Oct 16, 2009

திருமாவுக்கு ஒரு கடிதம்


அன்பின் திருமா,

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமாக காங்கிரஸ் திமுக கூட்டணி தோற்றுவிடக் கூடாது என்று நினைக்க காரணம் இருந்தது. திமுகக் கூட்டணியில் திருமாவும், அதிமுக கூட்டணியில் வைகோவும் வெல்ல வேண்டும் என்று விரும்பியிருந்தேன். மற்றவர்களைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை.

இலங்கைப் போரின் முடிவு பற்றியும் பெரிதாக எதிர்பார்ப்பில்லாத தருணம் அது. ஆயிரக்கணக்கில் தமிழர்கள் மடிவதும், இலட்சக்கணக்கில் தமிழர்கள் உயிரைக் காத்துக் கொள்ள ஓடிக் கொண்டிருப்பதுமான செய்திகள் 'சில' ஊடகங்களில் வந்து கொண்டிருந்த போது இந்தியா மெளனம் சாதித்துக் கொண்டிருந்தது. டெல்லியில் தமிழனுக்காக உரத்துக் குரல் கொடுக்க யாருமில்லாமல் வெறுமை சூழ்ந்திருந்தது. திருமாவும் வைகோவும் அந்த இடத்தை நிரப்புவார்கள் என்ற நம்பிக்கை துளிர்க்கத் துவங்கிய வேனிற்கால பருவம் அது.

விருப்பம் ஐம்பது சதவிகிதம் நிறைவேறியது. வென்றீர்கள், என்றாலும் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக உலவிக் கொண்டிருந்தீர்கள். பெரிதாக வருத்தமடையவில்லை.

ஆனால் நேற்று ராஜபக்சேவுடன் குலாவிய என் இன நொண்டிச் சிங்கத்தை தொலைக்காட்சியில் பார்த்தபோது அருவெருப்பாக இருந்தது. இது ராஜதந்திரம் என்று சொல்லி மழுப்பப்படும் என்று எங்களுக்குத் தெரியும் என்பதால் அவ்வாறு சொல்லி இன்னும் கொஞ்சம் அசிங்கப்பட வேண்டாம்.

நீங்கள்(குழு) எப்படி பேசினாலும் உங்களின் எந்த வேண்டுகோளும் இலங்கையில் நிறைவேற்றப்படவும் போவதில்லை; இலங்கைத் தமிழனின் வாழ்வும் மாறப்போவதில்லை என்பதை அங்கு செல்வதற்கு முன்பாகவே நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றாலும் புன்னகைத்துக் கொண்டு விமானம் ஏறினீர்கள். என்றாலும் நம்பிக்கையில்லா தமிழர்கள் வாழ்த்துக் கூற தயங்கவில்லை.

முகாம் சந்திப்புகளை முடித்துவிட்டு அதிபரை பார்க்கப் போகும் போது உங்கள் முன்னால் இரண்டு சாத்தியங்கள் இருந்தன. ஒன்று அதிபர் குழாமிடம் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு ஒரு சாமானியத் தமிழனின் கோபத்தையும் கண்டனத்தையும் குழுவில் இருந்த நீ ஒருவனவாவது காட்டியிருக்கலாம்.சிங்கத்தின் குகைக்குள் சென்று சிங்கத்தை சந்தித்தபோது உங்கள் வீரமும் தைரியமும் செருப்போடு சேர்த்து வெளியில் நின்றுவிட்டது போலிருக்கிறது. கூனிக் குறுகி, சிரித்து வழிந்து நீங்கள் அசிங்கப்பட்டதுமில்லாமல், மொத்த தமிழினத்தையும் கேவலப்படுத்தியிருக்கிறீர்கள்.

அல்லது அதிபரை எதிர்த்து உங்களால் பேச முடியாது என்ற பயம் உங்கள் தொடையை நடுங்கச் செய்திருக்கும் பட்சத்தில் அந்த அதிபர் சந்திப்பை புறக்கணித்து எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.

