Sep 2, 2008

ஒரு துப்பாக்கியின் பெய‌ர்


உயிர்மை.காம்மின்(http://www.uyirmmai.com/) "உயிரோசையில்" வெளியான கவிதைகள். நான் ரொமாண்டிக் ஆக மாறுவதற்கு சற்று முன்பாக எழுதிய கவிதைகள் இவை :)

1)ஓய்வெடுக்கும் கடவுள்
முடிந்த பகலின் எச்சங்கள்
சிதறிக்கிடக்கும்
இந்த இரவில்
உறிஞ்ச வேண்டிய சிகரெட் ஒன்று மிச்சமிருக்கிற‌து.
குப்பியில் தீராமலிருக்கிறது கொஞ்சம் மது.
நீங்கள்இரவொன்றை கொண்டாடாமல் கழிக்கிறீர்கள்.
கணமொன்றை விசனத்தில் தீர்க்கிறீர்கள்.
வினாடியின் நீட்சியை கவலையில் தோய்க்கிறீர்கள்.
நானோ
தன் சூட்சுமங்களை
ஆணியில் அறைந்து
ஓய்வெடுக்கும்
கடவுளாகிறேன்.
மழையின் உற்சாகம் கரைந்து கொண்டிருக்கும்
வெளியில்-
பிளாஸ்டிக் பாட்டிலில்
அடைத்துக் குலுக்கிய
நீராக தத்தளிக்கிறது.

நீங்கள் எது என்பீர்கள்
நான் தெரியாது என்பேன்.

2) ஒரு துப்பாக்கியின் பெய‌ர்
கெளசிக்
துப்பாக்கி வாங்கியிருப்பதாகச்
சொன்னான்
இஸ்ரேலியத் தயாரிப்பான
அது
சமயத்தில் நூற்றியிருபது குண்டுகளை
தேக்கிக் கொள்ளும்.
வினாடிக்கு
740 மீட்டர் வேகத்தில்
குண்டு சீறும்.
மொத்த எடை
3100 கிராம்.
ஸ்ரீலதாவின் குடும்பத்தை
தீர்க்கப் போகிறானாம்.
சிரித்தேன்.
'நீ_______' என்றான்.
அவன் சொன்னானா
நான் மறந்தேனா
என்பதில் பிரச்சினையில்லை.
இப்பொழுது
துப்பாக்கியின்
பெயர்
நினைவில் இல்லை.

3)குண்டு வெடித்த நகரத்திலிருந்து
என் தட்டில் மீதமிருந்த பிரியாணி
இன்று விற்கப்பட்ட
கடைசி பிரியாணியாகிறது
நான் தவறவிட்ட பேருந்து
நிறுத்தப்பட்ட
பேருந்துகளில் கடைசியாகிறது
சற்று முன்பாக கேட்ட ஓசை
வெடித்தகுண்டுகளில் கடைசியாக இருக்கிறது
கூர்க்கா விசிலூதும் தெருவில் இன்று
நாய்கள் மட்டுமே விளையாடுகின்றன
விமானங்கள் பறந்து கொண்டிருக்கும்
நகரத்தின் வானில்
ஒரு
பறவை மட்டும் பாய்கிறது
லாரிச் சத்தம் இல்லாத அதிசய இரவின் துவக்கத்தில்
பயந்து அடங்குகிறது ஊர்.
டி.வி. அணைந்த அறைக்குள் எனக்கு
துணையிருக்கிறது
அவசரமாக விழுங்கி முடித்த
பிரியாணி வாடை.

4) மெளனத்தின் விஷம்
நேற்று நிகழ்ந்த மரணத்தையொத்திருக்கிறது
இந்த எதிர்பாராத மழை
இந்த எதிர்பாராத பிரியம்
இந்த இதழ் உலர்ந்த முத்தம்

இன்று நிகழும் கொலையை முடிவு செய்கிறது
இந்த கோடையின் புழுக்கம்
இந்த இரவின் மெளனம்
இந்த கணத்தின் பதட்டம்

நாளை நிகழவிருக்கும் தற்கொலையை உறுதியாக்குகிறது
இந்த சொல்லின் வன்மம்
இந்த மெளனத்தின் விஷம்
இந்த துரோகத்தின் சிரிப்பு.
ஓவியம்: ராஜன் புதியேடம்

6 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

நீங்கள் துப்பாக்கி, வெடிகுண்டு, கொலை என்றெல்லாம் பயமுறுத்தினாலும், கடவுள், அதுவும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் குலையை நடுக்குகிறது

- சுந்தர்

anujanya said...

மணி,

நீங்கள் தமிழ்மணத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கவில்லையா? இன்னும் நிறைய பேர் (பதிவர்கள்) பார்க்க/படிக்க வசதியாக இருக்கும். கவிதைகள் நான்கும், முன் சொல்லியதுபோல் அருமை.

அனுஜன்யா

Vaa.Manikandan said...

சுந்தர் கருப்பராயன் எல்லாம் இல்லையா? கத்தி, அருவான்னு.. :)

அனுஜன்யா,

கவிதை குறித்தான தங்களின் கருத்துக்கு நன்றி.

தமிழ்மணத்தில் என்னுடைய பதிவு இருக்கிறது. ஆனால் பின்னூட்டத்தில் திரட்டப்படாது. நான் இரண்டு முறை தமிழ்மணத்தின் வலைப்பதிவில் பின்னூட்டமிட்டு மின்னஞ்சல் அனுப்பினேன். ஒரு நடவடிக்கையும் இல்லை.

அதே போன்று பதிவர் புத்தகங்கள் பகுதியில் "கண்ணாடியில் நகரும் வெயில்" புத்தகம் வெளியிடுவது குறித்து இரண்டு முறை மின்னஞ்சல் அனுப்பியும் பதில் இல்லை.

நான் பதிவராக கருதப்படவில்லை போலும் என்று நினைத்துக் கொண்டேன். தமிழ்மணம் பல சமயங்களில் இப்படி நடந்து கொள்வது உண்டல்லவா. கெஞ்ச வேண்டுமா என்று தெரியவில்லை.

manovarsha said...

oh nee thanni adikkira dham adikkira partya. irudi pudhu ponnukitta solren

இராம்/Raam said...

மணி,


இந்த கவிதைகளை நம்ம சிபி படிக்கலையோ... :))

Dear friends FYI..... http://kalaaythal.blogspot.com/2006/10/015.html

//தமிழ்மணத்தில் என்னுடைய பதிவு இருக்கிறது. ஆனால் பின்னூட்டத்தில் திரட்டப்படாது. நான் இரண்டு முறை தமிழ்மணத்தின் வலைப்பதிவில் பின்னூட்டமிட்டு மின்னஞ்சல் அனுப்பினேன். ஒரு நடவடிக்கையும் இல்லை.//

நீங்க‌ க‌ருவிப்ப‌ட்டைய‌ ச‌ரியா இணைக்க‌ல'ன்னு நினைக்கிறேன்... :)

Karthikeyan G said...

next post please
:)