Apr 12, 2007

ஹைதராபாத் தம் பிரியாணி.

ஹைதராபாத் தம் பிரியாணி பற்றி இங்கு வருவதற்கு முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். பிரியாணியுடனான ஹைதராபாதின் உறவுக்கு அடிப்படையே இந்நகரத்திற்கு பூர்வாங்கமாக மேற்காசிய நாடுகளுடனான தொடர்பு.

இதனை இப்பொழுதும் நேரடியாகவே உணரமுடியும். கட்டிடங்களின் மேற்காசிய அம்சங்களைத் தவிர்த்து, பிலிம் கிளப்புகளில் ஏதேனும் ஈரானிய படங்கள் திரையிடும் நாட்களில் (மட்டும்) குவியும் பல இசுலாமிய பெண்களின் சாயல் ஈரானிய திரைப்பட நடிகைகளின் சாயலை ஒத்திருப்பதை கவனித்திருக்கிறேன். இது ஒரு சிறுபிள்ளைத்தனமான ஒப்பீடே என்ற போதும் என் வயதுக்கேற்ற ஒப்பீடு என எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஹைதராபாத் வந்து செல்பவர்கள் ஏதேனும் ஒரு கடையில் பிரியாணி உண்டுவிட்டு ஹைதராபாத் பிரியாணி சுவையே இல்லை‍; மசாலவே இல்லை என்றால் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆம்பூரிலிருந்து வந்து கடை வைப்பவன் எல்லாம் ஆம்பூர் பிரியாணி ஸ்பெசலிஸ்ட் என குருட்டாம்போக்கில் நினைப்பது போலாகிவிடும்.

பவார்ச்சி, பிஷ்லேண்ட்,பாரடைஸ் மற்றும் ஹைதராபாத் பிரியாணி ஹவுஸ் போன்ற சில கடைகளைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்குகிறது, ஹைதராபாத் பிரியாணி உண்ணும் கலை.

முதலில் துண்டாக்கப்பட்ட வெங்காயத்தின் மீது எலுமிச்சைச் சாறு பிழிந்து கொள்ள வேண்டும். அதன் மீது உப்பு, உப்புத் தூள் மேலாக‌ மிளகுத்தூள். தமிழ்நாட்டு பிரியாணி போல மசாலா அரிசியோடு முழுவதுமாக கலந்து இருக்காது. பிரியாணியின் உட்புறமாக இருக்கும் மசாலாவை நாம்தான் கலந்து கொள்ள வேண்டும். கார‌ம் ச‌ற்று தூக்க‌லாக‌ இருக்கும்.

முத‌லிலேயே க‌வ‌ன‌மாகுங்க‌ள். இல்லையென்றால் மூக்கில் குற்றால‌ அருவிதான். எத்த‌னை டிஷ்யூத் தாளும் செல்லுப‌டியாகாது.

சரிபாதியாக பிரியாணியை பிரித்துக் கொண்டு, முதலில் குருமாவுடனும், அடுத்த தயிர் பச்சடியுடனும் குழைத்து அடிக்க வேண்டியதுதான்.

இரண்டு வாய் சோற்றுக் கவளத்திற்குப் பின்னர் ஒரு வெங்காயக் கடியும், அடுத்த இரண்டு வாய் கவளத்திற்குப் பின்னர் கறி ஒரு கடியும் 'சிம்பிள் பார்முலா'.

இந்த‌ சூட்சும‌ம் வெகு நாட்க‌ளாக‌த் தெரிய‌வில்லை. டாப்ஸ்ட‌ர் என்ற‌ ஒரு அரேபிய உண‌வு விடுதியில் ஒரு இசுலாமிய‌ப் பெரிய‌வ‌ர் சொல்லித் த‌ந்தார். கொஞ்ச‌ம் விலை அதிக‌ம் என்றாலும் சுவை அற்புத‌ம்.

நேற்று (11.10.2007) பிர‌ம்மாண்ட‌ விள‌ம்ப‌ர‌ ப‌ல‌கை ஒன்று சாய்ந்து, டாப்ஸ்டரை ந‌சுக்கிய‌து ம‌ட்டுமில்லாம‌ல், மூன்று பேரைக் கொன்றிருக்கிற‌து.

(குறிப்பு 1: த‌ம் பொருள் தெரியும்ம‌ல்ல‌வா? பிரியாணியை ஒரு பெரும் பாத்திர‌த்தில் மூடி அத‌ன் மீது அடுப்புத்த‌ன‌லைக் கொட்டிவிடுவார்க‌ள். வெப்ப‌த்தில் வெந்து த‌ணியும்.

