Aug 21, 2006

***அறுக்கமாட்டாதவன் இடுப்பில் 58 அரிவாள்கள்

இந்தச் சொலவடை கொங்குப் பகுதியில் பிரபலம். அறுக்க முடியாதாவன் இடுப்பைச் சுற்றிலும் ஐம்பதெட்டு அரிவாள்களைச் சுற்றிவைத்திருப்பது போல ஆகிவிடுமோ என்ற தயக்கம் இருக்கிறது. இந்த நட்சத்திரம் என்னும் ஒரு வார காலம்.

***************************
அது குண்டக்க மண்டக்க காலம். சினிமாவில் பாட்டெழுதிவிடலாம் என்ற நம்பிக்கையில், சென்னையில் எட்டு மாத காலம் சுற்றினேன். வார இறுதிகளில் கவிதை ஏட்டினைச் சுமந்து கொண்டு சென்னை நகரத்தின் முக்கியமான தெருக்களில் அலைந்ததை இப்பொழுது நினைத்தால் வலியுணர்த்தும் சந்தோஷமாக இருக்கிறது. நிறைய திரைப் பிரபலங்களைச் சந்தித்தேன். முதலில் திரைப்பட கவிஞர்கள், பின்னர் இசையமைப்பாளர்கள், அதன் பிறகு புதிய இயக்குனர்கள்.

சினிமா திகிலூட்டக் கூடியது. எழுதும் போது அதன் பிரம்மாண்டத்தை எந்தச் சொற்களுக்குள் அடைக்க முடியும் என்று தெரியவில்லை.

பிரபல இயக்குனர்களைச் சந்திக்கும் தருணம் வந்த போது 'ப்ராஜக்ட்' கழுத்தைப் பிடித்தது. அந்தக் கல்வியாண்டை முடிக்கும் சமயம், வழி தவறிவிட்டேன். "விடுடா மணி! இன்னொரு கண்ணதாசனை சினிமா இழந்துவிட்டது" என ஆறுதல் வந்தது. கொஞ்சம் தேற்றிக் கொண்டேன். (நானே சொல்லிக் கொண்ட ஆறுதல் அது)

******************************

மனுஷ்ய புத்திரன் அவர்களை, தமிழச்சியின் "எஞ்சோட்டுப் பெண்" புத்தக மதிப்புரை விழாவில் சந்தித்தேன். அதன் பிறகு உயிர்மை அலுவலகத்தில் இலக்கிய உலகில் எனக்கு அறிமுகமாகாத புதிய பெயர்கள், படைப்புகளை அறிவதற்கும் நிறைய கற்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது.

ஒரு சந்தர்ப்பத்தில், மனுஷ்ய புத்திரன் அவர்களின் கூற்றில் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தது. தெரியப்படுத்தினேன். என் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, நான் பிரச்சினையின் தன்மையை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்று பதில் சொன்னார். ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் மகிழ்வாக இருந்தது.

**********************************

இதன் பின்னர் வந்த காலம், நவீன கவிதைகள், அதன் பன்முகம், புரிந்து கொள்ளும் யுக்திகள் போன்றவை எனக்குப் பிடிபட ஆரம்பித்த காலகட்டம். கவிதைகளின் திருகலான சொற்கள், மொழி நடை, படிமத்தைக் கொண்டு படிப்பவனின் மூளைக்குள் வினாக்களைச் சொருகும் வித்தை ஆகிய அம்சங்கள் என்னை ஈர்த்தன. அவற்றை முதன் முறை உள்வாங்குவது கடினம். பிடி கிடைத்துவிடும் போது உதறித் தள்ளுவதும் இயலாத காரியம்.

அதுவரையிலும் எழுதி வைத்திருந்த கவிதைகள் மெதுவாக மரணிக்க ஆரம்பிக்க, வேறு வடிவக் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். சிலர் புரியவில்லை என்று சொல்லும் போதெல்லாம், இன்னொரு நகுலன் உருவாகிறான். (இதுவும் என் கமெண்ட்)

***************************

எனக்குத் திமிர் வந்துவிட்டது. ஒரு பதிவில் இருந்த கவிதைகளைத் தெனாவெட்டாக விமர்சித்தேன். அடிப்பதற்கு ஆள் அனுப்பாமல், குழுவாகச் சேர்ந்து, என்னைப் பற்றி எழுதி எழுதியே அடித்துப் பிரித்தார்கள். 'அள்ளு விடுதல்' என்பதனை அப்பொழுதுதான் உணர்ந்தேன்.

