May 8, 2006

அறிவுஜீவித் தனத்தை காட்டுறாம் பாரு-I

கவிதை பற்றி எழுதிய பதிவிற்கு பின்னூட்டமிட்ட திரு.முத்து(தமிழினி) கவிதைகள் குறித்தான தொடர் எழுதச்சொல்லி கருத்து தெரிவித்திருந்தார். அந்தக் கட்டுரையே அதிகப் பிரசங்கித்தனமானதோ என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

என்னால் கவிதை குறித்து எல்லாம் எழுத முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் பிடித்த கவிதைகளையும் அவற்றில் என் புரிதல்களையும் எழுதலாம் எனத் தோன்றுகிறது. இது நவீனத்தில் என் பார்வையை இன்னும் வேறு தளத்திற்கு நகர்த்த உதவும் என்றும் நம்புகிறேன்.

வலைப்பதிவு உலகத்தில் கவிதைகளுக்கு இருக்கு 'வரவேற்பு' மிக பயமுறுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.

என்.டி.ராஜ்குமாரின் கவிதைகளில் ஆரம்பிக்கிறேன்.

(1)

சிரசில் எதையோ சிலாகித்துக்கொண்டே

குறிபார்த்தடிக்குமென் மாந்ரீகக் கிழவியைப்போல்
பளிச்செனச் சொல்லிவிடுகிறேன் கண்ணில்பட்டதை

சொல்லித்தெரிவதா சொல்லில் உதிக்கும் சூட்சுமம்

கொழுந்து விட்டெரியும் தீயினுள்ளே
நீலப்புடவை கட்டி புணர்ந்தாடுகிறாள்

நெருப்பு மங்கை

***********************************************************
இந்தக் கவிதை எனக்கான கவிதையாகப் படுகிறது.

//சொல்லித்தெரிவதா சொல்லில் உதிக்கும் சூட்சுமம்//

கவிதை புரிதலில் இருக்கிறது. சொல்லில் இருக்கும் சூட்சமத்தை ஏன் விளக்க வேண்டும்?

ஒரு மெழுகுவர்த்தி அல்லது "சிம்னி" விளக்கு எரியும் போது சுடரினுள் தெரியும் நீல நிறம், கவிதை சொல்லியின் கண்களுக்கு நீலப் புடவை கட்டி ஆடும் மங்கையாக தெரிகிறது.

ஒரு காட்சியினை, கவிதையாக்க- அக்காட்சியினுள், நீலப் புடவை கட்டியிருக்கும் பெண்ணின் படிமம் நுழைக்கப்படும் முறை ரசிக்கத் தக்கது.

அவரே சொல்லியும் விடுகிறார். மாந்திரீகக் கிழவி போல 'பட்ட்'(பளிச்)என சொல்லி இருப்பதாக.

இன்னும் கோடிக்கணக்கான காட்சிகள் கவிதைக்குள் நுழையாமலே இருக்கின்றன. இயலபான காட்சிகள் யாவும் கவிதையில் ஏற்றப் பட்ட பின்னரும், அந்ததந்தக் கால கட்டத்தின் காட்சிகள் கவிதையில் பயணிப்பதற்காக காத்திருக்கத் துவங்கி விடும்.

இதே காட்சி வேறொரு கவிதை சொல்லிக்கு படும் கோணம் வேறு மாதிரியாக இருக்கக் கூடும். அல்லது புரிந்து கொள்பவருக்கு வேறு மாதிரியாக இருக்கலாம்.



(2)
ஒரு முத்தம் கேட்டு கெஞ்சுகிறேன் நான்
குழந்தையின் மலம் துடைத்தெறிகிறாள் மனைவி

ஒரு முத்தம்கேட்டு அலைகிறேன் நான்
குழந்தையின் மூத்திரத்துணியை கழுவிப்போடத் தருகிறாள்
முனைவி

ஒரு முத்தம் கேட்டு புலம்புகிறேன் நான்
குழந்தையை உறங்கவிடாத நாயின் வள்வள்ளை
திட்டித்தீர்க்கிறாள் மனைவி
ஒரு முத்தம் கேட்டு சண்டையிடுகிறேன் நான்
பால்குடிக்கும் குழந்தையின் மார்பை மறைக்கிறாள் மனைவி

