Aug 21, 2006

தேசியம்+சுதந்திரம்+பெரியார்+ஆண்மை.

தேசியம், சுதந்திரம், குப்பைமேடு என அடி பின்னி எடுக்கிறார்கள். பெரியாரை உள்ளே இழுத்துப் போட்டு ஒரு குத்துப் பாட்டு வேறு. ஆண்மகன்/பெண்மகள் என இன்னொருத்தர் "கும்தலக்கடி"யாக எழுதுகிறார். ஒரே விஷயம் பல பதிவுகளில் நாறடிக்கப்படுவது புதிதல்ல. ஆனால் பிச்சைக்காரன் பாத்திரம் போல எல்லோர் வீட்டு சோற்றையும் இப்பொழுதுதான் குழைத்து அடிக்கிறார்கள் என நினைக்கிறேன்.


இவர்கள் அடித்துக் கொள்வதைப் பார்த்தால், தேசியம், சுதந்திரம் எல்லாம் ஒரு குழு பேச வேண்டும். பெரியார், திராவிடம், பருத்திக் கொட்டை, புண்ணாக்கு குறித்து எல்லாம் பேச இன்னொரு குழு தயாராக இருக்கிறது. எம்.ஜி.ஆரின் அண்ணாயிசம், விஜயகாந்த்தின் காமராஜர், அண்ணா கலந்த புது'இசம்' போல பலவற்றையும் கலந்து எழுத இன்னொரு குழு தீட்டிக் கொண்டு நிற்கிறது.


சுதந்திரம்னா என்னய்யா? யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம், செயல்படலாம். அடுத்தவனை பாதிக்காத வகையில். எங்கே அனுமதிக்கிறீர்கள்? அடிமட்டத்தில் இருந்து வந்தவர் சுதந்திரத்தைக் கிழித்தால் தேசபற்று பீய்ச்சி அடிக்கிறது. தனிமனித தாக்குதல் வரை இழுத்துச் செல்கிறது. காலம் காலமாக நசுக்கி வைத்த இடத்திலேயே சூடு வைக்கிறீர்கள். சுருங்கி கிடக்கட்டும் ....மவனுக என்று.


அமெரிக்காவின் பிடியில்லாமல் செயல்பட முடிகிறதா நாம் அமைத்து வைத்திருக்கும் நடுவண் அரசால். அது காங்கிரஸ் ஆக இருக்கட்டும் அல்லது பா.ஜ.க வாக இருக்கட்டும். எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு சப்தமும், ஆளும் கட்சியெனில் அமெரிக்காவுக்குக் குனிந்து போடும் கூழைக் கும்பிடும் பார்த்துப் பார்த்து பழகிவிட்டது.


அணு ஆயுத ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்றால் செய்வார்களா? அறிக்கை மட்டும்தானே சமர்ப்பிக்கப் படுகிறது? அடேயப்பா என்ன வீராவேசம்?.


ஈரானிலிருந்து வருவதாக இருந்த எண்ணெய்க் குழாய்த் திட்டம் என்ன ஆனது? அமெரிக்க எதிர்ப்பினால்தானே கிடப்பில் போட்டீர்கள்? இல்லை.. பாகிஸ்தான்காரன் வழி விட மாட்டான் என்று சொல்லி காமெடி பண்ணப் போகிறீர்களா?


அமெரிக்கக் கூட்டுப் படையின் பித்தலாட்டங்களையும், வன்முறை வெறியாட்டங்களையும், ஏவி விட்டு விளையாடும் சில்லரைத் தனங்களை வேடிக்கை மட்டும்தானே பார்க்கிறது நமது சுதந்திர அரசு? ஒரு கேள்வி கேட்க முடிகிறதா? 100 கோடி மக்கள் என்கிறோம். உலகில் ஆறு பேரில் ஒருவன் இந்தியன் என்கிறோம். மிகப்பெரிய ஜனநாயக நாடு நாம் என்கிறோம். இதுதான் நம் தைரியம். ராஜதந்திரம் எனச் சப்பைக் கட்டு கட்டுவீர்களோ?