இரண்டும் இல்லாமல் அதிபர் மாளிகையில் குலாவிக் கொண்டு திரும்பியிருக்கிறீர்கள். ராஜபக்ஷேவும் அந்த சகோதரன்களும் என்ன உங்களின் மச்சான் உறவா? அவர்கள் நீங்கள் "இறந்திருப்பீர்கள்" என்பார்கள், அதை நீங்கள் "ஜோக்"காக எடுத்துக் கொள்வீர்கள். எவ்வளவு அவமானகரமான நிகழ்வு இது.

இந்தியா வல்லரசு தேசம் என்ற கொடியேற்றுகிறீர்களே அந்த தேசத்தின் ஆளுங்கட்சி குழுவல்லவா நீங்கள். மிதித்தெறிய வேண்டியவனிடம் மண்டியிட்டு சரணாகதியடைந்த கொள்கை திருவிளக்காக நாடு திரும்பியிருக்கிறீர்கள்.

கொழும்பு செல்லும் நாடாளுமன்ற குழுவில் உங்களின் பெயரைப் பார்த்தவுடன் சரியான முடிவுக்கு வர முடியவில்லை. ராஜபக்ஷேவின் செயல்களை ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களோடு செல்லும் உங்களால் என்ன செய்துவிட முடியும் குழப்பம் இருந்தாலும், வாழ்வில் உச்சபட்ச துன்பங்களை உணர்ந்துவரும் மக்கள் வாழும் முகாமுக்கு நீங்கள் நிச்சயம் செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. குறைந்தபட்சம் நமக்காக குரல் கொடுப்பவனை பார்த்துவிட்ட சந்தோஷம் அவர்களுக்கு கிடைக்கலாம்.

அடுத்த நாள் அதிபர் மாளிகையில் அரங்கேறும் அசிங்கத்தை உணராமல் அவர்களும் அழுது புலம்பியிருக்கிறார்கள். வாழ்வின் அடிமட்ட கசப்போடு இலட்சக்கணக்கான மக்கள் கழிந்த பீ மூத்திரத்தின் நாற்றம் இலங்கைக்கே சென்றுமா உங்கள் நாசியில் ஏறவில்லை.

ஹிட்லர் கூட செய்யாத செயல்களைச் செய்பவன் இந்த ராஜபக்சே என்று மார்தட்டிய திருமாவை அவனது கால்களுக்கடியில் குலையும் நாய்குட்டியாக பார்கக் வேண்டி வரும் என்று நினைக்கவில்லை.

தேர்தலுக்கு முன்பாக நீங்கள் காங்கிரஸ் கட்சியை மென்று தின்று கொண்டிருந்தீர்கள். நீங்கள் கொள்கைப் பிடிப்புடையவர் என்ற நம்பிக்கை இருந்ததால் தீவுத்திடலில் சோனியாவுடன் மேடையேற மாட்டீர்கள் என்றிருந்தேன். ஏறினீர்கள். கர்ஜித்தீர்கள். தேர்தலில் வென்றாக வேண்டும், நாடாளுமன்றத்தில் குரல் உயர்ந்தாக வேண்டும் என்பதால் அது தற்காலிக உடன்படிக்கை என்று நானாக சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஆனால் சாதாரண மூன்றாம்தர அரசியல்வாதியின் பதவி ஆசை தவிர உங்களிடம் கொள்கைபிடிப்பு என்று எதுவுமில்லை என்பதை உணர்ந்து கொள்ளும் போது ஆயாசமாக இருக்கிறது. வெறும் பதவிக்காகத் தானே இத்தனை கும்பிடுகளும்.குறுகல்களும்

உங்களின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது. இன்று கூட இந்தக் கடிதத்தை பகிரங்கரங்கமாக பதிவு செய்து கொஞ்ச நாட்களாவது தமிழ் உணர்வோடு பேசிய உங்களை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் நான் நினைப்பதைத்தான் சாதாரணத் தமிழன் நினைத்துக் கொண்டிருப்பான். பதவியில் இருக்கும் உங்களால் அதை உணர முடியுமா என்று தெரியவில்லை. உங்களின் செயலை கண்டிப்பதற்கு இந்தக் கடிதம் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை.

