Sep 22, 2009

ஜப்பான் சரக்கின் பெயர் சாக்கே!

ஒகனாமோயாகி அல்லது ஹிரோஷிமாயாகி எல்லாம் இன்று நான் 'அப்படியே' சாப்பிட்ட ஐட்டங்கள். இந்த 'அப்படியே'வுக்கு சமைக்காமல் அப்படியே என்று அர்த்தம். ஜப்பானின் கடைப்பெயர் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் வாயில் நுழையாமல் அப்படியே பல பேர் அடுத்த கட்டுரைக்குப் போய்விடலாம் என்பதால், பெயர்கள் எல்லாம் சென்சார் செய்யப்படுகின்றன.

கவாஸாகி நகரத்தில்தான் அலுவலகம் இருக்கிறது. மதிய உணவுக்கு அருகில் இருந்த பெரிய ஷாப்பிங் காம்ளக்ஸூக்குப் போனோம். டைனிங் செலக்ஷன் என்ற பெயரில் பல நாடுகளின் ரெஸ்டாரண்ட்கள் ஒரே இடத்தில் இருக்கின்றன. யாரோ நடத்தும் இந்திய உணவகத்துக்குப் போனோம். சக பணியாளர் 'சக்'(Chuck) அழைத்துச் சென்றார். சக் பெயரளவில்தான் அமெரிக்கர். ஜப்பான் வந்து பதினேழு ஆண்டுகளாகிறதாம். வந்த மூன்றாம் ஆண்டிலேயே கம்பெனி ரிசப்சனிஸ்டை கல்யாணம் செய்து கொண்டு இப்பொழுது முக்கால்வாசி ஜப்பானியன் ஆகியிருக்கிறார். நல்ல ஜப்பான் மொழி பரிச்சயம் கைகூடியிருக்கிறது. கூட வந்தவர்களில் எலீஸா என்ற பெண்மணியும் உண்டு. மற்றவர்கள் இத்தாலி, அமெரிக்கா போன்ற தேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்திய உணவகத்தில் உண்டுபார்க்க ஆசைப்பட்டார்கள்.

இந்திய உணவை இந்தியாவில் மட்டுமே ருசிக்க வேண்டும். இது மற்ற நாடுகளுக்கும் பொருந்தும். ஒரு நாட்டின் உணவு முறையை வேறு எங்கு முயன்றாலும் அரைகுறைதான். உடனே எதிர்வாதமாக அமெரிக்க சரவணபவன், துபாய் அண்ணாச்சி கடை, மலேசியா ராமநாதபுரத்துக்காரர் கடையெல்லாம் நீங்கள் குறிப்பிட்டால் இவை எல்லாம் இந்தியர்களால் 'நிரப்பப்பட்ட' தேசங்கள் என்று சொல்லி நான் ஜகா வாங்க வேண்டியிருக்கும். இந்தியக் கடையில் இருந்த உணவு என் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை. முருகன் இட்லிக்கடையை மனதில் நினைத்துக் கொண்டே கர்நாடக 'காமத்' பவன்களில் சர்க்கரை கொட்டப்பட்ட சாம்பாரில் நனைத்து வைக்கும் முதல் கவளம் எவ்வளவு ஏமாற்றம் தருமோ அப்படி இருந்தது. பட்டர் நாண், கீமா கறி தந்தார்கள். உப்புசப்பில்லாமல் கடனுக்கு சாப்பிட்டேன். மற்றவர்கள் நாக்கில் சலவாய்* ஒழுகத் தின்றார்கள்.

(இந்தச் சலவாய் என்ற சொல்லுக்கு இலக்கணக் குறிப்பைப் பார்த்துவிடலாம். சலவாய்-வாய் சலம்-வாயிலிருந்து வடியும் சலம். இதற்கான இலக்கணக் குறிப்பு ‘முற்றுப்போலி’. இப்படி கொங்குச் சொற்களுக்கான இலக்கணக்குறிப்புகளைக் கண்டறிவதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. இதே போன்ற கொங்குச் சொல்லில் இன்னொரு முற்றுப்போலி, பொடக்காலி- புறம் காலி- காலியாக இருக்கும் புறப்பகுதி(வெளிப்பகுதி).

