Aug 23, 2006

ஈழம்: இந்திய மனநிலை!!!

ஈழத் தமிழர்கள் பிரச்சினை குறித்தான இந்திய அரசின் பார்வை வருத்தம் தரக்கூடிய ஒன்று. வன்முறை என்பது பிரச்சினைக்கு எளிய தீர்வாக அமைந்துவிட முடியாது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால் எல்லா தேசத்திலும், எல்லா ஆட்சியாளர்களுக்கும் எதிராக போராட்டம் நடத்த அகிம்சாவாதிகளும், அவர்களின் ஆயுதமாக உண்ணாவிரதமும், ஒத்துழையாமை போராட்டங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. போராளி எடுக்கும் ஆயுதம் அவனது எதிரியால்தான் நிர்ணயிக்கப் படுகிறது.

தீவிரவாதமா அல்லது மிதவாதமா என்பது குறித்தான விவாதத்திற்குள் நுழைய விரும்பவில்லை. தனது போராட்ட வழிமுறையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, பாதிக்கப் பட்ட அந்த மக்களைச் சார்ந்தது.

நேபாளம் அல்லது பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் உள்நிகழ்வுகளின் தாக்கம் இந்திய தேசத்தில் உடனடியாக உணரப்படுகிறது. இந்த நாடுகள் தரைவழி மார்க்கமாக தொடர்பு கொண்டிருப்பதும், தலைநகரின் அருகாமையில் இருப்பதும் காரணமாக இருக்கக் கூடும். ஆனால் கண்ணீர்த்துளி நாட்டின் நிகழ்வுகளை அப்படிச் சொல்ல முடிவதில்லை. அதிகபட்சமாக அகதிகளின் வருகையைத் தவிர பெரிய பாதிப்போ, கவலையுறச் செய்யும் அம்சமோ இல்லாதவை அவை.

இந்திய அரசுக்கும் சரி, ஊடகங்களுக்கும் சரி, அது பொருட்டான விஷயமாகவே படுவதில்லை. ஊடகம் என நான் குறிப்பிடுவதில் தமிழக ஊடகங்களும் அடக்கம்.

யோசித்துப் பார்த்தால் இந்திய மக்கள்- குறிப்பாக தமிழர்களின்- அக்கறையின்மை அல்லது ஆட்சியாளர்கள்/காவல்துறை குறித்தான பயம் அவர்களை அமைதியாக இருக்கச் செய்கிறது. மற்ற எந்த விவாதங்களையும் களத்தின் மையத்தில் வைத்து விவாதிக்கும் இந்தியனின் அறிவும், 'போலி' தைரியமும் இதில் மட்டும் அடங்கிப் போய்விடுகிறது. மீறி வரும் உணர்வுகள் என்றிருப்பின், அதனை அடக்க அவன் பேச வேண்டுமானால் முகவரியற்ற சந்து ஒன்று வேண்டும் அல்லது முகத்தை மறைக்க முகமூடி வேண்டும்.

"நமக்கென்ன போச்சு?" என்னும் ஒதுங்கி வாழும் மனநிலை கிட்டத்தட்ட 'நல்லவர்களின் மனநிலை' ஆகிவிட்டது. அந்த 'நல்ல' மனநிலை பெரும்பான்மை இந்திய மனநிலை ஆனதுதான் வேதனை. சாலையில் அடிப்பட்டுக் கிடப்பவனை பார்ப்பதிலிருந்து, இன்னொரு நாட்டின் விவகாரம் வரையிலும் இதே மனநிலை தொற்றிக் கிடக்கிறது. தனக்கு வரும் வரையிலும் தலைவலி குறித்தான கவலையில்லை.

