Jun 6, 2006

முற்றாகக் களைந்து அம்மணம் கொள்.

பசுவய்யா(சுந்தர ராமசாமி)

பசுவய்யாவின் கவிதைகளை படிக்கும் போது என்னால் மிகுந்த உற்சாகம் கொள்ள முடிகிறது. கவிதைகளை தொடர்ச்சியாக வாசிக்க முடிகிறது என்பதும், வாசித்த பின்னர் யோசிப்பதற்கான சாளரங்கள் திறப்பதும் படிப்பவனை தனது பிடிக்குள் வைத்திருக்கும் சூத்திரங்கள். என்னைப் பொறுத்த வரையிலும் சு.ரா விற்கு அந்த சூத்திரம் இயல்பாக இருக்கிறது. என்னால் உரக்கக் கத்த முடியும். இந்த நூற்றாண்டில் தமிழின் மிக முக்கிய நவீன படைப்பாளி சு.ரா என்று.

(1)

எனக்குத் தெரிந்த பூனை ஒன்று
நேற்று இறந்தது.
சவ அடக்கத்துக்கு
நாங்கள் போயிருந்தோம்
என் நண்பனின் மனைவி
அழத் தொடங்கிய போது
என் மனைவியும் அழுதாள்
குழந்தைகள் அழுதன.
சில வார்த்தைகள் பேசும்படி
என் நண்பன் என்னைக் கேட்டுக் கொண்டான்
நான் பேசத் தொடங்கினேன்.
'இந்தப் பூனையின் மியாவ் மியாவ்
வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து
வித்தியாசமானது
மேலும்.'


கவிதை ஒன்று கருப்பெறும் போது சூழல், படைப்பவனின் மனநிலை ஆகியவற்றைக் அறிந்து கொண்டு படித்தால், வேறு ஒரு காட்சி மனதில் தோன்றும். அது, இவற்றை அறியாத வாசகனின் மனநிலையில் படிக்கும் போது உள்ள புரிதலுக்கு முழுமையாக முரணாகக் கூட இருக்கும்.

இந்தக் கவிதை, நமது நாடகத்தனமான வாழ்க்கையையும், பிறர் முன் நாம் நடிக்க வேண்டிய சூழலில் எப்படி நடந்து கொள்ள வேண்டியக் கட்டாயத்திற்கு உள்ளாகிறோம் என்பதனை வடிவாக்குவதாக உணர்கிறேன். நடிப்பு, உலகியலில் முக்கியமான அங்கமாகிவிட்டது. அதற்கு ஆண்,பெண், குழந்தைகள் என்ற பேதமெல்லாம் இல்லை. மற்றவனை மகிழ்ச்சியாக்க, தப்பித்துக் கொள்ள என பல கணங்களிலும் நடிப்பு நம்மைத் துரத்துகிறது.

நமது அசட்டுத்தனங்களை மறைக்க, நம்மை நாமே தாழ்த்தி பிறருக்கு அந்த அசட்டுத்தனத்தினை உணர்த்துவது இயல்பானது. இது ஒரு தற்காப்பு கலை. அடுத்தவன் நம்மை இளக்காரமாக பார்ப்பதனை பெருமளவு தடுத்துவிடும். இந்த மனநிலையை, இக்கவிதையில் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மெல்லிய எள்ளலில் உணர்த்தப்படும் போலித்தனமான வாழ்க்கை முறை முகத்திலறைகிறது.

(2)
வயோதிகம் மறித்தது நடுவழியில்
நான் காதலைத் தேடிச் சென்று கொண்டிருந்த போது
'விடு என்னை
இப்போதுதான் உணர்ந்து கொண்டேன் காதலின் அருமையை'
என்று அதன் காலில் விழுந்து கெஞ்சினேன்.
'சற்று முன்தான் நான் வயோதிகம்
இப்போதோ மரணம்' என்று
என்னை இறுகத் தழுவிக் கொண்டது.