ஒரு முத்தம் கேட்டு கறங்குகிறேன் நான்
கொசுக்கள் அண்டாமலிருக்க வலைபோட்டு மூடுகிறாள் மனைவி

அடிவயிர் கிழிசல் காய்ந்தபின்னும்
பச்சை உடம்புக்காரி பதறுகிறாள் என்னைப் பார்த்து

எரிகிற உடலின் மனவிளி நிராகரிக்கப்படுகையில்
புணர்ச்சி பழகிய பேருடலில் விந்து முட்டி நிற்கிறது

எனது மிருகங்களின் கூரேறிய குறிகளை
மிகப்பக்குவமாய் வெட்டிச்சாய்த்தும்

மூளையின் பின்னால் பதுங்கியிருக்கிறதொரு
கலவரமனம்.

************************

எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய அற்புதமான கவிதை.

இது சாதரணமாக ஆணின் மனநிலையை விவரிப்பது போல இருப்பினும், நடுத்தரக் குடும்பத்தின் காட்சியினையும், காமத்தினை அடக்க வேண்டிய கட்டாயம்(பொறுப்பு என்னும் சொல்லும் பொருந்தக் கூடும்), புணர்ச்சி என்னும் போதை பழகிவிட்ட மனம் மற்றும் உடலின் இயலாமை அனைத்தும் இந்தக் கவிதையில் வந்து விடுகிறது.எந்தவொரு வலிந்த திணித்தலும் இன்றி.

ஆணின் மனம் அலைந்து திரிகையில், எதனைக் குறித்தும் பிரக்ஞயற்று குழந்தையின் மீது மட்டும் கவனத்தைச் செலுத்தும் தாய்மையைப் பார்கலாம்.

இதுதான் நவீன கவிதை வேண்டுவது. ஒரு பொருளை கொண்டாடும் போது பிறவற்றினை இயல்பாக கவிதைக்குள் கொணர்ந்துவிடல். வர்ணனை அல்லது முலாம் எதுவும் தேவை இல்லை. வர்ணனை நுழைக்கப்படும் போது அல்லது தேவயற்று சொற்களுக்கு வெளிசமிடும் போது கவிதையின் ஆழம் தவிர்க்கப்பட்டு, வாசகனின் கவனம் சொற்களினூடாக நின்றுவிடுகிறது.

இயல்புத் தன்மை நவீனத்தின் முக்கியமான அம்சம்.

வேறு கவிதைகளை தொடர்ந்து ரசிக்கலாம்.

(அய்யா பெரிய மனுஷங்க்ளா...'அறிவுஜீவித் தனத்தை காட்டுறாம் பாரு'னு வரிந்து கட்டாதீங்க. ஏதோ என்னால முடிஞ்சது. தப்புனா சொல்லுங்க. திருத்திக்கலாம். தப்பே இல்லை)

11 எதிர் சப்தங்கள்:

Muthu said...

பொறுமையாக படிக்கவேண்டும்..இப்போதைக்கு ஒரு (+) குத்து மட்டும்..

மீண்டு(ம்) வருவேன்..

Anonymous said...

Dear Mr.Mani,
Your Kavithai's are good. C U have taken so much pain for writing and posting it ,but there is only one comment for the same.This indicates that, people in general don't like Peom or Kavithai's or Any thathuvam's in regular manner. So If u can write regarding any actress kissussu or any actor's kissussu. They will be more interested and will post comments in your blog. I would like to ask you one thing, r u writing in blog for getting proficient in tamil or to get popularity? If you like to acheive both, please include lot's of commercial stuff to your writing. This is just an advice from my side. Its upto you consider my advice or not.

With regards
Jaiganesh.B

Muthu said...

Dear mani,

Mr.jaiganesh's thinking is negative..

key is posting consistently and continuously...

you post it continuously and finally we will publish this as a book ( no joke..iam 100 percent serious, badri is always there)

this article has come excellently well..with my limited knowledge in poems iam telling this...

பட்டணத்து ராசா said...