உலகில் சமூக அக்கறை குறைந்த, வியாபார நோக்கம் மட்டுமே முதன்மையாகக் கொண்ட ஊடகங்களுள் இந்திய ஊடகம் மிக முக்கியமானது. குறிப்பாக அந்நிய செய்தித் தொலைக்காட்சிகளும் அவற்றில் ஒரு சாராரின் ஆக்கிரமிப்பும் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது. அவர்கள் வியாபார முக்கியத்துவமற்ற செய்திகளை முன்னிலைப் படுத்துவார்கள் என எதிர்பார்ப்பது மூடத்தனம். திரைக் கவர்ச்சி, பாலியல் சார்ந்த பிரச்சினைகள் போன்ற மேல் மட்ட, நடுத்தர இந்தியர்கள் அக்கறை காட்டும் அம்சங்கள்தான் அவர்களுக்குச் செய்திகள்.

இந்தியன், தமிழன் என்றெல்லாம் பிரிக்க வேண்டாம். தன்னை மனிதன் என்று சொல்லிக் கொள்ளும் போது மனித இரத்ததின் வாடையும், அழுகுரலும், வேதனைக் கதறலும் அவனை பேச வைக்க வேண்டும். ஆனால் அங்கும் மெளனமே திரை விரித்து நிற்கிறது. நம் மக்களின் இந்த குரூரமான, புரிந்து கொள்ள முடியாத அமைதி கலவரப்படுத்துகிறது.

புலிகள் செய்வது தவறா அல்லது சிங்கள இராணுவம் தவறா என்பதெல்லாம் இந்த விவாதத்தில் தேவையற்றது. அவர்களைப் பற்றி பேச வேண்டியதில்லை. சோற்றுக்கும், அடுத்த கணத்தில் வாழ்க்கையை எதிர்கொள்ள அடுத்தவனின் உதவியை எதிர்பார்க்கும் சாமானிய ஈழ மக்களின் நிலை குறித்தான சிந்தனை வேண்டும். ஈழப் பிரச்சினையில் இந்திய அரசின் பங்களிப்பும், தேடி வரும் அகதிகளின் மறுவாழ்வு குறித்தான அக்கறையையும் அரசுக்கு உணர்த்தவாவது குரலெழுப்பலாம், குரலெழுப்புபவர்களுக்கு உறுதுணையாக இருக்கலாம். குறைந்த பட்சம் ஆதரவாகப் பேசுபவர்களை புழுவினைப் பார்ப்பது போல் பார்ப்பதனை நிறுத்தலாம்.

இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை துப்பாக்கிகளின் முனையில் கொண்டுவந்து நிறுத்துவது துன்பியல் செயல். தன்னை உலகின் மிகப் பெரிய மக்களாட்சி தேசம் என்று சொல்லிக் கொள்ளும் இந்தியா இந்த நிகழ்வுகளை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பதும், "இலங்கை நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிக்கிறோம்" என பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை மறக்காமல் அறிக்கை வெளியிடும் நடைமுறையும் மாற்றப்படல் வேண்டும்.

அரசியல்வாதிகளின் கொள்கைகள் பற்றி ஒவ்வொருவரும் தெளிவாகவே உணர்ந்திருக்கிறோம். ஆட்சியில் இல்லாத சமயம் ஒரு குரலும், ஆட்சியில் இருக்கும் போது வேறொரு குரலும், எதிர்கட்சியெனில் ஒரு தொனியும், அரசின் கூட்டணியெனில் மாற்றப்பட்ட தொனியும் பார்த்து, சலித்துப் போன சம்பவங்கள். அரசாங்கம் ஈழப் பிரச்சினையில் தலையிட வேண்டுமானால் ஊடகம் மற்றும் மக்களின் பிரதிநிதிகள் இந்தப் பிரச்சினையைப் பேச ஆரம்பிக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு ஊதியம் தேவை. ஊடகம் எனில் விளம்பரம். மக்கள் பிரதிநிதிகளுக்கு வாக்கு.

இரண்டிற்கும் ஒரே வழிதான். பொதுமக்கள் பேச வேண்டும். அப்பொழுது மக்களின் கவனத்தைப் பெற மேற்சொன்ன இருவரும் பேசுவார்கள். அரசாங்கம் திரும்பிப் பார்க்க வாய்ப்பிருக்கிறது.