ஆனால் ஒன்று, தமிழுக்காக உருவாகும் ஒவ்வொரு தலைவனும் அழிந்து வருகிறான். அல்லது அழிக்கப்படுகிறார்கள்.

யார் திட்டமிடுகிறார்கள்?

வருத்தத்துடன்,
..........................

24 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Arumaiyana pathivu. yennathan yeluthinalum intha naigal thirunthava pogirathu.. itharkkum yethavathu kaaranam solvar tholthiruma.. yenna seiya.. athaiyum ketkavendiyathuthan

Anonymous said...

யார் திட்டமிடுகிறார்கள்?///

என்ன கேள்வி இது? தமிழினத்தின் ஒரே தலைவர் தான்

RAGUNATHAN said...

மிக நல்ல பதிவு. நல்ல கேள்விகள்...சாட்டையடிகள்...சவுக்கடிகள்...

சாணக்கியன் said...

கமல் சொல்லியதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. மக்களிலிருந்துதான் தலைவன் வருகிறான். மக்கள் சுய நலமிகளாக இருக்கும்போது தலைவனும் அப்படித்தான் இருப்பான்... தலைவன் அப்படி இருப்பதால் மக்களில் ஒரு சிலரும் கெட்டுவிடுவார்கள். சீழ் பிடித்துப்போன சமுதாயம்தான் நாம். அறுவை சிகிச்சை செய்ய ஒருவர் வரவேண்டும்...

கானா பிரபா said...

இப்படியான ஈன அரசியல்வாதிகள் இன்னும் ஏன் ஈழத்தை வைத்து அரசியல் நடத்துகின்றாகள் என்பது தான் இன்னும் புரியாத புதிர்.

Anonymous said...

pathivu arumai...namkkenna ithu pudhitha..karuna,chandrakanthan,thiruma..vendam endralum innum palar mugathirai kiliyum

raja said...

எங்களுடைய எண்ணங்களை நீங்கள் எழுத்தாக்கியிருக்கிர்கள் மிக்க நன்றி இந்த நபர் இனி மீசையை முறுக்கியபடி போஸ் கொடுக்க வேண்டாம் தயவு செய்து சொல்லுங்கள். என்ன செய்ய எல்லோருடைய முகமுடியும் அவிழும் காலம் போல இது...

raja said...

எங்களுடைய எண்ணங்களை நீங்கள் எழுத்தாக்கியிருக்கிர்கள் மிக்க நன்றி இந்த நபர் இனி மீசையை முறுக்கியபடி போஸ் கொடுக்க வேண்டாம் தயவு செய்து சொல்லுங்கள். என்ன செய்ய எல்லோருடைய முகமுடியும் அவிழும் காலம் போல இது...

முருக சிவகுமார் said...

அடிப்படை அரசியல் போக்கை புரிந்துகொள்ளாமல், முட்டாள்தனமாக கண்டபடி எழுதுவதை ”போலி” தமிழின உணர்வாளர்கள் கொஞ்சம் நிறுத்துங்கள்.
இராசபக்சேவுடன் திருமா சிரித்து பேசி பூரித்து மகிழ்ந்ததை எந்த தொலைக்காட்சியில் பார்த்தீர்கள். அந்தப் படத்தை உங்கள் பதிவினுள் போட்டிருக்கமாமே.
வெற்றிபெற்ற மதப்பில் இருமாப்பில் பேசும் இராசபக்சே முன், இறுகிய முகத்துடன் தோல்வியடைந்த வெதும்பலில் திருமா இருந்தார் என்பதுதான் உண்மை.

இலங்கையிலும் சரி, தமிழகத்துக்கு வந்த பிறகும் சரி திருமா அளித்த நேர்காணல்களை முழுமையாக கேட்டீர்களா? அல்லது படித்தீர்களா? வியாழன் அன்று இரவு 10 மணிக்கு ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ”முதல் குரல்” நிகழ்ச்சியை பார்த்தீர்களா? அதில் என்ன சொன்னாரென தெரியுமா? சோமாலியா மக்களை விட கேவலமாக தமிழர்கள் இராசபக்சேவால் நடத்தப்படுகிறார்கள் என்பதை திருமா தயங்காமல் கூறியிருக்கிறார். அதை கேட்டீர்களா?