நவினத்தின் முக்கியமோ அது பற்றியான அறிவோ சிறிதும் என்னிடம் இல்லை, ஆனால் மனமும் மூலையும் ஒன்றான என்னுக்கு இது மாதிரியான அலங்காரமற்ற இயலபான கவிதைகளே விருப்பம். தொடர்ந்து இது மாதிரியான கவிதைகளை அறிமுகப்படுத்துங்கள். நன்றி.

Vaa.Manikandan said...

கருத்து தெரிவித்த ஜெய்கணேஷ் அவர்களுக்கு நன்றி. தங்களின் அக்கறை எனக்கு புரிகிறது.

சில விசயங்களை பலருக்கும் எழுத/சொல்ல முடியாது. அவை சிலருக்கென்றே ஒதுக்கப் பட்டிருக்கும் பகுதிகள். அவர்கள் அங்கே அதனை விவாதித்தும் பங்கெடுத்துக் கொண்டாடிக் கொண்டும் இருப்பர்கள். விருப்பம் உள்ள எவரும் அதில் பங்கு பெறலாம். அவ்வளவே.

துவக்கத்தில் நம் எழுத்துக்களையும், பெயரையும் வேறொரு ஊடகத்தில் பார்க்கும் போது மகிழ்வாகத் தான் இருக்கும். ஆனால் அது மட்டும் ஜென்ம சாபல்யம் இல்லை. நடிகை பற்றியும், அவர்களின் அந்தரங்கம் பற்றியும் கூட எழுதலாம். கவிதை போன்ற விசயங்களின் ஆழத்தை அனைவராலும் தொட முடியாது. அதற்கான முயற்சியை தொடங்கினாலே ஒரு திருப்திதான். எனக்கு அந்த நிறைவு கிடைத்திருக்கிறது. பார்க்கலாம் தொடர்ந்து.

பட்டணத்து ராசாவுக்கும், முத்துவிற்கும் நன்றிகள் பல.

Muthu said...

இரண்டாவது கவிதையை விடுங்கள்.
முதல் கவிதையில் சில சந்தேகங்கள்.


//இன்னும் கோடிக்கணக்கான காட்சிகள் கவிதைக்குள் நுழையாமலே இருக்கின்றன. இயலபான காட்சிகள் யாவும் கவிதையில் ஏற்றப் பட்ட பின்னரும், அந்ததந்தக் கால கட்டத்தின் காட்சிகள் கவிதையில் பயணிப்பதற்காக காத்திருக்கத் துவங்கி விடும்.//

இந்த பத்தியே ஒரு கவிதையாகக்கூடிய தகுதி உடையதுதான். சரியா....

//இதே காட்சி வேறொரு கவிதை சொல்லிக்கு படும் கோணம் வேறு மாதிரியாக இருக்கக் கூடும். அல்லது புரிந்து கொள்பவருக்கு வேறு மாதிரியாக இருக்கலாம்.//

மணி, மிக முக்கியமான கேள்வி..என் அறியாமையை வெளிக்காட்டினால் பரவாயில்லை. இந்த காட்சி வேறொரு கவிதை சொல்லிக்கோ அல்லது புரிந்துகொள்பவருக்கோ வேறு மாதிரி என்றால் எப்படி?

மேற்கண்ட இந்த கவிதைக்கு இன்னொரு விளக்கம் யாராவது தரமுடியுமா?

Vaa.Manikandan said...

இந்தப் பத்தி உரைநடையில் தான் வரும். கவிதையில் வருவதற்கான தகுதிகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஏதேனும் மாற்றி முயலாம்.ஆனாலும் இயலுமா என்று தெரியவில்லை.

இந்தக் காட்சி, வேறொரு கவிஞருக்கு நீலப் புடவை கட்டியிருக்கும் பெண்ணாக தென்பட வேண்டிய அவசியம் இல்லையே. அவனுக்கு அது நடனமாகக் கூட இருக்க வேண்டியதுமில்லை. அவன் பார்த்த அல்லது யோசித்து வைத்திருந்த வேறு ஏதெனும் ஒரு நிகழ்வினை நெருப்பின் இயல்பில் படிமமாக ஏற்றக் கூடும்.