மதம், கொள்கை, வன்மம், பழிதீர்த்தல் என எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து, மனிதத்துடன் குரல் கொடுக்கலாம். உறவுகளை இழந்து வாடுபவருக்காகவும், தாய்மண் விட்டு வந்து வாழ வழிதேடும் பாவப்பட்ட ஜென்மங்களுக்காகவும், கடல் அலையின் சாரலில் கதறும் பச்சிளம் குழந்தைக்காகவும்.

24 எதிர் சப்தங்கள்:

Thamil said...

உங்கள் உணர்வினை மதிக்கிறேன்.

thamillvaanan said...

வணக்கம் கோவிகண்ணன்.

உங்கள் பதிவிற்கு நன்றி.
ஃஃஅரசாங்கம் ஈழப் பிரச்சினையில் தலையிட வேண்டுமானால் ஊடகம் மற்றும் மக்களின் பிரதிநிதிகள் இந்தப் பிரச்சினையைப் பேச ஆரம்பிக்க வேண்டும்.ஃஃ

இந்திய அரசு ஈழப்பிரச்சனையில் தலையிட்டு பிரச்சனை தீர்ப்பது சாத்தியமில்லை. ஏனென்றால் தமிழர்களுக்குரிய சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்கின்ற பக்குவம் இந்திய அரசுக்கு வராதநிலையில் தலையிடுவது பிரச்சனைகளை பேலும் சிக்கலாக்கும். அதனைவிடுத்து வீடு கொழுத்துகின்ற ராசாவுக்கு நெருப்பு எடுத்துக்கொடுப்பவர்கள் போல கப்பல்களையும் வழங்கியும் அவர்களுக்காக இரவு பகல் கடலை கண்காணித்து சிறிலங்காவுக்கு தகவல் சொல்லும் நிலையை முதலில் மாற்றவேண்டும்.

இதனை எதுவும் செய்யாவிட்டால் இந்திய அரசு சொல்வதுபோல தனது தலையிடா கொள்கையை பேச்சிலும் செயலிலும் 100 வீதம் கடைப்பிடித்தாலே போதும். ஆனால் அப்படி நடக்கவில்லையே.

தற்போது இந்திய அரசு விரும்பியோ விரும்பாமலோ ஈழத்தவர்க்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கமுடியாத நிலை உருவாகி வருவதை பார்க்கிறேன்.

பார்ப்போம்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
மதம், கொள்கை, வன்மம், பழிதீர்த்தல் என எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து, மனிதத்துடன் குரல் கொடுக்கலாம்
///

கண்டிப்பாக இது போலக் குரல் கொடுக்க வேண்டும். தமிழன் தமிழ் உணர்வு என்பதையெல்லாம் தாண்டி கொல்லப்படும் மக்களுக்காக, அனாதையக்கப் படும் குழந்தைகளுக்காக குரல் கொடுக்கப் பட வேண்டும் என்பதில் ஐயம் இல்லை.

ஆனால் இந்தக் காரணங்களுக்காக மட்டுமே குரல் கொடுக்கப் பட வேண்டும் அதைத் தாண்டி இனம் மதம் என்று பிரச்சனையை எடுத்துச் சென்று இந்த விஷயங்களில் தீர்வு காணவே இயலாது.அப்படி தீர்வு கண்டாலும் அது நிலைக்காது. இது என்னுடைய புரிதல்களால் ஏற்பட்டக் கருத்து. பலர் இதனுடன் ஒத்துப் போக மாட்டார்கள் என்றும் எனக்குத் தெரியும்

நீங்கள் கூறுவது போல இந்திய ஊடகங்கள் வியாபார நோக்கு கொண்டு லாப நஷ்டக் கணக்குகளில் செலுத்தும் கவனத்தை மக்கள் பிரச்சனைகளை சரியான முறையில் வழங்க வேண்டும் என்ற நோக்கம் அற்றதாகி விட்டது உண்மைதான். இது குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் வர வேண்டும்.