இப்படி எதையும் பார்க்காமல், படிக்காமல், அரசியலின் போக்கை ஆழமாக புரிந்துகொள்ளாமல் திருமாவை குறைகூறுவீர்.தெருவுக்கு வந்து போராட துப்பில்லாமல், நான்கு அறைக்குள் ஒரு கணினி கிடைத்தால் அவதூறாக எழுதும் புத்தியை கைவிடுங்கள்.

தமிழர்களுக்கு திருமா துரோகம் செய்துவிட்டார் என்று பலரும் எழுதுகிறீர்கள். ஈழமக்களின் அவலத்துக்கு திருமாவா காரணம்? திருமா ஒருவர் நினைத்தால் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை வாங்கித் தர முடியுமா? அது மளிகை கடையிலா இருக்கு. 30 ஆண்டுகாலம் பிரபாகரம் போராடினார். அவராலே ஈழத் தமிழர்களை முழுமையாக ஒருங்கிணைக்க முடியவில்லை. அவரையே, ஈழத் தமிழர்களில் பலர் திட்டுகிறார்கள். நீங்கள் திருமாவை திட்டி எழுதுவதும் அப்படிதான்.

தேர்தலில் வாக்குகளை பொறுக்குவதுதான் குறியென்றால், காங்கிரசு - தி.மு.க. எதிர்ப்பு அரசியல் இருந்ததை உணர்ந்து எதிரணிக்கு வந்திருக்கலாமே? ஏன் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தார். ”உன்னை போல் உக்கார்ந்து எழுதி கிழிக்கும் பலரும் என்ன செய்வீர்கள் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். திருமாவால் என்ன முடியுமோ, அதை அவர் திறம்பட செய்துகொண்டுதான் இருக்கிறார்.

இராசபக்சே முன் நீ இருந்தாலோ, நீ நம்பும் உன் தலைவன் இருந்தாலோ என்ன செய்திருப்பீர்? இராசபக்சே சட்டையை பிடித்து அடித்து கொன்றிருப்பீரோ?
வீராவேசத்துடன் எழுதும் நீங்கள் என்ன செய்திருப்பீர் என்று எனக்கு நன்றாகவே தெரியும். தேர்தலுக்காக வேடம் போட்டு ஆடிய ஜெயலலிதாவை நம்பியவர்கள்தானே நீங்கள்?

எழுதுவதற்கு முன் அரசியலை ஆராய்ந்துகொள்ள கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்.

Vaa.Manikandan said...

நண்பர்களுக்கு நன்றி.

முருக சிவக்குமார்,

நான் உணர்ச்சிவசப்படுவதாக நினைப்பதும், போலியான உணர்வாளன் என்பதும் உங்களின் தவறான புரிதல்.

இந்தக் கட்டுரையில் இறுதியில் உள்ள வாக்கியங்கள் உண்மை.

நான் திருமாவையோ கலைஞரையோ எந்த விதத்திலும் பழித்திட விரும்பதியல்லை. திருமா அவரது உணர்ச்சிகளையும் மன வெதும்பல்களையும் காட்ட வேண்டிய இடம் என்பது முதல் குரல் நேர்காணலோ, பொதுக்கூட்ட மேடையோ அல்ல. அதற்கான வாகான இடமாக ராஜபக்சேவின் மாளிகை இருந்திருக்கிறது. அங்கு அவர் தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதனை பதிவு செய்வதுதான் இந்தப்பதிவின் நோக்கமும்.

உங்களின் அரசியல் புரிதல்கள் வாழ்க.

இராமகிருஷ்ணன் said...

என்னைய்யா இது? இவ்வளவு கடினமாக இருக்கு படிக்க. தமிழை சரளமாக எழுது ராசா, ஏம்ப்பா இப்படி ஒருவருக்கும் புரியாத தமிழில் எழுதரே?

