Oct 20, 2009

தொடர்பில்லாத அல்லது தொடர்புடைய டைரிக்குறிப்பு



ஒவ்வொரு வாரமும் ஊருக்கு போகிறேன். அப்பா அறுபது வயதில்தான் கார் ஓட்டிப் பழகினார். இரண்டு மாதங்களுக்கு முன்பாக அறுபது கிலோமீட்டர் தூரத்திற்கு காரை ஓட்டிச் சென்றுவிட்டு திரும்பி வரும் போது வீட்டுக்கு முந்நூறு மீட்டருக்கு முன்னதாக விபத்து நடந்திருக்கிறது.

விபத்து எப்படி நடந்தது என்று சொன்னால் அது மற்றவர்களுக்கு காமெடியாக இருக்கலாம். அப்பாவுக்கு அது ட்ராஜிடி. வீட்டிற்கு அருகாமையில் வரும் போது எதிரே ஒரு பெண் வந்திருக்கிறாள். அவள் மீது கார் இடித்துவிடக் கூடும் என்று நினைத்து ஸ்டியரிங்கை திருப்பியவர், பிரேக்குக்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தி மிதித்திருக்கிறார். வேகமெடுத்த வண்டி அருகில் இருந்த சுவர் அதிர மோதி நின்றிருக்கிறது. வலதுகாலில் இரண்டு முறிவுகள்.

செய்தியறிந்து நான் பதறியடித்து பெங்களூரிலிருந்து இரவோடிரவாக கிளம்பிப்போனேன். இறுகிய முகத்துடன் அப்பா படுத்திருக்க, இரவு முழுவதும் அழுது வீங்கிய முகத்துடன் அம்மா இருந்தார். அறுபது வயதிலும் கார் ஓட்டிப் பழகும் ஆர்வத்தை பாராட்டுவதா அல்லது எதற்கு இந்த வயதில் வெட்டி வேலை என்று திட்டுவதா என்ற குழப்பத்தில் நான் இரண்டாவதை தேர்ந்தெடுத்தேன்.

பெரும்பாலும் பெங்களூருலிருந்து ஒசூருக்கு நண்பர்களுடன் காரில் போய்விடுவதுண்டு. பின்னர் ஓசூரிலிருந்து சேலத்திற்கு ஒரு பஸ், சேலத்திலிருந்து ஈரோடு, அங்கிருந்து கோபி, பின்னர் ஆட்டோ பிடித்து கரட்டடிபாளையம் என்று ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் தூக்கமில்லாமல் கரைகிறது. தூங்கிவிட எந்தப் பேருந்தும் அனுமதிப்பதில்லை. கில்லியோ, முந்தானை முடிச்சோ டிவிடி வடிவில் கண்களுக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதை என்னால் தவிர்க்கவும் முடிவதில்லை. பசங்க, நாடோடிகள் போன்ற விமர்சன ரீதியாக அதிகம் பேசப்பட்ட சமீபத்திய படங்களை பேருந்திலேயே பார்த்திருக்கிறேன்.

ரயிலில் போகும் போது எதையாவது யோசிக்க முடியும்.பேருந்தில் அதற்கான வாய்ப்பு இருப்பதில்லை. கவனம் முழுவதும் வண்ணத்திரையில் லயித்து விடுகிறது. ஆனால் இதற்காக வருந்துவதில்லை.வாழ்வில் ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்துவிட வேண்டும் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். எனக்கு இப்போதைக்கு வேறு வழியில்லை. ஒவ்வொரு வாரமும் ஊருக்குப் போய்த்தான் ஆக வேண்டும்.

=====

பேருந்தில் பயணிக்கும் போது ஒரு சம்பவம் என்னால் மறக்க முடியாதததாக பதிந்திருக்கிறது.

