள்ள விரும்பாமல்
கிடைத்த தகவல்
வெறும் வதந்தி என்று அறிவிக்கிறார்கள்.

சத்யன் நம்புகிறான்-
கிடைக்காத குண்டு
அசைவுறாத காலத்தின்
ஒரு கணத்தில்
வெடிக்கக் கூடியது என்றும்.

தான்
புரட்டிப் படுக்கும்
இந்தத் தலை
சிதறியிருக்க வேண்டியது-
கொஞ்சம் இடம் மாறியதில் தப்பித்துக் கொண்டது
என்றும்.

1 எதிர் சப்தங்கள்:

ஆதி said...

இது போன்ற பல சமவங்களில் இருந்து தப்பித்த பிறகு உண்டாகும் உணர்வை கடைசி இருப்பத்தியில் அழகாக சொல்லி இருக்குறீர்கள் மணிகண்டன்..

நிகழ்ந்திருக்க வேண்டிய நேர்ச்சிகள், கனவுகளில் புகுந்து அதன் விகார முகம் காட்டுகையில் அலறி எழுந்து, சரிப்பார்த்திருக்கிறேன், கை, கால், தலை எல்லாம் இருக்கா என்று..

பாராட்டுக்கள்..