குறிப்பு 2: ர‌மலான் மாத‌த்தில் மட்டும் இங்கு கிடைக்கும் ஹ‌லீம், எப்பொழுதும் கிடைக்க‌க் கூடிய‌ இரானிய ஃப‌லூடாவும் பிர‌சித்த‌ம்).

7 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

நல்ல பதிவு...நினைவுகளை தூண்டியது..

பெங்களூரில் ஏர்ப்போட் ரோட்டில் ஹைதராபாத் பிரியானி செண்டர் (halaal cut ) உள்ளது...

சூப்பர் பாஸ்மதி ரைஸ்...ஒரு ப்ரான் ப்ரையும் ஒரு லெமன் சோடாவும் ஆர்டர் செய்துவிட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்..

ஆனால் சரியான நேரத்துக்கு போகவில்லை என்றால் காத்திருக்க வேண்டியிருக்கும்...

பொன்ஸ்~~Poorna said...

ஹைதராபாத் பிரியாணி ஹவுஸ் பாரம்பரியமானதில்லைன்னு நினைச்சேன்.. பாரடைஸில் சாப்பிட்டது நல்லா இருந்தது.. ஆனால் என் ரேஞ்சுக்கெல்லாம் காரம் ரொம்ம்ம்ம்ம்ம்ப அதிகம் :)

ilavanji said...

யோவ் மணி,

ஹைதராபாத் பிரியாணிய இப்படித்தான் சாப்பிடனுமா? இது தெரியாம பெங்களூரு மடிவாலா ஹைதராபாத் ஹவுஸ் போயிட்டு (ரவியும் பொன்ஸ்சும் இதைத்தான் சொல்லறீங்களா? ) அரிசி தம் கட்டலை... மசாலா சரியா கலக்கலை... அநியாயக்காரம்னு பொலம்பியிருக்கேன்!

என்னதான் இருந்தாலும் நம்ம கோவை அங்கனங்கடை பிரியாணிக்கு இதெல்லாம் ஈடாகுமா? ( அது காக்கா பிரியாணின்னு ஒரு வதந்தி இருந்தாலும்.. :) )

அப்ப உம்ம விசேசத்துக்கு ஹைதராபாத் பிரியாணி போடுங்கப்பு... சொல்லிக்குடுத்த மாதிரியே சரியா ரவுண்டு கட்டிடறோம்! :)))

Vaa.Manikandan said...

இல்ல தலீவா...பொன்ஸ் ஹைதராபாத் ல இருந்திருக்காங்க. ரவி அண்ணாச்சியும் இருந்திருப்பாரு. அவரு உலகம் சுற்றும் வாலிபன் ஆச்சே.

அது சரி இத்தினி நாளும் எங்க போயிருந்தீக? எனக்கு ஒரு சின்ன கேப் உலுந்துடுச்சுன்னா, உங்களுக்கு செம பெரிய கேப் உலுந்துடுச்சு போல கீதே.

ஹைதராபாத் பிரியாணி ஹைதராபாத்லதான். கோபில போட்டோம்னா அது கோபி செட்டிபாளையம் பிரியாணி. உங்களுக்கு எல்லாம் அர்சியும் பருப்பும்தான்.

கானா பிரபா said...

கடந்த வருஷம் ஹைதராபாத் வந்தபோது கூட்டத்தோடு கூட்டமாய்க் காத்திருந்து பாரடைசில் பிரியாணி வெட்டியது நினைவுக்கு வருகிறது.

கானா பிரபா said...

//நேற்று (11.10.2007) //

?

G.Ragavan said...

பாரடைஸ்....இரண்டு முறை போயிருக்கேன். ஐதராபாத்தின் மையப்பகுதியில் உள்ளது. நல்ல பிரியாணி. அங்க போன ரெண்டு வாட்டியும் மட்டன் பிரியாணிதான் சாப்பிட்டேன். பிரியாணின்னாலே மட்டந்தான் நல்லாயிருக்குது. ஆனால் அது ஹெவி. அளவோட சாப்பிடனும். பவார்ச்சி போகனும்னு நெனச்சேன். நேரமிருக்கலை.

// செந்தழல் ரவி said...
நல்ல பதிவு...நினைவுகளை தூண்டியது..

பெங்களூரில் ஏர்ப்போட் ரோட்டில் ஹைதராபாத் பிரியானி செண்டர் (halaal cut ) உள்ளது... //

இதெங்கய்யா இருக்கு? வீட்டுக்குப் பக்கத்துல இருக்கும் போல. கோரமங்களாவுல ஒரு ஐதை ஹவுஸ் இருக்கு. அங்க சிக்கன் 65 வித்தியாசமா நல்லாயிருக்கும். ஆயிரம் இருந்தாலும் சுஃபி மாதிரி வருமா!