இந்தக் கவிதை இயல்பான ஒன்று. எளிதில் உள்வாங்க முடிகிறது. நினைப்பதனை அடைய முடியாத இயலாமை, இழப்புகள், தவிர்க்கவியலாத தோல்விகள் என பல கூறுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

(3)
பெண்ணே
உன் கடிதம்
எழுதுவது எப்படி என்று என்னைக் கேட்காதே
எழுது
அதுவே அதன் ரகசியம்

எழுது
எவர் முகமும் பாராமல்
உன் முகம் பார்த்து

உன் தாகம் தீர்க்க
நதியிலிருந்து நீரை
கைகளால் அள்ளுவது போல்
கண்டுபிடி உன் மன மொழியை.

மார்புக் கச்சையை முற்றாக விலக்கி
காலக் குழந்தைகளுக்கு பாலூட்டு

உனக்கும் உன் அனுபவங்களுக்கிடையே
ஆடைகளை முற்றாகக் களைந்து
அம்மணம் கொள்.

புகை மூட்டத்தைப் புணர்ந்து
மெய்மையைப் பேரானந்ததுடன் கருத்தரி.

எழுதுவது எப்படி என்று என்னைக் கேட்காதே
எழுது
அதுவே அதன் ரகசியம்


கவிதை குறித்தான புரிதல் சரியாக அமைந்திராத போது, நண்பரொருவர் இந்தக் கவிதையைப் படிக்கக் கொடுத்தார். மார்பு,அம்மணம்,புணர்ச்சி ஆகிய சொற்களில் நான் தேங்கி நின்றேன். க்விதை விளங்கும் போது எழுத்து அமைய வேண்டிய முறையை அற்புதமாக கொணர்ந்துவிடுகிறார் கவிதை சொல்லி.

தொடங்கி விட வேண்டும். அதுதான் எழுத்தின் ரகசியம். மற்றவனின் விமர்சனத்திற்காக முகம் பார்ப்பது போல மோசமான நிலை, படைப்பாளிக்கு வேறெதுவுமில்லை.

உனக்கென உள்ள மன மொழியில் எழுது. மறைந்து கிடக்கும் அனுபவத்தினை உன்னுள் ஏற்றி எழுது. எழுத்தில் உண்மை வேண்டும்.

மறுமுறை வாசிக்கும் போது அந்த மூன்று சொற்களும் தட்டுப்படுவதில்லை. அதனை மீறிய படிமம், பொருள் தெரிகிறது. கவிதை வென்று விடுகிறது.

****************************************************

இந்தக் கட்டுரைகளுக்கு தலைப்பிடும் போது சிறிது மனச்சஞ்சலத்திற்குள்ளாக வேண்டியிருக்கிறது. முழுமையாக, பிறரைக் கவர்வதற்கில்லை என்னால் சொல்லிவிட முடியாது. அதுவும் ஒரு காரணம்தான். ஆனால் அது மட்டுமே காரணமில்லை என்பதனையும் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

கல்யாண்ஜியின் கவிதைகள் குறித்தான கட்டுரையின் தலைப்புக்கு காட்டமான விமர்சனங்கள் வந்தன. ஒரு நண்பர் கட்டுரையை ஏற்றுக் கொள்ள முடியும் ஆனால் தலைப்பினை அல்ல என்றார். நான் சிறிது விளக்கிய பின்னரும், அவர் 'உங்களின் சமாதானத்தில் மகிழ்ச்சி அடைய மாட்டேன்' என்றார். சற்று வருத்தம்தான்.

சில சொற்கள், இந்திய மனநிலைக்கு பேரதிர்ச்சியினை உண்டாக்கி விடுகின்றன. அந்த வரி, காமத்தில் தியானத்தை உணரும் கவிஞரின் மனநிலையை சொல்கிறது என்பதனால் தேர்ந்தெடுத்தேன். இந்த விளக்கம் இவ்வளவு நாள் கழித்துத் தேவையில்லை என்ற போதும் சொல்லத் தோன்றியது.