மனித நேயம் கொண்ட எந்த மனிதரும் இந்தக் கொடுமைகளை பொறுத்துக் கொண்டு இருக்கக் கூடாது.

சின்னக்குட்டி said...

//ஈழப் பிரச்சினையில் இந்திய அரசின் பங்களிப்பும், தேடி வரும் அகதிகளின் மறுவாழ்வு குறித்தான அக்கறையையும் அரசுக்கு உணர்த்தவாவது குரலெழுப்பலாம், குரலெழுப்புபவர்களுக்கு உறுதுணையாக இருக்கலாம். குறைந்த பட்சம் ஆதரவாகப் பேசுபவர்களை புழுவினைப் பார்ப்பது போல் பார்ப்பதனை நிறுத்தலாம்.//


நன்றிகள்.......நல்ல உணர்பூர்வமான பார்வை

Vaa.Manikandan said...

நன்றி தமிழ், சின்னக்குட்டி.

ஆம் குமரன்,
நீங்கள் சொல்வது போல் இக்கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. மனிதநேய அடிப்படையில் மட்டுமே தீவு என்பது இருதரப்பாலுமே உணரப்படல் வேண்டும். சிங்கள அரசிற்கு இந்த உணர்வெல்லாம் இருக்கின்றனவா என்பது மிகப் பெரிய வினா!

ஆனால் ஒரு புத்தகம் படித்தேன். அடிப்படையில் சிங்களம், தமிழ் இரண்டு இனத்தின் தோற்றமும் ஒன்றுதான். இரண்டும் வேறல்ல. புத்த பிட்சுகளால் பகுக்கப்பட்டு இனத் துவேஷம் ஊட்டப் பட்டிருக்கிறது என. ஆனால் அது எவ்வளவு தூரம் வரலாற்றுப் பூர்வ உண்மை என்று தெரியவில்லை. 1984இல் பிருமிள் தர்மோத் ஜீவராமூ எழுதிய "ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை"(பரிவர்த்தனா பப்ளிஷர்ஸ்) என்ற நூல். இன்னும் முழுமையாகப் படித்து அது குறித்து எழுதலாம் என இருக்கிறேன்.

தமிழ்வாணன்,
சிறுதிருத்தம். என் பெயர் வா.மணிகண்டன். :)
நான் இக்கட்டுரையில் பொதுமக்களின் மனநிலை குறித்துதான் முழுமையாக எத்தனித்தேன். அரசின் செயல்பாடு குறித்தான கருத்து துருத்திக் கொண்டு வந்துவிட்டது. நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பக்குவம் இந்த அரசுக்கு வர வேண்டும் என்பதுதான் என் அவாவும்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
நீங்கள் சொல்வது போல் இக்கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. மனிதநேய அடிப்படையில் மட்டுமே தீவு என்பது இருதரப்பாலுமே உணரப்படல் வேண்டும். சிங்கள அரசிற்கு இந்த உணர்வெல்லாம் இருக்கின்றனவா என்பது மிகப் பெரிய வினா!
///

இந்த சமயத்தில் முன்பே சொல்ல நினைத்த மேலும் சில கருத்துக்களையும் சொல்லி விடுகிறேன். இந்தியா பாகிஸ்தான் பிரச்சனைக்கும் இந்த பிரச்சனைக்கும் சில தொடர்புகள் உண்டு. அங்கு மதம் என்றால் இங்கு இனம். நவகாளி, 1983 இலங்கை என்று நம்மால் பல விஷயங்களை தொடர்பு படுத்திப் பார்க்க முடியும். இதில் பல வேற்றுமைகளும் உண்டு என்பதை மறுக்கவில்லை.

