Jun 12, 2006

வன்முறையின் அழகியல்!

வன்முறையின் அழகியலை வேறொரு பொருள் புதைத்து வெளிக் கொணரும் தமிழ்க் கவிதைகளில் மிக முக்கியமானவையாக மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் இருப்புப் பெறுகின்றன.

மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் பல தளங்களில் பயணிப்பவை. எனினும், வாழ்வின் அநீதிகளை அதன் முகத்திற்கு நேரெதிராகக் கேள்வி கேட்கும் கவிதைகள் வாசக மனதினுள் இனம்புரியாத அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியவை.

ஒரு கவிதையில் இவ்வாறு எழுதுகிறார்.

(1)
சிவப்புப் பாவாடை
வேண்டுமெனச் சொல்ல
அவசரத்திற்கு அடையாளமேதும் சிக்காமல்
விரலைக் கத்தியாக்கி
தன் தொடையறுத்து
பாவனை ரத்தம்
பெருக்குகிறாள் ஊமைச் சிறுமி.


இந்தக் கவிதையில் வன்முறையினையும் மீறிய கேவல் தெரிகிறது. இந்தக் கேவல் இரக்கம், பரிதாபம் என எதை எதையோ வேண்டி நிற்கிறது. சிவப்பு நிறத்தை சொல்ல முடியாத ஊமைச் சிறுமியை கவிதைக்குள் கொண்டு வரும் போது எழுந்து விடக்கூடிய சென்டிமெண்ட் கவிதைகள் என்னும் வட்டத்தை எளிதாக தகர்த்திருக்கிறார் கவிதை சொல்லி. வாழ்வின் குரூரங்களை அனுபவிப்பவனின் பார்வையில் இருந்து பார்க்கும் போது புலனாகும் செறிவு இந்தக் கவிதையின் பலம்.

(2)

இறந்தவனின் ஆடைகளை
எப்படிப் பராமரிப்பதென்றே
தெரியவில்லை.

இறந்தவனின் ஆடைகளை
அத்தனை சுலபமாய்
அணிந்து கொண்டுவிட முடியாது
அதற்காகவே
காத்திருந்தது போலாகிவிடும்.

அவை
இறந்தவனின் இடத்தில்
இருந்துவிட்டுப் போகட்டும்
என்றிருக்க இயலாது

இறந்தவர்களோடு
அவ்வளவு இயல்பாய்
உறவுகள் சாத்தியமல்ல

தானமெனக் கொடுக்கலாமெனில்
இறந்தவனின் சாயல்கள்
எதிர்பாரா இடங்களில்
எதிர்பாரா உடல்களிலிருந்து
நம்மை நோக்கி வரும்

இறந்தவனின் ஆடைகளை
அழித்துவிடலாம்தான்
இறந்தவனைத்
திரும்ப திரும்ப அழிக்க
கைகள் நடுங்குகின்றன

இறந்தவனின் ஆடைகள்
ஆடைகள் போலில்லை
இறந்தவனின் தோலாக இருக்கிறது
.
(அபு என்கிற பக்கீர் முகம்மதிற்கு)

இழப்பின் வலியினை நேரடியாகச் சொல்வதனைக் காட்டிலும், வேறொரு படிமத்தில் கொண்டுவருகிறது இந்தக் கவிதை. இறந்தவன் குறித்தான துக்கம் ஓயாமல் அவனின் ஆடைகளின் உருவில் துரத்துகிறது. இந்தக் கவிதையை எத்தனை முறை வாசித்தாலும்-ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு கசப்பின் பிசுபிசுப்பை உணர்கிறேன். கவிதையினை உள்வாங்கும் எவராலும் உணர முடியக் கூடிய பிசுபிசுப்புதான் அது.

(3)
மழை வரும்போது
வந்து சேரும் இந்தத் துக்கம்

ஒரு துக்கத்தைப் போலவே
இல்லை அது

துக்கத்தில் தழுவிக்
கிடக்கும் பெண்

ஒரு பெண் போலவே
இல்லை நீ


மிக நுட்பமான கவிதை. வேறு வேறு வடிவங்களை தன்னுள் புதைத்து மிக அமைதியாகக் கிடக்கிறது.