இந்தக் கட்டுரைக்கான தலைப்பிலும் முரண்கள் வரலாம்.ஆனால் சரி என்பதாக எனக்குப் படுகிறது.

15 எதிர் சப்தங்கள்:

Muthu said...

கவிஞரே (உங்களை இப்படி கூப்பிடலாமா.இல்லை.இதுவும் முதுகு சொரிந்தலாகுமா),

முதல் கவிதையும் அதன் மீதான உங்களின் எண்ணங்களும் விளக்கங்களும் நன்றாக இருந்தது.

இரண்டாவது கவிதை என்னை கவரவில்லை.

மூன்றாவது கவிதை புரியவில்லை.இன்னொரு முறை பொறுமையாக படித்துவிட்டு சொல்கிறென்.

Vaa.Manikandan said...

முத்து,
நான் எப்பொழுதுமே மணிகண்டன் தான். உங்களுக்கு இல்லாத உரிமையா? எப்படி வேண்டுமானலும் கூப்பிடலாம்.

மூன்றாவது கவிதை எனக்கும் முதலில் புரியவில்லை. படித்துப் பாருங்கள் புரியும். மீண்டும் புரியவில்லை என்றால் சொல்லுங்கள். என் புரிதலை சொல்கிறேன்.

நன்மனம் said...

மணிகண்டன்,

இந்த தலைப்பினால் உள்ளே வர தயங்கினேன் என்பது உண்மை. வந்த பின், தலைப்பினால் ஒரு நல்ல பதிவை இழக்க இருந்தோமே!!! நல்ல வேளை இழக்கவில்லை என்று தோன்றியது.

கவிதையை தவிர ரசித்தவை.

1. //நடிப்பு, உலகியலில் முக்கியமான அங்கமாகிவிட்டது. அதற்கு ஆண்,பெண், குழந்தைகள் என்ற பேதமெல்லாம் இல்லை. மற்றவனை மகிழ்ச்சியாக்க, தப்பித்துக் கொள்ள என பல கணங்களிலும் நடிப்பு நம்மைத் துரத்துகிறது.//

2. //தொடங்கி விட வேண்டும். அதுதான் எழுத்தின் ரகசியம். மற்றவனின் விமர்சனத்திற்காக முகம் பார்ப்பது போல மோசமான நிலை, படைப்பாளிக்கு வேறெதுவுமில்லை.//

:-)

Chellamuthu Kuppusamy said...

பூனைக் கவிதை வெகு இயல்பானது.

“.. has been a sincere dedicated team member. I am sure it is going to be a big loss to this organization. Nevertheless, we have to respect his personal aspirations and take the pain of missing him. ஸ wish you all the very best. You will be remembered”
எனப் பிரிவு உபசார உரைகளில் அனைவரும் புளுகுவது இயல்பே.

-குப்புசாமி செல்லமுத்து

பொன்ஸ்~~Poorna said...

மணி,
இந்தத் தலைப்பு அத்தனை odd-ஆகத் தெரியலை.. ஆனா இன்னமும் என் வாதத்தில் உறுதியாக நிற்கிறேன்.. கல்யாண்ஜி தலைப்புக்கு நீங்க சொல்லும் காரணங்கள் ஒப்புக் கொள்ள முடியவில்லை.
இந்த மூன்று கவிதைகளுமே ரொம்ப இயல்பா இருக்கு.. உங்க விளக்கங்களை படிக்காமலேயே தெளிவாப் புரியுது. யதார்த்தம் நிரம்பிய கவிதைகள். வழக்கம் போல பூனை கவிதை பூனையைப் பற்றியது இல்லை. இந்த மாதிரி சூழ்நிலைகளை மனிதர்கள் இறப்பிலும் பார்க்க முடியுது. மனிதர்கள்னு சொல்லி இருந்தா இத்தனை யதார்த்தத்திற்குப் பதில் அது எப்படிச் சொல்லப் போச்சுன்னு எதிர்ப்புதான் வரும்.