சேலத்தில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு வார விடுமுறைக்காக ஊருக்கு பஸ் ஏறினேன். மிடுக்காக ஆடை அணிந்திருந்தவர் புன்னகைத்து 'ஹாய்' சொல்லி அருகில் இடம் கொடுத்தார். சிரித்துக் கொண்டு அருகில் அமர்ந்தேன். எப்பொழுதும் போலவே ஈரோடுக்கு ஒரு டிக்கெட் எடுத்தவுடன் தூங்க ஆரம்பித்துவிட்டேன். நான் அசந்த நேரத்தில் அவரது கை என் தொடை மீது ஏறியிருந்தது. அடுத்தவனின் கை தொடை மீதிருப்பதை உணர்ந்து ஒவ்வொரு முறை நான் என் கால்களை அசைக்கும் போதும் அவர் கையை எடுத்துக் கொண்டார். நேரம் ஆக ஆக அவரது கை என் தொடையிலிருந்து மேல்நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தது. கூச்சமாக இருந்தது. இதை தவிர்க்க வேண்டும் என்று தெரியும் ஆனால் எப்படி என்று தெரியவில்லை. விடலைப்பருவம் அது. பயம் அதிகமாகிக் கொண்டிருந்தது. அவன் என்னை கடத்திச் சென்றி ஒரு இருட்டறையில் நாட்கணக்கில் வைத்திருப்பதாகவும் இன்ன பிறவற்றை செய்து கொண்டிருப்பதாகவும் மனதிற்குள் ஒரு குதிரை ஓடிக் கொண்டிருந்தது.

அந்தப் பேருந்தில் இருக்க தயக்கமாயிருந்ததால் சங்ககிரியில் இறங்கி அடுத்த பேருந்தில் ஏறினேன். படிக்கு அருகில் இருந்த ஒரு ஸீட்டில் இடம் காலியாக இருந்தது. அந்த முன்னிரவின் விளக்கு வெளிசத்தில், என்.ஹெச் 47 சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த வாகனங்களை மிக வேகமாக பஸ் கடந்து கொண்டிருந்தது.

என் அருகில் அமர்ந்திருந்தவர் அழுது கொண்டிருந்தார். நான் மெதுவாக திரும்பி அவரைப் பார்ப்பதும் பின்னர் ஜன்னலை பார்ப்பதுமாக இருந்தேன். இருபது நிமிடங்கள் கடந்திருக்கலாம். ஒரு லாரியை பஸ் முந்திக் கொண்டிருந்தத போது அழுது கொண்டிருந்தவர் வேகமாக எழுந்து கீழே குதித்துவிட்டார். பஸ்ஸும், லாரியும் பின்னால் வந்த சில வாகனங்களும் தன்னிச்சையாக நின்றன. குதித்தவர் லாரிச் சக்கரத்தில் விழுந்து கசங்கிப் போனார். இரண்டு நிமிடத்திற்கு முன்பாக பார்த்த ஒருவன் இரத்தத்தின் ஈரப்பசை மாறாமல் நசுங்கிக் கிடந்ததைப் பார்த்த எனக்கு மூன்று நாட்கள் எனக்கு காய்ச்சல் விடவில்லை. அவர் இறப்பதற்கு முன் பார்த்த முகம் என்னுடையது என்பது எனக்கும் அவருக்கும் மட்டுமே தெரியும்.

=======

ஹைதராபாத்தில் இருக்கும் போது தொடர்ந்து ஆறு மாதங்களாக ஊருக்குப் போகாமல் இருந்ததுண்டு, அந்தத் தனிமை மிக அசட்டையாக என்னைப் பார்த்து பல்லிளிக்கும். ஆனால் அந்தத் தனிமையில் ஒரு போதை இருந்தது.

நண்பன் ஒருவனை டெல்லிக்கு ரெயிலில் அனுப்பிவிட்டு 'நாம்பள்ளி' ரயில் நிலையத்திலிருந்து மெஹதிப்பட்டணம் தாண்டி இருக்கும் ரெத்திபவுலி வரைக்கும் இரவு ஒரு மணியளவில் நடந்து வந்திருக்கிறேன். சாச்சா நேரு பூங்காவிற்கு அருகில் இருக்கும் மேம்பாலத்தின் மீது நிற்கும் போது அமைதியான நள்ளிரவில் பாலத்தின் மேலாகச் செல்லும் லாரி பாலத்தில் உண்டாக்கும் மென்னதிர்வை உணர்ந்திருக்கிறேன்.இத்தகைய தனிமையின் சுகங்களை பெங்களூரில் உணர்ந்ததில்லை. பெங்களூர் எனக்கான தனிமையை பறித்துக் கொண்டது. நம் மொழி பேசுபவன் அருகில் இருப்பது கூட ஒரு விதத்தில் சுமையாக இருக்கிறது. வாய்விட்டு ஒரு மூன்றெழுத்து கெட்ட வார்த்தை பேச முடிவதில்லை.

