Aug 23, 2006

பலருக்கும் பிடிக்காத ஒன்று!!!

முன் குறிப்பு: இது சற்றே பெரிய பதிவு. இரண்டாகப் பிரிக்க விருப்பமில்லை. ஆனால் பத்திகளுக்கு எண்ணிட்டு எழுதி இருக்கிறேன். எத்தனை முறை வேண்டுமானாலும் விட்டு விட்டு படிப்பதற்கு ஏதுவாக.

கட்டுரை வடிவில் எழுதினால் படிப்பதற்கு சிரமம் வரலாம் என்பதனால், பத்தாம் வகுப்பு சமூக ஆறிவியல் தேர்வில் ஐந்து மதிப்பெண் கேள்விக்கு பதிலளிப்பது போல எழுதுகிறேன்.(எனக்கும் எளிது). முழுமையாகப் படிக்க விருப்பமில்லையெனில் இறுதிப் பத்தியை மட்டும் படித்துச் செல்லுங்கள்.

நண்பரொருவர், எனக்கு ஏன் கவிதைகள் பிடிக்கின்றன என்பதற்கான காரணங்களை சொல்ல வேண்டும் எனச் சொன்னார்.

எனக்குப் பிடிக்காத கவிதைகள் என எதனையும் பட்டியலிட விரும்பவில்லை. அதே கவிதையால் பாதிக்கப்பட்ட வாசகன் என் செயலால் கோபமடையக் கூடும்.

(போலி அறிவுஜீவித் தனம் எந்தவிதத்திலும் வெளிப்படாமல் இருக்க முயல்கிறேன். எட்டிப் பார்த்தால் பொறுத்தருள்க நண்பர்களே)

* எந்தவிதத்திலும் யாரையும் குழப்பி விட வேண்டும் என முயற்சிக்காமல் எழுத முற்பட்டிருக்கிறேன். அதனையும் மீறிக் குழப்பினால் நான் பொறுப்பல்ல. அந்தக் குறிப்பிட்ட இடத்தில் நான் புரிந்து கொண்டவை அரைவேக்காட்டுத் தனமாக இருக்கக் கூடும். எனவே வெளிப்படுத்துவதில் பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்.


************************
-1-


* தமிழ்ச் சூழலில் கவிதை என்று வாசகன் முதலில் அறிவது, பாடத்திட்டங்களிலிருந்து அல்லது பொதுஜன ஊடகங்களிலிருந்து அல்லது கவியரங்ககளிலிருந்து அல்லது இந்த மூன்றிலிருந்தும்.

* என்னைப் பொறுத்தவரையிலும் இந்த வகைக் கவிதைகள் யாவுமே ஒரே விதமான ஓசையை எழுப்புகின்றன. அவற்றின் முக்கிய நோக்கம் கவிதையைக் கேட்பவன் உடனடியாகக் கரகோஷம் எழுப்ப வேண்டும் என்பதாகவே இருக்கிறது. கவிதையின் நோக்கம் அதுவாக இருக்கும் போது கவிதை தோல்வி அடைகிறது.

* இந்தக் கவிதைகள் தவிர்க்கப் பட வேண்டும் என சொல்ல முடியாது. மொழியின் மீது விருப்பமற்றவனைத் திரும்பிப் பார்க்க வைப்பதில் இவ்வகையான கவிதைகளின் பங்களிப்பு அதிகம் இருப்பதாக நம்புகிறேன். இதன் பிறகு வாசகனின் தேடல் விரிவடையும் போது அவனுக்கு வேறு விதமான கவிதைகள் கிடைக்கக் கூடும். இவ்விடத்தில் தேங்கும் வாசகன் அடுத்த தளத்திற்கு வருவதில் நிறைய தடைகளைச் சந்திக்கிறான்.

* தேவையற்ற ஒலிகளையும், உணர்ச்சிகளையும் தன்னுள் புதைத்துக் கொண்டு பேசும் கவிதையுடன் ஒரு விதமான ஸ்னேகம் ஏற்படுவதாக உணர்கிறேன்.(இந்த இடத்தில்தான் எனக்குப் பிடித்த கவிதைகள், பிடிக்காத கவிதைகளுடன் வேறுபடுகின்றன). கவிதை மனக்கிளர்ச்சியூட்டும் ஆயுதமாக இருக்க வேண்டும்.

* சில பழக்கப்பட்டுவிட்ட சொற்களை உரைநடைகளே கூட தவிர்க்க வேண்டும் எனச் சொல்லும் போது கவிதைகள் சுமந்து திரிவது ஏற்றுக் கொள்ளப் பட முடியாத ஒன்று.

*மலையாளத்தில் "நகரம்" போன்ற சொற்கள் கவிதையில், முற்றிலுமாகப் புறக்கணிக்கப் படுவதாக மலையாள நண்பரொருவர் தெரிவித்தார். தமிழிலும் இதுபோல பழக்கப்பட்ட, நிறைய முறை உபயோகிக்கப் பட்ட நூற்றுக் கணக்கான சொற்களைக் கண்டறிய முடியும்.

* கவிதை சொல்லப்படாத ஒன்றையும், சொல்ல விரும்புவனவற்றை புதிய கோணத்தில் சொல்வதாகவும் இருத்தல் வேண்டும். இதற்கு கவிஞனுக்குத் தொடர்ச்சியான வாசித்தல் அவசியமாகிறது. நாம் எழுதியவற்றை முன்பே வேறொருவர் அதன் சாயலில் எழுதி இருக்க முடியும்.


****************************
-2-


* படிமம் கவிதையின் சிறப்பம்சம். கவிதையில் கொண்டுவரப்படும் படிமம் ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு விதமான காட்சியைத் தரக் கூடும். படிமம் என்பது மிக எளிதான விஷயம். பயப்படுவதற்கு ஒன்றுமேயில்லை. சொல்ல வருவதனை நேரடியாகச் சொல்லாமல் வேறொன்றின் மீது ஏற்றிவிடுதல்.