எப்படியோ தின்று, 880 யென் அழுதுவிட்டு பார்த்தால் அலுவலகத்தில் மீட்டிங்குக்கு இன்னும் இரண்டு மணி நேரங்கள் இருந்தன. கொஞ்சம் படம் எடுக்க வேண்டும் என்று கழண்டு கொண்டேன். தனியாக அந்த காம்ப்ளெக்ஸை சுற்றியதில் பெண்களே அதிகம் தட்டுப்பட்டார்கள். ஒருவேளை ஆண்கள் எல்லாம் உழைக்கிறார்களோ என்று தோன்றுகிறது. கடைகளில் எல்லாம் பாட்டுப்பாடினார்கள். அது வணக்கமாம். வணக்கம் சொல்வதையும் பாடலாகச் சொல்கிறார்கள், வெளியே போகும் போது நன்றி சொல்வதையும் பாடலாகச் சொல்கிறார்கள். பெண்கள் கிட்டத்தட்ட எல்லோரும் 'க்ரேஸி' ப்ரியர்கள் என்று நினைக்கிறேன். துணிகளுக்கும்,செருப்புகளுக்கும், கழுத்து காதில் போடுவதற்குமானவைகளைத் தேர்ந்தெடுக்க மிகுந்த சிரமப்படுகிறார்கள். காதில் போடும் சாதாரண கம்மல் 1500 ரூபாய் அளவுக்கு இருக்கிறது. கிப்ட் வாங்கலாம் என்று சென்றவன் வேடிக்கை பார்த்துவிட்டு திரும்பிவிட்டேன். ஆனால் நல்ல சட்டைகளை 400,500 என்ற அளவில் பார்த்தேன். வேலைக்குப் போகும் ஆண்கள் வெள்ளைச் சட்டையும், கறுப்பு பேண்ட்டுமாக அலைந்தால் சட்டைகள் எப்படி விற்கும்? இந்த நகரத்தில் பெண்கள் தனியாகவோ அல்லது மற்றப் பெண்களுடனோதான் பெரும்பாலும் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். சில பெண்களே பையன்களுடன் சுற்றுகிறார்கள். அவர்கள் அனைவரும் பையன்களின் சேட்டைகளுக்கும் முத்தங்களுக்கும் ஈடுகொடுத்துக் கொண்டே நடக்கிறார்கள்.

மாமா ஒரு டார்ச் லைட் வாங்கி வரச் சொன்னார். கடைக்காரர்களுக்கு டார்ச் லைட் என்பதைப் புரியவைக்க மென்று தண்ணீர் குடித்தேன். ஆனாலும் வாங்க முடியவில்லை. வேலைக்காவதில்லை என்று வேறொரு கடைக்குப் போனேன். நாய்க்குட்டிகளையும் பூனைக்குட்டிகளையும் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். நாய்கள் ராட்சஸ நாய்கள் இல்லை. கர்ச்சீப் அளவுக்கே இருக்கும் சிறு வகை நாய்கள். 1,50,000 யென் என்று வைத்திருந்தார்கள். கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. நம் ஊரில் குதிரைகள் கூட இதில் பாதி விலைதான் இருக்கும்.