IKrishs said...

திருமா ஒரு வேளை போகாமல் இருந்திருந்தால் காங்கிரஸ் மற்றும் திமுக இலங்கை தமிழர்கள் சிரிப்பொலி பார்த்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதாக அள்ளி விட்டு இருப்பார்கள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும் .

Anonymous said...

முருக சிவகுமார் சொன்னது சரியே போராளிகளை கைது செய்யப்படும் போது குப்பி கடிக்க பண்ணி சாகடித்த பிரபாகரனும் புலி தலைமையும் சிங்கள ராணுவத்தின் காலில் விழுந்து சரளடைந்தது. திருமா இராசபக்சேவுடன் சந்திப்பு மதிப்பானது.

முருக சிவகுமார் said...

//சாதாரண மூன்றாம்தர அரசியல்வாதியின் பதவி ஆசை தவிர உங்களிடம் கொள்கைபிடிப்பு என்று எதுவுமில்லை//


//உங்களின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது. கொஞ்ச நாட்களாவது தமிழ் உணர்வோடு பேசிய உங்களை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை.//

முகத்திரை கிழிந்து தொங்குகிறது என்ற வாக்கியம் ரொம்ப ஓவராக இருக்கு. திருமாவின் அரசியல் பயணத்தை துளியும் அறியாதவர் நீங்கள் என்பது தெரிகிறது.

அதிகாரத்தை நோக்கி திருமா நகரும்போதே அவரது நேர்காணல்களையோ அறிக்கைகளையோ ஊடகங்கள் முழுமையாக வெளியிடுவதில்லை. ஓர் பதவி இல்லையெனில், என்னவாகும்? அதைகூட உங்களால் உணர முடியவில்லையா? அரசியலுக்கு வந்தபோதே அவர் நேரடியாக பதவிக்கு வரவில்லை. இந்த அரசியல் அதிகாரத்தை பிடிக்க அவர் எத்தனை ஆண்டுகள் கத்தினார். எவ்வளவு தொண்டர்களை இழந்தார் தெரியுமா? அவர் எந்த நேரத்திற்கு எழுவார், எந்த நேரத்திற்கு உண்பார், எப்போது உறங்குவார் என்று தெரியாமல் அவரின் கொள்கை பிடிப்பு பற்றி பேச வந்துவிட்டீர்!

தேர்தலுக்கு முன்பு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய திருமா, பிறகு பேசாமல் போனதென்ன?

ஈழப் பிரச்சனையில் திருமா தனது பங்களிப்பை செய்துகொண்டுதான் இருக்கிறார். அதிலிருந்து அவர் பிறழவில்லையே. தேர்தலுக்கு முன் உண்ணாநிலை இருந்தார். தேர்தலுக்கு பிறகு வந்த அவரின் பிறந்த நாளை ”எழும் தமிழ் ஈழம்’’ என்ற பெயரில் கடைப்பிடித்தார். இதெல்லாம் அவரது கொள்கை பிறழ்ச்சியா? இதைவிட அவர் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்.

காங்கிரசுகாரன் காங்கிரசு காரனாகவே இருக்கிறான். திருமா, திருமாவாதான் இருக்கிறார். அவர் மாறினாரா?

//அதற்கான வாகான இடமாக ராஜபக்சேவின் மாளிகை இருந்திருக்கிறது. அங்கு அவர் தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.//

திருமா, எதிர்ப்பு காட்டியிருக்க வேண்டுமெனில் எது மாதிரி காட்டியிருக்க வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர். அந்நிய நாட்டுக்கு ஆய்வு செய்ய சென்ற திருமா, அந்நாட்டின் இரானுவம், காவல்துறை பாதுகாப்பில் இருக்கும் அதிபர் இராசபக்சேவை அடித்திருக்க வேண்டுமா? அதையா நீங்கள் எதிர்பார்க்கிறீர்?
இது சாத்தியமா என்பதை அறிவுடன் யோசியுங்கள் நண்பரே!