அட விடுங்கய்யா!!! உலகச் சமாச்சாரம் எல்லாம் பெரிய மேட்டரு.
உள்நாட்டுக்கு வருவோம். பிரச்சினை என்றால் கோகோ கோலா அல்லது பெப்ஸியை மிரட்ட முடியுமா? 'கறுப்புப் பட்டியல்'லில் வைப்போம் என பூச்சாண்டியாவது காட்ட முடியுமா? கோலி சோடாவையும், வின்சென்ட் மார்க் குளிர்பானத்தையும் அடித்து மிரட்டிதானே அவனது கொடி பறக்கிறது இங்கே?
எந்த வெளிநாட்டு நிறுவனத்தையும் மிரட்ட கூடாது. அவன் மூட்டை கட்டிவிட்டால் அந்நியச் செலவாணி திவாலாகிவிடும். பார்த்துக் கொள்ளுங்கள் நம் "தன்னிறை"வை. அவன் சிறுநீர் அடைத்து விற்றால் கூட நம் நடிகன் கோடியை வாங்கிக் கொண்டு வாயில் ஊற்றிக் காட்டுவான்.
சுதந்திரம் என்றால் இன்னொன்றும் இருக்கிறது. "சுய சார்புத் தன்மை" அடுத்தவன் தயவு தேவை இல்லை என்ற தன்மை. சொல்ல முடியுமா ஒரு சராசரி இந்தியனால்? காலையில் பல் விளக்க ஆரம்பிப்பதிலிருந்து, படுக்கப் போகும் வரையிலும் எல்லாவற்றிலும் வெளிநாட்டுப் பொருள்தான் இருக்கிறது.


வாங்கிய சுதந்திரத்தை கொண்டாடுவோம். முற்றாகச் சுதந்திரம் இல்லை என்பதல்ல என் வாதம். அன்னியனை துரத்தி விடுதல் மட்டுமன்று விடுதலை. கிடைத்திருக்கும் அரைச் சுதந்திரத்தில் பாதிக்கப்பட்டவன் கதறினால் காது கொடுங்கள். கண்ணை மூடிக் கொண்டு தேசபக்தியை முன் வைத்து வாந்தியெடுக்க வேண்டாம்.


பத்தாம்பசலித்தனமாக பேசுகிறான். இது எல்லாம் தாராளமயம், உலகமயம் காலம் என்று சொல்ல வருகிறீர்களா? ஒன் நிமிட்.


நான் இல்லை என்றெல்லாம் சொல்லவில்லை. அப்படியே இருக்கட்டும். அரைலட்சம் சம்பளம் எல்லாம் எந்தக் காலத்தில் நினைத்துப் பார்த்திருக்கும், இந்த பரதேசிகள் நிறைந்த பாரத நாடு.


இந்த கஸ்மாலம் பிடித்த சட்டத்திருத்ததுக்கு கையெழுத்துப் போட மாட்டேன் என ஜனாதிபதி கூட சுதந்திரமாகச் சொல்ல முடியவில்லை. ஒற்றைக்காலில் நின்று கையொப்பம் வாங்குகிறார் நம் பிரதமர். காபினெட்டை மீற குடியரசுத்தலைவருக்குத்தான் அதிகாரமில்லையே? அடப் பாவிகளா....


உலக விஷயத்தில் இருந்து நம் அரசியல்வாதிகள் ஆடும் ஆட்டம் வரை நம் சுதந்திரம் பல்லிளிக்கிறது.


ஜால்ரா தட்டுக. புனிதனாக மாறுக. நாறிக்கிடக்கும் பகுதியைப் பாராதே. குப்பையைக் கிளறாதே. அப்படி எல்லாம் செய்தால் நல்லவன். வெரி குட்.


பேச விடுவதில்லை, எழுத விடுவதில்லை, சுயமாக நிற்க முடிவதில்லை. பிறகென்ன சுதந்திரம்....வெங்காயம்!


சுதந்திரத்திற்கென அடிப்படை இலக்கணமே இல்லாத போது, அது பற்றி ஒருவர் பேசினால் ஏன் குத்துது? குடையுது?

அட வெங்காயம் என்றவுடன் நம்மாளு நினைவுக்கு வருகிறார். நம்மாளுக்கு தமிழன் நாறுவதை மாற்றவே ஒரு ஜென்மம் தேவைப் பட்டிருக்கிறது. அவர் இருந்த காலகட்டத்தில் வடக்கு வாழ்வதும், தெற்கு தேய்வதும் நிகழ்ந்த உண்மைதானே? ஆரியனிடமிருந்து தமிழனைப் பிரித்து அவனுக்கென இருந்த அடையாளம் காட்டவே பாவம்.. மனுஷன் படாத பாடு பட்டிருக்கிறார்.