அவன் பார்த்த நிகழ்வும், படிமமக்கிய காட்சியும் படிப்பவனுக்கு வேறொரு அநுபவத்தினை தரலாம். என்ன நினைக்கிறீர்?

Chellamuthu Kuppusamy said...

தண்ணியடிக்காத ஒருவன் தண்ணியடிக்கும் நண்பர் கூட்டத்தில் ஓரமாக உட்கார்ந்து நொறுக்குத் தீனியும், குளிர்பானமும் உண்பது போல, இந்த விவாதத்தை/விமர்சனத்தை ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பதே ஒரு சுகம் தான். அருமையான செயல்; தொடருங்கள் மணிகண்டன்!!

-குப்புசாமி செல்லமுத்து

முத்துகுமரன் said...

மணி, நல்ல செயலைத் தொடங்கியுள்ளீர்கள். ஒரு கவிஞனாக மகிழ்ச்சி அடைவதுடன் நானும் ஜோதியில் கலந்து கொள்கிறேன். முன்பு எனக்கொரு யோசனை இருந்தது. கவிதைகளுக்காக ஒரு வலைப்பூ. படைத்த புதிய கவிதைகள் படித்த கவிதைகள் அதைப்பற்றி விவாதங்கள் என வலையுலகில் இருக்கும் கவிஞர்களை ஒருங்கிணைத்து இயங்கலாம் என... நீங்கள் அச்சாரம் போட்டு இருக்கிறீர்கள். வெற்றிகரமாக அமையட்டும். கவிதை பற்றிய கருத்துகளோடு பிறகு வருகிறேன்

Muthu said...

தனிமடல்
*********


தீ பரவுகிறது.வாழ்த்துக்கள்

கார்திக்வேலு said...

Muthu ,
I think the below comment might throw some light on your question. Poetry is about "smuggling
emotions", the purpose is to avoid
as much contamination as possible .
We need to go beyond language to
experience ,poetry is anti-literal.
கவிதையைப் பலவாறாகப் புரிந்து கொள்ள முடியும்,ஆனால் ஒரு மாதிரியே உணர முடியும் என்பது என் எண்ணம்.
==================
"வார்த்தைகள் எவ்வளவு வலுவுள்ளதாக இருந்தாலும் , அது ஒரு சாக்கு.இது வார்த்தைகளுக்கும் தெரியும்,கவிஞனுக்கும் தெரியும்.இவர்களுக்கிடையே இது ஒரு கபட உடன்பாடு" இப்படி நீங்க எழுதியிருக்கீங்க,கவிதையில வார்த்தை ஒரு இட்டு நிரப்புதல்தானா? விளக்குங்கள்.


அன்றாட உபயோகத்துலகூட மொழி போதுமானதாக இல்லைன்னு உணர்கிறோம் .கவிதையில நவீன பிரக்ஞையை பிரதிபலிக்கவோ விஷயத்தை நேரடியாக உள் பாய்ச்சவோ தர்க்கதில் காய்த்துப் போன மொழியினால் முடியல.அதனால் தன் நோக்கத்துக்கு மொழியை வளைத்துக் கொண்டு வரக் கவிஞன் போராடுகிறான்.அதன் விளைவாக கவிதையில் சொல் அதன் அர்த்தத் தொடர்பை மீறிய சூழ்நிலையில் நிற்கிறது.அர்த்தம் வெளியேறிய வார்த்தைக்குள்ளே புதிய த்வனி புகுந்து கொள்கிறது .வெளித் தோற்றம் மாறாம, அதனோட உள்ளடக்கம் மாறிப் போகுது இதைத்தான் கபட உடன்பாடுன்னு சொன்னேன். ஆக, சொல், வாக்கியம் என்ற மொழியின் அடையாளங்களை கொண்டே மொழியை மீறும் கலகமாக கவிதை அமையுது.
-----------------------------------------------------------------------------------
கவிஞர் அபி (சொல்லிலிருந்து மௌனத்துக்கு )
http://blog.360.yahoo.com/blog-LrKemvg6erTXy65kEwi89Z6r36CuCw--?cq=1&p=156