
இந்தவாரம் 1.25 மணி பேருந்தை ஈரோட்டில் பிடித்துவிட்டேன். போக்குவரத்து கழகத்தில் பயணச்சீட்டுக்கான தொகையை யார் நிர்ணயிக்கிறார்கள் என்று தெரிவதில்லை. ஒரு சில நாட்கள் ஈரோட்டிலிருந்து கோபிக்கு பத்து ரூபாய் டிக்கெட் தருவார்கள், சில நாட்கள் பன்னிரெண்டு ரூபாய்கள். இரவு சர்வீஸ் என்பதால் இரண்டு ரூபாய் அதிகம் என்று நடத்துனர் யாராவது ஒருவருக்கு பதில் சொல்லுவார். மற்றவர்களும் அந்த பதிலில் அமைதியாகி விட வேண்டும். யாராவது கேள்வி கேட்டால் "இப்பத்தான சொன்னேன் நைட் சர்வீஸ்ன்னு. எத்தனை தடவ சொல்றது" என்பார்.
பேருந்தின் கடைசி வரிசையில் ஆரம்பித்து முன் வரிசை நோக்கி டிக்கெட் கொடுத்து வந்த நடத்துனர், ஐந்தாவது வரிசையில் சன்னலோரமாக சாய்ந்து அமர்ந்திருந்த எனக்கு டிக்கட் கொடுத்து முடித்த நான்காவது நிமிடத்தில் முன்புறமாக ஒரு பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரண்டு ரூபாயை எப்படி அதிகம் வசூலிக்கலாம் என்பதாக அந்தப் பெண் ஆரம்பித்தார். அவர்களுக்கிடையேயான சம்பாஷணையின் முதல் ஓரிரு வாக்கியங்களை தூக்கக் கலக்கத்தில் தவறவிட்டிருந்தேன்.
கேள்விகேட்ட பெண்ணின் வேகமும், பதில் சொல்ல முடியாத நடத்துனரின் சமாளிப்பான பதில்களும் பஸ்ஸிலிருந்த பலரையும் விழிக்கச் செய்தன. மூன்றாவது வரிசையிலிருந்த ஒரு ஆஜானுபாகுவான மனிதரொருவர், நடத்துனரின் சார்பாக பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு "எல்லோரும் பணம் கொடுக்கும் போது உனக்கு மட்டும் என்ன வந்தது" என்றார்.
அந்தப்பெண்மணி "இது நடத்துனருக்கும் எனக்கும் இடையேயான பேச்சு. நீ ஏன் இடையில் பேசுகிறாய்?" என்றார். பேச்சு வார்த்தை நீ, நான் என்ற ஒருமையில் நீண்டது. இப்பொழுது அந்தப் பெண்மணியிடமிருந்து நடத்துனர் தப்பித்துவிட்டார். சண்டை ஆஜானுபாகுவுக்கும், பெண்மணிக்கும் இடையே நகர்ந்து மற்றவர்களை தூங்கவிடாமல் செய்து கொண்டிருந்தது.
கொஞ்சநேர அமைதிக்கு(கொஞ்ச நேரம் என்பது அதிகமில்லை, மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் இருக்கலாம்) பின்னர் திடீரென்று அந்த ஆஜானுபாகு உரத்தகுரலில், "பாரத் மாதா கி ஜேன்னு சொல்லிடுவேன்", "ஹமாரா ஹிந்துஸ்தானி தேஷ்..சலோன்னு சொல்லிடுவேன், தெரியுமா?" என்றார்.
எனக்குசிரிப்பு வந்துவிட்டது. எங்கள் ஊரில் ஹிந்தி அறிந்தவர்களை பார்ப்பது மிக அரிது. இந்த ஆள் ஏதோ இரண்டு வரிகளை தெரிந்து கொண்டு அந்தப் பெண்ணிடம் உதார் விடுகிறார் என்று நினைத்து சிரித்துக் கொண்டிருந்தேன். உண்மையைச் சொல்லப்போனால், நான் ஓரிரு ஊர்களைச் சுற்றி ஓரிரு மொழிகள் தெரிந்த மேதாவி என்ற நினைப்பில் அமர்ந்திருந்தேன்; இப்படி ஒரு நினைப்பிருக்கும் போது அடுத்தவரின் அசட்டுத்தனத்தைப் பார்த்தால் தெனாவெட்டாக உதட்டைச் சுழித்து ஒரு சிரிப்பை உதிர்ப்போம் அல்லவா? அந்தச் சிரிப்பை உதிர்த்தேன்.