அவருக்கு தெரியாமலா இருந்திருக்கும் சுதந்திரம் வந்தால் திராவிடன் யாரிடம் அடிமை ஆவான் என்று. அடிமை என்றான போது எஜமானன் எவனாக இருந்தால் என்ன? இந்த மனநிலை தான் அவருக்கு இருந்திருக்கும். அதே வழியில் வந்த அண்ணா, கருணாநிதி பின்னர் ஒருங்கிணைந்த இந்தியாவையும், இந்திய இறையாண்மையையும் ஏற்றுக் கொண்டது போல், பெரியாரின் வாழ்வும் நீடித்திருக்குமாயின் அவரது எண்ணம் மாறி இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. பரவாயில்லை. இந்தப் பசங்கள்(திராவிடன்) கூட மேலே வருவதற்கான வாய்ப்பிருக்கிறது எனத் தெரியும் சமயத்தில்.

அவரை ஏன் இந்த விளையாட்டில் கொத்து புரோட்டா போடுகிறீர்கள் என்று தெரியவில்லை.

ஓ...... மீள் பார்வை? அது சரி... நடக்கட்டும்.. நடக்கட்டும்.......


வழக்கம் போலவே டிஸ்கி: இது யாருக்கும் வக்காலத்து வாங்கவோ, யாரின் காலையும் வாரி விடவோ எழுதப் படவில்லை. ஆனால் இது குறித்து எழுத வேண்டும் என்பதற்கான தூண்டுதல் - போன வார, இந்த வாரப் பதிவுகள் தான்.

25 எதிர் சப்தங்கள்:

லக்கிலுக் said...

தேசியம், சுதந்திரம், பெரியார் எல்லாத்தையும் விட்டுத் தள்ளுங்க.... நீங்க தானே இலைக்காரன்? அதை மட்டும் சொல்லுங்க வாத்தியாரே.....

குழலி / Kuzhali said...

ஆஹா ஆஹா... பலே பலே.... சபாஷ் சபாஷ்...

//அரைச் சுதந்திரத்தில் பாதிக்கப்பட்டவன் கதறினால் காது கொடுங்கள். கண்ணை மூடிக் கொண்டு தேசபக்தியை முன் வைத்து வாந்தியெடுக்க வேண்டாம்.
//

இப்படி கட்டம் கட்டி மேற்கோள் காட்ட ஆரம்பித்தால் பதிவு முழுக்க காட்ட வேண்டும் எனவே இப்போதைக்கு இரண்டு வார்த்தை "நல்ல பதிவு"

கதிர் said...

உங்கள் உலகளாவிய பார்வை வியக்க வைக்கிறது.

கடந்த ரெண்டு மூணு வாரமா நட்சத்திர வாரத்தில அதிரடி பதிவுகள் இல்லாத குறைய தீர்க்க வந்திருக்கும் மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

மணி,

நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.

அடிச்சு ஆடுறீங்க! ஒருத்தரையும் விட்டு வெக்கறாப்புல ஐடியா இல்லை போல!

நீங்க நம்ம (ஊர்) ஆளுன்னு சொல்லிக்கப் பெருமையா இருக்கு.

சைக்கிள் கேப்புல பாரியூர்த் திருவிழாவை விட்டுடாதீங்க! லிஸ்டுல இருக்குதானே?

நன்றி
கமல்
www.varalaaru.com

அசுரன் said...

//
குழலி said...

இப்படி கட்டம் கட்டி மேற்கோள் காட்ட ஆரம்பித்தால் பதிவு முழுக்க காட்ட வேண்டும் எனவே இப்போதைக்கு இரண்டு வார்த்தை "நல்ல பதிவு"//

இதேதான் நம்ம கருத்தும்...

குத்து #1
குத்து #2
குத்து #3
குத்து #4
...
...
...
...
எண்ட் அஃப் கட்டுரை குத்து #..

உள்குத்து வெளிகுத்துன்னு சகட்டுமேனிக்கு குத்து....
கடைசியில போட்டிருந்தீங்களே அந்த டிஸ்கி... கும்மாங்குத்து.

முத்து தமிழினியோட ஒரு பதிவுல ஒரு அன்பர் சொல்லியிருந்தார்:
//உள்குத்து பதிவா படிச்சு படிச்சு flat screen மானிட்டர் கூட சாத மானிட்டர் மாதிரி வீங்கிப் போச்சு... அவ்வ்வ்வ்வ்வ்.......//

நம்ம கதையும் இதேதான்.
அவ்வ்வ்வ்வ்வ்.......