இரண்டாவது மனிதனோட பேராசைகளைக் காட்டுது. வயோதிகம் வந்த பின்னும், மரணத்துக்கு சற்று முன்னும் கூட காதலையும் பாசத்தையும் விட முடியாத மனிதன். இந்த மாதிரி ஒரு திடீர் full stop வச்சி தான் மனிதனோட பேராசைகளை அடக்க முடியும்...

மூன்றாவது, கவிதையைப் பத்தின்னு நீங்க சொல்றீங்க. வாழ்க்கையைப் பத்தி, உழைப்பைப் பத்தி, காதலைப் பத்தி, எதைப் பத்தி வேணாலும் சொல்லலாம். உனக்கான வாழ்க்கையை, உனக்கான பாதையை நீ தான் தேடிக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் வழிகாட்டலையோ, spoon feeding-ஐயோ எதிர் பார்க்காதே.. "உங்கள் கருத்துக்களை மற்றவர் கட்டமைத்தால் ..."

கவிதைகளுக்கு அப்புறம் நான் ரசிச்ச வரி இது:
// தொடங்கி விட வேண்டும். அதுதான் எழுத்தின் ரகசியம். மற்றவனின் விமர்சனத்திற்காக முகம் பார்ப்பது போல மோசமான நிலை, படைப்பாளிக்கு வேறெதுவுமில்லை. //

சுராவின் மற்ற கவிதைகளுக்கான லிங்க் ஏதாவது கிடைக்குமா?

(பதிவை விட பின்னூட்டம் நீளமா இருக்குன்னு திட்டாதீங்க!!! :))

Anonymous said...

//சில சொற்கள், இந்திய மனநிலைக்கு பேரதிர்ச்சியினை உண்டாக்கி விடுகின்றன. அந்த வரி, காமத்தில் தியானத்தை உணரும் கவிஞரின் மனநிலையை சொல்கிறது என்பதனால் தேர்ந்தெடுத்தேன். இந்த விளக்கம் இவ்வளவு நாள் கழித்துத் தேவையில்லை என்ற போதும் சொல்லத் தோன்றியது.

இந்தக் கட்டுரைக்கான தலைப்பிலும் முரண்கள் வரலாம்.ஆனால் சரி என்பதாக எனக்குப் படுகிறது. //

தலைப்புக்கும், உள்ளடக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் பதிவுகளைத்தான் இட்டிருக்கிறீர்கள். அவனவன் கொட்டைய அறுவைசிகிச்சை பண்ணதப் பத்தியெல்லாம் பதிவு போடுறான். நீங்கள் இலக்கியம் பத்திதானே எழுதறீங்க. நீங்க தயங்காம எழுதுங்க ராசா. நம்மாளுகளுக்கு பாலியல் சார்ந்த பாசாங்கு சாமானியமானதல்ல, நூற்றாண்டுகளாக சுமந்து வந்த கசடு. இப்படி ஒழுக்கப்போர்வை போத்தித்தானே காலம் காலமா பெண்களை அடிமைப்படுத்தி ஆண்டார்கள், வாய்ச்சொல்லில் வீரர்கள்.

எந்த ஒன்றும் பண்பாட்டிற்கு அதிர்ச்சியல்ல, பழகியவர்களுக்குத்தான் அதிர்ச்சி என்று வைரமுத்து எப்பொதோ கூறியிருந்தார்.

அன்புடன் அய்யாக்கண்ணு

பொன்ஸ்~~Poorna said...

சாரி மணி,
பெண்களை மட்டுமில்லை.. எல்லாரையும் தான் ஒழுக்கம் கொள்ளச் சொல்லுது நம்ம பண்பாடு..!! எத்தனை அய்யாக்கண்ணு வந்து சொன்னாலும் அது இன்றைய சூழ்நிலைக்கு/இந்திய மனநிலைக்கு ஒரு தப்பான தலைப்பு தான்.. தேவை இல்லாததும் கூட..