யாதார்த்தத்தை உணர்ந்து விவாதியுங்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

திருமாவுக்கு அரசியல் நெருக்குதல் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

கிளிப்பிள்ளைக்கு எழுதிக்கொடுத்தபடி படிக்காவிட்டால், வேறு வகையான தொந்தரவுகள் அவருக்கு இழைக்கப்படலாம்.

இது போன்ற குழுக்களோடு அவர் பயணம் செய்வது சரியா என்பதை அவரே சிந்தித்திருக்க வேண்டும்.

அவருக்கு தெரியாதது இல்லை!

மொத்ததில் நடத்தப்பட்ட நாடகத்தில் அவரது பாத்திரத்தில் திருமா சிறப்பாக செய்திருப்பதாக முதல்வர் உணர்வது முதல்வருக்கு கிடைத்த வெற்றி!

போவதற்கு முன் திருமா யோசித்திருக்க வேண்டும், போயிருக்கக் கூடாது.

கலையரசன் said...

பல பேரு இப்படி தான் இருக்காங்க. இனையத்துல தமிழ்ல டைப் பண்ண தெரிஞ்சாலே அவன் அவன் இஸ்டத்துக்க்கு எழுதி கிழிக்கிறது. இங்க எழுதி கிழிக்க்கும் எத்தனை நபர்கள் ஈழத்திற்காக ஈழ சொந்தங்களுக்காக என்னத்த செய்திருப்பாங்கன்னு தெரியல. என்னைய பொருத்த வரைக்கும் தமிழகத்தில் ஈழ எழுச்சியை உண்டு பண்ணுனது விடுதலைச்சிறுததைகளாகத்தான் இருக்கும். இதுவரைக்கும் ஈழ பிரச்சினைக்காக போராடி வேறு எந்த கட்சிகளோ இயக்கங்களோ சிறை சென்றதில்லை. 220 பேருக்கும் மேல ஈழப்பிரசினைக்காக சிறைசென்ற ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகளாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு ஊர்தோரும் வீதி தோரும் களத்தில் இறங்கி போராடியவர்கள் அவர்கள் தான். இயக்கங்கள் அளவில் பார்த்தால் பெ,தி,க . இவை இரண்டு மட்டுமே ஈழ விடுதலைக்காக தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியை உண்டுபண்ணியது என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். ஆனால் இதில் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமா துரோகியாக்கப்பட்டார். பெ.தி.க கண்டுகொள்ளப்படாமலே போய் விட்டது.

ஆனால் நாம் சீமான் போன்ற செண்டிமெண்ட் பார்ட்டிகளின் பின் நிற்கிறோம். அவர் மட்டும் சிறைக்கு சென்று இப்போது நம் விசிலடிச்சான் குஞ்சுகளிடம் கைதட்டல் வாங்குகிறார்.


தமிழகத்தில் பெரிய கட்சியாக நாம் நினைக்கும் வைகோ என்ன கிழித்தார் என்பதையும் நாம் ஆறாய்து அவருக்கும் ஒரு கடிதம் எழுதி இருக்கனும்/

ஈழ தமிழ் சொந்தங்களே யாரையும் குறை சொல்லும் முன் யோசியுங்கள். சும்மா அவதூறுகளை பரப்பாதீர்கள்.

எழுதும் முன் நாம் என்ன கிழித்தோம் என்பதை சற்று யோசியுங்கள்.

Yoga said...

thiruma ilankai senrathu baksekkazhudan mothuvathatkaaka alla;vathai mukaamkazhai paarvai iduvathatkaaka maddum thaan putinthu kozhzunkaz nanparkazhe:

Yoga said...

muruka sivakumar karuththu sariyanathu nadunilaiyaanathu

Vaa.Manikandan said...

