Aug 24, 2006

சாவதும் ஒரு கலை.

உங்களுக்கு சில்வியா பிளாத் பற்றித் தெரியுமா? எனக்கு ஷோபனாவைத் தெரியும் வரை சில்வியா பிளாத் தெரியாது. ஷோபனாவை எப்படித் தெரியும் என்பதும் சொல்ல வேண்டிய விஷயம்தான். அருண்ஜவர்லால் எனது முக்கியமான நண்பர்களில் ஒருவர். ஜவகர்லால் இல்லை-ஜவர்லால். என்னோடு வேலூரில் படித்தவர். தற்பொழுது, பெரும்பான்மைப் பொறியாளர்களைப் போலவே, சென்னையில் உள்ளதொரு மென்பொருள் நிறுவனத்தில் பணி.

என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார், பெண்களோடு பழகுங்கள், சுவாரசியம் இருக்கிறது, அதுதான் வாழ்க்கையை மேலும் ரஸிக்க வைக்கும் காரணியென.

வாஸ்தவம்தான். பெண்களுடன் அறிமுகம் ஆவதில்தான் எனக்குப் பிரச்சினையே. நம்புவது கடினமாகக் கூட இருக்கலாம். ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். நான் 21 வயது வரையிலும் பெண்களுடன் பேசியது இல்லை. அதன் தாக்கம்தான் இன்னும் தொடர்கிறது.

'ஜிமெயில் சாட்டிங்'ல் அருண் சொன்னார். ஷோபனா என்றொரு சுவாரசியமான பெண் குறித்து. நவீன படைப்பாளிகள் மார்க்வெஸ்,தெரிதா குறித்தெல்லாம் பேசக் கூடியவள் என்றும், அவளிடமும் என்னைப் பற்றி சொல்லி இருப்பதாகவும். அவள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பபோவதாகச் சொல்லி குறுகுறுப்பை அதிகப் படுத்தினார். எதற்கும் இருக்கட்டும் என்று அவள் மெயில் ஐ.டி யைச் சேர்த்து வைத்தேன். எதிர்பார்த்துக் கொண்டிருந்தது போலவே அவளிடம் இருந்து மின்னஞ்சல் வந்தது.

ஆரம்பத்தில் பெரிதாகத் தோன்றாத விஷயம், எனக்குள்ளாக சிறிது மாற்றங்களை நுழைத்தது. அவளிடம் இருந்து வரும் சாதாரண மின்னஞ்சல் கூட எனக்கு நாள் முழுவதுக்குமான உற்சாகத்தை தேக்கி வருவது போல இருந்தது. உடலின் வேதியியல் மாற்றங்களை தெளிவாக உணர்ந்த தருணங்கள் அவை. இதுவரையிலும் பெண்கள் யாரிடமாவது யதேச்சையாக வரும் கடிதங்கள் குறித்து இவ்வாறு எல்லாம் யோசித்ததில்லை. அது, சிறு சந்தோஷம். சிட்டுக் குருவிக்கு அரிசிமணி கிடைத்தது போல். அவ்வளவே. அந்தச் சமயங்களில் எல்லாம் சுற்றி இருக்கும் நண்பர்களிடம், அந்தக் கடிதம் குறித்தும், அதன் விஷயங்கள் குறித்தும் மறைப்பதற்காகவே நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. நானாக வலிந்து ஏதாவது சொல்லிவிடக்கூடும் என்னும் தயக்கம் இருக்கும். ஆனால் இப்பொழுது அப்படியில்லை என்பதால் கடிதத்தை ரஸிக்க முடிகிறது. இந்த ஊர் எனக்கு தந்த தனிமையே, அதற்கான சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறது.

எனக்கு சந்தோஷமான விஷயம், அவளும் ஹைதராபாத்தில் இருக்கிறாள் என்பது. என் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு என்னிடம் பேச ஆரம்பித்தாள். அவளிடம் செல்போன் கிடையாது. அது சுதந்திரத்தின் எதிரி என்றாள். சில்வியா பிளாத் பற்றி அவள்தான் சொன்னாள். சில்வியா தற்கொலை செய்து கொண்ட போது அவளின் "சாவதும் ஒரு கலை" உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டதாம். அந்தச் சமயத்தில் தமிழின் நவீன கவிஞர்களும் உலகப் படைப்பாளிகளுடன் சேர்ந்து கொண்டார்களாம். சாவு குறித்தும், அதன் முகங்கள் குறித்தும் அவள் பேசியதை எல்லாம், நான் இதுவரை யோசித்தது கூட இல்லை. சில்வியா பிளாத் ஐ விட, ஷோபனா குறித்துதான் பிரம்மாண்டப் படிமம் என்னுள் உண்டானது.

