Oct 21, 2006

புக்கர் பரிசு 2006: கிரண் தேசாய்

ஆங்கில வாசகர்களிடமும், படைப்பாளிகளிடம் பெருமதிப்பு பெற்றதும், இலக்கிய உலகில் இரண்டாவது பெரிய பரிசு எனக் கருதப்படுவதுமான "புக்கர் பரிசு" இந்த ஆண்டு இந்தியாவைச் சார்ந்த கிரண் தேசாய் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அவரது இரண்டாவது நாவலான "தி இன்ஹெரிடன்ஸ் ஆ·ப் லாஸ்(The Inheritance of Loss)" இந்த விருதினைப் பெறுகிறது.

இந்நாவல், 1986லிருந்து 1988 வரையிலும் தீவிர வன்முறை மிகுந்த நிகழ்வாக இருந்த, மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்ட நேபாள மக்கள் தனி மாநிலம் கோரி நிகழ்த்திய கோர்க்காலாண்ட் இயக்கத்தினை (Gorkhaland movement) பின்புலமாகக் கொண்டது. ஓய்வுபெற்ற நீதிபதியும், விபத்தொன்றில் தனது பெற்றோரை இழந்துவிட்ட அவரது பேத்தி, சாய் ஆகியோரை மையமாகக் கொண்டு நிகழும் நிகழ்வுகள் புதினத்தில் கோர்க்கப்படுகின்றது.

தேசியம், பன்முகக் கலாச்சாரத்தன்மை, ஊடுருவிக் கிடக்கும் மனிதம் என பல விஷயங்களையும் மென்மையாக, நாவல் தொட்டுச் செல்கிறது. தனது நோக்கம் அரசியல் புதினம் படைப்பதல்ல என்றும் அத்தகையதொரு போராட்டச் சூழலில் வாழும் மக்களின் தகவமைவையும், நிகழ்வுகளில் மக்கள் செய்யும் தியாகங்களையும் பதிவு செய்வதே என்று பத்திரிக்கை பேட்டி ஒன்றில் தெரிவிக்கிறார்.

தனது முதல் நாவலில் இருந்து தனக்கான மொழி, புதினத்திற்கான கட்டமைப்பு ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை உணர்வதாகவும், முதல் நாவலைக் காட்டிலும், இரண்டாவது நாவலில் பக்குவத்தன்மை அடைந்திருப்பதாக ஏற்றுக் கொள்ளும் கிரண், இந்த நாவலைப் படைக்க ஏழு ஆண்டுகள் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத் தகுந்த அம்சம். பெரும்பாலான படைப்பாளிகளைப் போன்றே தனக்கான பதிப்பாளருக்காக அலைவதில் பெரும் காலம் கழிந்திருக்கிறது.

கிரணின் தாயார் அனிதா தேசாயும் மூன்று முறை புக்கர் பரிசுக்கான இறுதிச் சுற்று வரை பரிந்துரைக்கப்பட்டு பரிசு பெறாதவர். தனது எழுத்துக்கள் தனது தாயாரின் தாக்கத்தால் படைக்கப்படுவதாகச் சொல்லும் கிரண்,பரிசு பெறும் தனது நாவலை தாயாருக்குச் சமர்ப்பிக்கிறார்.

1971 ஆம் ஆண்டு, டெல்லியில் பிறந்த கிரண் தேசாய், தனது பதினான்காம் வயதில் இங்கிலாந்திற்குச் சென்று பின்னர் அமெரிக்காவில் கல்வி பயின்றார். 1998 ஆம் ஆண்டிலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் இவர், இதுவரை எழுதி இருப்பது இரண்டு நாவல்கள் மட்டுமே.

மிக இளைய வயதில் புக்கர் பரிசு பெறும் பெண் எழுத்தாளர் என்னும் சிறப்பினை அடையும், கிரணின் வயது 35. இதற்கு முன் இந்தச் சிறப்பினை தனதாக்கியிருந்த அருந்ததி ராய், 1997ஆம் ஆண்டில் தனது 36வது வயதில் "த காட் ஆ·ப் ஸ்மால் திங்ஸ் (The God of small things)" என்னும் புதினத்திற்கு பெற்றார்.

டேவிட் மிட்ஷெல், பீட்டர் கேரெ, பேரி அன்ஸ்வொர்த், சாரா வாட்டெர்ஸ் மற்றும் நாடினெ கார்டிமெர் ஆகிய ஐந்து எழுத்தாளர்களை, இறுதிச் சுற்றில் பின்தள்ளும் கிரண் தேசாயின் "கதை சொல்லும் முறைக்கும் வரலாற்று உண்மைக்காவும்" பரிசளிக்கப்படுவதாக நடுவர் குழு அறிவிக்கிறது.

தனக்கான வாசகர்கள் யார் என்னும் வினாவில், தான் தனக்காக மட்டுமே எழுதுவதாகவும், தனக்கான வாசர்கள் குறித்து கவலைப்படுவதில்லையென்றும் குறிப்பிடும் கிரண், தான் எழுதுவது தனக்கென்ற சுயநலம்தான் என்கிறார்.

சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய் வரிசையில் கிரண் தேசாயும் இந்திய எழுத்து, உலக அரங்கில் தனிக்கவனம் பெற புதிய கதவுகளை திறந்துவிடுவதற்கான முயற்சியை வெற்றிகரமாக முன்னெடுத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

நன்றி: திண்ணை.காம்

9 எதிர் சப்தங்கள்:

கதிர் said...

நல்ல பதிவு,

இந்தியர் ஒருவர் புக்கர் பரிசு பெறுவது பெருமையாக இருக்கிறது.