//ஓர் பதவி இல்லையெனில், என்னவாகும்? அதைகூட உங்களால் உணர முடியவில்லையா? அரசியலுக்கு வந்தபோதே அவர் நேரடியாக பதவிக்கு வரவில்லை. இந்த அரசியல் அதிகாரத்தை பிடிக்க அவர் எத்தனை ஆண்டுகள் கத்தினார். எவ்வளவு தொண்டர்களை இழந்தார் தெரியுமா?//

இத்தனை உழைப்பும் கேவலம் ஒரு பதவிக்குத்தான் என்கிறீர்கள். அதையேதான் நானும் சொல்கிறேன். இதுதான் யதார்த்தம்.

//பல பேரு இப்படி தான் இருக்காங்க. இனையத்துல தமிழ்ல டைப் பண்ண தெரிஞ்சாலே அவன் அவன் இஸ்டத்துக்க்கு எழுதி கிழிக்கிறது.//
சாரே! ரொம்ப‌ உண‌ர்ச்சிவ‌ச‌ப்படாதீங்க‌. சீமானை நான் பாராட்டி ஒரு வார்த்தை கூட‌ எழுதிய‌தில்லை. இன்ன‌மும் சொல்ல‌ப்போனால் முத்துகும‌ர‌ன் தீக்குளித்த‌ போது எழுந்த‌ உண‌ர்வினை திசைதிருப்பிய‌தே கூட‌ சீமான்,பார‌திராஜா என்ற‌ சினிமாக்கார‌ர்க‌ள் தான் என்ப‌து என் க‌ருத்து.


//எழுதும் முன் நாம் என்ன கிழித்தோம் என்பதை சற்று யோசியுங்கள்.//

த‌மிழ‌க‌த்தில் யாரும் எதையும் கிழிக்க‌வில்லை. அதுதான் நிதர்சனம். அதே ச‌ம‌ய‌ம் துரோகிக‌ள் நிறைய உண்டு. உப‌கார‌ம் செய்யாதவ‌ர்க‌ளை விட‌வும் உப‌த்திர‌ம் செய்வ‌து பாவ‌ம். அதைத்தான் சொல்லியிருக்கிறேன்.

Anonymous said...

அட இந்த அரசியல் வாதிகள் கோமாளிகள் என்பது எமது எதிரியாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. முறுக்கிய மீசை கொலைவெறியன் மஹிந்தவைக் கண்டவுடன் சறுக்கி விட்டதோ? தொப்புள் கொடி உறவுகளே காப்பாற்றுங்கள் என நாம் கதற அந்த தொப்புள் கொடியாலேயே எமது கழுத்தை எதிரியுடன் சேர்ந்த தமது சுயநலன்களுக்காக நெரித்தவர்கள் இவர்கள். இனியும் இவர்களை நம்பினால் கடவுள் அல்ல யாராலும் ஈழ ஈனத் தமிழ உன்னைக் காக்க முடியாது. முதலில் மற்றவாகளை நம்பாது உன்னில் நீ உரம் பெறு. வெற்றி நிச்சயம்.
ஜனா

கந்தர்மடம் கவின் said...

வணக்கம் நண்பரே..
உங்கள் ஆதங்கத்தில் நியாயம் இல்லாமல் இல்லை.

ஆனலும் சில யதார்த்தங்களையும் நாம் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து.

இலங்கை வருகின்ற குழுவில் திருமாவும் இருக்கிறார் என்றவுடனே , எனக்கு முதல் தோன்றிய கேள்வி இவர் திரும்பிச்செல்வாரா என்பதே...?

ஏனென்றால் இந்திய பிரதமர் என்கிற அதியுயர் அதிகார பதிவியில் இருந்த ஒருவரையே வந்த இடத்தில் கொல்லமுயற்சித்தவர்கள்,

ஏன் அவ்வளவு , வந்த இடத்தில் இலங்கை ஜனாதிபதிக்கு விரல் காட்டி கதைத்தார் (பேசினார்) என்கிற ஒரே காரணத்திற்காக பாதுகாப்பு ஆலோகர் என்கிற பதிவியிலிருந்தவர் “சாக்” உச்சி மாநாட்டுக்கு வந்து பட்ட சிரமங்களும் , அவமானங்களும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இவையெல்லாம் அறிந்திருந்தும் , திருமா, அவலப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களை பார்க்க வேண்டும், பேசவேண்டும் , உண்மையை உலகிற்கு சொல்லமுடியாவிட்டாலும் , தானாவது அறிந்து வைத்திருக்க வேண்டும் என்ற ஆவலில் வந்திருக்கலாம் அல்லவா...?