அதனை எல்லாம் நொறுக்கி விடும் விதமாக ஒரு நாள் பேசினாள். எதிர்வரும் அந்த ஞாயிற்றுக் கிழமை மதியம், ஹைதராபாத் என்.டி.ஆர் கார்டன்ஸில் சந்திக்கலாம் என முடிவு செய்திருந்தோம். சனிக்கிழமை இரவு தொலை பேசியில் பேசும் போதுதான் அது நிகழ்ந்தது.

ஏதோ பேசிக் கொண்டிருந்தவள், திடீரென "செக்ஸ் என்றவுடன் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?" என்றாள்.

தூக்கிவாரிப் போட்டது. என்ன சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை.

"என்னங்க? இப்படி திடீர்ன்னு கேட்டா?"

"அதான் கேட்டேன்ல. சொல்லுங்க"

"இல்லை. என்ன சொல்றதுனு தெரியலை"எதுவெதுவோ சொல்லிப் பார்த்தேன். விடுவதாக இல்லை. மெதுவாக ஆரம்பித்தேன்.

"அது.....ஆண்-பெண்....இல்ல....உயிர்களுக்கு...கொஞ்சம்....புனிதமான..."

சிரித்துக் கொண்டே "ஓ....அதுதான் உங்களுக்குத் தோன்றுமா? எனக்கு அப்ளிகேஷன் பார்ம் நிரப்புவதுதான் தோன்றும்" என்றாள்.

எனக்கு படபடப்பாக இருந்தது. ஆனால் தப்பித்து விட்டதாக மெலிதான நிம்மதி.

"ஆளவந்தான் ஜோக்..."அவளே சொன்னாள்.

"நவீனத்துவம், பாரம்பரியத்தின் கட்டுடைக்கும் படைப்புகள் ன்னு எல்லாம் பேசுறீங்க. இந்த ஒரே கேள்விக்கு அரண்டு போய்டீங்க"

எப்படி சமாளிக்க வேண்டும் என விளங்கிக் கொள்ள முடியவில்லை. சூழல் என் கட்டுப்பாட்டில் இல்லை என்பது மட்டும் தெரியும்.

சமாதானத்துக்கு வந்தவளாக அடுத்த நாளின் சந்திப்பு பற்றி பேசினாள். ஆடைகளை- அடையாளத்துக்காக அப்பொழுதே முடிவு செய்து கொண்டோம். அவள் கறுப்புச் சுடிதார், சிவப்பு நிற தொப்பி, ஸ்கூட்டி. நான் வெள்ளைச் சட்டை, ப்ளூ ஜீன்ஸ். யார் முன்னதாக வந்தாலும் வாயிலில் நிற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. கண்டுபிடிக்க முடியாதபட்சத்தில் என்னை செல்போனில் அழைப்பாள்.

அவளைப் பார்க்கப் போவது சந்தோஷமாக இருந்தாலும், அவளின் பேச்சை சமாளிக்க முடியுமா என்பது சிறிய உறுத்தலாக இருந்தது. பேசிவிட்டு பிரஸாத் ஐமேக்ஸ் தியேட்டரில் படம் பார்க்க வேண்டும். ஆன்லைன் புக்கிங் செய்தாகிவிட்டது. காலை நேரம், பஸ்ஸில் கூட்டம் குறைவு. போக்குவரத்து நெரிசலும் இல்லை. ஞாயிற்றுக் கிழமை என்பது காரணமாக இருக்கலாம். கோயிலுக்கு/இண்டர்வியூவுக்கு போவது போல கிளம்பி இருந்தேன்.

மூசாபேட் அருகே மட்டும் பேருந்து மெதுவாக நகர்ந்தது. இந்த இடம் எப்பொழுதுமே இப்படிதான். மும்பை-புனேவிலிருந்து வரும் வாகனங்கள் ஹைதராபாத் அல்லது செகந்திராபாத் செல்வதற்கான பிரிவு இங்குதான் இருக்கிறது. அதுதான் பெரும்பாலான நெரிசலுக்கும் காரணம். சென்னை போல் அல்லாது எல்லா நேரத்திலும் கனரக வாகனங்களை நகரினுள் அனுமதிக்கிறார்கள். வாகனம் மெதுவாகச் செல்வதால், பேருந்தில் இருந்த பலரும் எட்டிப் பார்த்தார்கள். நானும் கூட. தலைகளைத் தாண்டி ஜன்னல் வழியாக வெளியே பார்ப்பதற்கு சிறிது எத்தனிக்க வேண்டியிருந்தது.

