Nov 5, 2006

நோபல் பரிசு 1982: காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

"கண்டத்தின் வாழ்க்கை மற்றும் போராட்டங்கள் கற்பனைவாதத்தால் புனையப்பட்டு அற்புதம் மற்றும் உண்மையை பிரதிபலிக்கும் இவரின் புதினங்கள் மற்றும் சிறுகதைகளுக்காக" என நோபல் அறக்கட்டளை காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்(Gabriel Garcia Marquez ) அவர்களுக்கு 1982 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசினைக் கொடுக்கும் போது அறிவித்தது.

மார்க்வெஸ், 1928 ஆம் ஆண்டு தென்னமெரிக்க நாடான கொலம்பியாவின் மலைகளுக்கும் கரீபியன் கடலுக்கும் இடையேயான அரகாட்டாக்கா என்னும் கிராமத்தில் பிறந்து, தாய்வழி பெற்றோரிடம் வளர்ந்தார். சட்டப் படிப்பை துவங்கிய மார்க்வெஸ், தனது பத்திரிக்கையாளர் பணிக்காக கல்வியைக் கைவிட வேண்டியதாகிற்று.

பணிநிமித்தம் காரணமாக 1954 ஆம் ஆண்டு ரோம் நகருக்கு அனுப்பட்டதிலிருந்து தன் வாழ்க்கையை பெரும்பாலும் வெளிநாடுகளில் வாழ்ந்தார்.

அடிப்படையில் தன்னை ஒரு உண்மைவாதி(Realist) எனக் கருதி வந்த மார்க்வெஸ், தனது படைப்புகளில், தான் கவனித்த, உணர்ந்த கொலம்பியா மற்றும் இலத்தீன் அமெரிக்க நிகழ்வுகளைப் பதிவு செய்தார். கொலம்பிய வரலாற்றுப் புத்தகங்களில் மறக்கப்பட்டுவிட்ட ஆண்டிக்வா படையினரால் அரங்கேற்றப்பட்ட வாழைத்தோட்டத் தொழிலாளர்கள் கொலை, தனது எட்டு வயதில், வளர்த்த தாத்தாவின் மரணம், பாட்டியின் கண்பார்வை இழப்பு போன்ற நிகழ்வுகள் கடுமையாகப் பாதித்தன.

1959 ஆம் ஆண்டு காஸ்ட்ரோவின் கொரில்லாப் புரட்சி வெற்றிபெற்று, படைகள் ஹவானாவுக்குள் அணிவகுத்தன. இலத்தீன் அமெரிக்காவின் வரலாற்றில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணிய இந்நிகழ்வு, மார்க்வெஸ்ஸின் எண்ணத்திலும் பெரும் மாறுதல்களைக் கொணர்ந்தது.

எல் ஸ்பெக்டேடர்(El Espectador) என்னும் பத்திரிக்கையில் பணியாற்றிய போது கொலம்பிய கப்பற்படையின் சீர்குலைவு குறித்து எழுதிய கட்டுரைகள் Relato de un naufrago (The Account of a Shipwrecked Person, 1970) என்னும் பெயரில் வெளிவந்து பேசப்பட்டது.

மார்க்வெஸ்ஸின் முதல் கதையான "மூன்றாவது ராஜினாமா(The Third Resignation)" 1947 ஆம் ஆண்டு வெளிவந்தது. கேபோ(Gabo) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மார்க்வெஸ்ஸின் "ஒரு நூற்றாண்டுத் தனிமை(One hundred years of solitude)" உலகம் முழுவதும் கவனிக்கப் பெற்று பெயர் வாங்கித் தந்தது.

1975 ஆம் ஆண்டு வெளிவந்த நாவலான "த ஓட்டம் ஆ·ப் த பேட்ரியார்க் (The autum of the patriarch)" என்ற படைப்பும் குறிப்பிடப் படவேண்டிய ஒன்று. தனது புனைவுகளைத் தவிர்த்து திரைக் கதைகளும் எழுதியுள்ளார்.