=======

நேற்றிரவு அலுவலகம் முடித்துப் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். ரெயில்வே ட்ராக்கை தாண்டி சாலையில் இருந்த குழியில் நீர் நிரம்பியிருந்தது. ஸ்பெலெண்டர் ப்ளஸ்ஸில் வேகமாக போனால் இரண்டு பற்கள் கழண்டுவிட வாய்ப்பிருப்பதால் மெதுவாக நகர்த்தினேன். (இந்த வண்டியில் லைட்,ஹார்ன்,மைலேஜ்,பிரேக் என்ற முக்கியமான அம்சங்கள் எல்லாமே ஒரு படி கீழாகத்தான் இருக்கிறது. ஆனால் இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த சமயம், ஏனோ இதையே பெரும்பாலானோர் சிபாரிசித்தார்கள்), நான் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த சமயம் பின்னால் வந்த கார்க்காரன் பயங்கரமாக ஹார்ன் அடித்து கடுப்பேற்றினான். அவனது வண்டி கேரளா பதிவு. என்னைப்போலவே திரவியம் தேட இங்கு வந்திருப்பவன் என்பதால் கொஞ்சம் கலாய்த்தால் தப்பில்லை என்று தோன்றியது.

உள்ளூர்க்காரனிடம் அதிகம் வைத்துக் கொள்ள மாட்டேன். அவர்கள் கை ஓங்கிவிட வாய்ப்பு அதிகம் என்பதால் அவர்களிடம் கொஞ்சம் அடங்கிச் சென்று விடுவேன். கார்க்காரனை முன்பக்கமாக விட்டு அடுத்து வந்த வேகத்தடையில் அவன் மெதுவாக ஏறிக் கொண்டிருந்த போது போது பின்புறமாக நின்று ஹார்ன் அடித்து என் வீராப்பைக்க்காட்டினேன். கண்ணாடியை கீழிறக்கி "வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்?" என்றான் முன்புறமாக நகர்ந்து பாம்புவிரலை உயர்த்தி என் வக்கிரத்தை காட்டி அவன் கோபத்தை கிளறி கொஞ்சம் குளிர்காய்ந்தேன். இடியட், ஸ்டுபிட் என்றான், நானும் பதிலுக்கு சில வார்த்தைகளைத் துப்பினேன்.

வண்டியை குறுக்காக நிறுத்தி சில வார்த்தைகள் பேசலாம் என்று தோன்றினாலும் கூட்டம் சேந்ததாலும் எனக்குள் கொஞ்சம் பயம் சேர்ந்ததாலும் அடங்கிக் கொண்டேன். அவன் நகர்ந்துவிட்ட பின்னரும், இன்று காலையில் அலுவலகம் வரும் வரைக்கும் அவனை எப்படி பழி வாங்கியிருக்க முடியும் என்று அவ்வப்போது யோசித்தேன்.

ட்ராபிக் போலீஸ் வரும் வரைக்கும் சண்டையிட்டு அவன் வண்டி கேரளா ரெஜிஸ்ட்ரேஷன் என்பதை அவருக்கு காட்டிக் கொடுத்திருக்கலாம், தமிழில் மிக வக்கிரமான வார்த்தைகளை பிரயோகித்து அவனை அவமானப்படுத்தியிருக்கலாம். இன்னும் கொஞ்சம் வழிமுறைகளையும் யோசித்துப் பார்த்தேன். அவை அச்சுக்கு ஏற்றவை அல்ல என்பதால் விட்டுவிடலாம். ஆனால் எத்தனை குரூரமானவனாக இருக்கிறேன் என்பதை இவை உணர்த்துகின்றன.

4 எதிர் சப்தங்கள்:

Karthikeyan G said...

too intresting..

anujanya said...

தொடர்புடைய குறிப்புகள் தாம். எங்கும் சாலைகளும், விபத்துகளும், தனிமையும், கோபமும் கூடவே வருகின்றனவே. 'சாலைக்கோபம்' கொஞ்சம் ஆபத்தானதுதான். இங்கு மும்பையில் துப்பாக்கி சூடு, மரணம் வரை சென்றிருக்கிறது. ஹைதையைக் கவிதையாகவும், மற்றவற்றைத் தனித்தனி சிறுகதைகளாகவும் கூட எழுதி இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.

அனுஜன்யா

Anonymous said...

நல்லா இருக்கு..

ரமேஷ்

கிரி said...

தற்போது கோபி கடும் போக்குவரத்து நெரிசல் ஆவது கவலைக்குரியதாக உள்ளது.

முன்பு இருந்த ரசிக்கும்படியான கோபி தற்போது நிறம் மாறி வருவது எனக்கு பெருத்த ஏமாற்றம் :-(