Apr 13, 2008

பெருமாள் முருகன் கவிதைகள்‍-துயரத்தை பொழியச் செய்பவை

(1)
இரவின் தனிமையில் சிந்தனையை ஒருங்காக்குதல் என்பது எனக்கு தவமாக இருக்கிறது. துக்கங்களா பிரியங்களா என்று புரிந்து கொள்ள முடியாத நீரூற்றுக்கள் மனவிடுக்குகளில் அலைந்து திரியும் அந்தக் கணங்கள் வாழ்வியல் அர்த்தங்களின் சிறு பிசிறுகளையாவது நமக்கு உணர்த்திவிடுகின்றன. பிர‌ப‌ஞ்ச‌த்தின் நுனியொன்றை தொட்டுவிட்ட‌தாக‌ அக‌ங்கார‌ம் கொண்ட அந்த இர‌வு ம‌றுநாள் வாழ்வோட்டத்தின் அசுர‌ வேக‌த்தில் சிதைந்து போவது வாடிக்கையாகிறது.

இந்தச் சிறு பிசிறு கசிந்து விடாமல் நமக்குள் தேக்கும் அனுப‌வ‌ம் சில அபூர்வமான க‌விதைக‌ளை வாசிக்கும் போது கிடைக்கிறது. தடித்த நாளொன்றைக் கவிந்த இரவில், மனச் சோர்வின் கனத்தில் சாவகாசமாக இதழில் பெருமாள் முருக‌னின் க‌விதைகளை வாசித்தேன்[காலச்சுவடு-மார்ச்'2008].

க‌ண்ணீர் க‌சியும் என் ஆழ்ம‌னதின் ந‌ர‌ம்புக‌ளை க‌விதை வ‌ரிக‌ளைத் த‌விர்த்து வேறெதுவும் மீட்டிட‌ முடியாது என்பதை ஒரு முறை உண‌ர முடிந்த தருணமது.

கவிதானுபவத்தின் அற்புத‌ங்க‌ளில் ஒன்றான கவிஞனுக்கும்,வாச‌க‌னுக்குமான‌ ஒத்த‌திர்வு எல்லா நேர‌ங்க‌ளிலும் இய‌ல்பாவ‌தில்லை. அபூர்வமாக அரங்கேறும் இந்த ஒத்ததிர்வில்தான் க‌விதைக‌ளின் பெருவெளிக்குள் வாச‌க‌ன் பயணிக்கிறான். இந்த‌ அற்புத‌க் க‌ண‌ங்களின் வாசிப்பனுபவம்தான் கவிதையின் மீதான வாசக தேடலயும், அடுத்த கட்டம் ஒன்றிற்கான நகர்வையும் வாசனுக்குள் உருவாக்குகின்றன‌. க‌விதையின் நுட்ப‌மான‌ ப‌ர‌ப்பில் அவன் த‌ன் துய‌ர‌த்தையும், ச‌ந்தோஷ‌த்தையும், காத‌லையும் இந்த‌க் க‌ண‌ங்க‌ளில் கொண்டாடுகிறான்.

வண்ணங்கள் விரிந்து/நட்சத்திரங்களெனச்/சிற்றழகாய் மினுங்கும்படி/நான் காப்பாற்றி வைத்திருக்கும்/பூக்கள்/கருகி உதிர்கின்றன/உதிர்ந்துகொண்டேயிருக்கின்றன.

'வ‌ண்ண ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள்'- த‌ந்தையின் க‌ன‌வுக‌ள் சிதைவதன் கொடூரத்தை காட்சியாக‌ முன்னிறுத்திய‌போது குற்ற‌வுண‌ர்வோடு எந்த‌ வினாடியும் நான் சித‌றி விட‌லாம் என்று ப‌த‌றினேன். நம் வாழ்வியல் முறைகளில் த‌ந்தைக்கும் ம‌க‌னுக்குமான‌ உற‌வு பெரும்பாலும் நுண்ணிய‌ இழைகளால் பின்ன‌ப்ப‌ட்டிருக்கிற‌து. கோபங்களில் வெடித்துச் சிதறுவதும், பிரியங்கள் நாசூக்காக மறைக்கப்படுவதும் எளிமைப்படுத்தவியலாத வனமாக மாற்றியிருக்கும் இவ்வுற‌வின் நுட்ப‌ங்க‌ளை இல‌க்கிய‌ங்க‌ளால் முழுமையாக‌ச் சொல்லிவிட‌ முடிவ‌தில்லை.

சிறு ச‌ல‌ன‌ங்க‌ளாலும், வெளிக்காட்டாத‌ அன்பின் துளிக‌ளாலும் அர்த்தமாகியிருக்கும் அந்த‌ உற‌வின் சிக்க‌ல்க‌ள் மிக‌ மெலிதாக இங்கு க‌விதையாகியிருக்கிற‌து.

த‌ந்தையின் துக்க‌ம் ப‌கிர‌ங்க‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் இக்க‌விதையோடு "குவிந்த கை" என்னும் க‌விதையினை என்னால் தொட‌ர்புப‌டுத்த‌ முடிகிற‌து. பிரிய‌த்தைச் சொல்லிச் செல்லும் பெருமாள் முருகன்,

அவன் வாய் திறப்புக்காகக் காத்திருக்கின்றன/பிரபஞ்சத்தின் விரல்கள் குவிந்து.