*********

நான்கூட இது சம்பந்தமா(அதான் சுதந்திரம்..) ஒரு பதிவு போட்டேன். உள்குத்து போடக்கூட ஆள் வழக்கமா வரதவிட கொஞ்சம் கம்மியாதான் trunover ஆச்சு.
http://poar-parai.blogspot.com/2006/08/blog-post_15.html

*********
நீங்க வச்சது உள்குத்துன்னா பொன்னரசு வச்சரய்யா வெளிக்குத்து....

//கார்ப்பரேட் அடிவருடிகளின் சமீப கண்டுபிடிப்பு தேசப்பற்று. ஆனால் வெளிநாட்டில் இருந்து நாட்டுப்பற்று பீச்சியடிக்கப்படும் என்பது ஒரு முரண்.கேட்டால் அந்நிய செலாவணி என்று கதை அளப்பார்கள்.அட போங்கப்பா.. //

சூப்பராப்பு......

*********

நல்ல பதிவு

வாழ்த்துக்கள்

ஆனால் தங்களது கட்டுரையின் அனைத்து பகுதிகளுடனும் எனக்கு உடன்பாடு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்


நன்றி,
அசுரன்

Anonymous said...

ஆயாவின் டேஷ் டேஷ் அப்படீன்னு ஏதும் காமக் கவிதை இல்லையா வா.ம ?

ஏமாத்திடாதீங்க எங்களை எல்லாம்..

Vaa.Manikandan said...

லக்கி லுக்,
சின்ன பையன் கிட்ட என்ன கேட்குறீங்க சூசகமா?

அம்மா கட்சியான்னு கேட்குறீங்களா? நீங்க வேற.....உங்க ஆளுக்கு நான் தேர்தல் பிரசாரம் எல்லாம் பண்ணி இருக்கேனுங்க...ஆனா என்ன பண்ண? நம்ம ஊர்ப் பக்கம் என்ன கத்து கத்தினாலும் வேலைக்கு ஆவறதில்லை. :(

நன்றி குழலி :)

தம்பி,
என்ன உசுப்பேத்துறீங்க? நாம்ம இதோட முடிச்சுட்டு ரவி கேட்ட மேட்டருக்கு தாவலாம்னு இருந்தேன்.
என்ன ரவி சந்தோஷமா? ;)

நன்றி பொன்னரசு.

பாரியூருக்குன்னு தனிப் பதிவா? இல்லையே கமல் :(

//கட்டுரையின் அனைத்து பகுதிகளுடனும் எனக்கு உடன்பாடு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்//
இங்கு கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப் படும். ;) அசுரன்

Anonymous said...

டரியல்.....
டரியல் ஆக்கிவிட்டீர்கள்......
க.க.க.போ.......
[கச்சிதமாய் கருத்தில் கலக்கிவிட்டீர் போங்கள்.......]

மு.மாரிமுத்து.
கரட்டடிபாளையம்.

Anonymous said...

டரியல்.....
டரியல் ஆக்கிவிட்டீர்கள்......
க.க.க.போ.......
[கச்சிதமாய் கருத்தில் கலக்கிவிட்டீர் போங்கள்.......]

மு.மாரிமுத்து.
கரட்டடிபாளையம்.

Vaa.Manikandan said...

நன்றி மாரிமுத்து.

விளக்கம் சொன்னதற்கு.
கரட்டடிபாளையத்திலிருந்து ஒருவர் பதிவினை படிக்கிறார் என்பது சந்தோஷமாக இருக்கிறது. நன்றி.

Unknown said...

சுதந்திரத்துக்கு சொதந்தரமா ஒரு வெளக்கம் கொடுத்தீங்க, சரி, ஆனா சொதந்திரம் இப்படித்தான் இருக்கனும்னு சொன்னா அதுக்கு பேரு சொதந்தரமா? அது சொதந்தரத்தை சொதந்தரமா பயன்படுத்த விடுமா? நான் கேட்ட கேள்வி ஒங்க சொதந்தரத்துல தலையிட்டா நான் சொதந்துரமா கேக்க உரிமையில்லையான்னு ..... வேண்டாம் அது எதுக்கு இப்ப நட்சத்திர வாழ்த்துக்கள் :)

enRenRum-anbudan.BALA said...

//இப்படி கட்டம் கட்டி மேற்கோள் காட்ட ஆரம்பித்தால் பதிவு முழுக்க காட்ட வேண்டும் எனவே இப்போதைக்கு இரண்டு வார்த்தை "நல்ல பதிவு"
//
I second "Kuzali, the great" !

Very good posting, nanRi.

Thekkikattan|தெகா said...

மணி அவர்களே,

நல்லாருந்துச்சு. வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

நட்சத்திரதுக்கு வாழ்த்து(க்)கள் மணிகண்டன்.

ENNAR said...