* என்னைப் பொறுத்த வரைக்கும் படிமத்தின் முக்கிய அம்சமே பல்வேறு தளங்களை படிப்பவனுக்குத் தருவதுதான்.(இக்கருத்தில் சிலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம்)

* நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன் என வைத்துக் கொள்வோம். ஆனால் புரிந்து கொள்பவனும் அதே விஷயத்தை, அப்படியே புரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. உதாரணமாக, பெண்ணொருத்தி(என் காதலி)யுடன் விருந்துக்குப் போகிறேன். அந்த நிகழ்வையும், அந்த தருணத்தையும் கவிதையில் பதிவு செய்ய வேண்டும். இக்கவிதையை படிப்பவனுக்கு அதே அனுபவம்(காதலியுடன்) கிடைத்திருக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். அப்படியிருக்கும் பட்சத்தில், இக்கவிதையுடன் அந்நியத்தன்மையை அவன் உணர வாய்ப்பிருக்கிறது. எனவே பொதுவாக வேறொரு பொருள் குறித்து எழுதி விடலாம். அவன் அம்மாவுடன் விருந்துக்குச் சென்றிருக்கலாம், சகோதரியுடன் அல்லது இன்னும் கூட பொதுவாக நண்பனுடன். அவனுக்கு அந்த அனுபவம் மனக் கண்ணில் வரலாம். அல்லது இவை எதுவுமே இல்லாமல் அது வேறொரு நிகழ்வினைக் கூட அவனுக்கு நினைவூட்டலாம். இது படிமத்தை எப்படி கவிதைசொல்லி கையாள்கிறான் என்பதனைப் பொறுத்திருக்கிறது.

* "ஓவியப் பறவை அந்தச் சுவரிலேயே பறக்கிறது" என்பது ஒரு படிமம். ஓவியத்தில் வரையப்பட்ட பறவை குறித்து எழுதப் படுவது. இது வேறு விதமான எண்ணங்களை எல்லாம் தருவதில்லை. ஒரே விதமான புரிந்து கொள்ளுதல்தான். படிமம் இப்படியும் கூட அமையலாம்.


****************************
-3-


* கவிதையில் கதையினைக் கொண்டு வருவது நுட்பமான விஷயமாகத் தெரிகிறது. கவிதைக்கான மொழி எது? கவிதைக்கான எளிதாகப் புரிந்து கொள்ள இயலாத மொழியென்று உருவாக்கப்பட்டு தன்னைச் சுற்றிலும் மேக மூட்டத்தைக் கொண்டிருக்கிறது. கவிதையில் கதை உணரப்படும் போது கவிதை, தனக்கான நிலப் பரப்பினை அடைந்து விடுவதாகச் சொல்ல முடியும்.

* இவ்வகையான கதை சொல்லும் கவிதைகளில் நயம் இல்லை, உரைநடைத் தன்மைதான் மேலோங்கி இருக்கிறது எனச் சொல்வது வழக்கமாக இருக்கிறது. இது தவிர்க்க முடியாத ஒன்றுதான். அலங்காரங்களை அல்லது நயத்தினை கதையினைச் சொல்லும் கவிதைக்குள் நுழைக்க முற்படும் போது கவிதை, சொல்லப் பட வேண்டிய கதை மீதான தனது ஆளுமையை இழக்கக் கூடும்.

* பழமலய் அவர்களின் நிறையக் கவிதைகளை கதைகளைச் சொல்லும் கவிதைகளுக்கு உதாரணமாகச் சொல்ல முடியும்.( முன்பு நான் எழுதி இருக்கும் "பற வீரன்" பதிவைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.)


**********************************
-4-


* உவமை, உவமேயம், அலங்காரம், படிமம் அனைத்தும் கவிதையில் இருக்கலாம். இவை யாவும் சொல்லப் படாத வேறுபட்ட தளத்தில் சொல்லப்படுவதாக இருத்தல் வேண்டும். திரும்பத் திரும்ப சொல்லப் பட்ட உவமைகள் பதிவு செய்யப்படும் போது வாசகனுக்கு சலிப்புத் தட்டி விடுகிறது.

* உவமை, அலங்காரங்கள், ஓசை, நயம்- இவை எதுவுமேயற்ற இயல்பான கவிதைகளும் இருக்க இயலும்.

வகிடெடுக்கவும்
பொட்டு வைத்துக் கொள்ளவும்
போதும்
கைதவறி நழுவவிட்ட
கண்ணாடியின் பெரிய துண்டு.
வரும் போதெல்லாம்
சொல்லாமல் இருப்பதில்லை
பக்கத்து வீட்டு மருமகள்
"ஒடஞ்ச கண்ணாடில
மொகம் பாத்தா குடும்பத்துக்காவாது"
ஆகாமல் போவதற்கு,
ஒன்றுமில்லை என்பதறிந்தும்
சரி என்னதான் இருக்கிறது
எனக்கும் அவளுக்கும் பேசிக் கொள்ள
இருந்து விட்டுப் போகட்டுமே
ஓர் உடைந்த கண்ணாடித்துண்டாவது.


இளம்பிறையின் இந்தக் கவிதை மிகச் சிறந்ததாகப் படுகிறது. எந்த அலங்காரங்களோ, வர்ணணைகளோ இல்லை. பேசுவதற்கு கூட சொற்கள் தீர்ந்துவிட்ட வறுமையின் வறட்சியை அற்புதமாகச் சொல்கிறது கவிதை.

