Oct 4, 2006

ஐ+ட்+ட+ம் = ஐட்டம்

கண்ணன் சின்னப்பையன். ரொம்ப சின்னப்பையன் என்று முழுமையாக ஒதுக்கி விட முடியாது. விடலை. அங்கு கறுப்பு சட்டை போட்டுக் கொண்டு, சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான உயரத்துல இருக்கான் பாருங்க அவன்தான். பள்ளி வரைக்கும் என் கூடத்தான் படித்தான். பள்ளி முடிந்தவுடன் வேறு வேறு கல்லூரிக்கு மாறிவிட்டோம். அவன் ஈரோடுக்கு அருகில் ஒரு கல்லூரி நான் சேலத்தில் ஒரு கல்லூரி. இருவரும் அடிக்கடி பார்ப்பது குறைந்திருந்தது. என்றபோதும் அவ்வப்போது என்னைப் பார்ப்பதற்காக சேலம் வருவான்.

கண்ணன் பயங்கர சுறுசுறுப்பு. கில்லி ஆட்டம் போதும், அவன் சுறுசுறுப்பை நிரூபிக்க. கில்லி விளையாடும் போது சின்னக் குச்சியை மேலே தூக்கி அடிக்க வேண்டும். எத்தனை அடி வேண்டுமானாலும் அடிக்கலாம். முதல் அடியிலேயே சின்னக் குச்சி விழுந்துவிட்டால் விழுந்த இடத்திலிருந்து குழி வரைக்கும் பெரிய குச்சியில் அளக்க வேண்டும். அத்தனை புள்ளிகள் கிடைக்கும். இரண்டு அடி என்றால் சின்னக் குச்சியில் அளக்கலாம். இப்படியே அடியின் எண்ணிக்கை அதிகமாகும் போது பின்னூசி, குண்டூசி, நெல்மணி, எள், மணல் என்று போகும். மற்றவர்கள், அதிக பட்சமாக இரண்டு அடி அடித்து, சின்னக் குச்சியில் பத்து அல்லது அம்பது புள்ளிகள் எடுத்தால், கண்ணன் மணலில் அளக்கும் அளவிற்கு அடித்து லட்சம், கோடி என்று புள்ளிகள் எடுப்பான்.

பள்ளியில் படிக்கும் போது புளூபிலிம் பற்றி அவன் பேசியது ஞாபகம் இருக்கிறது. புளூபிலிம் எல்லாம் பார்த்தா எந்தப் பொண்ணும் அசிங்கமா தெரிவாங்களாடாம் என்று சொன்னான். அதனால் கல்யாணம் வரைக்கும் தான் புளூபிலிம் பார்க்கப் போவதில்லை என்று சொன்னான். அப்படிச் சொன்னவன் இந்தக் கதையைச் சொன்ன போதுதான் நம்ப முடியவில்லை. கதை கேட்கும் உங்களுக்கும் கூட சந்தேகம் வரலாம்.

பி.இ முதல் வருட இறுதித்தேர்வில், கணிதத்திற்கு மட்டும் ஏழு நாட்கள் விடுமுறை. மற்றவர்கள் எல்லாம் விழுந்தடித்துப் படிக்க, 'சூரப்புலி' கண்ணன் மட்டும் சேலத்திற்கு கிளம்பியிருக்கிறான். அங்கு இருந்தால் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டாவது இருக்கலாம். ஆனால் ஏதோ படம் ஒன்று ரிலீஸ் ஆகப் போகிறது என்பதால் சேலத்தில் பார்த்துவிடலாம் என்று கிளம்பி இருக்கிறான்.

சேலம் புது பஸ்ஸ்டாண்டில் இறங்கி ஈரோடு பஸ் நிற்கும் இடத்திற்கு அருகில் அவளைப் பார்த்திருக்கிறான். சின்ன வயசுதானாம். புடவை கட்டி, நிறைய மல்லிகைப்பூவும், பவுடரும், சென்ட்டும் அடித்திருந்த அவள், இவனைப்பார்த்து சிரித்து வைக்க, நம் கதாநாயனுக்கு சில்லிட்டிருக்கிறது. அங்கேயே நின்று கமுக்கமாக பார்ந்திருக்கிறான். மறுபடியும் அவள் சிரித்த போது என்ன செய்வது, என்ன சொல்வது என்று தெரியவில்லை. கண் அசைவில் அங்கு வா என்று சொல்லி அவள் நகர்ந்தபோது ஏதோ ஒரு பரவசம் ஒட்டியிருக்கிறது.

