Sep 9, 2009

ஸப்பான்ல ஸாக்கிசான் கூப்ட்டாரு

அவசரமாக, மிக அவசரமாக வெள்ளிக்கிழமை காலையில் என்னிடமிருந்து பாஸ்போர்ட் வாங்கி, சனிக்கிழமை காலை ஜப்பான் விசாவை கையில் கொடுத்து, அதே நாள் மாலை விமானத்தில் ஏற்றிவிட்டார்கள். முன்னாடியே என்னிடம் 'நீ ஜப்பான் போக வேண்டியிருக்கலாம்' என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், என்னை substitute ஆகவே வைத்திருந்தார்கள். கடைசி நேரத்தில் ஆள் கிடைக்காததால் எனக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள். பெங்களூரிலிருந்து

மும்பை பின்னர் அங்கிருந்து கோலாலம்பூர் அங்கிருந்து டோக்கியோ என மூன்று விமானங்கள் மாற வேண்டும். ஒவ்வொரு விமானத்திற்கும் குறைந்தது நான்கு மணி நேரம் காக்க வேண்டும் என்ற கொடுமை வேறு. கோலாலம்பூரில் என்ன செய்வது என்று தெரியவில்லை. காலை 7.25 மணியிலிருந்து பதினோரு மணி வரைக்கும் வெட்டிதான் என்றாகிவிட்டது. பிரான்ஸிலிருந்து ஆண்ட்ரேயா வருவதாக சொன்னார். ஆண்ட்ரேயா ஆண் தான்.

விமானங்களில் சிலர் மாஸ்க்கோடு சுற்றினார்கள். எனக்கும் மற்றவர்களை பார்த்து பயமாகிவிட்டது. ஒன்று கிடக்க ஒன்றாகி ஜப்பான் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்பதை எல்லாம் நினைத்துப்பார்க்வே தலை சுற்றுகிறது. கூட வருவது ஆணா பெண்ணா என்பதை விளக்கமாக குறிப்பிடுவது, உயிர் மீதான அதீத பயம் என்பதெல்லாம் கடந்த பத்து மாதங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வின் பின்னாலிருந்து தொடர்கிறது. பெங்களூரு விமானநிலையத்தில் ஒரு மாஸ்க் வாங்கிவிடுவது உசிதம் என்று நினைத்து விலை கேட்டேன். 275 ரூபாய்.(அட்றா சக்கை!அட்றா சக்கை!). வாங்கி பெங்களூரில் கட்டிக் கொண்டு ஜப்பான் வரைக்கும் திரிந்தேன். மாஸ்க் கட்டாத குழந்தைகள் எல்லாம் என்னை ஒரு விளையாட்டுப் பொருளை போல பார்த்தார்கள். இன்று காலை மூக்கின் மீது ரத்தம் கட்டியிருக்கிறது. அந்த அளவுக்கு சிரத்தையோடு கட்டியிருக்கிறேன் என்பதை கண்ணாடி காட்டுகிறது.

முன்பு வேலை செய்த நிறுவனத்தில் வெளிநாடு சென்றால் allowance உண்டு. காசு மிச்சம் ஆகும் என்பதால் வயிறு வாயைக் கட்டி கஞ்சத்தனத்தின் கொடியேற்றுவேன். ஆனால் இந்த நிறுவனத்தில் அலவன்ஸ் எல்லாம் கிடையாது. செலவாகும் தொகையை பில்லைக் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். பில் இல்லையென்றால் செலவை ஏற்றுக் கொண்டு பணம் தர மாட்டார்கள். இன்று தண்ணீர் பாட்டில் ரூ.50(100 யென்)க்கு வாங்கினேன். வெண்டிங் மெசினில் பில் வராது என்று தெரியும் இருந்தாலும் அங்கு அதில் மட்டும்தான் தண்ணீர் இருந்தது. 50 ரூபாய் எனக்கு நட்டக் கணக்குதான். இப்படி கைக்காசு தான் செலவாகும் போலிருக்கிறது.

நிறுவன ஆட்கள் , நாளைக்கே நீ ஜப்பான் போகிறாய் உனக்கு செலவுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டால் எனக்கு என்ன தெரியும்? 1400 டாலர் போதும் என்று வாங்கிக் கொண்டேன். இங்கு வந்து பார்த்தால் ஹோட்டல் பில்லே 1870 டாலர் வரும் போலிருக்கிறது. சோலி சுத்தம் என்று இன்னும் கொஞ்சம் பணம் கணக்கில் ஏற்றுங்கள் என்று கெஞ்சியிருக்கிறேன்.