இந்தச் சுற்றலை முடித்துக் கொண்டு அலுவலகம் சென்றால் மூன்று மணி நேரத்துக்கு அறுத்தார்கள். அரிவாளால் வெட்டுவது பரவாயில்லையா அல்லது ரம்பத்தால் வெட்டுவது பரவாயில்லையா என்றால் என்ன சொல்வது? எப்படியும் சாகிறோம் எதற்கு துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று அரிவாளால் வெட்டு என்றுவிடலாம். ஆனால் இவர்கள் ரம்பத்தால் அறுக்கிறார்கள். எப்படியோ 5.30 மணிக்கு எல்லாம் முடித்துவிட்டு சாப்பிடக் கிளம்பினோம். மதியம் சென்ற அதே குரூப். இந்த முறை கண்டிப்பாக ஜப்பானிய முறை உணவுதான் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த ஜப்பானிய உணவு முறைகளில் சிலதான் டக்கனாகி மற்றும் முதல் வரியில் சொன்னவை எல்லாம். ஹோட்டல் டேபிள் மீது ஒரு மின்சாரத்தால் சூடாகும் அடுப்பு இருக்கிறது. பார்ப்பதற்கு தோசைக்கல் போல. ஆர்டர் கொடுப்பது எல்லாம் வேகவைக்காமல் வரும். அதை அந்தக் கல் மீது போட்டுவிடுவார்கள். வெந்தோ வேகாமலோ விருப்பப்படி தின்னலாம். முதலில் பீட்ஸா வடிவில் இருந்த ஒன்றைக் கொண்டு வந்து வைத்தார்கள். 'சக்' இது சிக்கன் என்றார். தின்று முடித்த பிறகு அடுத்ததாக சிக்கனை எடுத்து வந்தார்கள். இது சிக்கன் என்றால், முதலில் தின்றது என்ன என்று வினவினேன். சக் விசாரித்துவிட்டு பன்றிக்கறி என்றார். யோசிப்பது எல்லாம் முட்டாள்தனம் என்று முடிவு செய்து வருவதை எல்லாம் ருசி பார்த்தேன். வாத்து வைத்திருந்தார்கள். 'சக்' இது Duck என்றார். எனக்கு Dog என்று கேட்டது. தயங்கிய நேரத்தில் சீனக்காரர்களின் தட்டுக்குப் போய்விட்டது. "அய்யோ போச்சே" என்று நினைத்துக் கொண்டேன்.

நான் என்ன சாப்பிட்டேன் என்று ஒவ்வொன்றாகச் சொன்னால் உங்களுக்குப் படிக்கச் சங்கடமாக இருக்கலாம். ஆனால் அனுபவத்தை எழுதும் போது சொல்லாமல் விடுவது தவறல்லவா? முட்டையோடு கலந்த பன்றிக்கறி, பச்சை மீன், (நான் வேக வைத்தேன்), நூடுல்ஸ், ஆப்பாயில் இப்படித் தொடர்ந்தது. மற்றவர்களுக்கு வந்ததில் எல்லாம் நான் கை வைத்து ருசி பார்த்ததால் ஜப்பானில் நடப்பவை, பறப்பவை,நீந்துபவை என்று எல்லாமே கலந்து என்னுள்ளே சென்றிருக்கின்றன.

நண்பனொருவன், மச்சி ஜப்பானா? கலக்குற போ என்றான். நான் ஒன்றும் கலக்கவில்லை, வயிற்றுக்குள் போனது எல்லாம் என்னைக் கலக்காமல் இருந்தால் சரி என்றேன். மற்றவர்கள் பியர் குடித்தார்கள். நான் ஜப்பான் டீ குடித்தேன். கசப்பாக இருந்தாலும் ஒரு விதமான சுவை அது. எனக்கு சுவரைச் சுரண்டினால் பல் கூசும் ஆனால் இன்னும் கொஞ்சம் சுரண்டலாம் என்று தோன்றும். அப்படியான சுவை அந்த ஜப்பான் டீ.