இன்று பிரிவினைக்கு பின்னும் இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை என்பது ஓயவில்லை என்பது கண்கூடு ஆகவேதான் இந்தப் பிரச்சனையை மனித நேய அடிப்படையில் எடுத்துச் சென்று தீர்வு காண வேண்டும் என்று கூறுகிறேன்.

பிரிவினை என்ற ஒன்று ஏற்பட்டால் கூட அது சமாதானமான முறையில் மனித நேயத்தை முன்னிறுத்தி ஏற்பட வேண்டும் இல்லையென்றால் இந்தப் பிரச்சனை எப்பொழுதும் தீர்வதாக எனக்கு தெரியவில்லை.

மேலும் இந்தியா என்பது ஒரு மிகப் பெரிய நிலப் பரப்பு கொண்ட ஒரு நாடானதால் பிரிவினையைத் அதற்குப் பின்னால் நடந்த போர்களைத் தாங்கும் வல்லமை கொண்டதாக அமைந்தது. பாகிஸ்தான் இன்று நம் மீது போர் தொடுக்காமல் இருப்பது நம் வல்லமையினால்தான். இது மனித நேய அடிப்படையில் நடக்காமல் இனம் மதம் என்று பிரிவினைகள் கொண்டு நடந்தால் நமக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்ததைப் போன்ற போர்கள் பிரிவினை கண்ட பிறகும் இலங்கை, ஈழத்திற்கு நடுவில் நடந்து இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு என்பது என்றுமே இருக்காது.அழிவில் மட்டுமே முடிவு ஏற்படும்.

இது அனைத்துமே என் புரிதல்கள்தான் இது அனைத்தும் தவறாகக் கூட இருக்கலாம். என் புரிதல்கள் சரியானவை என்று நான் கூற விரும்பவில்லை இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ளவும் தயாராகவே இருக்கிறேன்.

Anonymous said...

india must change its policy.
India must help to tamils.
but India speak like a parrot on SL Tamils.
" we watch very closely, they must find a solution within one Srilanka"

same pallavai from 1983.
INDIA MUST CHANGE PALLAVI

Vaa.Manikandan said...

குமரன்,
எதிரி ஆயுதம் எடுக்கும் போது, சமாதானம் பேச முடியாது. உலக நாடுகள் முதலில் அரசை நிர்பந்திக்க வேண்டும். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும். ஆனால் எதுவுமே சரியாக நடப்பது போலத் தெரியவில்லை. அரசு தரப்பின் நாடகம்தான் பல்லிளிக்கிறது. ஒரு தரப்பு மட்டும் மனிதநேயத்தை முன்னெடுத்துச் செல்வது என்பது வேலைக்கு ஆகாத காரியம். இதைத் தான் நீங்களும் குறிப்பிடுகிறீர்கள் என உணர்கிறேன்.

அனானி,
நானும் நீங்கள் சொல்ல வருவதையே வலியுறுத்துகிறேன்.

குழலி / Kuzhali said...

//"நமக்கென்ன போச்சு?" என்னும் ஒதுங்கி வாழும் மனநிலை கிட்டத்தட்ட 'நல்லவர்களின் மனநிலை' ஆகிவிட்டது. அந்த 'நல்ல' மனநிலை பெரும்பான்மை இந்திய மனநிலை ஆனதுதான் வேதனை. சாலையில் அடிப்பட்டுக் கிடப்பவனை பார்ப்பதிலிருந்து, இன்னொரு நாட்டின் விவிவகாரம் வரையிலும் இதே மனநிலை தொற்றிக் கிடக்கிறது. தனக்கு வரும் வரையிலும் தலைவலி குறித்தான கவலையில்லை.
//
மணி நீங்கள் இத்தனை தெளிவாக சொல்லியிருப்பதற்கு இத்தனை நாட்கள் எனக்கு சரியான வார்த்தைகள் கிடைக்காமலிருந்தது, இன்று கிடைத்துவிட்டது, இன்னொரு விடயம் தெரியுமா மிகக்கொடுமையான நமக்குள்ளே சில போலி மதிப்பீடுகள் வைத்துக்கொண்டு நம்மை ஏமாற்றிக்கொள்கிறோம், அதில் ஒன்று கல்யாணத்திலிருந்து கருமாதி வரை எல்லாவற்றிலும் சாதியை வைத்துக்கொண்டு அதைப்பற்றி பொதுவில் மட்டும் பேசமாட்டோம், அதை பேசுபவர்கள் கெட்டவர்கள், சே...சே... என்ன இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்றொரு முத்திரை வேறு....