* மனித வாழ்வின் துன்பங்களையும், அது தரும் கண்ணீரின் உவர்ப்புச் சுவையைப் பதிவு செய்யும் கவிதைகளும் எளிதாக வாசகனை அடைகின்றன. ஆனால் இங்கும் ஏற்கனவே சொல்லப் பட்ட விஷயத்தை வேறு எந்த வடிவதிலும் சொல்ல முற்பட்டாலும், அக்கவிதைக்கு அது வீழ்ச்சியாகவே அமைகிறது.

* இவற்றை மட்டும்தான் சொல்ல வேண்டுமென்பதில்லை, நம்மைச் சுற்றிலும் நடக்கும் காட்சிகள், நிகழ்வுகள் போன்ற பெரும்பாலானவை கவிதைகளில் பதிவு செய்யப்படாமல் காத்திருக்கின்றன. இவையெல்லாம் சொல்லப்படும் போது கவிதை கவர்வதாக அமைகிறது.

சமயவேலின் ஒரு கவிதை

பெயர் தெரியாத பூச்சி
பருப்பு டப்பாவுக்குள் இருந்தது.

அதன் தாய்தந்தை யார் எதுவரை
படித்திருக்கிறது அதன் லட்சியம் என்ன
சாதனை என்ன வீட்டுப் பொறுப்பை
செவ்வனே செய்கிறதா பூர்ஷ்வாவா
கஞ்சா பிடிக்குமா
சமூகப் பிரக்ஞை உண்டா
கல்யாணம் ஆனதா லெபனான்
போர் பற்றி அதன் அபிப்ராயம் என்ன
ஒன்றும் தெரியாது

சாம்பல் நிறத்தில் வரிவரியாக
இத்தினியூண்டு மீசையுடன்
ஒட்டிக் கொண்டிருக்கிறது.


*********************
-5-


* நமக்கான பண்பாடுகள் யாவுமே ஒரு சாராரின் மீது திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகளாவே இருந்திருக்கின்றன. எல்லோரும் ஏதோவொரு விதத்தில் மற்றவர்களின் மீது ஆதிக்கம் செலுத்தவே விரும்பியிருக்கிறோம்.

* தன் மீது சுமத்தப்பட்ட கட்டுப்பாடுகளையும், கண்ணுக்குள் ஊசி செலுத்துவது போன்ற வன்முறைகளையும், கட்டவிழ்க்கப்பட்ட அடக்கு முறைகளையும் பாதிக்கப்பட்ட அந்தப் பிரிவினர் இலக்கியத்தில் பதிவு செய்யும் போது அதிர்வூட்டுகிறது.

* குட்டி ரேவதி 'முலைகள்' என எழுதும் போதும், சுகிர்தராணி 'சவரம் செய்யப்படாத என் நிர்வாணம்' என எழுதும் போதும் உண்டாகும் அதிர்வுகள் இவ்வகையினதே.

* உடலியல், காமம் குறித்துப் பெண்கள் பேசும் போது, அவை பெரும்பாலும் எத்தகைய வலிகளையும், மனக் குமுறல்களையும் கொண்டிருந்தாலும், 'கிளுகிளுப்பு'களுக்காக சர்ச்சைக்குள்ளாக்கப்படுகின்றன.

அந்த நிமிடங்களில் நீ நீயாக இருக்கவில்லை
உன்னுள் இருந்த மதுபோதை ஒருபுறம் காமப் பசி மறுபுறம்
இரண்டின் வெளிப்பாட்டில்
நீ புணரும் மிருகமானாய்
காதலுக்கு மட்டுமே கசிகின்ற என் யோனி
உன் ஆவேசத்திற்கு கசிய மறுத்தது
உன் விடாப்படியான போராட்டதினூடே
என் வறண்ட யோனிக்குள்
தாகம் தீர்க்க முயன்றது உன் ஆண்குறி
ஒன்று...இரண்டு....மூன்று என
என் யோனித் துவாரத்தை
நீ ஊடறுக்கும் ஒவ்வொரு முறையும்
உடலை விட மனது வலித்தது
உன் வேகம் அதிகரிக்க
என்னில் கண்ணீர் தயாரானது
வழமையின் காதலில் கசிந்து
உன்னைக் கட்டியணைத்து
முத்தமிடும் எனக்கு
உன் மூச்சுக் காற்றின்
மது நெடி சாட்டையடித்தது...
எங்கிருந்தோ வந்து
அம்மாவின் முகம்
மனதில் நிழலாடியது
இதைத்தானா
"பெண் பொறுப்பதற்கு
பிறந்தவள்" என்றாய் அம்மா?
உன் உயிரின் கடைசிச் சொட்டு
பலம் வரை பொறுத்திருந்தேன்
அப்பாடா..
உன் நீர் கசிந்து
நீ மனிதனாய்
என்ன உணர்ந்தாயோ
"பசிக்குதா?" என்றாய்
முழுதாய் உனது பசி தீர்ந்த பின்
குரல் தழும்ப
"வலிக்குது" என்றேன்
எந்தப் பதற்றமும் இல்லாமல்
"ஸாரிடா செல்லம்" என்றாய்...
உருண்டு திரண்டிருந்த
என் கண்ணீர்த்துளிகள்
மெளனமாய் வழிந்தன...
சில நிமிட மெளனங்கள்...
எங்கே என் தலை கோதி
என்னை வருடிக் கொடுப்பாயோ
என எதிர்பார்த்த எனக்கு
உன் குறட்டை ஒலி
உயிரை வதைத்தது...
உன் தாகம்
உன் தேவை- தீர்ந்ததால்
உனக்கு உறக்கம்
என் வலி
என் அழுகை-ஓயாமல்
விழி மூடி விழித்திருந்தேன்.