மார்க்வெஸ்ஸின் படைப்புலகில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் தன் வாழ்வில் சந்தித்த நபர்களாகவே இருப்பர். மயக்க நிலை நினைவுகளையும், கனவுகளையும் படைப்புகளில் பதிவு செய்யும்(Surrealsim) மார்க்வெஸ், இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கதை சொல்லியாக படைப்பாளிகளால் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார். புதினம், சிறுகதை என எந்த வடிவமாக இருப்பினும் மிகச் சிறந்த கதை சொல்லியாக மார்க்வெஸ் விளங்கினார்.

கற்பனையின் மிகச் சிறந்த ஆற்றலையும், மனித மனத்தின் அவிழ்க்க முடியாத புதிர்களையும் மார்க்வெஸ்ஸின் படைப்புகளில் உணரமுடியும். படைப்புகளின் உண்மைத் தன்மை உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாகவும், அதே சமயம் லெளகீக எல்லைக்குட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த மார்க்வெஸ்ஸின் படைப்புகளிலும் இத்தன்மைககளை வாசகன் தாண்டிச் செல்ல முடியும்.

பேரழகும், வலிகளும் விரவிக் கிடக்கும் இந்தப் படைப்புகள் உண்மைக்கும், கனவு நிலைக்குமான இடைப்பட்ட நிலையில், நம்பிக்கையற்ற கோடுகள். இந்த படைப்புலகம் நாம் ஒவ்வொருவரும் விரும்பத்தக்க உலகம்.

மார்க்வெஸ்ஸின் மற்ற படைப்புகள்:

1. நோ ஒன் ரைட்ஸ் டு த கர்னல் (No one writes to the colonel)
2. லீ·ப் ஸ்டார்ம் (Leaf Storm)
3. இன்னொசென்ட் இரெந்திரா(Innocent Erendira)

புதினங்கள்:

1. இன் ஈவிள் ஹவர் (In Evil Hour)
2. க்ரோனிக்கிள் ஆ·ப் அ டெத் ·போர்டோல்ட்( Chronicle of a death foretold)
3. லவ் இன் த டைம் ஆ·ப் காலரா (Love in the time of Cholera)


இலக்கியம் தவிர்த்து அரசியல் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டார். 1973ல் இடதுசாரி பத்திரிக்கையை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வந்தார். பிடல் காஸ்ட்ரோவுடன் தனிப்பட்ட நட்பு கொண்டிருந்த அவர், மெக்ஸிகோவில் மனித உரிமை இயக்கத்தையும் வீச்சோடு நடத்தினார்.

தமிழோவியம்.காம்

3 எதிர் சப்தங்கள்:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்ல பதிவு மணிகண்டன். ஆனால், பாடப்புத்தகத்தில் படித்து ஒப்பிப்பது போன்ற தொனி வருகிறதே. மார்க்குவஸ்ஸின் புத்தகங்கள் பற்றிய உங்களின் கருத்துகளையும் சேர்த்திருக்கலாம்.

-மதி

கப்பி | Kappi said...

அருமையான கட்டுரை மணிகண்டன்...

சமீபத்தில்தான் அவரது 'Of Love and Other Demons' நாவலைப் படித்தேன்..நீங்கள் குறிப்பிட்டதுள்ளது போல் இந்த நாவலும் அவர் சந்தித்த ஒரு சிறுமியின் கதையே...

//பேரழகும், வலிகளும் விரவிக் கிடக்கும் இந்தப் படைப்புகள் உண்மைக்கும், கனவு நிலைக்குமான இடைப்பட்ட நிலையில், நம்பிக்கையற்ற கோடுகள். //

அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!

நன்றி!

பிச்சைப்பாத்திரம் said...

மார்க்வெஸ் பற்றி உயிர்மை கட்டுரைத் தொடரில் எஸ்.ரா எழுதியிருக்கும் கட்டுரை தகவல்பூர்வமானது. மார்க்வெஸ்ஸின் பன்முகங்களில் ஒன்றான பத்திரிகையாளனின் முகத்தைப் பற்றியும் பிடல் காஸ்ட்ரோவிற்கும் இவருக்குமான நட்பைப் பற்றியும் சுவையாக அதில் விளக்கப்பட்டிருக்கும். இவரைப் பற்றி ஆர்.வெங்கடேஷ் அறிமுகப்படுத்தி எழுதியிருக்கும் புத்தகமும் கிழக்குப் பதிப்பகம் மூலமாக மறுபதிப்பாகயிருக்கிறது.