நட்சத்திர வாரத்தில் கலக்குகின்றீர் வாழ்த்துகள்...

Anonymous said...

அடங்குடா நாயே!!!

Vaa.Manikandan said...

நன்றி குழலி.

அனானி,
நான் என்ன தவறாக சொல்லிவிட்டேன்?

இருப்பினும் ஒரு ஸ்மைலி :)

பொன்ஸ்~~Poorna said...

//நட்சத்திர வாரத்தில் கலக்குகின்றீர் வாழ்த்துகள்... //
வழி மொழிகிறேன்..

அழகா சொல்லி இருக்கீங்க மணி.. மற்றவற்றை விட்டுவிட்டு, துன்பப்படும் மக்களின் பார்வையிலிருந்து பார்க்கவேண்டும்.. இல்லை என்றால் இதற்குத் தீர்வே இல்லாமல் போகலாம்

குழலி / Kuzhali said...

//பாகிஸ்தான் இன்று நம் மீது போர் தொடுக்காமல் இருப்பது நம் வல்லமையினால்தான்.//
குமரன் அவர்களுக்கு, போர்களின் முறை மாறி நிறைய நாட்களாகிவிட்டது, இனி மற்றவைகள் குமரனுக்கு மட்டுமல்லாமல் பொதுவில் சொல்வது...

இந்தியா பாக்கிஸ்தானை போர்களில் வென்றதற்கு ஏதேனும் அமானுஷ்ய சக்தியோ அல்லது இந்தியன் என்பதோ காரணம் என நினைக்கிறீர்களா? அப்படியென்றால் பாக்கிஸ்தானை வென்ற நம்மால் சீனா சீண்டிப்பார்த்தபோது அடிதானே வாங்கினோம், முன்பிருந்த போர் முறைப்படி அப்படியென்றால் இல்லை எங்கு கூட்டம் அதிகமோ அது வெற்றிபெரும்... ஆனால் இப்போது போர் முறை மாறிவிட்டது, அறிவிக்கப்பட்டது தான் போர் என்றில்லை, இரட்டை கோபுர இடிப்பும் போர்தான், பம்பாய் குண்டுவெடிப்புகளும் போர்தான், முன்பெல்லாம் கும்பல் இருக்கும் பக்கத்தில் போரின் வெற்றி இருக்கும், ஆயுதம் இருக்கும் பக்கத்தில் போரின் வெற்றி இருக்கும், இப்போது போர் முறை மாறிவிட்டதால் சிறிய சிறிய நாடுகள் கூட பெரும் சேதத்தை எதிரிக்கு விளைவிக்கலாம், சில ஆண்டுகளுக்கு முன் பாக்கிஸ்த்தானுடம் போர் அபாயம் ஏற்பட்டு நீங்கியதே, ஏன் இந்தியாவில் போரை ஆரம்பிக்க இயலவில்லை, ஏன் தயங்கினார்கள், அணு ஆயுதப்போரின் அபாயம் வரை சென்றது ஆனால் போர் நடக்கவில்லை, போர் ஆரம்பித்தால் இந்தியாவினால் பாக்கிஸ்தானுக்கு ஏற்படும் அழிவிற்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் இங்கேயும் ஏற்படும் அது தான் காரணம், பாக்கிஸ்தானின் அணு ஆயுத பலம் அது மேலும் ஒரு முறை இந்தியாவிடம் போரில் அடிபடுவதிலிருந்து தப்பித்தது...