ஜப்பானை பற்றி நிறைய எழுதலாம் என்று தோன்றுகிறது. டாய்லெட் போனால் கூட நீங்கள் கழுவிக்கொள்ள வேண்டியதில்லை என்று சொன்னால் நக்கலடிப்பதாகத் தோன்றினாலும் அதுதான் உண்மை. ஆனால் இதைப்பற்றி எல்லாம் எழுதுகிறேன் பேர்வழி என்று எல்லோரும் 'க்யூவில்' வரிசைக் கிரமமாக நிற்கிறார்கள், குப்பையே கண்ணில் தெரிவதில்லை ரோடு அவ்வளவு சுத்தம் என்றெல்லாம் எழுதினால் அசோகர் மரம் நட்டார் என்ற கதை ஆகிவிடும். இதை எல்லாம் எங்காவது படித்திருப்போம் அல்லது கேட்டிருப்போம்.அது எல்லாம் எதற்கு? ஜப்பான் பெண்கள் எப்படி என்று கேளுங்கள். இதுவரைக்கும் நான் பார்த்த கொஞ்சமே கொஞ்சமான உலகப் பெண்களில் , ஜப்பானிய பெண்கள் செம மொக்கை. என் கண்களில் கூட கோளாறாக இருக்கலாம். நேற்று ரெயில்வே ஸ்டேஷனின் ஒரு பெண் ஜட்டியோடு வந்து கொண்டிருந்தாள். அருகில் வரும் போதுதான் தெரிந்தது ஜட்டி ஜீன்ஸ் துணியில் தைத்திருக்கிறார்கள் என்று. கொஞ்சம் யோசித்து 'ஷாட்ஸ்'தான் சுருங்கி ஜட்டி அளவுக்கு மாறிவிட்டது என்று என் சிற்றறிவில் எட்டுவதற்குள் தாண்டி போய்விட்டாள்.

இன்றைய மாலை கொஞ்சம் ஊரை சுற்றிப்பார்க்கலாம் என்றிருந்தேன். டைபூன் வருகிறதாம். இவர்கள் பூகம்பம் வந்தால் கூட மெத்தையில் படுத்து டி.வி.பாருங்கள் அதற்குள் நின்றுவிடும் என்று சொல்லி ரூமுக்குள் அனுப்புகிறார்கள். டைபூனுக்கா பயப்படப் போகிறார்கள். எனக்கும் ஆண்ட்ரியாவுக்கும் தான் பயம். 4.30 மணிக்கு எல்லாம் அலுவலகத்திலிருந்து மூட்டையைக் கட்டிவிட்டோம்.

நேற்று வரும் போது விமானத்தில் சிங்களப் பெண்மணி அருகில் இருந்தார். அநுராதாபுரத்துக்கார பெண். ஜப்பானில் பணி செய்கிறார். முன்னதாக கணவர், மகன் உடனிருந்திருக்கிறார்கள். பொருளாதார பெரு மந்தத்தில் அவர்கள் இருவரது வேலையும் காலியாகிவிட, அவர்கள் இருவரும் மட்டும் இலங்கைக்கு சென்றுவிட்டார்கள். எனக்கும் இலங்கைக்கும் என்ன சம்பந்தம் என்பது போல அவரது ஊர் பற்றிய சிறு-கதையைக் கேட்டுக் கொண்டேன். அவர் ஜப்பான் பற்றிய கொஞ்சம் தகவல்களை கொடுத்துதவினார். ஆனால் விமானம் நிற்கும் போது வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், பூகம்பம் வந்தால் என்ன செய்வது என்றேன். ஒன்றும் செய்வதற்கில்லை. கடவுள் விட்ட வழி என்று பீதியைக் கிளப்பிவிட்டு இறங்கிவிட்டார்.

ஜப்பான் வந்தால் ஜப்பான் உணவைத்தான் தொடுவேன் என்று பேசும் சில மனிதர்களிடம் எனக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை . ஆனால் அவர்களை பத்து நாளைக்கு வெறும் பச்சைக் காய்கறிகளும் ஸாஸூம் மட்டுமே தின்ன வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். பச்சைக் காய்கறி என்றால் காரட், வெள்ளரி, தர்பூசணி என்று நம் நாக்குக்கு பழக்கப்பட்ட ஐட்டங்கள் இல்லை. பார்க்கும் போது சாப்பிடலாம் என்று தோன்றலாம். ஆனால் வாயில் வைத்தால் வாந்தி வராத குறையாக இருக்கும் அல்லது வாந்தி எடுத்துவிடுவோம்.

சில வேளைகளில் வெளிநாட்டு உணவை சுவைப்பது சுவாரசியம்தான். ஆனால் அதில் வாழ்வது என்பது எனக்கு இயலாத காரியம். ஊரிலிருந்தே கொஞ்சம் ஊறுகாய் போன்ற சரக்குகளை எடுத்து வந்திருந்தேன். எல்லாம் சூட்கேஸில் கொட்டி நாசக்கேடு ஆகிவிட்டது. ஒரு சட்டையை என்ன செய்வது என்று தெரியவில்லை. நல்ல வேளையாக அனைத்து துணிகளுக்கும் ஆகாமல் தப்பித்துவிட்டேன். இல்லையென்றால் ஒரே சட்டையை எல்லா நாட்களுக்கும் அணிந்து அதை மறைக்க மேலே ஜெர்கினோடு, இங்கு இருக்கும் வரைக்கும் பாரதியாராகி இருக்க வேண்டும்.