காலச்சுவடு இதழ் நடத்திய பெண்கவிஞர்களுக்கான போட்டியில் பரிசுபெற்ற கவிதை இது. மாதுமை சிவசுப்ரமணியம் எழுதிய இக்கவிதையில் பாலியல் நிகழ்வுகளைத் தாண்டிய வலியினை உணர முடிகிறது.

*தலித்தியக் கவிதைகளும், பெண்ணியக் கவிதைகளும் வெளிச்சம் பெறும் போதும், அதிர்வுகளற்று அவை விவாதத்திற்குள்ளாகும் போதும் கவிதைக்கான மாற்றமாக மட்டுமில்லாது அவை சமூக மாற்றத்திற்கும் கூட அடுத்த தளமா அமைகின்றன.

*சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் கேள்விக்குள்ளாக்கும் கவிதைகளும் விவாதத்திற்கு உட்படுத்தப் படல் வேண்டும்.


****************************
-6-


* கவிதை படைப்பவனுக்கும், படிப்பவனுக்கும் ஒரே அலைவரிசைத் தொடர்பை ஏற்படுத்தினால் மட்டுமே கவிதை புரியும். அதற்கு வாசகன் படைப்பாளியின் மன நிலையில் நின்று பார்க்க வேண்டியிருக்கிறது. சில கவிதைகள் உடனடியாகப் புரியலாம் அல்லது சில காலம் கழித்து வேறொரு அனுபவத்தின் சமயத்தில் புரியலாம் அல்லது குறிப்பிட்ட கவிதை அந்த வாசகனுக்கு புரியாமலே கூட சென்றுவிடலாம்.

* சில கவிஞர்களின் திருகலான சொற்களமைப்பு புரிவதில்லை என்ற கூற்றிருக்கிறது. தொடர்ச்சியான வாசிப்பின் மூலம் இத்தடையைத் தகர்த்துவிட முடியும் எனத் தோன்றுகிறது. அப்படி எதற்காகச் சிரமப்பட்டு அதனைப் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்பவர்களுக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால், மொழியில் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும் என்னும் நம்பிக்கை மொழியின் மீதான நம் ஆளுமை குறித்து உற்சாகமூட்டுவதாக இருக்கும்.

* என்னை இது குறித்து எழுதச் சொன்ன அதே நண்பர்(முத்து(தமிழினி)) தேவதேவன் போன்றோரின் கவிதைகளை உள்வாங்குவதில் சிரமமிருப்பதாகச் சொன்னார்.

தேவ தேவனின் ஒரு கவிதை
அமைதி என்பது.....

பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
நான் உன்னருகே வருகிறேன்
அமைதி என்பது மரணத்தருவாயோ?
வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ?
வாழ்வின் பொருள் புரியும் போது
உலக ஒழுங்கு முறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது
அமைதி என்பது வாழ்வின் தலைவாயிலோ
எழுந்து சென்ற பறவையினால்
அசையும் கிளையோ?

* படித்தவுடன் முதல்முறையிலேயே இக்கவிதையைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் புரிபட ஆரம்பிக்கும் போது நிறைய கோணங்கள் தெரிகின்றன.

* இக்கவிதையில் முதலில் வரும் அமைதி ஒரு நாளின் அமைதி. வேலை முடித்துக் களைத்து வரும் போது உணரும் அமைதி மரணத் தருவாயா அல்லது பறவை ஒன்று வந்தமரும் போது அசையும் கிளையா என்கிறார்.

-இரண்டாவது அமைதி வாழ்வின் பொருள் புரியும் போது கிடைக்கும் அமைதி. அது எந்த வயதிலாகவும் இருக்கலாம்(பெரும்பாலும் வாழ்வின் இறுதிக் கட்டம்). அந்த அமைதி வாழ்வின் தலைவாயிலா அல்லது எழுந்து செல்லும் பறவையால் அசையும் கிளையா என்கிறார்.

-முரண்கள் கவனிக்கப் பட வேண்டும். ஒன்று மரணத்தின் தருவாய் மற்றது வாழ்வின் தலைவாயில்.

-ஒன்று வந்தமரும் பறவையால் அசையும் கிளை மற்றது எழுந்து செல்லும் பறவையால் அசையும் கிளை.

-எந்த முரண் எந்த இடத்தில் என உணரப்படும் போதும், கவிதையில் இப்பகுதி புரிந்து கொள்ளப்படும் போதும், கவிதை பிரம்மாண்ட உலகத்தின் கதவினைத் திறக்கிறது. இனி நம் சிந்தனையைப் பொறுத்து ஏராளமான பொருள் தருகிறது.

* இந்த சூட்சுமம்தான் எனக்குப் பிடித்த அம்சம். கவிதை வாசகனுக்கு ஏதாவது விட்டுச் செல்ல வேண்டும் என்று சொல்வதுண்டு. அந்த- வாசகனுக்கு ஏதாவது ஒன்றினை விட்டுச் செல்வது என்பது இது போன்ற ஒன்றைத்தான்.


*********************
-7-


* எல்லோருக்கும் எல்லாக் கவிதைகளும் புரிவதுமில்லை. பிடிப்பதுமில்லை.

* கவிதை என்னும் பெயரில் மலிந்து கிடக்கும் சப்தம் மிகுந்த சொற்களின் கூட்டம் தாண்டி,கவிதையின் செறிவான முகம் அறியப்படல் வேண்டும். அக்கவிதை எந்த இயக்கத்தைச் சார்ந்ததாகவும் இருக்கட்டும்.


***********************

-8-


இவன் யார் கவிதை எப்படி இருக்க வேண்டும் என வரையறை செய்வதற்கு? என்பவர்களுக்காக

* வரையறை எதுவும் இங்கு நிர்ணயிக்கப் படவில்லை. இந்தக் கணத்தில் எனக்கு ஒரு கவிதை பிடிக்கிறதென்றால், இந்த அம்சங்கள் இருக்க வேண்டும் என எதிர் பார்க்கிறேன்.