பேச்சுவார்த்தை என்பது கிட்டத்தட்ட கட்டப்பஞ்சாயத்து தான், யார் பலவீனமானவர்களோ அவர்களுக்கு இழப்பு அதிகம், பேச்சுவார்த்தையில் இரு தரப்பிலும் உள்ள பலம் தான் யாருக்கு இழப்பு அதிகம், யாருக்கு இலாபம் அதிகம் என்பதை முடிவு செய்கின்றன...

ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான் என்ற தலைப்பில் இங்கே கிறுக்கியுள்ளேன்

சிறில் அலெக்ஸ் said...

//பொதுமக்கள் பேச வேண்டும். அப்பொழுது மக்களின் கவனத்தைப் பெற மேற்சொன்ன இருவரும் பேசுவார்கள். அரசாங்கம் திரும்பிப் பார்க்க வாய்ப்பிருக்கிறது.//

சரியாகச் சொன்னீர்கள். ஈழம் ஏதோ புலிகலின் பிரச்சனை என்ற கருத்து இருக்கும் வரை இந்தப் பிரச்சனை பர்றிய வெளி எண்ணங்கள் ஈழத்துக்கு எதிரானதாகத்தான் இருக்கும்.

ஜோ/Joe said...

மணிகண்டன்,
உங்கள் கருத்துக்களை வழிமொழிகிறேன் .நட்சத்திர வாழ்த்துக்களும் கூட!!

Anonymous said...

மிகவும் நியாயமானது. உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.....
மு.மாரிமுத்து

Anonymous said...

மிகவும் நியாயமானது. உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.....


மு.மாரிமுத்து

Vaa.Manikandan said...

நன்றி பொன்ஸ்.

இந்த விஷயத்தைச் சொல்ல எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை குழலி :).
நன்றி.

அலெஸ், ஜோ, மாரிமுத்துவிற்கும் நன்றிகள்.

(மாரிமுத்து தங்களை நம் ஊரில் சரியாகக் கூட பார்த்ததில்லை. நிச்சயம் பார்க்க வேண்டும் :) }

Anonymous said...

அருமையான உணர்வுபூர்வமான பதிவு. தமிழன் இனியாவது விழித்தெழுவானா?

theevu said...

//இரண்டிற்கும் ஒரே வழிதான். பொதுமக்கள் பேச வேண்டும். அப்பொழுது மக்களின் கவனத்தைப் பெற மேற்சொன்ன இருவரும் பேசுவார்கள்//

thamillvaanan said...

வணக்கம் வா.மணிகண்டன்,

அவசரத்தில் கிறுக்கியதால் பெயரை தவறாக எழுதிவிட்டேன். மன்னித்துக்கொள்ளுங்கள்.

மீண்டும் உங்கள் பதிவிற்கு நன்றி.

பாலசந்தர் கணேசன். said...

உலகில் சமூக அக்கறை குறைந்த, வியாபார நோக்கம் மட்டுமே முதன்மையாகக் கொண்ட ஊடகங்களுள் இந்திய ஊடகம் மிக முக்கியமானது

நல்ல வரிகள்.நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

இலங்கை வடக்குப்பகுதி விடுதலைப் புலி வசமானால் தமிழ் நாடு காஷ்மீர் நிலை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

குழலி அவர்களே உங்கள் கருத்துக்களுடன் அப்படியே நானும் ஒத்துப் போகிறேன். நான் சொல்ல வந்த கருத்து இலங்கை ஈழமும் இந்தியா பாகிஸ்தான் போல ஆகி விட்டால் இந்தப் பிரச்சனைக்கு என்றுமே தீர்வு ஏற்படாது என்பதுதான், அதனால் மனித நேயக் காரணங்களுக்காக இந்தப் பிரச்சனையில் எல்லோரும் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இனம் மதம் என்று போனால் அழிவில் மட்டுமே தீர்வு காண முடியும் என்பதுதான்.