நேற்று டோக்கியோவை அடையும் போது இரவு 8 மணி. மழை வேறு. விமான நிலையத்திலிருந்து சின்னகாவா ரெயில் நிலையம் போக வேண்டும். 8.31க்கு ட்ரெயின் வரும் என்றார்கள். அதைவிட்டால் 10.32 க்குத்தான், சரியாக 8.31 க்கு வந்து நின்றது. அந்த ரெயில்வே ட்ராக்கை கண்டுபிடித்து வருவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. ஓடி,வியர்த்து ஒரு வழியாகியிருந்தேன். போதாதற்கு ஆங்கிலத்தில் இருக்கும் முகவரியை காட்டினால், ஆங்கிலம் தெரியாது என்று வெட்கச்சிரிப்பை உதிர்க்கும் மக்கள்தான் அதிகம். ட்ரெயினில் ஏறிய பிறகு நான் மட்டுமே முகமூடி அணிந்தவனாக இருந்தேன். யாரும் கண்டுகொள்ளவில்லை. அந்த மொபைல் போனில் என்னதான் இருக்கும் என்று தெரியவில்லை, ஆண்களும் பெண்களும் அவரவரது மொபைல் போனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு மணி நேரத்தில் நாரிட்டா விமான நிலையத்தில் இருந்து சின்னகாவா ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டேன். சின்னகாவா ரயில் நிலையத்துக்கு அருகில்தான் தங்கப் போகும் ஹோட்டல் இருக்கிறது. இந்த 2 மணி நேரங்களில் ஏதாவது சொதப்பியிருந்தால் பெரிய காமெடி ஆகி இருக்கும். இரவு/மழை/மொழி என பலதும் சேர்ந்து எனனைச் சுற்றி அமர்ந்து கும்மியடித்திருக்கலாம்.

இங்கே வந்தபிறகு மலேசியா,பிரான்ஸ்,அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாட்டில் இருந்து வந்திருந்த நான் வேலை செய்யும் நிறுவன மக்களோடு சேர்ந்து கொண்டேன். இது பெரிய தப்பாகத் தெரிகிறது. அவர்கள் வாலைப் பிடித்துக் கொண்டு போய் வருவதில் என்ன சுவாரசியம் இருக்கிறது. தனியாக அலைந்தால்தான் ஊர் பற்றிய கொஞ்சம் விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் என்பது என் எண்ணம்.

ஆண்ட்ரேயாவோடு பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு விஷயம் பேசினோம். பாரீஸ், டெல்லி, ரோம் போன்ற பெருநகரங்களின் நடுப்பகுதியில் கொண்டு போய்விட்டால் அந்த இடத்துக்கான தனித்துவமிக்க கட்டடக்கலை அடையாளங்களை உணரலாம். டோக்கியோவில் ஜப்பானின் அடையாளம் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. வளர்ச்சி என்ற பெயரில் பெரும் கட்டங்களையும் சாலைகளையும் கட்டி நியூயார்க் போன்று மாற்றி வைத்திருக்கிறார்கள். ஜப்பானின் அடையாளம் டோக்கியோவில் இல்லை. அது நாட்டின் உட்புற பகுதிகளில் இருக்கலாம். ஜப்பானை பார்க்க அந்த சிறு நகரங்களையும் கிராமங்களையும் பார்க்க வேண்டும். ஆனால் நாங்கள் அவற்றை பார்க்கப் போவதில்லை. தனித்துவமிக்க ஜப்பானையும்.

ஆனால் ஒன்று! என் ஜிடாக்கில் "ஸப்பான்ல ஸாக்கிசான் கூப்ட்டாரு" என்று ஸ்டேட்டஸ் மெசேஜ் எழுதி வைத்துக் கொள்ளலாம்.

நன்றி:உயிரோசை

10 எதிர் சப்தங்கள்:

யாசவி said...

nice :-)

manjoorraja said...

ம்ம் சப்பான் எல்லாம் போய் சாலியா இருக்கீக போல ம்ம்...நடக்கட்டும்.

அப்படியே அந்த சமுராய் கதைகளில் வரும் இடங்களையும் பார்த்துவிட்டு வரவும்.

Anonymous said...

வரும் போது பாம்பு பிரியாணி ரெண்டு பார்சல் :))

கலையரசன் said...

அது சப்பையா இருக்குமாமுல்ல?????
அதாங்க.. மூக்கு! அப்படியா?

இராம்/Raam said...

:))

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

பேயோன் said...

நன்றாக எழுதுகின்றீர்கள். சமகால ஜப்பானிய சினிமா குறித்தும் எழுதியிருக்கலாம்.

துபாய் ராஜா said...

சொர்க்கமே என்றாலும் நம்மூரு போல வருமா......... :))

Anonymous said...

ஸப்பான்லயா இருக்காரு சாக்கிச்சான்?

தமிழ்நதி said...

சப்பான் பெண்கள் மொக்கையாக்கும்:) எங்கே போனாலும்... சரி திரும்பி வந்தாச்சா ஊருக்கு?