* எந்தப் படைப்பாளியைப் பார்த்தும், இப்படித்தான் நீ எழுத வேண்டும் எனச் சொல்லும் உரிமை வாசகனுக்கு இல்லை. ஆனால் இப்படி இல்லை எனில் மொத்தமாகப் புறக்கணிப்பேன் எனச் சொல்லும் உரிமை அவனுக்கு இருக்கிறது.

* இது வாசக விருப்பம். இதில் நான் குறிப்பிட்டவற்றில் ஒரு அம்சம் கூட இல்லாத கவிதை எனக்குப் பிடிக்கலாம் அது கவிதையின் ஆற்றல். அல்லது இந்த அம்சங்கள் அனைத்தையும் முற்றாகப் புறந்தள்ளும் வாசகனும் இருக்கலாம். அது அவனது விருப்பம்.


***********************
-9-


இறுதியாக

* கவிதை(கவிதை என்றில்லை. எந்தப் படைப்பும்) இப்படித்தான் இருக்க வேண்டும் எனச் சொல்வதைப் போன்ற முட்டாள்தனம் வேறொன்று இலக்கியத்தில் இருக்க முடியாது எனத் தோன்றுகிறது. ஆனால் அதனைச் செய்திருக்கிறேன். ஒரு வாசகனாக மட்டுமே.

25 எதிர் சப்தங்கள்:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அருமையாகவிருக்கிறது மணிகண்டன்.

பொன்ஸ்~~Poorna said...

பத்திக்கு நம்பர் போட்டது ஓகே.. கவிதையும் பத்தியாயிடுச்சே... எடிட் பண்ணுங்க..

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

திரும்பவும் போய் இடுகையைப் படித்துவிட்டு வருகிறேன். ஒற்றை வரிப் பின்னூட்டங்களில்லாமல் வேறேதேனும் எழுதலாம் என்ற நினைப்பு. ஆனால், பிடித்த இடங்கள்/வரிகள் என்று பார்த்தால் இடுகையில் பெரும்பாலானவற்றைத் திரும்பச் சுட்ட வேண்டியிருக்கிறது.

ஆயினும் நீங்கள் கூறிய விதயத்துக்காகவே சில வரிகளை இங்கே சுட்டுகிறேன்.

//தலித்தியக் கவிதைகளும், பெண்ணியக் கவிதைகளும் வெளிச்சம் பெறும் போதும், அதிர்வுகளற்று அவை விவாதத்திற்குள்ளாகும் போதும் கவிதைக்கான மாற்றமாக மட்டுமில்லாது அவை சமூக மாற்றத்திற்கும் கூட அடுத்த தளமா அமைகின்றன.
*சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் கேள்விக்குள்ளாக்கும் கவிதைகளும் விவாதத்திற்கு உட்படுத்தப் படல் வேண்டும்.//

இடுகைக்கு நன்றி.

Ganesh Gopalasubramanian said...

கண்ணாடி

சில நேரம் குழித்துவிட்டும்
சில நேரம் குவித்துவிட்டும்
எனக்கும் என் கண்ணாடிக்குமான உறவு
மட்டும் எந்நேரமும் நிகழ்கிறது

ஓடும் வண்டிச்சக்கரமும்
பறக்கும் வானூர்தியும்
மிதக்கும் நட்சத்திரங்களும்
கண்ணாடியில் தான் விழுகின்றன

வண்டிச்சக்கரம் ஓடவும்
வானூர்தி பறக்கவும்
நட்சத்திரம் மிதக்கவும்
முடிவது கண்ணாடியால் தான்

நான் உறங்கையில் அது
மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறது
எனக்கும் என் கண்ணுக்கும்
தெரியாமல்

கண்ணாடியின் இருப்பிலும்
இல்லாமையிலும் தான்
நான் இருக்கிறேன் என்பது மட்டும்
கண்ணாடிக்கு தெரியாது

மணி சமீபத்தில் படித்தது... உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்...

நாமக்கல் சிபி said...

அருமையான பதிவு மணிகண்டன்!

விரிவாகப் பின்னூட்டமிட என்னிடம் இதைப்பற்றி விஷயம் இல்லை.

Chandravathanaa said...

மணிகண்டன்

அருமை

பட்டணத்து ராசா said...

மிக அருமையாக இருக்கிறது மணி. வாழ்த்து(க்)கள்.

G.Ragavan said...

கடவுளும் கவிதையும் ஒன்னு. எல்லாத்துக்கும் உள்ளயும் வெளியவும் இருக்குறது கடவுள். இலக்கணத்துக்குள்ளயும் வெளியவும் இருக்குறது கவிதை.

பெத்தராயுடு said...

அருமையான பதிவு.

கோவி.கண்ணன் [GK] said...

மணி அவர்களே !
கவிதைப் பற்றிய இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

கருவை சுமப்பது தாயென்றால்,
கவிதையும் மொழிக்கு தாய்தானே !

அன்புடன்
கோவி.கண்ணன்

Vaa.Manikandan said...

சிபி,
இதற்கு ஒன்றும் விஷயம் எல்லாம் தேவை இல்லை. எனினும் வருகைக்கு நன்றி.

நன்றி மதி,

பட்டணத்து ராசா, சந்திரவதனா மற்றும் பெத்த ராயுடு ஆகியோருக்கு நன்றிகள்.

கோவிகண்ணன்,

கரு கதையில் கூட இருக்குமே. கவிதைக்கு கரு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பது என் கருத்து.

ராகவன்,
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதம் கவிதைக்கு வராதே.

நன்றி பொன்ஸ்.