Sivabalan said...

நல்ல பதிவு!

இங்கே கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

Anonymous said...

/டேவிட் மிட்ஷெல், பீட்டர் கேரெ, பேரி அன்ஸ்வொர்த், சாரா வாட்டெர்ஸ் மற்றும் நாடினெ கார்டிமெர் /

பெயர்களின் உச்சரிப்பு தெரியாமல் தயவு செய்து கொலை பண்ணாதீர்கள். தெரியவில்லை என்றால் பெயர்களை ஆங்கிலத்தில் அப்படியே எழுதுங்கள். ஊகிக்காதீர்கள்.

Boston Bala said...

திண்ணையிலே சூடாகப் படித்தேன். விறுவிறு நடை & தகவல்கள். நன்றி!

தொடர்பாக (ஆனால், சம்பந்தமில்லாமல் : ) ஒக்க கேள்வி:

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews: "இந்தப் பரிசுக்குத் தகுதியை பெற்றுத் தந்தது அவரது இரண்டாவது நாவலான The Inheritance of loss (பரம்பரையின் இழப்பு). "

நீங்கள் நாவலின் தலைப்பை மொழியாக்க முயலவில்லை. வாழ்த்துகள்.

ஆனால், என்னுடைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் சில...
1. வாழையடி வாழையான இழப்பு
2. தவறவிடுதலைத் தவறாத தலைமுறை
3. இழப்பின் தலைமுறையுரிமை

Vaa.Manikandan said...

நன்றி தம்பி, சிவபாலன் மற்றும் பாஸ்டன் பாலா.

நன்றி அனானி.

நீங்கள் சொல்லும் விஷயம் கவனிக்கப் பட வேண்டிய அம்சம்தான். சற்று உண‌ர்ச்சி வசப்பட்டுவிட்டேன். குறைந்தபட்சம் ஆங்கிலத்தில் பெய‌ர்களை அடைப்புக் குறிக்குள்ளாவது கொடுத்திருக்கலாம். சுட்டிக் காட்டியதற்கு நன்றி. அடுத்த முறை தவறினை திருத்திக் கொள்கிறேன்.

Anonymous said...

மணிகண்டன், விமர்சனத்தை நல்ல விதமாக எடுத்துக்கொண்டீர்கள். நீங்கள் தொடர்ந்து முன்னேறுவீர்கள். :-)

- அதே அனானிமஸ்

Vaa.Manikandan said...

பாஸ்டன் பாலா,

மொழிபெய‌ர்ப்பில் எனக்கு சிறுகுழப்பம்(பெருங்குழப்பம் என்பதுதான் ச‌ரியாக இருக்கும் ;)) வந்துவிடுகிறது. ஒரு கதை படித்தேன். நன்றாக இருக்கிறதே மொழிபெய‌ர்த்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் ஒன்ற‌ரை பத்திக்கு மேல் நக‌ரவில்லை. :(


அடடா!
அனானி...பாராட்டுறீங்க! தங்களின் பெய‌ரைச் சொல்லிட்டே பாராட்டலாமே :)

ச‌ரி..அது உங்கள் உரிமை....தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!.

சாத்தான் said...

பெயர்தானே? சொன்னால் போச்சு!

நாவலின் தலைப்பை மொழிபெயர்ப்பது நல்ல ஐடியாவா? நீங்கள் முழு நாவலையும் மொழிபெயர்க்கிறீர்கள் என்றால் தலைப்பையும் மொழிபெயர்ப்பதற்கு பதிலாக நீங்களாக ஒரு தலைப்பு வைக்கலாம்.

புத்தகம் இப்போதைக்கு ஆங்கிலத்தில்தான் கிடைக்கிறது என்பதால் பெயரை ஆங்கிலத்திலேயே கொடுப்பது படிப்பவர்களுக்குப் பயனளிக்கலாம். புத்தகக் கடையில் போய் "தவறவிடுதலைத் தவறாத தலைமுறை" வேண்டும் என்று கேட்டால் கடைக்காரர் நம்மை ஏற இறங்கப் பார்த்துவிட்டு போலீசுக்கு ஃபோன் போடக் கூடும். பாபாவின் மூன்று தலைப்புகளும் கடமுடா என்று இருக்கின்றன :-) இது ஏதோ அறிவுசீவிக் கருமாந்திரம் என்று வாசகர்கள் இக்கினோர் செய்ய வாய்ப்பிருக்கிறது. :-)

Boston Bala said...

---மூன்று தலைப்புகளும் கடமுடா என்று இருக்கின்றன---

உண்மைதான் :)

The Inheritance of loss என்பதை 'பரம்பரையின் இழப்பு' என்று சொல்லுவது சரியாகுமா என்னும் வினாவிற்கு பதிலாக சிலதைக் கொடுத்தேன்.

கதையைப் படிக்காமல், விமர்சனத்தை மட்டும் மேய்ந்துவிட்டு, தலைப்பிடுவது நம்ம வழக்கம். அப்படியே மேலாக்க பார்த்தாலும், 'கைய விட்டுப் போதல்' என்பதை சந்ததியினருக்குக் கொடுத்து செல்வதை கிரண் குறியிடுகிறார்.

அந்தக் கருவை 'ஏதோ... மூதாதையர் சொத்து; பறி போச்சு'ங்கிற மாதிரி மாற்று அர்த்தத்தில் அந்தக் கட்டுரை குறிப்பிடுவது பொருந்துமா என்னும் கேள்வியை சுற்றி வளைத்து முன் வைக்க எண்ணம்.

'பரம்பரையான இழப்பு' ?