தேசிகன், வலைப்பதிவு உலகத்தை அறிமுகப் படுத்தினார். அதன் பின்னர் நான் செய்த 'ரவுசுகள்' யாவும், இந்தப் வலைப்பூவில் சாட்சியாக இருக்கிறது.

**************************
முட்டையில் படைத்ததுதான் கட்டைக்கு போகும் வரைக்கும்:

"உட்டாலக்கடி கிரி கிரி. சைதாப்பேட்டை வடகறி" என்ற வாசகம் எனக்குத் தெரிந்த முதல் கவிதை. எங்கள் ஊரில் இருக்கும் கல்லூரி மாணவர்கள் தேர்தல் சமயத்தில் உபயோகித்தார்கள். பள்ளி நூலகத்தில் இருந்து கவிதை நூல்களை சுட்டுவிடுவேன். கவிதைப் புத்தகங்கள்தான் அளவில் சிறியவை. சட்டைக்குள் எளிதாக நுழைக்கலாம். அவைதான் கவிதையின் மீதான ஆர்வத்தைக் கூட்டியிருக்கும் எனத் தோன்றுகிறது.

இன்னமும் கூட நாவல் படிப்பதென்பது, பத்தாம் வகுப்பு கணக்குத் தேர்வு போல பயமுறுத்துகிறது.

********************************
முக்கியமான நவீன கவிஞர்களின் கவிதைகளை பதிவிலேற்றிய போது, நான் காமம் சார்ந்த கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக சிலர் வருத்தப் பட்டனர்.

"படைப்பாளி-அவன் எந்தத் துறையைச் சார்ந்தவன் என்றாலும் மித மிஞ்சிய பாலுணர்வு இருக்கும். பாலுணர்வு படைப்புசக்தியின் மறு வடிவம்" என்ற ஓஷோவின் கூற்று நினைவில் வருகிறது. பாலுணர்வினை மறைத்து வைப்பவர்கள் புனிதர்களாகிறார்கள். வெளிப்படையாக பேசுபவன் பண்பாடு, சமுதாயத்தின் எதிரி ஆகிறான். பேசுபவன் தனக்கு அக்கா,தங்கைகள் இருக்கிறார்களா என்னும் வினாவிற்கு கண்டிப்பாக பதில் தந்தாக வேண்டும். சமூகம், கட்டமைப்பு எனச் சொல்லி பாலுணர்வை மறைத்துக்கொள்ள தமிழன் கட்டும் வேஷம் திரைப் படத்தின் "சோக நகைச்சுவை"யை ஒத்திருக்கிறது.

************************************
எட்டாம் வகுப்பில் ஆரம்பித்தத பழக்கம் திராவிடக் கழகத்தின் கூட்டங்களுக்குச் செல்வது. "கடவுள் ஒழிக!" என்று சொல்லி 'செமத்தியாக' வாங்கிக் கட்டியிருக்கிறேன். வீட்டில் கண்காணிப்பு அதிகப் படுத்தப் பட்டது. அதையும் மீறி திராவிடம், ஈழம், இட ஒதுக்கீடு பற்றியெல்லாம் அறிமுகம் கிடைத்தது. சக்கிலி பையனுடன் விளையாடுவதாகவும், பறைப் பையனுடன் சேர்ந்து சைக்கிளில் போவதாகவும் ஊருக்குள் 'மானம் போவதாக' அம்மா புலம்புவதில் கூட புரட்சிக்காரன் என்ற சந்தோஷம் இருந்தது.

வெங்காயம்.

வாழ்க்கை குறித்தான பயம் புரட்சி குறித்தெல்லாம் யோசிக்க விடாமல் செய்து வென்று கொண்டிருக்கிறது. இது நாடகத்தனமாக இருப்பினும் அதுதான் உண்மை.
*****************************
திராவிடனாக இருப்பவன், இந்துவாக இருக்கக் கூடாது எனச் சொல்லி வைத்தது யார்? ஆரியன் மட்டுமே இந்து என்றால் திராவிடன் என்பவன் யார்? அவனுக்கென இருக்கும் மதமென்ன? திராவிட உணர்வாளன் என்பவனெல்லாம் நாத்திகன், இந்து மத எதிர்ப்பாளன் என்பதில் எனக்கு துளியும் சம்மதமில்லை.