என்னும் வ‌ரிகளால் திடுக்கிட‌லை உண்டாக்குகிறார்‌. சு.ராவின் சொற்களில் சொல்ல‌ வேண்டுமானால் 'மூளைக்குள் ஆணி செருகும்' வித்தை. இந்த‌ வித்தை க‌விதைக்கு மிக‌ அவ‌சிய‌மான‌தாக‌ப் ப‌டுகிற‌து. வாச‌க‌னின் இந்த‌ அதிர்வு க‌விதையின் ப‌ல‌த்தை ப‌ன்ம‌ட‌ங்கு உய‌ர்த்திவிடுகிற‌து. நேர‌டி பொருள் தெறிக்காத‌ கார‌ண‌த்தில் வாச‌க‌ன் முழுமையான‌ க‌விதானுப‌வ‌ம் வேண்டி யோசிக்க‌த் துவ‌ங்குகிறான். தன் பொருள் ச‌ரியான‌தாக‌ இருக்குமா என்னும் த‌ய‌க்க‌த்தில் இன்ன‌மும் யோசிக்க‌ வேண்டியிருக்கிறது. இந்த புகைமூட்டம் உருவாக்கும் மனத்திற‌ப்பு க‌விதையின் சூட்சுமமாக‌ இருக்கிற‌து.
(2)
இதே கவிதையின் நுணுக்கத்தோடு தொடர்புடைய மற்றொரு கவிதை 'உத‌வி'. முதல் பத்தியில் காட்சியனுபவம் தெறிக்கும் கவிதை இரண்டாவது பத்தியில் தோல்விடையவதாகவே எனக்குப் படுகிறது. நீலக்கை நீண்டு திரும்பும் காட்சி மனதில் இன்னமும் இருப்பதாகச் சொல்வது தலைப்போடு சேர்த்து வாசிக்கையில் வேறொரு குறிப்புப் பொருளை உணர்த்துவதாகத் தோன்றினாலும் மற்ற கவிதைகளின் ஆழம் இதில் இல்லாததாக உணர்கிறேன். வெறும் ஆழ‌மில்லை என்ப‌தோடு நிறுத்திக் கொண்டால் ஆழ‌மின்மை என்ப‌த‌னை நிரூப‌ண‌ம் செய்யாம‌ல் த‌ர்க்க‌ ரீதியாக‌ இக்கூற்று தோல்வியடைவ‌தாக‌ அமைய‌லாம்.

நேரடியாக அணுகினால் இக்க‌விதையின் காட்சி அதிர்ச்சி த‌ருவ‌தாக‌ அமைகிற‌து. ஆனால் ச‌ற்று நிதானிக்கையில் 'திரும்பும்காட்சியே நிலைத்திருக்கிறது மனத்தில்' என்ற‌ வ‌ரிக‌ளால், அதுவ‌ரை க‌விதை உண்டாக்கிய‌ திசையிலிருந்து வேறொரு ய‌தார்த்த‌ போக்கிற்கு ம‌ன‌ம் திரும்புகிற‌து. இவ்விடத்தில், இந்த நொடியில் மனதில் உண்டாகும் வெற்றிடம் பெரும் சுமையாகிறது. திசைமாற்றும் இந்நுட்ப‌ம் இந்த‌க் க‌விதையில் அவ‌சிய‌மான‌தாக‌த் தோன்ற‌வில்லை. வாச‌க‌னாக‌ இக்க‌விதையை நான் தாண்டிவிடுகிறேன்.

'பொழுதாகும் கவலை'ய‌ற்ற‌ ச‌ந்நியாசி க‌ர‌டு/வெள்ளாட்டுக் குட்டி வ‌ரும் 'ச‌ந்நியாசி க‌ர‌டு' க‌விதையும்,'தாத்தாவின் கோவண வாலாய்த் தொங்கிக்கொண்டிருக்கும்' 'கொல்லிய‌ருவி' க‌விதையும் திரும்ப‌ முடியாத‌ நினைவுக‌ளுக்கு பாதைய‌மைக்கும் முக்கிய‌மான‌ க‌விதைக‌ள்.

எல்லோருக்கும் மீட்டெடுக்க முடியாத உலகமொன்றிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அவ்வுலகிற்கும் நமக்குமான புள்ளிகளுக்கிடையேயான தொலைவு நகர்ந்து கொண்டேயிருக்கிறது. நெருங்க முடியாத புள்ளியாகிறது என்று உணர்ந்தாலும் அந்த உலகின் வசீகரம் நம்மை ஈர்த்துக் கொண்டுதானிருக்கிறது.

அவ்வழகியல் படைப்பாக மாறும் போது லெளகீகமாக அடைய முடியாத பிரதேசத்தின் நிழலில் கொஞ்ச நேரம் மனதினை நிலைநிறுத்துகிறது. இந்தச் சந்தோஷம் துக்கத்தின் கண்ணீருக்கு பொருள் தரும் சந்தோஷம். வாசிப்பில் கசியும் இந்தத் துக்கம் படைப்போடு வாசகனுக்கு உண்டாகும் பிரியத்தின் முதல் புள்ளி.

சிக்க‌லெதுவும‌ற்ற‌ வ‌ரிக‌ளில் நினைவுகளை இய‌ல்பாக‌ச் சுண்டிச் செல்லும் இக்க‌விதைக‌ள் இந்த‌ இர‌வின் த‌னிமையை துக்க‌ம் நிர‌ம்பிய‌தாக‌ மாற்றுகின்றன‌. துய‌ர‌த்தை அமில‌ ம‌ழையாக‌ பொழிய‌ச் செய்யும் இந்த‌க் க‌விதைக‌ளை நான் கொண்டாட‌ வேண்டும். இந்த‌ கொண்டாட்ட‌த்தின் நுனிக‌ளில் என் ச‌ந்தோஷ‌ம் ஒளிந்திருக்கிற‌து.

1 எதிர் சப்தங்கள்:

Karthikeyan G said...

Fine post.
Let this good job continue..

His Short stories are also V.good.
http://www.keetru.com/kuthiraiveeran/june06/perumal_murugan.php