கணேஷ்,
யாருடைய கவிதை இது? முடித்திருப்பது மிக நன்றாக இருக்கிறது.

இக்கட்டுரை எழுதும் போது பின்னூட்டங்கள் வருவது கஷ்டம் என்று நினைத்துதான் எழுதினேன். ஆனால் நவீன கவிதைகள் குறித்த என் பார்வை முன் வைக்கப் பட வேண்டும் என்று ஆரம்பித்தேன். ஒரு மிகப்பெரிய நிலப்பரப்பில், சிறு பகுதியைக் கடந்துவிட்ட சந்தோஷம் இருக்கிறது.

ஆதரவிற்கு நன்றிகள்.

நவீன் ப்ரகாஷ் said...

அழுத்தமான பதிவு மணிகண்டன். மிகவும் விரிவாக ஆராய்ந்திருக்கிறீர்கள் கவிதை பற்றி இந்த அளவு நான் அறிந்திருந்ததில்லை. அறிய வாய்ப்பளித்தமைக்கு நன்றி :)

முபாரக் said...

நானும் வெவரம் தெரிஞ்ச நாளா கவிதை படிச்சிட்டுத்தான் இருக்கேன், கவிதைன்னா என்னன்னு கேட்டா இவ்வளவு அழகா, எளிமையா, கோவையா சொல்லத்தெரியுமான்னு தெரியல. திரும்பத்திரும்ப வாசிச்சி பாத்தேன். நான் நெனைக்கிற மாதிரியே எழுதியிருக்கீங்கன்னு ஒரு பிரமை. உங்களுக்குப் பிடித்த கவிதைகள், விரும்பாத வடிவம், வர்ணணை பற்றிய உங்கள் ஜனநாயக மனோபாவம் பாராட்டுக்குரியது. இதே மனோபாவம் நீங்க பெரிய இலக்கியவாதியா ஆனபோதும் இருக்கணும் ஆமா. முபாரக் எழுதுவதெல்லாம் கவிதையே இல்லன்னு மேடையில சொல்லிடக்கூடாது ஆமா :)

திரும்பவும் சொல்றேன், நல்ல வேளை சினிமாவுல பாட்டெழுத வாய்ப்புக்கிடைக்கல இல்லாட்டி ஒரு நவீனக்கவிஞனை/விமர்சகனை தமிழ் இலக்கிய உலகம் இழந்துவிட்டிருக்கும்

நல்லா, சுவாரஸ்யமா எழுதுறீங்க மணிகண்டன். மேன்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.

சினேகமுடன்
முபாரக்

குழலி / Kuzhali said...

முதலிலேயே ஒன்றை சொல்லிவிடுகின்றேன், மிக அருமையான பதிவு... உங்களின் மகுடத்தில் ஒரு மணி...

சில சமயம் நாம் நினைப்பதை நமக்கு தோன்றியதை வேறு யாரேனும் சொன்னால் எப்படியிருக்கும் அப்படியிருந்தது இந்த பதிவை படித்தபின்

கவிதைகளுடன் தொடர்புள்ளவனுக்கு தொடக்கத்திலிருந்து நாளாக ஆக ஏற்படும் வளர்சிதை மாற்றத்தினை மிகச்சிறப்பாக எழுதியுள்ளீர்.

கவிதைகள் மீது ஒரு ஆச்சரியம் சிறிய வயதிலிருந்தே எனக்கும் உண்டு, முதலில் சந்தமும், சத்தமும் கவிதைகளில் பிடித்தது, அதே போல பலரையும் போல காதல் கவிதைகள் 'க'கர,'த'கர,'அ'கர சந்த சத்தங்கள் தான் கவிதையின் இலக்கணமாக தொடக்கத்தில் இருந்தது.

பிறகு ஏதேதோ மாறி
இப்போது எதுவும் கவிதைதான் அதற்கு எந்த இலக்கணமும் இல்லை, என்றளவில் வந்து நிற்கின்றது. கிட்டத்தட்ட இதைத்தான் நீங்களும் பதிவில் சொல்லியிருக்கின்றீர்.

//*தலித்தியக் கவிதைகளும், பெண்ணியக் கவிதைகளும் வெளிச்சம் பெறும் போதும், அதிர்வுகளற்று அவை விவாதத்திற்குள்ளாகும் போதும் கவிதைக்கான மாற்றமாக மட்டுமில்லாது அவை சமூக மாற்றத்திற்கும் கூட அடுத்த தளமா அமைகின்றன.
//
மிகச்சரி, குறிப்பாக சுகிர்தராணியின் கவிதைகள் ஒரே சமயத்தில் தலித்துகளின் பிரச்சினைகளையும் பெண்களின் பிரச்சினைகளையும் அலசுகின்றன.

பொதுவாக கதைகள், கட்டுரைகள் எல்லாம் எழுதியவர்களை கொஞ்சமேனும் பார்த்து படிக்கும் நான் கவிதையை மட்டும் அப்படி படிப்பதில்லை.

பொதுவாக மொழிபெயர்ப்பு கவிதைகளை அத்தனை விரும்பி படிப்பதில்லை, கவிதைக்கு சந்தமும், சத்தமும் முக்கியமென்று கருதியதின் எச்சமாகவும் இருக்கலாம், நமக்கு அந்த சூழ்நிலையை கற்பனை செய்வதில் ஏற்படும் சிரமமுமாக இருக்கலாம், ஆனால் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை அவரின் சிந்தனை, நம்பிக்கை மாற்றங்களை கவிதை மூலம் அறிந்ததென்றால் அது பாப்லோ நெரூதா கவிதைகள் தொகுப்பிலிருந்து.

