Oct 26, 2009

குடியால் விளையும் நன்மை(சத்தியமாக நீங்கள் நினைப்பது பற்றியது இல்லை)

சேலம் மாவட்டம் சங்ககிரியில் கட்டப்பட்டிருக்கும் அண்ணா நூற்றாண்டுவிழா பேருந்து நிலையத்தை துவக்கி வைக்க துணை முதல்வர் ஸ்டாலின் வருகிறார்.

ஈரோடு-சேலம் சாலையின் நடுநாயகமாக இருக்கும் முக்கியமான ஊர் சங்ககிரி. (சங்கு வடிவ கிரி?). ஊருக்கு இரண்டு பக்கமுகாக இரண்டடிக்கு ஒன்றாக, தோராயமாக பத்துக் கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறங்களும் டியூப்லைட்கள் கட்டி, சங்ககிரியிலிருந்து சேலம் வரைக்குமான முப்பத்தி சொச்சம் கிலோமீட்டர்களும் கொடி தோரணங்களும், பேனர்களுமாக தங்கள் பராக்கிரமத்தை காட்டியிருக்கிறார்கள் சேலத்துக் கண்மணி்கள்.

நேற்று பெங்களூருக்கு பேருந்தில் வரும் போது எனக்கு ஓரிரண்டு சந்தேகங்கள் வந்தன.

1. இத்தனை டியூப்லைட்களுக்கும் யார் எலெக்ட்ரிக் பில் கட்டுவார்கள்?

2. இருபக்கமும் இருக்கும் ஆயிரக்கணக்கான விளக்குகள், இலட்சக்கணக்கான பேனர்கள், கோடிக்கணக்கான கொடி தோரணங்களை ஸ்டாலின் விரும்புகிறாரா? இல்லை கழகத்தினர் அவர் பேச்சையும் கேட்காமல் செய்கிறார்களா?

3. வீரபாண்டியார், ஸ்டாலினுக்கு எதிரான செயல்பாடுகளை நடத்துபவர் என்று சில நாட்கள் முன்பு வரைக்கும் செய்திகளில் படித்திருக்கிறேன். வீரபாண்டியாரின் கோட்டை என்று பேசப்படும் சேலத்தில் ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு பிரம்மாண்டமான வரவேற்பு தருகிறார். மாறிவிட்டாரா?

==========

நேற்று எங்கள் ஊரில் சில ரத்தத்தின் ரத்தங்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்கள் நம்புவதாக நான் உணர்ந்தது.

1. இத்தனை இலவச திட்டங்களும் நிச்சயமாக இன்னும் ஒரு தேர்தலுக்கு திமுக வின் வெற்றியை உறுதிப்படுத்துகின்றன.

2. டாஸ்மாக் வருமானமே இத்தனை கோடிகளை இலவச திட்டங்களில்செலவழிக்கும் தைரியத்தை அரசாங்கத்திற்கு கொடுக்கின்றன. (சரியா?)

என் சித்தப்பாவுக்கு ஒரு சந்தேகம், அந்த சந்தேகம் முந்தைய கேள்விக்கு பதில் கொடுக்கலாம்.

பால் விலை, பஸ் டிக்கெட் விலை உயர்வுக்கு எல்லாம் போராட்டங்கள் நடக்கின்றன. தீபாவளி சமயத்தில் 110 ரூபாய் சரக்கு 140 ரூபாய்க்கு விற்ற போதும் எந்த குடிமகனும் பிரச்சினை செய்ததாக தெரியவில்லை. ஏன்?

=====

விவசாயக் கூலிகளுக்கு ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலை வாய்ப்பு தரும் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. வருடத்தில் நூறு நாட்களுக்கான வேலை வாய்ப்பைத் தரும் அரசாங்கமே தினக்கூலிகளுக்கான கூலியை கொடுக்கும். கிணறு வெட்டுதல், குளம் தூர் வாருதல் போன்ற பணிகளை இத்திட்டத்தின் மூலமாக செய்வார்கள்.

இந்தத் திட்டத்தில் அரசாங்கம் கொடுக்கும் கூலியானது, இன்றைய நிலையில் தோட்டம், வயல் வேலைகளில் தரப்படும் கூலியை விட பத்து அல்லது இருபது ரூபாய்கள் குறைவு. ஆனால் தொழிலாளர்கள் அரசின் வேலைத்திட்டத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். அடிப்படை காரணங்கள்

1. வேலை நேரம் சொற்பம்
2. வேலை செய்யவில்லை என்றால் கேட்கப்படும் கேள்விகள் குறைவு.

மில் வேலைக்கும், நூல் கம்பெனிகளுக்கும் வேலை தேடி பல பேர் போய்விட்டார்கள். மீதமிருந்த கொஞ்சம் பேரும் இப்படி அரசாங்கத்தின் திட்டத்தால் விவசாய வேலை செய்ய வருவதில்லை. விவசாயம் எப்படி செய்து பிழைப்பது என்ற விவசாயிகளின் புலம்பல் கோபி, பொள்ளாச்சி போன்ற ஊர்களில் அதிகமாகிவிட்டது.

அரசாங்கம் கொஞ்சம் விரிவாக பரிசீலித்தால் நூறு நாட்கள் திட்டத்தை, 365 நாட்கள் திட்டமாக மாற்றிவிடலாம். எண்பது ரூபாய் தருவதற்கு பதிலாக ஐம்பது ரூபாய் தந்து பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

1. தொழிலாளர்கள் விவசாயிகளின் தோட்டங்களில் வேலை செய்வார்கள். அரசாங்கம் ஐம்பது ரூபாய் கொடுத்துவிடும். தோட்ட உரிமையாளர் ஐம்பது ரூபாய் கொடுப்பார்.

2. இதில் தொழிலாளியின் கூலி அதிகமாகிறது. விவசாயி, தன் தொழிலாளிக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் ஒரு பகுதியை மிச்சம் செய்யலாம்.

3. அரசாங்கம், தினக்கூலிகள் 365 நாட்களும் வேலை கிடைப்பதை உறுதிப்படுத்தலாம்.

இந்தத் திட்டம் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் சாத்தியமில்லை. நல்ல தண்ணீர் வசதியோடு விவசாயம் செழிக்கும் கொங்கு மண்டலம், காவிரி படுகைகளில் செயல்படுத்தலாம். மற்ற ஊர்களுக்கு வேறு முறைகளை பரிசீலிக்கலாம்.

4 எதிர் சப்தங்கள்:

மணிஜி said...

டாஸ்மாக்..திமுகவிற்கு பாஸ்மார்க்..இலவசங்களை அள்ளி விட உதவும் அட்சயபாத்திரம்.இனி வரம் தேர்தல்களில் திமுகவை தோற்கடிப்பது கடினமே

Marimuthu Murugan said...

முதல் இரண்டு கேள்விகளுமே 'நச்'.........
ஆனா இது அரசியலுக்கே உரிய ஒரு பரம்பரை வியாதி மாதிரி தெரியுது!!!!

அடலேறு said...

//இத்தனை டியூப்லைட்களுக்கும் யார் எலெக்ட்ரிக் பில் கட்டுவார்கள்//
எனக்கும் இதே கேள்வி தான் தோன்றியது

உயிரோடை said...

ம‌ணிக‌ண்ட‌ன் பேசாம‌ நீங்க‌ அர‌சிய‌லுக்கு வ‌ந்துடுங்க‌ளேன். இல்லை அர‌சு உங்க‌ பேச்சை கேட்க‌ற‌ நிலைக்கு வ‌ந்துடுங்க‌ளேன்.