அப்புறமாக சாக்கே என்ற ஜப்பானிய 'சரக்கை' ஆர்டர் செய்தார்கள். ஒரு சிறு குடுவை தருகிறார்கள். 20-25 மில்லி லிட்டர் பிடிக்கும். அதில் ஊற்றி 'கல்ப்'பாக அடிக்காமல் உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்க வேண்டும். இது வைன் போன்று ப்ரிட்ஜ்ஜில் நீண்ட நாட்களுக்கு வைத்துக் குடிக்க முடியாதாம். சுவையும் போதையும் போய்விடும். அதே போல குடிக்கும் போது போதை ஏறுவதும் தெரியாது. குடித்த பின்னர் அமெரிக்கப் பெண்மணி எலீஸா கிளப்பிய ரகளையில் எங்களை ஜப்பான் காரர்கள் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். ஜப்பானியர்கள் நடக்கும் போது கூட எல்லோரும் ஒரே மாதிரி எட்டி வைக்கிறார்கள், எத்தனை கூட்டம் இருந்தாலும் இரைச்சல் இல்லை. அந்தக் கூட்டத்தில் இவள் மட்டும் 'கெக்கபிக்கே' என்று கொண்டிருந்தாள். எனக்கு போதை ஏறிவிட்டது என்று சொல்லிக் கொண்டாள்.

போதையில் என்னைப்பற்றியும் ஏதோ நக்கலடித்தாள். இந்த ஆங்கிலம் பல நேரங்களில் எனக்குப் புரியாமல் காலை வாரி விட்டுவிடும். இப்பொழுதும் வாரிவிட்டது. எங்கள் ஐய்யன் "இடுக்கண் வருங்கால் நகுக" என்று சொன்னதால் நானும் சிரித்து வைத்துவிட்டேன்.

பத்துப் பேர் அமுக்கியதில் மொத்த பில் 50,000 யென். 'லேரி' தான் பில்லைக் கொடுத்துவிட்டு கம்பெனியில் வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். நன்றி சொல்லிவிட்டு "இன்னும் கொஞ்சம் ஆர்டர் பண்ணியிருக்கலாமோ" என்று நினைத்துக் கொண்டேன். எத்தனை தின்றாலும் இந்த புத்தி போகாது போலிருக்கிறது என்றும் நினைத்துக் கொண்டேன்.

நன்றி: உயிரோசை.

2 எதிர் சப்தங்கள்:

நிகழ்காலத்தில்... said...

\\முதலில் தின்றது என்ன என்று வினவினேன். சக் விசாரித்துவிட்டு பன்றிக்கறி என்றார். யோசிப்பது எல்லாம் முட்டாள்தனம் என்று முடிவு செய்து வருவதை எல்லாம் ருசி பார்த்தேன். வாத்து வைத்திருந்தார்கள். 'சக்' இது Duck என்றார். எனக்கு Dog என்று கேட்டது. தயங்கிய நேரத்தில் சீனக்காரர்களின் தட்டுக்குப் போய்விட்டது. "அய்யோ போச்சே" என்று நினைத்துக் கொண்டேன்.\\\


நன்றாக நகைச்சுவையாக எழுதி இருக்கிறீர்கள்

வாழ்த்துக்கள்

கிரி said...

மணிகண்டன் ரொம்ப சுவாராசியமா எழுதி இருக்கீங்க

இன்று உங்கள் பழைய பதிவுகள் பல படித்தேன் அருமை.. அதில் நீங்கள் எழுத்தாளர் சுஜாதாவை பார்க்க சென்றதாக கூறிய இடுகையில் கோபியில் இருந்து வந்ததாக கூறி இருந்தீர்கள்..நீங்கள் கோபிச்செட்டிபாளையமா! நானும் கோபி தான்.

நம்ம ஊரில் இருந்து ஒருவர் இருக்கிறார் என்பது சந்தோசம் அளிக்கும் செய்தி ..காரணம் இது வரை ஒருவரை கூட நான் கோபியில் இருந்து என்று (பதிவுலகில்) பார்த்ததில்லை அல்லது என் கண்ணில் தட்டுப்படவில்லை.

அன்புடன்
கிரி