இந்த மொழிபெயர்ப்பு கவிதைகளை பற்றி ஒரு வார்த்தை எழுதியிருந்தால் 100க்கு 100 மதிப்பெண்கள் வாங்கியிருப்பீர்கள் இப்போது 100க்கு 99 மதிப்பெண்கள் தான் இந்த கட்டுரைக்கு.

Vaa.Manikandan said...

நன்றி நவீன் பிரகாஷ்.
கவிதை குறித்து யாராலுமே முழுமையாக அறிந்து கொள்ள முடியாது என்பதெண்ணம். அவரவர் புரிந்தவ்ற்றை முன் வைக்கலாம். அவ்வளவே.

முபாரக,
பெரிய இல்லகியவாதி போன்ற பயமூட்டும்/உற்சாகமூட்டும் பாராட்டுக்களுக்கு நன்றி. ஆனல் சற்று அதிகப்படியான பாராட்டாகவே உணர்கிறேன். :)

ஆம் குழலி,
மொழிபெயர்ப்புப் பகுதியை விட்டுவிட்டென். சுட்டிக் காட்டியதற்கு நன்றி. பிறிதொரு நாளில் தனிப்பதிவிடுவோம். ஜென், காலச்சுவடு போன்ற மொழிபெயர்ப்புக் கவிதைகளை :)

அது சரி...எனக்கு நினைவு தெரிந்து என் வாழ்நாளில் சதம் என்பதே இருந்ததில்லை. :(

கப்பி | Kappi said...

அருமையான பதிவு மணிகண்டன்..

நன்றி!!

கார்திக்வேலு said...

மணி,
இது தொடர்பான கருத்துக்களை
நீளமாக இருந்ததால் தனிப்பதிவாக இட்டிருக்கிறேன்.

http://intamil.blogspot.com/2006/08/blog-post_24.html

இளங்கோ-டிசே said...

நல்ல பதிவு. ஆரம்பத்திலுள்ள் முன் குறிப்பைத் தவிர்த்திருக்கலாம் போலத் தோன்றுகின்றது.

Vaa.Manikandan said...

நன்றி கப்பி பையன்.

கார்திக், தங்களின் பதிவினைப் படித்தேன். எளிமையாகவும், தெளிவாகவும் அதே சமயம் கவித்துவத்துடனும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி.

நன்றி டி.சே. சிலர் கவிதை என்றவுடன் சிலர் தவிர்த்து விடக் கூடும். அவர்களிடம் முன்பே தெரிவித்து விடலாம் என்பதால் குறிப்பிட்டேன் :)

செல்வநாயகி said...

நல்ல பதிவு மணிகண்டன்.

இப்னு ஹம்துன் said...

மணி, தாரகையானதற்கு வாழ்த்துகள்.

'பலருக்கும் பிடிக்காத ஒன்றை' எல்லோருக்கும் பிடிக்கும்விதமாக, சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.
கவிதைகள் குறித்த எண்ணங்கள், கவிதைகளைப்போலவே காலந்தோறும் மாறிவருவது இயல்பு தான்.

Machi said...

கவிதை நமக்கு
பிடிபடாத ஒன்னு..
ஒரே வாக்கியமா எழுதாம
பிரித்து பிரித்து எழுதுனா
புது கவிதை
என்று நண்பன் சொல்ல
அதை நான் எழுத
அது கவிதை இல்லையென
நண்பர்குழாம் சாட
என் கவிதை எண்ணத்துக்கு
சாமாதி கட்டினேன்..

கவிதைக்கு வரையறை
இல்லையென்ற
கூற்றுப்படி
என் பின்னூட்டம்
கவிதையா?...

இராம. வயிரவன் said...

நல்ல பதிவு நண்பரே! கவிதை பற்றி ஆய்வு செய்து ஆர்ப்பாட்டமில்லாமல் புரியும்படி எளிமையாகத் தொகுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். வழக்கமான கவியரங்கக் கவிதையிலிருந்து புதுக்கவிதைக்குத் தாவிய போது ஏற்பட்ட தாக்கம் எனக்கு இருந்தது. அந்தத் தாக்கத்தினால் 'கவிதைக்குண்டு', 'எழுதப்படாத ஒன்றும் வாசிக்கப்படாத ஒன்றும்' என இரண்டு கவிதைகளை எழுதினேன். கவிதை பற்றிய என்னுடைய கருத்துக்கள் சன்னஞ்சன்னமாக மாறிவிட்டன. உங்கள் ஆய்வின் எல்லா வரிகளும் என்னோடு ஒத்துப்போகின்றன. 'கவிதைக்குண்டு' கவிதையை என் பதிவில் போட்டிருக்கிறேன். படித்துப்பாருங்கள்.
நன்றி, இராம.வயிரவன்.

வெற்றி said...

மணி,
முதலில் உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உங்களின் பதிவு கொஞ்சம் நீளளளமாக இருப்பதால் பிரதி எடுத்து வைத்திருக்கிறேன். வாசித்த பின்னர் மீண்டும் வருகிறேன்.

நண்பர் குறும்பன் பின்னூட்டத்தில் எழுதிய கவிதை பிரமாதம்.:))

kirikasan said...