மழை சுகமானது. மழையின் கணத்தில் வந்து சேரும் துக்கத்தைக் கூட அது மழுங்கடித்து விடக் கூடும்.

ஒரு ஆழமான குழியினுள் விழுந்து கிடக்கும் அந்தத் துக்கம் ஒரு உறுத்தலாக இருப்பினும் அதனையும் மீறிய அடையாளமற்ற சந்தோஷம் தொற்றிக் கிடக்கும்.

அதே போல, தழுவிக் கிடக்கும் பெண் துக்கத்தோடு இருக்கும் போது சந்தோஷமற்ற கணமாகவே அது இருக்கும். உடலியல் சுகம் மீறிய துக்கத்தின் பிசுபிசுப்பு ஒட்டியிருக்கும்.அவள் பெண் போலவே இல்லை. அது பெண்ணின் சந்தோஷம் போலவே இல்லை.


(4)
நடக்கலாம்
கால் வலிக்கும்போது கொஞ்சம் உட்காரலாம்
பேசலாம்
வெறுமை சூழும்போது மெளனமாக இருக்கலாம்
கைகளை பற்றிக் கொள்ளலாம்
பயம்வரும்போது கைகளை விலக்கிக் கொள்ளலாம்
ஒரு ஒரு முறை முத்தமிடலாம்
முத்தத்தைப் பற்றி பேச்சு வந்துவிடாமல்
வேறு ஏதாவது பேசலாம்

அவரவர்
வீடு நோக்கிப் போகலாம்.


இயல்பான Romance கவிதை. சொற்களுக்கோ அல்லது பொருளுக்கோ எந்த விதமான வர்ணமும் அழகும் பூசாமல் கவிதை தருகிறார்.

இந்த அம்சத்தை கவிஞரின் பல கவிதைகளிலும் உணர்கிறேன்.

********************************
மனுஷ்ய புத்திரன் 'இந்தியா டுடே'யின் இலக்கிய மலரில் ஒரு கவிதை எழுதி இருந்தார். 'உன் சமாதியின் மீது சாம்பல் படிகிறது' என வரும். அந்தக் கவிதையும் அவரது 'கால்களின் ஆல்பமும்' என்னை உலுக்கியது என்று சொன்னால் மிகையில்லை. அந்தக் கவிதைகள் என்னிடம் இல்லாத காரணத்தினால் இங்கு பதிவிடவில்லை என்பது மிகுந்த வருத்தமாக இருக்கிறது.
**********************************************

மனுஷ்ய புத்திரன் (பிறப்பு - 1968) என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல் ஹமீது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கினார்.தற்போது சென்னையில் வசிக்கிறார். உயிர்மை பதிப்பகம், உயிர்மை இதழை நடத்தி வருகிறார்.

கவிதைத் தொகுப்புகள்
மனுஷ்ய புத்திரன் கவிதைகள் (1983)
என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் (1993)
இடமும் இருப்பும் (1998), நீராலானது (2001)
மணலின் கதை(2005)

கட்டுரைத் தொகுப்புகள்
காத்திருந்த வேளையில் (2003)
எப்போதும் வாழும் கோடை (2003).

விருதுகள்
தொடர்ந்து கவிதைகளும் இலக்கிய விமர்சனங்களும் எழுதிவரும் அவருக்கு 2002இல் இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான சன்ஸ்கிருதி சம்மான் வழங்கப்பட்டது. 2003இல் அமெரிக்க இலக்கிய நண்பர்கள் குழு வழங்கிய ‘இலக்கியச் சிற்பி’ விருதையும், 2004இல் இந்திய சமூக நீதி அமைச்சகத்தின் ‘தலைசிறந்த தனிநபர் படைப்பாற்றலுக்கான’ விருதையும் பெற்றிருக்கிறார்.
**********************************

8 எதிர் சப்தங்கள்:

முத்துகுமரன் said...