மெதுவாக பதுங்கியபடி அவள் இருக்கும் இடத்திற்கு நகர்ந்த போது, சதிகாரனாக ஒரு ஆஜானுபாகுவான மனுஷன் இருவருக்கும் இடையே புகுந்திருக்கிறான். பயம் வந்தாலும் சமாளித்தபடி நின்ற போதுதான் தெரிந்திருக்கிறது, அவனும் 'அதற்கு'தான் வந்திருக்கிறான் என.
அவனிடம் ஐநூறு ரூபாய் என்றாளாம். கொஞ்ச நேர பேரத்திற்கு பின் 'ரேட்' படியாத காரணத்தால் அவன் கிளம்பிவிட்டான். பிறகு கண்ணனிடம் முந்நூறு ரூபாய் என்றிருக்கிறாள். இவனிடம் பணம் இருந்தாலும் கூட தன் பேரம் பேசும் திறமையைக் காட்ட
நூற்றிருபதுதான் இருக்கிறது என்று சொல்ல, யோசித்து அவளும் சரி என்று சொல்லிவிட, உற்சாக வெள்ளத்தில் பணத்தை அவளிடம் கொடுத்துவிட்டான்.

இருவரும் பழைய பஸ்ஸ்டாண்ட் போகும் பேருந்தில் ஏறி அண்ணா பூங்காவிற்கு டிக்கட் எடுக்கும் போது "அங்கே எதற்கு?"என்று திருவளத்தான் மாதிரி கேட்டிருக்கிறான். அங்குதான் அவள் வீடு இருக்கிறது என்று அவள் சொன்னால்தானே தெரியும்?.

பஸ்ஸில் போகும் தன் தொடை மீது வைத்துக் கொள்ளும்படி அவன் கைகளை எடுத்து வைத்தாளாம். இவன் "நல்லா இருக்கு" என்று செமத்தியாக வழிந்திருக்கிறான். ஆஜானுபாகுவான ஆள் என்றால் சமாளிப்பது சிரமம் அதனால்தான் அவனை துரத்திவிட்டேன். நீ ரொம்ப அழகு என்று உசுப்பேற்றியிருக்கிறாள். பஸ்ஸில் இருக்கும் எல்லோரும் இவர்களை மட்டுமே பார்ப்பது போல இருந்திருக்கிறது. இவனுக்கு உண்மையா, பிரம்மையா என்று தெரியவில்லை. ஆனால் கனவுகளும், கற்பனைகளும் கும்மாளியாக ஆடியிருக்கின்றன.

அண்ணா பூங்காவில் இறங்கியவுடன் வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல், பூங்காவுக்கு நுழைவுச்சீட்டு வாங்கி இருக்கிறாள். அப்பொழுதும் "அங்கே எதற்கு?" என்று கண்ணன் கேட்டதற்கு, அங்கே ஒரு மூலையில் இடம் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறாள். ஏதோ தன் கனவு கோட்டையில் தூர் விழுகிறது என அர்த்தமாகியிருக்கிறது.

"கண்டத எல்லாம் கற்பன பண்ணிக்காத. நீ கொடுத்த நூத்தி இருபது ரூபாய்க்கு ஒரு மணி நேரம் உன் கூட இருப்பேன். எங்க வேணும்னாலும் கைய வெச்சுக்க. அவ்வளோதான். என்ன புரியுதா? இங்க உட்காரலாமா?" என்று அவள் சொன்ன போதும் பூங்காவில் இருந்தவர்கள் இவர்களையே பார்த்திருக்கிறார்கள்.

கண்ணன் சொல்லி இருக்கிறான். "அக்கா...(ஆமாம் அக்காதான்!) வீட்டுக்கு போவணும் டைம் ஆச்சுக்கா"

சிரித்துக்கொண்டு சொன்னாளாம். "கட்டுலுக்குன்னா வருவீங்கடா...இங்க உட்காரலாம்முன்னா வரமாட்டயா?"

கண்ணன் அழுவது போல பாசாங்கு செய்து "அக்கா...வேண்டாம். எனக்கு பயமா இருக்கு...நான் கிளம்புறேன். என் காச கொடுத்துடுங்க" என்று சொல்ல,

"இத பாரு. கெளம்புறதுன்னா கெளம்பு. காசு எல்லாம் தரமுடியாது. மறுவடியும் அக்கான்னு சொன்னா செவுள பேத்துடுவேன்" என்றவுடன் ஆட்டம் கண்டிருக்கிறான்.

அவளே சொன்னாளாம் "என்னைய கைய புடிச்சு இழுத்தான்னு சத்தம் போட்டுடுவேன்" என்று.

ஏதோ தைரியத்தில் இவனும் தத்தக்காபித்தக்காவாக "நானும் போலீஸ்கிட்ட போயி சொல்லுறேன். என்ன கூட்டிட்டு வந்து மிரட்டுறான்னு" என்று சொல்லி இருக்கிறான். அவளுக்கும் தூக்கிவாரிப் போட்டிருக்க வேண்டும்.

ஜாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்து வெளியே எடுத்து கீழே எறிந்து "எடுத்துக்க" என்று சொல்லி இருக்கிறாள்.

வியர்வைக் கசகசப்பான பர்ஸைத் தொடும் போது அடுத்த அஸ்திரம் வந்திருக்கிறது. "இங்க பூரா எங்க ஆளுங்க இருக்காங்க. பணத்த எடுத்துட்டு இந்த பார்க்க தாண்டுறதுக்குள்ள செத்தடா மவனே".

திண்றி போய் விட்டான். வழியே இல்லை. கெஞ்ச வேண்டியதுதான். ஏதோ அக்கா, அத்தை என்றெல்லாம் கெஞ்சி, முகத்தை பரிதாபமாக, சோகமாக, அஷ்ட கோணலாக என்றெல்லாம் செய்து, அவளை ஒரு வழிக்கு கொண்டு வந்திருக்கிறான்.

"ஊருக்கு போக எவ்வளவுடா காசு?"

"அம்பது ரூவா".

எடுத்துக் கொடுத்துவிட்டு சொன்னாளாம். "சாகற வரைக்கும் எவகிட்டவாவது போலாம்ன்னு போயி அவ உசுற வாங்காத. த்த்த்தூ...மூஞ்சில முழிக்காத... போடா"

"தேங்க்ஸ் கா".

ஊருக்கு போக முப்பது ரூபாய்தான். எப்படியோ ஐம்பது ரூபாய் வாங்கியாச்சுன்னு சந்தோஷம் கண்ணனுக்கு. கூடுதலாக கிடைத்த இருபது ரூபாயும், இன்னும் தான் நல்லவன் என்ற நினைப்பும் இழந்த எழுபது ரூபாயை மறைத்திருக்கலாம்.

**************************
vaamanikandan@gmail.com

9 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

கில்லி மேட்ட‌ர்...:)

Anonymous said...

உன் அனுபவம்தானே? இல்லைன்னு பொய் சொல்லாதே!

வஜ்ரா said...

ஏய்யா...பஸ்டாண்டு ஐட்டமெல்லாம் ஒரு ஐட்டமா...
மெட்ராஸ்லயே வெளங்காது...அதுவும் சேலத்துல...கன்றாவி டா சாமி.

Vaa.Manikandan said...

நன்றி ஜெபின்.

அனானி,
இல்லைன்னு சொன்னா அடிப்பீங்க போல இருக்கு. :)
இல்லைங்க ;)

யாருப்பா சேலத்த குறை சொல்றது?

கதிர் said...

கமுக்கமா கக்கத்தில வச்சிக்க வேண்டிய மேட்டர பொதுல போட்டுடீங்களே தல உங்க நண்பன் வருத்தப்படமாட்டாரா?

அருள் குமார் said...

//சாகற வரைக்கும் எவகிட்டவாவது போலாம்ன்னு போயி அவ உசுற வாங்காத.//

//கூடுதலாக கிடைத்த இருபது ரூபாயும், இன்னும் தான் நல்லவன் என்ற நினைப்பும் இழந்த எழுபது ரூபாயை மறைத்திருக்கலாம்.//

+

மகுடேஸ்வரனின் 'காமக் கடும்புனல்' கதிதைத்தொகுப்பு படியுங்கள். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். (இந்த பதிவுக்கும் இந்த பரிந்துரைக்கும் சம்பந்தமில்லை)

manasu said...

மணி, SJ சூர்யா அஸிஸ்டன்ட் தேடுறாராம்-:))))))

Vaa.Manikandan said...

மனசு,
Thanks for ur kind information ;)

நன்றி அருள்.

படித்திருக்கிறேன்...

காம உச்சத்தில்
விய‌ர்வையில்,
விந்துவில் எல்லாம் இல்லாத
உவ‌ர்ப்பு
கண்ணீரில் இருக்கிறது

என்று எல்லாம் வ‌ருமே அதுதானே ;)

(கவிதையை என் இஷ்டத்துகு எழுதி இருக்கேன். மன்னிச்சுக்குங்க)
இந்த மாதிரி தலைப்பு எல்லாம் இருந்தால் என்னவென்றே தெரிவதில்லை...மிக விரைவாக படித்துவிடுகிறேன். ;)


தம்பி,
அவன்தான் "என்னைப் பற்றி நல்லவ‌ரு, வல்லவ‌ரு, படையப்ப‌ரு என்று எழுதுடா"ன்னு எழுதச் சொன்னான். அதான் எழுதிவிட்டேன் ;)

Anonymous said...

Mani,

Really happy to see this story.
I like your flow.

Keep writing.

Sathish