அந்தப்பெண் அந்த ஆளின் ஹிந்தி உதாருக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். திடீரென்று அந்த ஆள் எழுந்து அந்தப் பெண்ணின் அருகில் சென்றார். இப்பொழுது அந்தப் பெண்ணை அடக்கிவிட்டதான மமதை அந்த ஆளிடம் இருந்தது. "கோபியில தான இறங்குவ? ஊட்ல அண்ணன் என்ன வேலை பண்ணுறாரு? கோபியில எறங்கு..பார்த்துக்கலாம்" என்றார். நள்ளிரவில் ஒரு ஆணின் மிரட்டலுக்கு ஆளான அந்தப் பெண்ணின் மீது எனக்கு பரிதாபம் வந்திருந்தது. எழுந்து ஏதாவது அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் பஸ்ஸிலிருந்த மற்றவர்களின் மெளனம் என்னை கொஞ்சம் தயங்கச் செய்தது.
அடுத்தவினாடி பேருந்தில் ஒரு பேரிடி இடித்தது போல அந்தப் பெண்ணின் குரல் ஓங்கியது. "என்னய்யா செய்வ? நான் கோபி, சத்தி(சத்தியமங்கலத்தை சத்தி என்பார்கள்) மட்டுமில்ல, மெட்ராஸ் பெங்களூர் வரைக்கும் பார்த்தவ. உன்ன மாதிரி தறுதலைகள பார்த்து பயந்துட்டு இருப்பேனா? ராத்திரி மணி ஒண்ணாகுது. ஒருத்தி தனியா வர்றான்னா அவளைப்பார்த்தா தெரிய வேண்டாமா? உன்ன மாதிரி எத்தன பேரு வந்தாலும் ஒரு கை பார்ப்பான்னு.... சும்மா எல்லா பொம்பளையாலும் இப்படி தனியா வர முடியாது. மூடிகிட்டு உட்காரு."
அந்த ஆள் இடையில் பேசத் துவங்கிய போதெல்லாம் அந்தப் பெண்மணி சில கூரிய சொற்களை தன் குரலை உயர்த்திச் சொன்ன போது அந்த ஆள் அவமானம் அடைவதாலோ அல்லது வேறு காரணத்தினாலோ அமைதியாக வேண்டியிருந்தது.
எனக்கு சந்தோஷமாக இருந்தது. தன்இருக்கையில் இருந்து அந்தப் பெண் எழுந்து கொண்டார். தன் கழுத்தில் கறுப்புத் துணியைச் சுற்றியிருந்தார். நெற்றியில் பொட்டு இல்லை. இந்த ஆஜானுபாகு ஒரு மங்கிய காவி வேட்டியை அணிந்திருந்தார். இப்பொழுது எனக்கு அந்த ஆள் முன்பு பயன்படுத்திய இரு ஹிந்தி வாக்கியங்களின் கொடூர அர்த்தம் புரிந்தது.
அந்த ஆஜானுபாகு சொன்னதன் உள்ளர்த்தம் "இந்த தேசத்தில் இசுலாமியர்கள் யாரும் இருக்கக் கூடாது. பாரத் மாதா கி ஜே என்பது பாரத தேவியை புகழ்கிறதோ இல்லையோ இசுலாமியனை இழிவு படுத்துகிறது".இப்படியான பிம்பம் இங்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.
மிகக்குரூரமான வக்கிர சிந்தனையுடைய இந்து அடிப்படைவாதிகளின் கைங்கர்யத்தால் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இசுலாமியர்கள் மீதான இத்தகைய சில்லறைத்தனமான தாக்குதல்கள் வட இந்தியாவிலும், தென்னகத்தில் ஹைதராபாத் வரையிலும் நிகழ்த்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் கோபி போன்ற, இன்னமும் கிராமச் சாயல் மாறாத தமிழகத்தின் உட்புறத்தில் இருக்கும் சிறு நகரத்தில், அதுவும் நள்ளிரவில் தனித்த பயணத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் மீதான மத வெறியுடன் கூடிய சொற்தாக்குதலை எதிர்பார்த்திருக்கவில்லை. மிக அதிர்ச்சியாக இருந்தது.
மதரீதியான விஷம் ஊடுருவிக் கொண்டிருக்கும் இந்த தேசத்தில் அரை வேக்காடான மதவாதிகளின் தூபங்கள், நகரங்களை விட கிராமங்களில் ஆழமாக கால்பதிக்கிறது. தனது மத நம்பிக்கைகள் குறித்தான முழுமையான புரிதலைக் கொண்டிருப்பவர்கள் அடுத்த மதத்தினரின் மீதான் வன்முறையை தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் அரைகுறையான நம்பிக்கையும் புரிந்துணர்வும் கொண்டிருக்கும் நபர்களிடத்தில், அதுவும் எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடிய கிராமத்தின் மக்களிடம் அடுத்த மதத்தின் மீதான தாக்குதலே உங்கள் மதம் மீதான உங்களின் விசுவாசம் என்ற ரீதியில் வக்கிர சிந்தனைகளை மதவாதிகளால் எளிதில் பரப்ப முடிகிறது.