பிராமணீய ஆதிக்கத்தை எதிர்க்க இந்து மதத்தை எதிர்க்க வேண்டுமென்பதுமில்லை. மற்ற மதங்களைத் தலையில் சுமந்து வருடிக்கொடுக்க வேண்டிய அவசியமுமில்லை. போலித் திராவிடம் பேசும் அரசியல்வாதிகள் கட்டமைத்த போராட்ட வழிமுறைகள் மாற்றப்படல் வேண்டும்.

இந்துத்துவத்திற்கு ஆதரவாகப் பேசும் பா.ஜ.கவை எதிர்க்கலாம், பஜ்ரங்-தளத்தை எதிர்க்கலாம், ஆர்.எஸ்.எஸ் ஐ எதிர்க்கலாம். அவர்களை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்துத்துவத்தை எதிர்ப்பது சரியான வழிமுறையில்லை என்பேன்.

*******************************
கம்யூனிஸம் குறித்து சற்று நம்பிக்கை இருந்தாலும், கம்யூனிஸ்ட்களின் பச்சோந்தித் தனத்தால் வெறுப்பே அதிகம். காரியம் ஆகும் வரை உடனிருப்பவர்கள், கொள்கையெல்லாம் முக்கியமற்ற காரியவாதிகள் என்ற பிம்பம் அவர்கள் மீது உண்டு.

சி.எஸ்.சுப்பிரமணியம் என்ற முதுபெரும் கம்யூனிஸ்ட் கோபிச் செட்டிபாளையத்தில் வாழ்கிறார். ரஜினி பாமிதத்தின் அறிமுகம் மூலம் கம்யூனிஸம் பயின்றவர். ஜீவா போன்றவர்களுடன் சேர்ந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் இங்கிலாந்து பத்திரிக்கை ஒன்றிற்காக குறிப்பெடுத்தவர். கம்யூனிஸ்ட்களின் அதிகாரப்பூர்வ நாளேட்டின் ஆசிரியர் என பல பொறுப்புகளில் இருந்தவர்.

தொண்ணூற்றாறு வயதில் உறவுகள் எதுவுமில்லாமல், தனிமையில் அல்லலுறும் அவரை "கொள்கைவாதிகள்" கண்டுகொள்ளும் "லட்சணம்" இந்த இயக்கத்தின் மீதான வெறுப்பை அதிகமாக்குகிறது. எல்லோரும் ஒரே குட்டையில் ஊறியவர்கள்தான்.

*********************************
ரஜினிகாந்த் அவர்களை தலைவன் எனக் கொண்டாடியிருக்கிறேன். ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது பள்ளிக்குச் செல்லும் முன் தினமும் ஒரு ரஜினி படம் (25 பைசா) வாங்கித் தர வேண்டும். படையப்பா படம் பார்க்க சேலம் திரையரங்கில், போலீஸ்காரரிடம் வாங்கிய அடிகள் மறக்க முடியாதவை. இரத்ததோடு 'தலைவர்' கலந்திருந்தார். அவரை உபயோகப்படுத்திக் கொண்டு கறிவேப்பிலை ஆக்கிவிட்டார்கள்.

ஆழ்மன பயமே அவரின் அனைத்து தோல்விகளுக்கும் காரணம்.

இப்பொழுது யாராவது என்னிடம், நான் வாழும் கட்டத்தில் வாழ்ந்த உலகின் தைரியமற்ற வி.ஐ.பி யார் எனக் கேட்டால் ரஜினிகாந்த் என்று சொல்வேன். மிக வருத்தமாக இருக்கிறது.

***************************
ஹைதராபாத்தில் இருந்த காலம் ஒரு வருடம் மட்டுமே. ஆனால் இது தனிமையின் வேதனையும், இனம்புரிந்து கொள்ள முடியாத துக்கத்தின் கசப்பும் நிறைந்த கசங்கலுக்கு என்னை உட்படுத்தி வருகின்றன. அந்தக் கணத்தை தாண்டிவந்து ரசிக்கும் போது "துன்பியல் தரும் இன்பமாக" இருக்கிறது. இந்த ஊரின், நேற்று என்பதனை நினைத்தால் மகிழ்ச்சியும், இன்று என்பது கடந்துவிட முடியாத துன்பமாகவும், நாளை புதிர்களைச் சுமந்து கொண்டு என்னை ஆக்கிரமிக்க வரும் பயம் என்பதும்- ஒட்டுமொத்த வாழ்வின் துளி அடையாளமாகத் தெரிகிது.