விபத்து நிகழ்ந்திருக்கிறது. ஆறு சக்கர டிரக் வண்டி ஒரு பெண்ணின் மீது ஏறி இருந்தது. கறுப்புச் சுடிதார், ஸ்கூட்டி, சிவப்பு நிற தொப்பி. பஸ்ஸிலிருந்து இறங்கிப் பார்த்தேன். சிறிது தூரத்திற்கு பின்சக்கரம் இழுத்துச் சென்றிருக்க வேண்டும். இரத்தம் பட்டைக் கோடாக சாலையில் படிந்து கிடந்தது. ஒற்றைச் செருப்பும், கொஞ்சம் மல்லிகையும் இரத்தச் சிவப்போடு சிதறியிருந்தது. குப்புறக் கிடந்தாள். முகத்தைப் பார்க்க இயலவில்லை. என்னையும் மீறிய அழுகை கண்களை ஈரப் படுத்தியது. ஒருவர் தெலுங்கில் ஏதோ கேட்டார். கோபமாக வந்தது. அவனை கெட்ட வார்த்தையால் திட்ட வேண்டும் போல இருந்தது. திரும்பிப் பார்த்தேன். சுற்றி நின்ற சிலரைத் தவிர பெரும்பாலானோர் வருத்தமான முகத்துடன் நகரத் தொடங்கினர்.

அதே சாலையில் பெண்ணொருத்தி கறுப்பு சுடிதார் அணிந்து, ஸ்கூட்டியில் போய்க் கொண்டிருந்தாள். அவள் தலையில் தொப்பி இல்லை.

நன்றி: ஆனந்தவிகடன்

21 எதிர் சப்தங்கள்:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அய்யா! அலற வைத்துவிட்டீரே... கடைசிக்கு முந்தைய பத்தி முடித்ததும் அலறி அடித்துக்கொண்டு வந்து என்ன பிரிவில் சேர்த்திருக்கிறீர் என்று பார்த்தேன். :(

கதை என்ற உணர்வே இல்லாமல் உள்ளுக்குள் ஆழ்ந்துபோக வைத்துவிட்டீர்கள்.

ஷோபனா, சுவாரசியமானவராக இருக்கிறார் என்ற உணர்வும், சில்வியா ப்ளாத்தின் கவிதைகளும், தோழியொருவர் மொழிபெயர்த்த கவிதைகளும், சில்வியா ப்ளாத் பற்றிய திரைப்படமும்(க்வெனத் பால்ட்ரோவைப் பிடித்துப்போன படம்), டெட ஹ்யூக்ஸ் கவிதைகளும் சில்வியா+டெட் உறவு குறித்த நினைவுகளுமாக ஆழ்ந்துபோய் விட்டேன்.

மிகவும் அருமையான இடுகை மணிகண்டன். மிக்க நன்றி.

-மதி

Anonymous said...

நல்லா இருந்துச்சு மணிகண்டன். செத்தது யாரு?

Ravikumar

Vaa.Manikandan said...

நன்றி மதி.
நீங்கள் குறிப்பிட்ட பல பெயர்க எனக்கு புதியவையாக இருக்கின்றன. :)

ரவிக்குமார்,
அது நீங்களேதான் முடிவு செய்ய வேண்டும். அதனால்தான் தொப்பி பற்றி குறித்துள்ளேன். உங்களுக்கு எது பொருத்தமாக இருக்கிறதோ அதை வைத்துக் கொள்ளலாம். பாலசந்தர் மாதிரி முயன்று பார்த்தேன். ;) தேறலையா? :(

கதை எல்லாம் முயன்று பார்த்தது இல்லை. இப்பொழுதுதான். அதுதான் எனக்கே தெரியவில்லை. நன்றாக வந்திருக்கிறதா இல்லையா என? :)

வினையூக்கி said...

Excellent

Sud Gopal said...

Oh...Such a haunting piece.

இன்னைக்குப் பூராவும் என்னால வேலை செய்ய முடியாதுன்னு தோணுது.

தகடூர் கோபி(Gopi) said...

கதை அருமை.

விபத்து.. மரணம்ன்னு.. பயமுறுத்தறீங்களே இது நியாயமா? :-(

என்னை மாதிரி சின்னப் புள்ளைங்களுக்கு ஏத்த மாதிரி "And they lived happily everafter"ன்னு கதை எழுதமாட்டீங்களா?

பொன்ஸ்~~Poorna said...