Vaa.Manikandan said...

ponS,
உங்களின் கருத்துக்களுக்கு மிகுந்த மதிப்பளிக்கிறேன். தலைப்புகள் குறித்து பின்வரும் கட்டுரைகளில் நிச்சயம் கவனம் செலுத்துகிறேன்.

தங்களின் கவிதைகளைப் புரிந்து கொள்ளும் தன்மை பாராட்டத்தக்கது. நல்ல புரிதலுக்கும், வேறு பார்வைக்கும் படிப்பவரை இழுத்துச் செல்லும் விதங்களில் கருத்துகளை முன் வைக்கிறீர்கள். நன்றி.

சு.ரா கவிதைகளை எங்கோ இணையத்தில் பார்த்த நினைவு. தேடிப் பார்க்கிறேன்.

அய்யாக்கண்ணு,

ஆதரவிற்கு நன்றி. ஆனால் நாம் இன்னும் சிறிது காலம் பொறுத்துக்கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது. இந்தத் தளைகளை அவ்வளவு எளிதில் உடைத்து விட முடியாது.

குப்புசாமி,
உங்களின் அலுவலகத்தில் இருந்து பார்கிறீர். நன்றி.

நன்மனம்,
//இந்த தலைப்பினால் உள்ளே வர தயங்கினேன் என்பது உண்மை//

பொன்ஸ்க்கு சொன்ன அதே பதில்தான். இனிவரும் தலைப்புகளை பரிசீலிக்கிறேன்.

ரவி said...

இந்தமாதிரி தலைப்பு வைத்தால்தான் மற்றவர் படிப்பார்கள் என்று எந்த மாங்கா மடையன் சொன்னது உங்களிடம் நன்பரே...

ரொம்ப அழகுதான் போங்கள்....

அடுத்த கண்றாவி தலைப்பை அன்புடன் எதிர்பார்க்கிறேன்...

பெத்தராயுடு said...

மணிகண்டன்,

அருமையான கவிதைகள்.
சிறப்பான விளக்கம்.

குப்புசாமி...,

Well said.

Vaa.Manikandan said...

நன்றி பெத்தராயுடு.

என்னங்க செந்தழல் ரவி பண்ணுவது? வேற தலைப்பு எல்லாம் வைத்தால் உங்க பேரையே பார்க்க முடிவதில்லை. ;)

கார்திக்வேலு said...

எனது வேலை சுலபமாகிவிட்டது :-)
கீழ் உள்ள சுட்டிகளில் சுராவின் இரண்டு கவிதைகளை பதிந்துள்ளேன்.
ஒன்று அவர் மறைந்த நினைவாய் பதிந்தது.

http://blog.360.yahoo.com/blog/post.html?p=135
http://blog.360.yahoo.com/blog-LrKemvg6erTXy65kEwi89Z6r36CuCw--?cq=1&p=24

["108 கவிதைகள் " என்று சுராவின் கவிதைகள் தொகுப்பாக வந்துள்ளது]

Vaa.Manikandan said...

கார்திக்வேலு,
ஒரு சிறு திருத்தம். அது 107 கவிதைகள். காலச்சுவடு வெளியீடு.

கார்திக்வேலு said...

மணி ,
நீங்க சொன்னது சரிதான் - 107.
வீட்டில் வந்து புத்தகத்தைப் பார்க்கையில் உணர்ந்து கொண்டேன்.

[Why 107 , and not 108 I'm not sure :-) ,but interesting how the brain forgets and misrepresent something almost like the actual fact]

சுராவின் எழுத்தில் என்னைக் கவர்ந்தது சிந்தனையும்,தருக்கமும் கூடிய
"Philosophical Musings" தான்.
இவருடைய் கவிதை "மந்த்ரம்" ,"பந்தின் கதை" ,"என் மலரைத் தேடி","நீ யார்" போன்றவை இந்தக் காரணத்தினாலேயே எனக்கு முதலில்
படிக்கையில் இணைவாக இருந்தது.

Anonymous said...

டேய், அடங்க மாட்டியா? நல்ல தலைப்பை வெச்சி தொலைடா நாதாரிப் பயலே!!