******************************
செய்த தவறுகள் யாவுமே அனுபவமாக மாறிவிடுவது பேரனுபவம். அரைவேக்காட்டுத் தனமாக ஏதாவது எழுதிவிட்டு திரும்பப் படிக்க நேரும் போது வெட்கம் தின்கிறது. அடுத்த முறை மாற்றிவிட முயல நினைத்துதான் எழுதுகிறேன். அடுத்த முறை அதுவும் அப்படியே தெரிகிறது. நான் வளர்கிறேனா அல்லது தேங்குகிறேனா என்பதை புரிந்து கொள்ள முடியாததே வாழ்வின் புதிர்களை அவிழ்க்கும் ஆதாரமாக இருக்கிறது.

மற்றவர்களின் இந்த மாதிரியான செயல்கள் பரிகாசத்திற்குரியனவாகவும், நான் செய்யும் போது வெட்கத்திற்குரியனவாகவும் அமைவது கூட நகைச்சுவையே.

*****************************
தயக்கம் இருந்தாலும், சிறு நம்பிக்கையும் இருக்கிறது. உங்களின் வாழ்த்துக்கள், ஆதரவுடன் நம்பிக்கை துளிர்க்கக் கூடும்.

நன்றி.

42 எதிர் சப்தங்கள்:

Muthu said...

கககபோ

Sivabalan said...

இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்..

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள் மணிகண்டன்.

பொன்ஸ்~~Poorna said...

மணி,
நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.. ஒரு வார மேட்டரை ஒரே பதிவில் போட்டுவிட்டது போல் இருக்கு.

திரும்பி வந்து பொறுமையா படிச்சு சொல்றேன்.. இப்போ எல்லாம் தலைக்கு மேல போகுது... :)

தருமி said...

a dateless diary?
சிதறல்கள் நல்லாத்தான் இருக்கு.

வாழ்த்துக்கள்

நாமக்கல் சிபி said...

நட்சத்திரம் பிரகாசமாக ஜொலிக்க என் வாழ்த்துக்கள்...

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//செய்த தவறுகள் யாவுமே அனுபவமாக மாறிவிடுவது பேரனுபவம். அரைவேக்காட்டுத் தனமாக ஏதாவது எழுதிவிட்டு திரும்பப் படிக்க நேரும் போது வெட்கம் தின்கிறது. அடுத்த முறை மாற்றிவிட முயல நினைத்துதான் எழுதுகிறேன். அடுத்த முறை அதுவும் அப்படியே தெரிகிறது. நான் வளர்கிறேனா அல்லது தேங்குகிறேனா என்பதை புரிந்து கொள்ள முடியாததே வாழ்வின் புதிர்களை அவிழ்க்கும் ஆதாரமாக இருக்கிறது//

Very true Manikandan.

கார்திக்வேலு said...

மணி ,
முதல் பதிவே ஒரு முழுநீளப்படம்
பார்த்த மாதிரி இருக்கு :-)
வாழ்த்துக்கள்

நன்மனம் said...

நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் வா.மணிகண்டன் அவர்களே!

அறிமுகப் பதிவு சூப்பர்.

பட்டணத்து ராசா said...

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்து(க்)கள் மணி.

துபாய் ராஜா said...

வா.(ங்க) மணிகண்டன்,இந்த வார நட்சத்திரமானதிற்கு வாழ்த்துக்கள்.

அனுபவங்களையே முன்னூட்டமாக கொடுத்துள்ளீர்கள்.வெளிப்படையான எழுத்து நன்றாக உள்ளது.இன்னும் ஒரு வாரம் அடி தூள் கிளப்புங்கள்.

பெத்தராயுடு said...

வாழ்த்துக்கள் மணிகண்டன்.

நட்சத்திர வாரத்தில் பல்சுவை விருந்து படைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

பெத்தராயுடு

G.Ragavan said...

இந்த வார நட்சத்திரத்திற்கு எனது வாழ்த்துகள். இந்த வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள்.

நெறைய சொல்லீருக்கீங்க. திரும்பப் படிக்கனும் போல.

Sud Gopal said...

நட்சத்திரம் பிரகாசமாக ஜொலிக்க என் வாழ்த்துக்கள்...