ஏக் தம்ல எல்லாத்தையும் சொல்லி முடித்துவிட்டடீர்கள்
வாழ்த்துகள்

Machi said...

நட்சத்திரப் பதிவு காரசாரமா இருக்கு. வாழ்த்துக்கள்.
ஒரே காரமா இல்லாம இனிப்பையும் குடுங்க. :-))

Udhayakumar said...

////அரைச் சுதந்திரத்தில் பாதிக்கப்பட்டவன் கதறினால் காது கொடுங்கள். கண்ணை மூடிக் கொண்டு தேசபக்தியை முன் வைத்து வாந்தியெடுக்க வேண்டாம்.
//

பக்கத்து ஊர்க்காரர் இந்த மாதிரி சத்தமா பேசறப்போ ஒதுங்கி இருக்கக் கூடாது... நீங்க நடத்துங்க.

ராவணன் said...

கரட்டடியாரே,
நீங்கள் கொடுத்த காட்டடியில் எல்லா தேச வியாதிகளும் ஓடிவிட்டார்கள்.
இதே வேகத்தில் அனைத்து பதிவுகளையும் எதிர்பார்க்கிறேன்.

Muthu said...

//அவருக்கு தெரியாமலா இருந்திருக்கும் சுதந்திரம் வந்தால் திராவிடன் யாரிடம் அடிமை ஆவான் என்று. அடிமை என்றான போது எஜமானன் எவனாக இருந்தால் என்ன? //

//ஓ...... மீள் பார்வை? அது சரி... நடக்கட்டும்.. நடக்கட்டும்.......//

ஒரு கருத்து..பின்னர் ஒரு கிண்டல்..கலக்கல் அய்யா கலக்கல்..

Chellamuthu Kuppusamy said...

மணி, நீங்கள் சொன்ன பல சங்கதிகளில் உடன்படுகிறேன். சிலவற்றில் உடன்பாடு இல்லை. சுய நிறைவு என்பதெல்லாம் இன்றைய சூழலில் சாத்தியமே இல்லை. We live in a highly inter-dependent world. Independence is as bad as full dependence.

மற்றபடி, அம்மா சென்டிமென்ட் தங்கச்சி சென்டிமென்ட் மாதிரி தேசபக்தியும் ஒரு சென்டிமென்ட் தான்.

நட்சத்திறத்திற்கு வாழ்த்துக்கள்.

நானும் ஒரு சொலவடை போடுகிறேன். 'ஆனவனுக்கு புத்தி சொன்னா அறிவுமுண்டு நெனவுமுண்டு....' மீதியை நிரப்பிக்கவும்.

பொன்ஸ்~~Poorna said...

//அம்மா சென்டிமென்ட் தங்கச்சி சென்டிமென்ட் மாதிரி தேசபக்தியும் ஒரு சென்டிமென்ட் தான்.//
:))) அப்படித்தான் ஆகிடிச்சு இப்போ

Vaa.Manikandan said...

வாழ்த்துக்கு நன்றி மகேந்திரன். சொதந்திரம் இப்படித்தான் இருக்கணும்ன்னு
சொல்ல வரலை அண்ணாத்தே!
அடிப்படையே ஆடிட்டு இருக்குதுன்னுதான் சொல்றேன். நீங்க என்ன சொல்றீங்க?

நன்றி பாலா,உதயகுமார்.

எண்ணார், பேசலாம்ன்னு பதிவு வெச்சுட்டு இவ்வளவு கூட பேசலைன்னா எப்படி? :)

பாருங்க ராவணன், நீங்க அடிங்கன்னு சொல்றீங்க. நம்ம குறும்பன் இனிப்பா
கேட்கிறாரு. என்ன பண்ண?

துளசி கோபால், முத்துவிற்கும் நன்றிகள்.

Unknown said...

அடிப்படையே ஆடிட்டு இருக்குதுன்னுதான் சொல்றேன். நீங்க என்ன சொல்றீங்க//

அதை சொல்ல உங்களுக்கு இருக்கும் உரிமைதான் சுதந்திரம்

Anonymous said...

அருமையாக இருக்கிறது.

புலவர்.கோ.முத்துசாமி,
தலைமை ஆசிறியர்,
திருப்பாலப்பந்தல் அரசினர் ஆரம்பபள்ளி
விழுப்புரம் மாவட்டம்.

மனதின் ஓசை said...

மணி.. நல்லா எழுதி இருக்கீங்க..(உங்களோட மத்த பதிவையும் படிக்கனும் :-))
பலரின் வேதனையை/எரிச்சலை அழகாக வெளிப்படுத்திய பதிவு..
நட்ச்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்..