குறிப்பிட்ட ஒரு மதத்தினர் மட்டும் குற்றங்களைப் புரிவதில்லை. இசுலாமியர்களிலும் பாகிஸ்தான் மீதாக பிரியம் உள்ளவர்களைக் காண முடிகிறது. பாகிஸ்தானின் பெரும்பான்மை மதம் இசுலாம் என்ற நம்பிக்கை மட்டுமே இந்திய முஸ்லீம்களில் சிலரை பாகிஸ்தானோடு பிணைக்கிறது. பாகிஸ்தானில் உள்ள மக்கள் தொகையைக் காட்டிலும் இந்தியாவில் உள்ள இசுலாமியர்களின் எண்ணிக்கை அதிகம் என்ற உண்மையை அவர்கள் உணர்ந்திருப்பதில்லை.
மதம் என்பதன் அடிப்படையைக் கூட உணர்ந்திராத ஆதிதிராவிட குடும்பத்துக்கு பணம் கொடுத்து , ஞானஸ்நானம் செய்து தன் ஆண்டவனுக்கு விசுவாசமாக இருக்கும் சில கிறிஸ்தவர்களின் மதவெறியும் எந்த விதத்திலும் சளைத்ததில்லை.
தேச ஒற்றுமை, மத நல்லிணக்கம் என்ற புனிதபிம்பங்கள் எல்லாம் வைத்து ஜல்லியடிக்க விரும்பவில்லை. மதங்களின் பெயரால் சாமானியர்கள் மீதாக நிகழ்த்தப்படும் வன்முறைகள் பற்றித்தான் இங்கு பேச நினைப்பது.
ஆனால் இதையெல்லாம் புலம்புவதால் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை என்பதால் அந்த பஸ் சம்பவத்துக்கு வந்துவிடலாம்.
நேரம் ஆக ஆக அந்தப் பெண்ணின் ப்ளட் பிரஷர் அதிகம் ஆகி இருக்க வேண்டும். அவரது வார்த்தைகள் நடுங்கத் துவங்கின. பொதுவில் பேசத் தகாத சில சொற்களை அநாயாசமாக தெறிக்கச் செய்தார். இப்பொழுது அந்த ஆஜானுபாகு பரிதாபமாகியிருந்தார். பஸ்ஸில் சிலர் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்த முயன்றனர். அவர் அமைதியாவதாயில்லை. டிரைவரும் நடத்துனரும் தங்கள் செயலில் லயித்தனர். பஸ்ஸில் சிலர் உறங்கத் துவங்கினர். கொஞ்சம் பெரியவன் ஆன பிறகு பெண்கள் உபயோகிக்கும் கெட்டவார்த்தைகளை நான் கேட்க முடிவதில்லை என்பதால், இந்தச் சந்தர்ப்பத்தில் அவற்றைக் கேட்க விரும்பி காதைக் கூராக்கினேன். ஓரிரு வார்த்தைகள் காதுகளை நிரப்பின. அதற்குள் கோபி பஸ் நிலையம் வந்துவிட்டது. மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.
இனி நான் பஸ்ஸிருந்து இறங்கி கரட்டடிபாளையத்துக்குச் செல்ல ஆட்டோக்காரருடன் பேரம் பேச வேண்டும்.
6 எதிர் சப்தங்கள்:
ரொம்ப வருத்தமா இருக்கு மனிகண்டன். பெண்கள் மேல் எப்படின்னாலும் வன்முறை காட்டிவாங்க. இதே பெண் இந்துவானாலும் வேற ஏதாவது சொல்வாங்க. உன்னடத்தை தெரிய்யாதான்னு ஏதாவது வரும்........
நல்ல கட்டுரை மணிகண்டன். பெண்கள் பொதுவில எதிர்த்துப்பேசினா என்ன ஆகும்னு இந்த சம்பவத்தில தெளிவாவே இருக்கு. எந்த மதமா இருந்தாலும் சரி. ஏதாவது சொல்லியிருப்பாங்கன்னு தான் தோணுது.
நல்லா எழுதி இருக்கீங்க மணிகண்டன்.
//பன்னிரெண்டு மணிக்கு ஈரோட்டில் இருந்தால் பன்னிரெண்டரை மணிக்கு கோபி செல்ல ஒரு பேருந்து இருக்கிறது.அடுத்ததாக இரவு 1.25 க்கு ஒரு பேருந்து. அதையும் விட்டால் இரண்டே முக்காலுக்குத்தான் அடுத்த பஸ்.//
மைசூர் செல்லும் பேருந்து ஒன்று இருக்கும் என்று நினைக்கிறேன்
கொஞ்சம் டெர்ரரான பயணம் தான் போல இருக்கு :-)
இது புனைவாக இருந்தால் சந்தோஷிப்பேன்!
இல்லையென்றால் உங்களின் அமைதியை கண்டு ஏமாறுகிறேன்!
நன்றி.
Post a Comment