பெத்தராயுடு said...

மணி,

நாம இங்கு(http://pesalaam.blogspot.com/2006/06/blog-post_24.html) உரையாடிய அரிசிம்பருப்புச்சாதம் பற்றி சென்ற இதழ் அவள் விகடனில் குறிப்பிட்டு செய்முறை கொடுத்திருந்தார்கள்.

பெத்தராயுடு

சின்னக்குட்டி said...

நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்

முபாரக் said...

//"விடுடா மணி! இன்னொரு கண்ணதாசனை சினிமா இழந்துவிட்டது" என ஆறுதல் வந்தது.//

நல்லவேளை ஒரு நவீனகவிஞனை இலக்கிய உலகம் இழக்க இருந்தது

வாழ்த்துக்கள் மணி

மஞ்சூர் ராசா said...

இந்த வார நட்சத்திரம் மணிகண்டனுக்கு பாராட்டும், வெற்றிப்பெற வாழ்த்துக்களும்.

சிதறல்கள் சில சிந்தனையை தூண்டிவிட்டன.

ஏதோ ஒரு இயலாமையின் வெறுமையை உங்கள் சிதறல் தெரிவிக்கறது.

நம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நிச்சயம்.

வாழ்த்துக்கள்.

மஞ்சூர் ராசா
http://manjoorraja.blogspot.com/
http://muththamiz.blogspot.com/
குழுமம்:http://groups.google.com/group/muththamiz

மஞ்சூர் ராசா said...

இந்த வார நட்சத்திரம் மணிகண்டனுக்கு பாராட்டும், வெற்றிப்பெற வாழ்த்துக்களும்.

சிதறல்கள் சில சிந்தனையை தூண்டிவிட்டன.

ஏதோ ஒரு இயலாமையின் வெறுமையை உங்கள் சிதறல் தெரிவிக்கறது.

நம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நிச்சயம்.

வாழ்த்துக்கள்.

மஞ்சூர் ராசா
http://manjoorraja.blogspot.com/
http://muththamiz.blogspot.com/
குழுமம்:http://groups.google.com/group/muththamiz

Vaa.Manikandan said...

முத்து,
உங்க அளவுக்கு எனக்கு பதிவுகளின் அகராதி தெரியாது. ;) கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.

பொன்ஸ்,
கவுத்துடீங்களே...முழம் போகுதா?ஜாண் போகுதா?

நன்றி தருமி,கார்திக் வேலு மற்றும் நன்மனம்.

சிபி கலாய்க்காம பின்னூட்டம் போடூறீங்க? ;)

Vaa.Manikandan said...

நன்றிகள் (பட்டணம்&துபாய்)ராஜாக்களுக்கு. :)

சுதர்சனம் கோபால் தங்களின் வாழ்த்து நிறைவேறட்டும்.

சிவபாலன், இளா, வெட்டிபயல்(இப்படி சொல்ல கொஞ்சம் கஷ்டமா இருக்கு தலை ;) ),மதி கந்தசாமி ஆகிய அனைவருக்கும் நன்றிகள்.

எண்ணம் எனது, பெத்த ராயுடு,ஜி.ராகவன், சின்னக் குட்டி ஆகியோருக்கும் நன்றிகள் பல.

அன்புடனிலும் அறிவித்த முபாரக் அவர்களுக்கும் நன்றி. அலைபேசியில் கட்டுரை குறித்து பாராட்டிய குப்புசாமி அவர்களுக்கும் நன்றி.

மஞ்சூர் ராஜா அப்படி எல்லாம் நிறைய 'பீலிங்ஸு' எல்லாம் இல்லை. சென்னையில்
இருக்க முடியவில்லை என்னும் வருத்தம் தவிர வேறெதுவும் இல்லை.

ஏதோ அரசியல் கூட்டத்தில் நன்றியுரை வாசிப்பது போல இருக்கிறது.

இருந்தாலும் சந்தோஷமாக இருக்கிறது. :)

Amar said...

இந்த வார நட்சத்திரத்திற்கு எனது வாழ்த்துகள்.

கோபி கேள்ர்ஸை பற்றி ஒரு பதிவு இருக்கும் என்று மை போட்டு பார்த்ததில் தெரிகிறது. ;)

சிங். செயகுமார். said...

இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மணி கண்டா!
அப்பாடா! என வைத்துவிட்டீர்கள்.
"அனுபவம் நல்ல வாத்தியார்" -கண்ணதாசன் சொன்னது. நீங்க நல்லாப் பட்டிருக்கிறீர்கள். பிரகாசிப்பீர்கள்.
வாழ்த்துக்கள்
யோகன் பாரிஸ்

சுந்தரவடிவேல் said...

உங்கள் எழுத்தை முன்பு படித்ததாக நினைவில்லை. நல்ல நடை. இப்படித்தான் இதிலும் அதிலுமாகப் பட்டுப்பட்டுத் தெறித்துக்கொண்டேயிருக்கும் வாழ்வொளி. அந்தியின் ஒரு கீற்றில் கிறங்கடித்தது ஒரு இரவுறக்கத்தில் கலைந்துபோகும்; விடியலில் இன்னொன்று எழுந்து வரும். மீள மீள வினாக்களும் விடைகளும் ஊற்றெடுத்து வருகையில் வாழ்வு பயணிப்பதாக உணர்கிறேன். வினாக்களும் விடைகளுமற்றுப் போவதுதான் ஆரம்பமும் உச்சமும்!

குழலி / Kuzhali said...

யெய்யா மணி நீர் தான் நட்சத்திரமா வாழ்த்துகள், கலக்குங்க

கதிர் said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்!

ilavanji said...

மணி,

அமர்க்களமான ஆரம்பம்! அடுத்த திங்கள் வரைக்கும் அதகளம் தான் போல! :)

நட்சத்திர வாழ்த்துக்கள்...

Vaa.Manikandan said...

நன்றி சமுத்ரா...கோபிப் பெண்களா? முயல்கிறேன். ;)

நன்றி ஜெயா.

பாரிஸ்..உங்களுக்கு தெரிந்து விட்டதா? :) அதை ஏன் கேட்குறீங்க? ;)

நன்றி சுந்தரவடிவேல்.

யெய்யா குழலி நானேதான். :)

நன்றி தம்பி.

இளவஞ்சி வாரம் முழுவதும் தாங்க முடியுமான்னு தெரியலை? ;)

இராம்/Raam said...

மணி,


வாழ்த்துக்கள், நிறைய விஷயங்களை ஒரே பதிவில் இட்டு அசத்தியுள்ளீர்.

ஈழபாரதி said...

உங்கள் பதிவுகளை படித்த போது, விவரமானவர், வயதில் பெரியவர், அனுபவசாலி என நினைத்திருந்தேன், இப்போது இரண்டாவதாக நினைத்தது மட்டும்தான் மாறி இருக்கிறது, மாறியதால் இன்னமும் வியப்பு கூடுகிறது, நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள், ஈழம்பற்றி குறிப்பிட்டு இருக்கிறீர்கள், உங்கள் புரிதலை எம்முடன் பகர்ந்தால் மகிழ்வோம்.

Udhayakumar said...

எங்க பாட்டி இதையே ("அறுக்கமாட்டாதவன் இடுப்பில் 58 அரிவாள்கள்") இன்னும் வேற மாதிரி சொல்லுவாங்க :-)

வாங்க வாங்க, ஒரு வாரத்துக்கு ஜமாய்ங்க...

Vaa.Manikandan said...

உதயகுமார் எங்க அம்மாவே வேற மாதிரிதான் சொல்லுவாங்க ;) ஆனா முதல்
பதிவிலேயே அப்படி எழுதினா நல்லா இருக்காதுன்னு கொஞ்சம் மாற்றிவிட்டென்.
:)

நன்றி ராம்.

ஈழபாரதி, என்னைப் பற்றிய தங்களின் கருத்துக்கு நன்றி. ஈழம் குறித்து
எழுதாமல் இருப்பேனா? நாளை ஈழம் குறித்தான பதிவுதான். ஏற்கனவே ஒன்று
தயாராக இருக்கிறது. இன்னொன்று பற்றி எழுதலாம் என நேற்றிரவுதான்
யோசித்தேன். இயலுமா எனத் தெரியவில்லை. முயல்கிறேன்.

Ganesh Gopalasubramanian said...

மணி,.,... நான் கொஞ்சம் லேட்....