// சின்னப் புள்ளைங்களுக்கு ஏத்த மாதிரி "And they lived happily everafter"ன்னு கதை எழுதமாட்டீங்களா?
//
அதானே!!

அருள் குமார் said...

நல்ல சிறுகதை மணிகண்டன்.

Thangamani said...

கதையின் நடை இயல்பாகவும், எளிமையாகவும் இருப்பது அழகாய் இருக்கிறது. கதையின் முடிவை விட இதையே நான் முக்கியமானதாய் நினைக்கிறேன்.

நன்றி.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//நீங்கள் குறிப்பிட்ட பல பெயர்க எனக்கு புதியவையாக இருக்கின்றன. :)//

நம்பிட்டேன். :)

சில்வியா-ன்னு ஒரு படம் வந்தது. Gweneth Patrow சில்வியாவாகவும், லேட்டஸ்ட் ஜேம்ஸ் பாண்ட் Daniel Graig, Ted Hughesஆகவும் நடித்திருந்தார்கள். பார்க்கவில்லையென்றால் பாருங்கள்.

அப்புறம் டெட் ஹ்யூக்ஸ் கவிதையொன்றை சன்னாசி மொழிபெயர்ப்பில் படித்த நினைவு. இருங்க சுட்டி தேடிக்கொண்டு வருகிறேன்.

http://dystocia.weblogs.us/archives/225

-Mathy

Vaa.Manikandan said...

நன்றி வினையூக்கி.

சுதர்சன் கவலைப் படாதீங்க! ;)

கோபி, பொன்ஸ் உங்களை விட நான் சின்னவன். :)

நன்றி தங்கமணி.

தகவலுக்கு நன்றி மதி. நிஜமாக நான் இன்னும் தமிழுலகத்தையே முழுமையாகத் தாண்டவில்லை :) சில்வியா பிளாத் கூட சுகுமாரன் கவிதையிலும், ஜெயமோகனின் உயிர்மை கட்டுரையில் இருந்தும் தெரிந்து கொண்ட பெயர்தான். ஓரிரு கவிதைகள் மட்டுமே படித்திருக்கிறேன். அதை விட ஆங்கில எழுத்துக்களை உள்வாங்குவதில் மிகப்பெரும் தடை இருக்கிறது எனக்கு.

ஆங்கிலத்தில் பாடம் தவிர்த்து இலக்கியத்தை இப்பொழுதான் நுகர ஆரம்பித்திருக்கிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மணிகண்டா?
நிசமில்லைத்தானே! சிறு கதையா? படித்து முடிக்க வேண்டுமென உந்தித் தள்ளியது. பாராட்டுக்கள்.
யோகன் பாரிஸ்

Siva said...

Hi,
really I was shocked, infact I thought that you were sharing your real incident, amy that be only in story.
Anbudan,
Sivagurunathan

Vaa.Manikandan said...

கதையா என்பதைக் கூட நீஙளே முடிவு செய்யலாம் யோகன். முழுச் சுதந்திரம் உண்டு :)

நன்றி சிவ குருநாதன்.

கப்பி | Kappi said...

மிக நல்ல சிறுகதை மணிகண்டன்!!

நாமக்கல் சிபி said...

மனசு என்னுமோ மாதிரி இருக்கு...
கதைனே தோணவில்லை...

என்ன இருந்தாலும் இப்படி மரணத்துல முடிச்சி இருக்க வேண்டாம் :-(
கதைனாலும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.

இவ்வளவு ஃபீல் பண்ணும் போதே தெரியலையா கதை சூப்பர்னு :-)

Anonymous said...

அருமையான கதை(?), பாரட்டுக்கள்!

Anonymous said...

hello mani,

oh i feel very heavy,
i cannot forget this atleast whole day
pl write some light stories
i feel like crying loudly,
but am controlling myself
raghs

வசந்தன்(Vasanthan) said...

நான் ஏற்கனவே பலவிடங்களில் திருப்பித் திருப்பிச் சொல்லவிட்டதுதான். இருந்தாலும் திரும்பவும் சொல்கிறேன். வலைப்பதிவர்கள் புனைவு எழுதும்போது அடியில் அது புனைவு என்பதைத் தெரிவிப்பது ("யாவும் கற்பனையே" போல) நன்று.

Jawahar said...

கதை ரொம்ப நல்லா வந்திருக்கு. பாராட்டுக்கள்.

http://kgjawarlal.wordpress.com

அருண் said...

இது ஏனய்யா என் அருண் ஜவர்லால் பேரை இழுக்கறீங்க? :)