மரபுக்கவிதை மூலமாகவும் கதைகளைக் கூறலாம். அழகானசொற்களின் உதவியுடன்.
உதாரணம் நீண்ட கவிதை என்றாலும்


மண்ணுழுது வயல்குழைத்த மைந்தரிருள் கண்டு
மாடுகளை முன்துரத்தி மனையடையும் நேரம்
விண்ணுயரும் கோபுரங்கள் தெய்வஇசை பாடும்
விரிந்தமரக் கிளையினிடை புள்ளினங்கள் சேரும்
தண்ணிலவு தூரநின்று தலையை எட்டிப் பார்க்கும்
தாளமிடும் மெல்லிடையார் தீபஒளி ஏற்றும்
எண்ணமெலாம் சிலுசிலுத்தே இருள்கவியும் நேரம்
என்னவளோ காத்திருக்கும் திசைநடந்து சென்றேன்

பெண்ணவளோ என்மனதைப் கொள்ளை கொண்டதேவி
பேசுமெழிற் சித்திரமாம் பிறைநுதலை நீவி
எண்ணியிருகூந்தல்இழை முன்னிறங்கி ஆடும்
ஏக்கமுறும் விழியிமைகள் துடிதுடித்து மூடும்
அண்ணளவாய் அழகுமயிற் திருமகளின் உறவாம்
ஆசைமனம் கொண்டவளோ எந்தனுக்கு உயிராம்
மண்ணையிருள் மூடமுதல் மங்கை யவள்காண
மனமெடுத்து விரைவெடுத்து துரிதுநடை கொண்டேன்

மெல்ல விழும் அங்குமிங்கு மொன்றன வான்துளிகள்
மேல்விழுந்து உடல்சிலிர்க்க ஓடுங்குளிர்த் தென்றல்
சொல்லவொரு வகையறியாச் சுகமெடுத்து நானும்
சுவையறிந்து அறிவிழந்து உணர்வுமிகச் சென்றேன்
முல்லை மலர்ப் பந்தலின்கீழ் முகிழ்ந்தநறுவாசம்
மோகனமாய் மனம் கிறங்க மோகினியாய் நின்றாள்
கல்லெடுத்து உளிபதியாக் கட்டழகுத்தேகம்
கரமெடுத்து தூரிகையால் வண்ணமிடாத் தோற்றம்

என்னவரே விண்ணிறங்கும் செங்கதிரோன் மேற்கில்
இல்லையென்று ஆகமுதல் வந்திடுவே னென்றீர்
சொன்னதேது செய்வதேது? எங்கு சென்று வாழ்ந்தீர்
இங்கொருத்தி காத்திருக்கும் எண்ணம்விட்டதாமோ?
சின்னவளின் சினமெழுந்த செந்நிறத்துக் கன்னம்
சிந்தைதனை உந்திவிட ”சிறியவளே பாராய்
முன்னெழுந்து வந்தவனாம் மூச்சிரைக்க நானும்\
மோதிஎன்னை காதலிட்டாள் மோகம்கொண்டொருத்தி

கன்னமதில் முத்தமிட்டு முத்தமிட்டு என்னைக்
கட்டியணைத்தே விளைத்த காரியமென் சொல்வேன்
எண்ணமதில் ஏதும்பிழை இல்லையென்ற போதும்
ஏங்குமவள் இச்சைகண்டு எனது நிலைகெட்டேன்
மல்லிகையின் வாசமெடுத் தென்மனதை மாற்றி
மயக்குமொரு இன்னிசைகள் மென்குரலில்பாடி
உள்ளமதில் உவகையெழக் கற்பனைகள் கூட்டி
ஓசையின்றி ஒட்டிநின்றாள் உதடுகளைநீவி

நல்லவர்கள் நாலுபேரின் முன்னிலையில் என்னை
நாணமின்றிச் செய்தவிதம் நான் குறுகிபோனேன்
மெல்லிருளால் மூடுமிந்த அந்திவேளைகொண்ட
மோகமதை அங்கவளின் மூச்சுக் காற்றில் கண்டேன்
கண்ணிரண்டும் மூடியதில் கண்டசுகம் எண்ணி
காத்திருக்கும் உனைமறந்தேன் என்னைநீயும் மன்னி
எண்ணியிது செய்ததல்ல எப்படியென் றறியேன்
இயற்கையடி விட்டுவிடு என்று சொல்லி நின்றேன்

பெண்ணவளோ வெஞ்சினத்தை மென்முகத்திற் காட்டி
பின்னையேது என்னவெண்ணி இங்குஓடிவந்தீர்
கண்ணழகே கனியமுதே என்று காதல்சொல்லிக்
காமுகனாய் உங்கள் குணம் காட்டுவதாமென்றாள்
முன்னழகும் பின்னழகும் என்னைவிட நன்றோ
மோகினியோ கண்ணிரண்டும் தேன் எடுத்தவண்டோ
சின்னவரே உன்மனதை சிந்தைகொள்வதறிவேன்
சென்றுவிடும் என்னைத்தொடில் மெய்யிலுயிர் கொள்ளேன்

கண்ணிரண்டும் நீர்துளிக்க கன்னம் சிவப்பாக
கனிமொழியால் எனைமறுத்துக் காலெடுத்துவைத்தாள்
விண்ணதிர இடியிடித்து வெளியிலோடிச்செல்ல
விழிமலரைமூட அவள் வேதனையைக்கண்டேன்
இன்னும் இனிவிட்டு வைத்தால் இந்தமாலைநேரம்
இன்பமன்றித் துன்பமென ஆகுமென்று அஞ்சி
பெண்ணவளின் பேரெதுவோ தென்றலென்று சொன்னாள்
பிறந்தஇடம் மலையினடிச் சாரலென்று நின்றாள்

கண்ணழகுக் கில்லையவள் கைவிலக்கஎண்ணி
கரமெடுத்துத் தோற்றுவிட்டேன் காற்றுக்கேதுமேனி
சொன்னதுமே என்னவளின் சின்ன இதழ்மீது
சேர்ந்தஒரு புன்னகைக்கு உள்ளவிலையேது
கன்னமதைக் கிள்ளியிந்தக் கள்ளன் சொன்னபொய்யோ
கவிபுனைந்து கொள்ளவது காதலிக்கவல்ல
என்றுசொல்லி என்னை இருகைகளாலே கட்டி
இப்படியா தொட்டுநின்றாள் சக்களத்தி என்றாள்