அதற்குள் அரசியல் ஆதாயமும் இருக்கலாம், இருக்கும் அதை நான் மறுக்கவில்லை.

ஆனால் இப்படி எல்லார் செய்வதையும் பிழைபிடித்து எமக்குள் நாமே பிளவுபட்டு நிற்பது இப்போதைக்கு புத்திசாலித்தனமாக இருக்காது என்பது என் நினைப்பாடு.

செயற்பாடுகளில் குறை பார்ப்பதிலோ, அதனை அலசுவதிலோ பிழையில்லை ,அதனூடாக அப்படியான செயற்பாடுகளே நிறுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்பது தவறு என்பது என் அபிப்பிராயம்.


//ஈழ தமிழ் சொந்தங்களே யாரையும் குறை சொல்லும் முன் யோசியுங்கள். சும்மா அவதூறுகளை பரப்பாதீர்கள் //

இது போன்று,தனியொருவரின் கருத்தை வைத்து ஒரு சமூத்தை விழிப்பது போன்றவை அனாவசியமானவை, இவை எம்முள் வேற்றுமயைத்தான் வளர்க்கும்.

உங்களது மறுப்புக்களையும்,புரிவையும் அந்த தனிப்பட்டவருக்கு தெரிவியுங்கள் , அதை அவர் புரிந்துகொள்வது , ஏற்றுக்கொள்வது அவரைப்பொறுத்தது.

கருத்து பிழையிருந்தால் எனக்கு சோல்லுங்கள், அதைவிடுத்து இதுதான் இலங்கை தமிழனின் நிலைப்பாடாக தயவுசெய்து எடுத்து கொள்ளவேண்டாம்.

இலங்கையிலேயே இன்றும் வாழும் ஒரு தமிழன்.

நன்றி

Anonymous said...

//வெற்றிபெற்ற மதப்பில் இருமாப்பில் பேசும் இராசபக்சே முன், இறுகிய முகத்துடன் தோல்வியடைந்த வெதும்பலில் திருமா இருந்தார் என்பதுதான் உண்மை.//


நேர்ல பொய் பாதீங்களோ?

சாதி உணர்வுல அப்பிடியே துடிக்க வேண்டாம்.

மீசைல லெக் பீஸ் ஓட்டலங்கறது எல்லாத்துக்கும் தெரியும்.

Anonymous said...

//சாதி உணர்வுல அப்பிடியே துடிக்க வேண்டாம். //

இது ரொம்ப அதிகம்.
ஆரோக்கியமான கருத்துகள் பகிர்ந்து கொள்வது நல்லது.

seethag said...

முருகேச சிவகுமாரின் என்ண்ணங்களை ஆதரிக்கிறேன்.

நானும் யோசித்து பார்த்தேன்,திருமாவால் என்ன செய்திருக்க முடியுமென்று?ராஜபக்ஷேவிற்ற்கு சஅபை மரியாதை தெரியவில்ல்ஐயாயின் என்ன செய்வது?

பதவிகுறித்த எண்ணத்திலும், திருமாவும் பதவியில் இல்லையென்றால்,ஒடுக்கபட்டவர்களின் முகமே தெரியாதே?
நமது ப்ர்தமர் , சோனஇயாவின் கைப்பாவை என்று சொல்பவர்கள்இடம் நான் சொல்வதைதான் இஙு சொல்வேன். இத்தகய் நில திருமமாவுக்கு ஆகட்டும் , ப்ரதமருக்கு ஆகட்டும், எள்தல்ல. ஆனால் சில நல்ல காரியங்களுக்காக சிலவற்றை பொறுத்து தான் ஆகவேண்டும்.நமக்கு நன்பர்கள் கேலி செய்தாலே தங முடிவதில்லை.with such big ego what can we achieve ?nothing.so i do understand thiruma's difficulty.