Apr 13, 2007

வெவகாரமா ஒரு சேதி சொல்லு ராசா.

எங்க ஊரு பக்கம் ஒரு பழக்கம். ஒரு பழக்கமில்ல ஓராயிரம் பழக்கம். எங்க ஊருல மட்டுமில்லாம உலகம் பூரா அங்கங்க ஆயிரமாயிரம் பழக்கம்.அதுல ஒண்ணு கதை சொல்லுறது. பாட்டி வடை சுட்ட கதை, காக்கா தண்ணி குடிச்ச கதையெல்லாம் எழவு எவனுக்கு வேணும்?

'அப்படி'ப்பட்ட கதையெல்லாம் கேட்டு இருக்கீங்களா? என்ர வயசுப் பசங்களக் கேட்டுப்பாருங்க. கதையே சொல்லத்தெரியாது, இந்த லட்சணத்துல வெவகாரமா ஒண்ணச் சொல்லி அத மொகஞ் சுளிக்காத மாதிரி சொல்லத் தெரியுமா?

எங்க தாத்தன் பொழப்பு கெட்ட நேரமெல்லாம் யோசிச்ச கதைக, அவஞ்சோட்டு ஆளுங்க அமுக்கமாப் பேசுன கதைக எல்லாஞ் செத்துப் போச்சா?
*****
"ம‌றைவாய் சொன்ன‌ க‌தைகள்". ந‌ம்ம கி.ராவும், க‌ழ‌னியூர‌னும் கேட்ட‌ க‌தைக‌, சுத்தி சுத்தி சேர்த்த‌ க‌தைக.

நூறுக‌தைக. அத்த‌னையும் வெவ‌கார‌மான‌ க‌தைக‌,சுளுவாவும் இருக்குது, சொகமாவும் இருக்குது.

நூறு க‌தைக‌ளும் அம்ச‌மா இருக்குதான்னு கேட்டா இல்லைன்னுதான் சொல்ல‌ணும். அம்ப‌த‌றுப‌து க‌தைக‌ அட்ட‌காச‌ம், இருவ‌து க‌தை ந‌ல்லா இருக்குது. மீதிக் க‌தைக‌ த‌ப்பிப் போச்சு.

ஒரு க‌தைய சுருக்க‌மாச் சொல்லுட்டா?
ஒரு ராசாகிட்ட‌ ஒரு வேல‌க்கார‌ன், அச‌ப்புல‌ ராசா மாதிரியே இருக்கான். எல்லோருக்கும் ஆச்ச‌ரிய‌ம‌னா ஆச்ச‌ரிய‌ம். ராசாவுக்கு ஒரு ச‌ந்தேக‌ம், ந‌ம்ம‌ அப்ப‌ன் தான் ஏதோ வெவகார‌ம் பண்ணி இருக்கான்னுட்டு. வேலக்காரன‌ கூப்புட்டு வில்ல‌ங்க‌மா சிரிச்சுட்டு கேட்டாரு. உங்க‌ ஆத்தா இங்க‌ வேலை செஞ்சாளான்னு, வேல‌க்கார‌ன் சொன்னாமா, "இல்ல‌ ராசா. எங்க‌ப்பன் தான் அர‌ண்ம‌னைல வேல‌ செஞ்சான்"ன்னு. புரியுதா சேதி?

இப்ப‌டித்தான் பாத்துக்குங்க‌. சில‌ க‌தைக ம‌ற‌ச்சு ம‌ற‌ச்சு பேசுனா, சில‌ க‌தைக ப‌ச்சையா பேசுது. உங்க‌ தாத்த‌னும்,என்ர‌ தாத்த‌னும் லேசுப்ப‌ட்ட‌வ‌னுக‌ இல்ல‌. அது ம‌ட்டும் தெளிவா தெரியுது. பாட்டிக‌ளையும் சேத்துக்குங்க‌.
*********
இல‌க்கிய‌ப்பூர்வ‌மாக‌வோ அல்ல‌து வ‌ர‌லாற்றுப் பார்வையிலோ நோக்கும் போது, இந்த‌ப் புத்த‌க‌த்தின் தொகுப்பாளர்க‌ளிருவ‌ரும் செய்த காரியம் மிக முக்கியமானது. இத்த‌கைய‌ அழிவின் விளிம்பு நிலை இல‌க்கிய‌க் கூறுக‌ளை ஆவ‌ண‌ப்ப‌டுத்தியிருப்பது பாராட்டுக்குரிய‌து. சிறப்பாக வடிவமைத்திருக்கும் உயிர்மை ப‌திப்ப‌க‌த்திற்கும் வாழ்த்துக்க‌ள்.

க‌தைக‌ளைச் சொல்லிவிடுவ‌தோடு ம‌ட்டுமில்லாம‌ல், அந்த‌க் க‌தையினை சொல்லும் போக்கிலேயே, அந்த‌க் கால‌க‌ட்ட‌ம், வாழ்விய‌ல் முறைக‌ள், பெண்க‌ளின் நிலை போன்ற‌வ‌ற்றை சொல்லிச் செல்கிறார்க‌ள்.

இத்த‌கைய க‌தைகள் ச‌மூக‌த்தில் அங்குமிங்குமாக‌ உல‌வி வ‌ந்த‌ போதிலும், எழுத்து வ‌டிவ‌மாக‌ ஆவ‌ண‌ப்ப‌டுத்தி முன் வைக்க‌ தைரிய‌மும், க‌தையின் அச‌ல் த‌ன்மை மாறாம‌ல் ம‌றுவ‌டிவாக்க‌ம் செய்ய‌ திற‌மையும் அவ‌சிய‌ம்.
அனுப‌வ‌ப்ப‌ட்ட‌ எழுத்தாள‌ர்களான கி.ராவும், கழனியூரனும் இந்த‌ இர‌ண்டு அம்ச‌த்திலும் எந்த‌க் குறையும் வைக்க‌வில்லை.
******
பாலிய‌ல் க‌தைகள் நாட்டுப்புற பாலியல் கதைகள் ம‌ற்ற‌ எந்த‌ இல‌க்கிய‌க‌ வ‌கைக்கும் எந்த‌ வித‌த்திலும் குறைந்த‌வைய‌ல்ல‌ என்ப‌த‌னை மீண்டும் ஒரு முறை அழுத்த‌மாக‌ப் புரிந்து கொள்கிறேன்.

2 எதிர் சப்தங்கள்:

சென்ஷி said...

மக்கா... கலவர பூமில இந்த பதிவு எத்தன பேரு படிச்சாங்கன்னு தெரியல. எதுக்கும் இப்ப முன்னுக்கு கொண்டு போய் போடு :))

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல தொகுப்பு.
http://puththakam.blogspot.com/2007/02/16.html