அறையில் மனுஷ்யபுத்திரனின் கவிதை நூல்கள் இருக்கிறது. கால்களின் ஆல்பம் எந்தத் தொகுப்பில் இடம் பெற்றது என்று சொன்னால் மெயிலில் அனுப்பி வைக்கிறேன். அனேகமாக என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறாகள் எனும் தொகுப்பென்றே நினைக்கிறேன்.

Vaa.Manikandan said...

நன்றி முத்துக் குமரன்.எனக்கும் அந்தத் தொகுப்பில் இருப்பதாகத்தான் ஞாபகம்.

கார்திக்வேலு said...

மனுஷ்யபுத்திரன் கவிதைகளில், நான் இது வரை படித்த கவிதைகளில் பெரும்பாலுமானவை எனக்குப் பிடித்திருக்கிறது.

அவர் கவிதைகளில் இழையும் நுண்ணுணர்வும் , மனித நேயம்
கலந்த அழகியலும் கவிதைக்கு உயிரூட்டுபவை

Vaa.Manikandan said...

//நுண்ணுணர்வும் , மனித நேயம்
கலந்த அழகியலும்//
ஆம் கார்திக்.

ஓரிரு மாதங்களுக்கு முன்பாக உயிர்மையில் கவிதைகள் வந்திருந்தன. தட்டச்சு செய்து விட்டு பதிவிலேற்றவில்லை. நிறைய கவிதைகள் ஆகிவிடும் என்னும் காரணத்தினால். தனது வலைப்பதிவில் கூட சில நல்ல கவிதைகளை வெளியிட்டார். இப்பொழுதெல்லாம் தென்படுவதில்லை.

Chellamuthu Kuppusamy said...

'இறந்தவனிம் ஆடை' கவிதையை முன்பொரு முறை வாசித்திருக்கிறேன்.

கவிதைகள் படிப்பவனுக்கு அவனது உலக உரசல்களின் சிராய்ப்புகட்கு ஏற்பத் தனித்தனிப் படிமத்தை ஏற்படுத்துமென்பதாய் புதுக்கவிதை புனையும் நண்பரொருவர் சொல்வார். இந்த/இங்கே மாதிரிப் படைப்புகள் படிக்கப்படும் போது புரிந்தும் புரியாமலும் இல்லாமல் தெளிவான உணர்தலை ஒவ்வொரு வாசகனுக்கும் ஏற்படுத்துவதாய்த் தெரிகிறது.

-குப்புசாமி செல்லமுத்து

Srikanth Meenakshi said...

[நன்றி: கில்லி]

சுமார் பத்து-பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் குமுதம் இதழில் (ஆசிரியர்: சுஜாதா?) வெளியான 'வதந்தி' குறித்த கவிதை என் போன்ற பலருக்கு மனுஷ்யபுத்திரனை அறிமுகம் செய்தது என்று நினைக்கிறேன். யதார்த்த வாழ்க்கையின் வெறுமையை நீங்கள் சொல்வது போல் 'வேறொரு படிமத்தின்' மூலம் வெளிக்கொணர்ந்த அக்கவிதைக்குப் பிறகு பல ம.பு கவிதைகள் படித்து ரசித்திருக்கிறேன்.

பதிவுக்கு நன்றி.

ஸ்ரீகாந்த்

Vaa.Manikandan said...

நன்றி குப்புசாமி.

ஸ்ரீகாந்த்,
எந்தக் கவிதையை சொல்கிறீர்கள் என்று உடனடியாக என்னால் அனுமானிக்க இயலவில்லை. மற்ற அம்சங்கள் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளில் இருப்பினும் நீங்கள் குறிப்பிட்டது, அவரின் கவிதைகளில் காணப்படும் மிக முக்கியமான அம்சம்.
நன்றி.

பொன்ஸ்~~Poorna said...

எல்லா கவிதையுமே நல்லா இருக்கு..

தனியா எதுவும் சொல்லத் தெரியவில்லை... இறந்தவனின் ஆடை எனக்கு மிகப் பிடித்திருந்தது