ஆனால் உண்மையில் இப்படி ஒரு நீளமான முகவுரையைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

உங்களுடன் பேசிக்கொண்டிருந்த விஷயங்களும் தங்களின் ஆள் மனது உண்மைகளும் எனக்கு வியப்பளிக்கின்றன. தனிப்பட்ட முறையில் எனக்கு உங்களைப் பற்றிய அறிமுகம் இன்னும் கிடைக்காதது போல தோன்றுகிறது. எனினும் வழக்கமான உங்களின் "விஷயம்" சார்ந்த பதிவுகளிலிருந்து இந்த "சுயம்" சார்ந்த பதிவு நெகிழ்வூட்டுகிறது. உங்களுடைய சிந்தனையின் தெளிவுகள் இங்கு அம்பலமாகியிருக்கின்றன.

//"முக்கியமான நவீன கவிஞர்களின் கவிதைகளை பதிவிலேற்றிய போது, நான் காமம் சார்ந்த கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக சிலர் வருத்தப் பட்டனர்."//
அந்த "சிலரி"ல் நானும் இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு நீங்கள் அப்பொழுதே பதிலளித்து விட்டதாக ஞாபகம்.

//சமூகம், கட்டமைப்பு எனச் சொல்லி பாலுணர்வை மறைத்துக்கொள்ள தமிழன் கட்டும் வேஷம் திரைப் படத்தின் "சோக நகைச்சுவை"யை ஒத்திருக்கிறது."//
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. ஆனால் அந்த உணர்ச்சி சிலருக்கு, பொதுவாக பெண்களுக்கு பிடிக்காததாக இருக்கையில் அதனை வெளிக்காட்டாமல் இருப்பது நல்லதென படுகிறது. கண்முன்னே தெரியும் போலிகளை அடையாளம் கண்டபின்னும் வணக்கம் சொல்வதைப் போன்றது தான் இதுவும். இதனால் இழப்பென்று எதுவும் இல்லை. ஆனால் நாமும் அந்த போலிகளின் வரிசைகளில் சேர்க்கப்படுகிறோம் என்பது உண்மை.

//மற்றவர்களின் இந்த மாதிரியான செயல்கள் பரிகாசத்திற்குரியனவாகவும், நான் செய்யும் போது வெட்கத்திற்குரியனவாகவும் அமைவது கூட நகைச்சுவையே.//
போகிற போக்கில் நகைச்சுவையென்று ஒரு பெரிய விஷய்த்தைச் சொல்லிவிட்டு போகிறீர்கள்.

சரி மணி. தாமதத்திற்கு வருந்துகிறேன். பதிவு அருமை. உங்கள் வழித்தடத்தில் கற்களும் கம்பீரமாக உலவலாம் போல. நேர் நோக்கும் உங்களது சிந்தனை என்றும் போற்றுதலுக்குறியது. என்றும் சிறந்து வளர "கடவுளை" வேண்டுகிறேன்.

வெற்றி said...

மணிகண்டன்,

இவ் வார நட்சத்திரமாக பிரகாசிக்க என் வாழ்த்துக்கள்.

Unknown said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்...

பழூர் கார்த்தி said...

நட்சத்திரமாய் கலக்கி எ/விடுங்க !

***

அப்ப, புதுக்கவித, மரபுக்கவித, சந்தக்கவித எல்லாம் தெரியும்னு நினைக்கறேன்.. நின்னு விளையாடுங்க, தமிழ்மணத்த சும்மா விடக்கூடாது :-)

theevu said...

வாழ்த்துக்கள்

Vaa.Manikandan said...

தீவு, அருட்பெருங்கொ தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.

சோம்பேறி பையன், உசுப்பேத்தியே உடம்பை ரணகளமாக்க திட்டம் போடுறீங்களா? ;)

கணேஷ்,
அப்படியெல்லாம் எதுவுமில்லை. உங்களிடம் எப்படிப் பேசுகிறேனோ அப்படியேதான். தொலைவில் இருப்பது காரணமாக இருக்கலாம். சென்னை வருவதற்கு தீவிரமாக முயலப் போகிறேன்.

தங்களின் பிரார்த்தனைக்கு நன்றி.

நன்றி வெற்றி.

Boston Bala said...

மனதில் தோன்றுவதை சிறிதே மினுக்கிட்டு சிதறலாய் தரும் இந்த ஃபார்மாட் மனம் கவர்கிறது

மனதின் ஓசை said...

நல்ல அனுபவச் சிதறல்.. ரசித்தேன்.. வாழ்த்துக்கள்.